சிறுகதை-பசி!
வாழை இலை விரிக்கப்பட்டு சூடான சாதம் பரிமாறப்பட, மைதிலியின் சோர்ந்திருந்த விழிகள் மெதுவாய் திறந்தது. சாம்பார், பொரியல், மோர் மிளகாய், அப்பளம் என அடுத்தடுத்து பரிமாறப்பட்டு இலை நிறைந்ததும் எவர் சொல்லுக்கும் காத்திராமல் மளமளவென சாப்பிடத் துவங்கினாள். பதினாறு நாட்களாய் வெறும் நீராகாரம் மட்டுமே அருந்திவிட்டு சுருண்டு கிடந்ததில் உடலும் குடலும் வற்றிப் போயிருந்தது. வேக வேகமாய் அருந்தப்பட்ட உணவு தொண்டைக் குழிக்குள் சிக்கிக் கொண்டு திணற, அருகே அமர்ந்திருந்த யாரோ அவளது உச்சந்தலையில் தட்டிக் கொடுத்தனர். “மெல்ல… மெல்ல... பொறுமையாய் சாப்பிடும்மா!”“உன் சாப்பாட்டை யாரும் பிடுங்கிட மாட்டாங்க மைதிலி. நிதானமாய் சாப்பிடு! இப்படித்தான் எங்க ஊர்ல ஒருத்தி ஒரு கல்யாண வீட்டுக்கு போயி காணாததைக் கண்ட மாதிரி வாரியள்ளித் தின்னிருக்கா. கறித்துண்டோ, எலும்போ போய் தொண்டையில விக்கி அங்கேயே செத்தும் போயிட்டா! பார்த்துச் சாப்பிடு...” -நக்கலாய் சொல்லியவாரே பிரபாகரனின் புகைப்படத்திற்கு முன்பாய் போடப்பட்டிருந்த படைப்பு சாப்பாட்டில் வைத்திருந்த இனிப்பு பலகாரத்தை எடுத்துக் கடித்த பெண்மணியின் குரல் அசைக்கவில்லை.
சாம்பாரை பிசைந்து கை நிறைய அள்ளி மளமளவென சாப்பிட்டுக் கொண்டே இருக்க, அவளது இலையை பார்த்து மீண்டும் உணவு பரிமாறப்பட்டது.“இன்னும் கொஞ்சம் சாதம் போடுப்பா..!”“சரிங்க! என்ன ஊத்தட்டும்? ரசமா? மோரா..?”“சாம்பாரே ஊத்து...” என்றவள் மீண்டும் வேகவேகமாய் சாப்பிடத் துவங்க, அவளது மாமியார் முகச்சுளிப்போடு நகர்ந்து, தன் உறவினர்களை நெருங்கினாள். பிரபாகரனுக்கு பிடித்த பலகாரங்களை எடுத்து சூறையாடிக் கொண்டே நாற்காலியில் அமர்ந்து வேடிக்கைக் கதைகளை பேசிக் கொண்டிருந்தவர்கள் ரமணியின் வரவால் பேச்சை நிறுத்திக் கொண்டு திரும்பினர்.
“தாஸு! வாங்கப்பா சாப்பிடலாம்.”“நேரமாகட்டும் பெரியம்மா! இப்பதான் ஸ்வீட் சாப்பிட்டோம். நீங்க மத்தவங்களை கவனிங்க!”“ராகினி! நீயாவது வாயேம்மா..!”“அத்தை! காலையில சாப்பிட்ட பூரியும் பொங்கலுமே இன்னும் ஜீரணிக்கல. அதுக்குள்ள அடுத்த சாப்பாடா? மணி இப்பதானே ஒன்னாகுது. ஒரு ரெண்டு மணியாகட்டும்.”“எல்லோரும் சாப்பிட்டால் பந்தி ேவலை முடியும்.”
“நாங்கதான் நைட்டு வரைக்கும் இங்கேதானே இருக்கப் போறோம்?
பொறுமையாய் சாப்பிட்டுக்குறோம். நீங்க இப்ப கிளம்புறவங்களை கவனிங்க...” “சரிப்பா! சாமிநாதா! நீதான் பசிதாங்கமாட்டியே! உனக்குமா பசிக்கல?”
“சித்தி! நான் சமையல் செய்யும் போதே ரெண்டு கிளாஸ் பாயசம் குடிச்சாச்சு. போதாக்குறைக்கு இதோ வடை, பணியாரம், ஜிலேபின்னு நிறைய ஸ்வீட் சாப்பிட்டாச்சு. சித்தி! பணியாரம் நீங்களா பண்ணீங்க?”“ஆமாப்பா! பிரபாவுக்கு ரொம்பப் பிடிக்கும்னு செய்தேன்!”“ஆஹா! எவ்ளோ டேஸ்ட் சித்தி! உங்க கைப்பக்குவம் அம்மாவுக்கு இல்ல சித்தி. நானே நாலஞ்சு பணியாரம் சாப்பிட்டுட்டேன்.”
“ஏம்ப்பா! சோறு சாப்பிட்ட பிறகு இதையெல்லாம் சாப்பிட்டிருக்கலாமே? இப்ப இதை சாப்பிட்டால் எப்படி சோறு சாப்பிடுவீங்க?” “பரவாயில்ல அத்தை! நாங்க ஸ்ட்ரெய்ட்டா நைட் சாப்பாடே சாப்பிட்டுக்கிறோம்...”“அட! அம்பது பேருக்கு சாப்பாடு சொல்லியிருந்தேம்ப்பா. இப்படி ஆளாளுக்கு வேணாம்னா சாப்பாடு வீணாப்போயிடுமே...”“அம்மா! இங்கே கொஞ்சம் வாயேன்...” - சற்று தள்ளி நின்று அழைத்த மகளின் அழைப்பில் நகர்ந்தாள் ரமணி.
“என்ன தனம்?” “அங்கே பந்தியைக் கவனிக்காமல் இங்கே நின்று என்னம்மா பண்ணிட்டு இருக்க?” “இவங்களை எல்லாம் சாப்பிடக் கூப்பிட்டுட்டு இருந்தேன்...”“இதுங்க எல்லாம் நைட்டு கிடைக்கிற கறிச் சாப்பாட்டுக்காக வயித்தை காலியா வெச்சிட்டு காத்துக்கிடக்குதுங்க. இதுங்களை விடு... அங்கே உம்மருமக என்ன பண்ணிட்டு இருக்கான்னு பாரு!”“என்ன? என்ன பண்றா?”“என்ன பண்றாளா? முதப் பந்திக்கு உட்கார்ந்தவ இன்னும் இலையை விட்டு எழுந்திருக்கல... சோறு, குழம்பு, சோறு, ரசம்னு தின்னிட்டே இருக்கா! பரிமாறுபவனே முழிச்சிட்டு நிற்கிறான்.
எம்மாமியார் வாய்விட்டே கேட்கிறாங்க, ‘உன் தம்பி பொண்டாட்டியை மாசக்கணக்கா பட்டினி போட்டீங்களா’ன்னு! அசிங்கமா இருக்கும்மா! போயி அவளை எழுந்துக்கச் சொல்லுங்க! அவ எழுந்த பிறகுதான் எம்மாமியார் ஃபேமிலியை சாப்பிட வைக்கணும். போம்மா!” - தனலட்சுமி சற்று எரிச்சலோடும், கோபத்தோடும் தாயை விரட்ட, ரமணியின் முகம் மாறியது.
“என்ன? இன்னமும் சாப்பிடுறாளா?” “நீயே போய் பாரு! அத்தனை பேரோட பார்வையும் உன் மருமக மேலேதான் இருக்கு. ஆனா, அவ எதைப் பத்தியும் கவலைப்படுற மாதிரி தெரியல. அப்படி என்னதான் பசியோ...”- மகளின் முகம் கடுக்க, ரமணி கூடத்தை நோக்கி நடந்தாள். நடக்கும் போதே பலரது விமர்சனங்கள் அவளது செவியைத் தீண்டியது.“என்ன இந்தப் பொண்ணு இப்படி சாப்பிடுது, சாப்பாட்டை கண்லயே காணாதது மாதிரி...”“அதானே? செத்தது இவ புருஷன்!
அந்த வருத்தம் கொஞ்சமாவது அவ முகத்தில் தெரியுதா பாரு? சாம்பாரு, மோரு, ரசம்னு ஏதோ விருந்துக்கு வந்த மாதிரி கேட்டு கேட்டு சாப்பிடுறா பாரேன்...”“ஏய் சும்மா பேசாதீங்கம்மா! பதினாறாம் காரியம் வரை அந்தப் பொண்ணு வெறும் காப்பியும், தண்ணியும்தான் குடிச்சிட்டு இருந்தாளாம். அதிலயும் அப்பப்ப மயங்கி விழுந்து ஹாஸ்பிட்டல்ல ட்ரிப்ஸ் எல்லாம் ஏத்தியிருக்காங்க.
அவ சாப்பிடுறதுக்குப் போயி இப்படி பேசுறீங்களேம்மா..!” “நாங்க இப்ப என்ன தப்பாப் பேசிட்டோம்? புருஷனை துள்ளத் துடிக்க பறிகொடுத்தவளுக்கு இப்படி சாப்பிட முடியுமா? எங்க பிரபாவை முழுசா முழுங்கியும் இவ பசி அடங்கலையே… புருஷனை இழந்தவளுக்கு எப்படிய்யா பசிக்கும்? ஏதோ விருந்து சாப்பாடு கிடைச்ச மாதிரி இந்தத் தீனி தின்றா..? எங்க ரமணிதான் பாவம்! பெத்த பிள்ளையை இழந்திட்டு சாப்பாட்டுக்கு என்ன பண்ணப் போறாளோ? அதுவும் இந்த மருமகளை வெச்சிகிட்டு… இவளுக்கு ஆக்கிப்போடவே அவ இந்த வீட்டை வித்தாகணும் போலிருக்கே?”
“நான் நினைக்கிறேன் இவளுக்கு சாப்பாடு போட்டுத்தான் பிரபா கடனாளி ஆகியிருப்பான்.”
“இருக்கும் இருக்கும்! நாம இவ்ளோ பேர் இருக்கும் போதே இந்தப் போடு போடுறவ ஆளில்லாத சமயம் எப்படி சாப்பிடுவாளோ? சரியான சாப்பாட்டு சாமி!” - கிசுகிசுப்பும் கேலியும் குத்தலுமாய் தன்னைத் தொடர்ந்த சொல்லம்புகளைக் கடந்து மருமகளின் முன்னே வந்து நின்றாள் ரமணி. மைதிலி இன்னமும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க, பற்களைக் கடித்தவாறே அடிக்குரலில் சீறினாள் ரமணி.
“மைதிலி! என்ன பண்ணிட்டு இருக்க?” “ம்? அத்தே! நீங்க தானே சாப்பிடச் சொன்னீங்க..?” “சாப்பிடச் சொன்னேன்! சாப்பிட்டுட்டே இருன்னு சொல்லல...” “அத்தே?”
“எத்தனை மணி நேரமாய் சாப்பிடுவ..? எழுந்திரு!” “பசிச்சது அத்தை! அதான் சாப்பிடுறேன்...”“அப்படி என்னம்மா பசி உனக்கு? புருஷனை முழுசா முழுங்கின பிறகும் உனக்கு எப்படி பசி எடுக்குது..?” - நக்கலாய் கேட்ட வயோதிக பெண்மணியை நிதானமாய் திரும்பிப் பார்த்தாள் மைதிலி.“என்ன? எம் புருஷனை நான் முழுங்கினேனா? அப்போ ஊர்வலமா தூக்கிட்டு போய் எரிச்சீங்களே… அது யாரை?” “என்ன ரமணி..! உம்மருமக என்ன பேசுறா பார்த்தியா?”“நான் எதுவும் தப்பாய் ேகட்கலையே? புருஷனை முழுங்கிட்டா முழுங்கிட்டான்னு ஆளாளுக்கு சொல்றீங்களே… நான் என்ன பொணத்தைத் தின்னுற ராட்சசியா?
நீங்கதான் மனசாட்சி இல்லாத ராட்சசிங்க..!” “மைதிலி! என்ன இது? அவங்க நம்ம வீட்டுக்கு வந்த விருந்தாளி!”“யாரு அத்தே விருந்தாளி? நம்ம வீட்லயே என்ன கல்யாணமா நடந்தது? செத்துப் போனது ஒன்னும் எழுபது, எண்பதைக் கடந்து ஆண்டு அனுபவிச்ச வயோதிகன் இல்ல... எம்புருஷன்! நாற்பதைக்கூட தொடாத உங்க புள்ள! நண்டும் சிண்டுமா மூணு புள்ளைகளை தந்திட்டு கொஞ்சமும் பொறுப்பில்லாம போன்ல சூதாடுறேன்னு தலைக்கு மேலே கடனை வாங்கி வெச்சிட்டு அதை அடைக்க வழியில்லாமல் பயந்து போய் தூக்குல தொங்கி உயிரை விட்டவருக்கு படையல்…
பாயசம்… பலகாரம்! அதைத் தின்னுட்டு ராத்திரி கறி சாப்பாட்டுக்காக நாக்கைத் தொங்கப் போட்டுட்டு காத்துக்கிடக்கிற கூட்டம் வேற...”- மைதிலி கசப்பாய் கூறியவாறே கையை உதறிக் கொண்டு எழ, உறவினர் கூட்டம் அவளை பிலுபிலுவென பிடித்துக் கொண்டது.“ஏய்! என்னம்மா? எங்களை என்ன சாப்பாட்டுக்கு வக்கத்து போனவங்கன்னு சொல்றியா? ஏதோ… அல்பாயுசில செத்துப் போனவன் நல்லபடியா சொர்க்கத்துக்கு போகணும்னு அவனுக்கு காரியம் பண்ணலாம்னு வந்தால் எங்களை நாய்ன்னு சொல்லுவியா?”
“என்ன? எம்புருஷனை சொர்க்கத்துக்கு அனுப்பப் போறீங்களா? எப்படி? ஆடு, கோழின்னு சமைச்சு படையல் போட்டுட்டு நீங்க வயிறு முட்ட தின்னிட்டு போனால் அவரு சொர்க்கத்துக்கு போயிடுவாரா?”“மைதிலி! வாயடக்கத்தோட பேசு! அவங்க ஒன்னும் சாப்பாட்டுக்காக வந்து நிக்கல.
சொல்லப்போனால் அவங்க கூட என் தம்பிக்காக இன்னும் சாப்பிடாமல் பட்டினி கிடக்கிறாங்க. ஆனா, நீ புருஷன் செத்த வருத்தம் கொஞ்சம் கூட இல்லாம இப்படி மாங்கு மாங்குன்னு தின்னுட்டு பெரிய இவ மாதிரி பேசிட்டு நிக்கிற?” - என்ற தனலஷ்மியை தீர்க்கமாய் திரும்பிப் பார்த்தாள் மைதிலி.
“என்ன என்ன? பட்டினி கிடக்கறாங்களா? காலையில சாப்பிட்ட பொங்கல், பூரியே செமிக்காமல் அரட்டை அடிச்சிட்டு இருக்கிறவங்களுக்கும், செத்தவனுக்கு படைச்ச பலகாரங்களை காக்கா மாதிரி கொத்திட்டு போறவங்களுக்கும் எப்படி பசிக்கும்? சொல்லுங்க அண்ணி எப்படி பசிக்கும்? ஆனா, எனக்கு பசிச்சது.
அல்பாயுசில அதுவும் துர் மரணத்தால உயிர் பிரிஞ்சிருக்கு. பதினாறு நாள் அன்னம் உண்ணாமல் விரதம் இருந்தால்தான் புருஷனோட ஆத்மா சாந்தியடையும்னு யாரோ சொன்னதைக் கேட்டு வெறும் தண்ணியை மட்டும் கொடுத்து என்னை விரதம் இருக்கச் சொன்னீங்களே… எனக்கு பசிக்காதா? தலைக்கு மேலே கடனை வாங்கி வெச்சிட்டு இப்படி அம்போன்னு விட்டுட்டு போயிட்டாரே… அந்தக் கடனை எப்படி அடைக்கப் போறோம்னு விடிய விடிய சிந்தித்து தூங்காமல் உட்கார்ந்திட்டு இருக்கேனே… எனக்கு பசிக்காதா? காரியம் பண்றேன் பேர்வழின்னு உங்கம்மா இதோ செலவை இழுத்து வெச்சிருக்காங்களே அந்தக் கடனையும் நான் தானே அடைக்கணும்? வந்திருக்கிறவங்க யாராவது அடைப்பீங்களா? ம்..?
கடன்ல மூழ்கிற வீட்டை மீட்கணும்... புள்ளைங்களோடு படிப்பைப் பார்த்துக்கணும்… உடம்புல ஆயிரம் வியாதியோட இருக்கிற மாமியாருக்கு மாசாமாசம் மருந்து, மாத்திரை வாங்கணும்… அஞ்சு பேரோட வயித்துக்கு உழைச்சும் போடணும்… ஊரைச் சுத்தி கடன் வாங்கிப் போட்டுட்டு போனாரே உங்க தம்பி!
அந்தக் கடன்காரன்களுக்கு பதில் சொல்லணும். கொஞ்சம் கொஞ்சமாய் திருப்பித் தந்திடுறேன்னு கெஞ்சணும். அந்தக் கடனுக்கும் சேர்த்து நான் உழைக்கணும். அதுக்கு நான் உயிரோட இருக்கணும்! நான் உயிரோட இருக்கணும்னா சாப்பிட்டாகணும். அதான் சாப்பிட்டேன்! இது தப்பா! என்னவோ தகாத தப்பை செய்த மாதிரி ஆளாளுக்கு விமர்சனம் பண்றீங்க... துக்க வீட்டுக்கு வந்தால் ரெண்டு சொட்டு கண்ணீர் விட்டுட்டு கிளம்புங்க... ஆறுதல் சொல்லாட்டியும் பரவாயில்ல. எங்க துக்கத்தை கூட்டாதீங்க! கஷ்டமோ, நஷ்டமோ அதை நாங்கதான் சமாளிச்சாகணும்! நான் தெம்பா ஆரோக்கியமாய் இருந்தால்தான் என் குடும்பத்தை காப்பாத்த முடியும்! நான் காப்பாத்துவேன்…” என்றவள் வீட்டிற்குள் சென்று மறைய, உறவினர் கூட்டம் வாயடைத்து நின்றது.
சொ.கலைவாணி சொக்கலிங்கம்
|