குறைந்த கட்டணத்தில் நிறைந்த பயிற்சி அளிக்க வேண்டும்!



கைவினைப் பொருட்கள் செய்ய தெரிந்திருந்தால் போதும்... அதையே ஒருதொழிலாக மாற்றி தொழில்முனைவோராக வலம் வரலாம். பொதுவாக பெண்களுக்கு இதுபோன்ற தொழில் மிகவும் வசதியானது மட்டுமில்லை, வீட்டில் இருந்தபடியே தங்களுக்கான ஒரு அடையாளத்தினை ஏற்படுத்திக் கொள்ள முடியும். அதைத்தான் சோஃபியா செய்துள்ளார். இவர் தனக்கு தெரிந்த அனைத்து கைவினைக் கலைகளையும் கொண்டு தொழில்முனைவோராக மாறியது மட்டுமில்லாமல் அதற்கான பயிற்சியும் அளித்து வருகிறார். 

‘‘எனக்கு சின்ன வயசில் இருந்தே கைவினைப் பொருட்கள் செய்வதில் அதிக ஈடுபாடு உண்டு. ஆனால், அதையே பிசினஸாக செய்யலாம் என்று கல்லூரியில் படிக்கும் போதுதான் எனக்கு அந்த எண்ணம் ஏற்பட்டது. கல்லூரியில் புடவை கட்டிக் கொண்டு போவது வழக்கம். ஆனால், அதற்கேற்ப ஒவ்வொரு உடைக்கும் அணிகலன்களை வாங்க முடியாது. அதனால் நானே என்னுடைய புடவைக்கான அணிகலன்களை டிசைன் செய்ய ஆரம்பித்தேன். 

அதைப் பார்த்து என் கல்லூரித் தோழிகள் கேட்க அவர்களுக்கும் செய்து கொடுத்தேன். முதலில் நட்பு அடிப்படையில் இலவசமாகத்தான் செய்து தந்தேன். ஆனால், தொடர்ந்து ஆர்டர் கொடுத்த போது அதற்கான விலையும் தருவதாக கூறினார்கள். டெரக்கோட்டா முதல் பட்டு நூல் என அனைத்திலும் அணிகலன்களை அவர்களின் உடையின் நிறத்திற்கு ஏற்ப டிசைன் செய்து கொடுத்து வந்தேன். அதன் பிறகு அதிகமாக ஆர்டர் கொடுத்த போது அதற்கான கட்டணத்தையும் கொடுத்தார்கள். 

இதற்கிடையில் எனக்கு திருமணமானது. அதன் பிறகு தான் நான் முதுகலைப் பட்டம் படிச்சேன். ஆனால், எங்க ஊரில் என்ன படித்திருந்தாலும் குறைந்த அளவில்தான் சம்பளம் கிடைக்கும். அதை விட என்னால் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க முடிந்ததால், நான் இதையே என்னுடைய முழு நேர தொழிலாக மாற்றிக் கொண்டேன். 

என்னுடைய இந்த முடிவுக்கும் என் கணவர் தான் முழு ஆதரவு கொடுத்தார். என்னை நிறைய மோடிவேஷனும் செய்தார்’’ என்றவர், நகை வடிவமைப்பினை தொடர்ந்து உடைகளில் பெயின்டிங், ஆரி வேலைப்பாடு என கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டது மட்டுமில்லாமல் ‘கே.எம் ஆர்ட்ஸ் வேர்ல்டு’ என்ற பெயரில் பயிற்சியும் அளிக்க துவங்கியுள்ளார். 

‘‘நான் டிசைன் செய்வதைப் பார்த்து கல்லூரி மாணவிகள் தங்களுக்கும் சொல்லித் தரச் சொல்லிக் கேட்டார்கள். அவர்களுக்கு நேரடியாக பயிற்சி அளிக்க ஆரம்பித்தேன். பிறகு யுடியூப் ஒன்றை துவங்கி அதில் வீடியோ முறையில் வெளியிட்டேன். அதைப் பார்த்து மேலும் பலர் என்னை அணுக ஆரம்பித்தார்கள். அப்பதான் கொரோனா தாக்கம் ஏற்பட்டது. நான் ஏற்கனவே யுடியூப்பில் என்னுடைய பயிற்சி வீடியோக்களை அப்லோட் செய்திருந்ததால், இணையம் மூலம் என் பயிற்சியினை தொடர ஆரம்பித்தேன்.

ஒரு கலையை கற்றுக் கொள்வது மட்டும் திறமையாகாது. கற்றுக் கொண்டதை நம்முடைய கிரியேட்டிவிட்டி மூலம் அப்கிரேட் செய்து கொள்ளவும் தெரிந்திருக்கணும். சாதாரண பிளவுசில் பிரின்டிங் செய்து வந்த நான் அடுத்த கட்டமாக அதில் தஞ்சாவூர், கலம்காரி ஆர்ட் எல்லாம் புகுத்த ஆரம்பித்தேன். பார்க்க வித்தியாசமாக இருந்ததால், அது என்னுடைய பிசினஸுக்கு மேலும் வலு சேர்த்தது. இப்ப முழுக்க முழுக்க நான் பேப்ரிக் பெயின்டிங்கில்தான் முழு கவனம் செலுத்தி வருகிறேன். யுடியூப் பார்த்து கற்றுக் கொண்டாலும் சிறப்பு பயிற்சிகளும் மேற்கொண்டேன். 

பெயின்டிங் எனக்கு சின்ன வயசில் இருந்தே செய்ய பிடிக்கும். அதனால் அதில் உள்ள பல்வேறு விஷயங்களை கூகுள் செய்து பார்ப்பேன். அப்படித்தான் ஒவ்வொரு பெயின்டிங்கும் நான் பயின்றேன். அவ்வாறு பயிலும் போது அதிலுள்ள சின்னச் சின்ன நுணுக்கங்களை தெரிந்து கொள்ள பயிற்சியாளர்கள் அவசியம். அப்படிப்பட்ட பயிற்சியினைதான் என் மாணவர்களுக்கு அளித்து வருகிறேன். 

இது எல்லாம் ஆன்லைன் என்பதால், பயிற்சிக்கான வீடியோக்கள் அப்லோட் செய்வோம். அவர்கள் கிடைக்கும் நேரத்தில் அதைப் பார்த்து பயிற்சி எடுப்பார்கள். பிறகு அதில் கொடுக்கப்பட்டிருக்கும் வேலைப்பாடுகளை செய்து அதை எனக்கு வாட்ஸப் மூலம் அனுப்புவார்கள். இதற்காகவே தனிப்பட்ட குழு அமைத்து அதில் செயல்படுத்தி வருகிறேன். அவர்கள் அனுப்பும் வேலைப்பாட்டினை சரி செய்து அதில் என்ன மாற்றம் கொடுக்கலாம் என்று ஆலோசனையும் வழங்குகிறேன். 

மேலும், குழுவாக எல்லோரும் தங்களின் கருத்துக்களை பரிமாறும் போது அது அந்த துறையில் அறிவினை வளர்த்துக் கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பயிற்சியில் சேர விரும்புபவர்கள் என்னை நேரடியாக தொடர்பு கொண்டால் அதற்கான விதிமுறைகள் அனைத்தும் நான் விளக்குவேன். அதன் பிறகு விருப்பமிருந்தால் கட்டணம் செலுத்தி சேர்ந்து கொள்ளலாம்’’ என்றவர், தற்போது குழந்தைகளுக்கு மட்டும் நேரடி பெயின்டிங் பயிற்சி அளித்து வருகிறார்.

‘‘நான் ஆரம்பித்த போது பெரியவர்களுக்கும் நேரடி பயிற்சி அளித்து வந்தேன். அதுவும் வேறு ஒரு கல்வி மையத்தில் தான் நான் பயிற்சி அளித்தேன். ஆனால், பல பெண்களால் நேரடி பயிற்சியினை மேற்கொள்ள முடியாமல் போனது. அதனால் ஆன்லைனுக்கு மாறினேன். அடுத்த வருடத்தில் இருந்து நேரடி பயிற்சியும் அளிக்கும் எண்ணம் உள்ளது. மேலும், நான் தற்போது டிசைனிங் செய்வதில்லை. எனக்கு வரும் ஆர்டர்களை என்னிடம் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு கொடுத்துவிடுகிறேன். 

காரணம், எனக்கு தமிழ்நாட்டில் பல இடங்களில் இருந்து ஆர்டர் வருகிறது. அதை முடித்து அனுப்பினாலும் சின்னச் சின்ன திருத்தங்கள் செய்ய வேண்டி இருக்கும். அதனால் எங்கிருந்து ஆர்டர் வருகிறதோ அங்குள்ள என் மாணவர்களிடம் கொடுத்துவிடுவேன். நான் தற்போது முழுக்க முழுக்க பயிற்சியில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். 

எனக்கு தெரிந்த விஷயத்தை பலருக்கு கொண்டு செல்லணும். பெயின்டிங் மட்டுமில்லாமல் ஆரி வேலைப்பாடு, மெஹந்தி டிசைனிங், ஜுவல்லரி மேக்கிங் என அனைத்தும் கற்றுத் தருகிறேன். இது ஒரு கலை. ஒருவரால் பிரியப்பட்டால் மட்டுமேதான் அதனைக் கற்றுக் கொள்ள முடியும்’’ என்றவர், கொரோனா வாரியர், சேலஞ்ச் மேக்கர் ஆப்  தி இயர் போன்ற விருதுகளை பெற்றுள்ளார். 

ஷன்மதி