வறுமையை உணர்ந்தால்தான் வாழ்க்கையை உணர முடியும்!
உதவிப் பேராசிரியர், பட்டிமன்ற பேச்சாளர், கவிதாயினி, ஃபாட்காஸ்டர், டப்பிங் கலைஞர் என்று இவருக்கு பல முகங்கள் உண்டு. ஆனால், அதை எல்லாம் தாண்டி மாணவர்களின் நலனுக்காகவே இவர் பல வேலைகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து வருகிறார். தவிர, வேலை வாய்ப்பு ஏற்படுத்தி மென் திறன் பயிற்சிகளும் அளித்து வருகிறார். மேலும், இணையம் வழியாக பல்வேறு தகவல்களை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வழங்குவது என தன்னை முழுக்க முழுக்க சமூகப் பணிக்காக அர்ப்பணித்துக் கொண்டுள்ளார் சுபா அருணாசலம்.  சீர்காழி அருகேயுள்ள திருமுல்லைவாசல் என்ற கிராமத்தில் பிறந்தவர், தற்போது சென்னையில் வசித்து வருகிறார். ‘‘நான் இளங்கலையில் வணிக நிர்வாகமும், சர்வதேச வணிகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றிருக்கிறேன். மேலும், கணக்கியல் மற்றும் நிதியியலில் டிப்ளமோ படிப்பும் படித்திருக்கிறேன். அலுவலக நிர்வாகம், பங்குச் சந்தையில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்கிறேன்.
மனித வள மேம்பாட்டுத் துறையில் முனைவர் பட்ட ஆய்வும், தற்போது அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நிறுவன உளவியல் துறையில் மெய்ப்பாட்டுத் தொழிலாளர்களை சார்ந்து முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வருகிறேன். ‘மனித வள மேம்பாட்டுத் துறையில் வளர்ந்து வரும் சிக்கல்கள்’ குறித்து ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளேன். என் கணவர் ரோலிங் நாற்காலிகளை சர்வீஸ் செய்யும் பிசினஸ் செய்து வந்தார். அதில் பழுது ஏற்பட்டால் உடனடியாக அதை சரி செய்தும் தருவார். நான் என் கல்லூரி விடுமுறை நாட்களில் அவரின் கடைக்கு செல்வது வழக்கம். அங்கு பல விஷயங்களை நாங்க இருவரும் கலந்து ஆலோசிப்போம். குறிப்பாக பிசினஸ் குறித்தும் நிறைய பகிர்ந்து கொள்வோம். அவர் எனக்கு அது குறித்து சிலவற்றை சொல்லிக் கொடுத்திருக்கிறார். அவர் இருந்த வரைக்கும் பிசினஸ் நன்றாக இருந்தது.
ஆனால், அவர் திடீரென்று எதிர்பாராத விதமாக எங்களை விட்டு பிரிந்துவிட்டார். ஒருநாள் அவரின் அலைபேசியில் இருந்து முதல் அழைப்பு வந்தது. அதை நான் எடுத்து பேசினேன். எதிரே பேசியவர், ‘உங்க கடைக்கு அருகே என்னுடைய அலுவலகம் உள்ளது. என் நாற்காலியில் சின்ன பிரச்னை இருக்கிறது.
சார் இருந்தால் சரி செய்து தருவார். உங்களால் முடியுமா?’ என்று கேட்டார். நானும் அவரின் கடைக்கு சென்று அவரின் நாற்காலியினை சரி செய்து கொடுத்தேன். நானும் என் கணவரும் இது குறித்து பகிர்ந்து கொண்ட அந்த விஷயங்கள்தான் என்னை அவரின் பிசினஸினை எடுத்து நடத்த வழி செய்து கொடுத்தது.
பலர் ‘ஒரு பேராசிரியராக இருந்து ெகாண்டு நாற்காலி ரிப்பேர் செய்யும் வேலையை செய்கிறீர்களே’ என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். நான் அதை எல்லாம் மனதில் கொண்டால் என்னால் வாழ முடியாது. மேலும், அவரின் மறைவுக்குப் பிறகு நாங்க கஷ்டப்பட்ட காலத்தில் இந்தத் தொழில்தான் எங்களுக்கு கை கொடுத்தது.
நான் பெண்களுக்கு சொல்வது ஒன்றுதான். நம்முடைய குறைந்த தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள ஏதேனும் வருமானத்தை ஈட்டுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். பிறரது கைகளை எதிர்பார்க்காமல் ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபட வேண்டும். அதற்கான தைரியத்தை பெண்கள் வளர்த்துக் ெகாள்ள வேண்டும்’’ என்றவர் அவரின் மற்ற வேலைகள் குறித்து பகிர்ந்தார்.
‘‘அலுவலக உளவியல் குறித்துதான் என் முனைவர் பட்ட ஆய்வினை மேற்ெகாண்டேன். வேலையில் ஈடுபடும் போது ஒருவர் தனது உணர்வினை வெளிப்படுத்தவோ அல்லது மறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. வாடிக்கையாளர் மனம் கோணாமல் அவர்களின் பாதுகாப்பினை கருதி அந்த நிலைமையை எவ்வாறு தொழிலாளர்கள் சமாளிக்கிறார்கள் என்பதுதான் என்னுடைய ஆய்வாக இருந்தது.
இது போன்ற மன உணர்வின் ஆய்வினை மேற்கொள்ளும் போது பணியாளர்களின் மன அழுத்தம் குறையும் என உளவியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இது போன்ற ஆய்வுகள் தமிழ்நாட்டில் மட்டுமில்லை, இந்தியாவிலேயே குறைவுதான். அதனால்தான் அதை நான் மேற்கொண்டேன்.
எனக்கு வாசிக்கப் பிடிக்கும். அதனால் தான் ஃபாட்காஸ்டிங்கை தேர்வு செய்தேன். கதையில் வரும் பாத்திரமாக மாறி வாசிக்கும் போது அதனால் ஏற்படும் சந்தோஷத்திற்கு அளவே கிடையாது. சின்னச் சின்ன புத்தகங்களுக்கு குரல் கொடுத்திருக்கிறேன். இதில் என்னால் முழுமையாக ஈடுபட முடியவில்லை.
நேரம் கிடைக்கும் போது இதனை செய்து வருகிறேன். சொல் வளம் அறிதல், வித்தியாசமான தமிழ்ச் சொற்களை அறிந்து கொள்ள எனக்குப் பிடிக்கும். அது என்னை கவிதைகள் எழுதத் தூண்டியது. இணையத்தில் என்னுடைய கவிதைகளை பதிவு செய்து வருகிறேன்’’ என்றவர், தன் பாட்டியின் டீக்கடையில் பேசப்படும் அரசியல் நிகழ்வுகள்தான் தன்னை பட்டிமன்ற பேச்சாளராக மாற்றியுள்ளது என்றார். ‘‘இன்றைய எதிர்காலம் மாணவர்கள் கையில்தான் உள்ளது. அவர்கள் இன்றைய நடைமுறைகளை மட்டுமில்லாமல் எதிர்காலம் குறித்தும் தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். சமுதாயம் மற்றும் குடும்பப் பொறுப்போடு இருக்க மாணவர்கள் வடிமைத்துக் கொள்வது அவசியம். அதனை கருத்தில் கொண்டு தான் கடந்த 20 வருடங்களாகபள்ளிகளில் திறன் வளர்ச்சிப் பயிற்சிஅளித்து வருகிறேன்’’ என்றவர், சிகரம் தொட்ட மகளிர், சாதனைப் பெண், இலக்கியச் செம்மல், தமிழ்ப் பணிச்செம்மல் என 60க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றுள்ளார்.
பொ.ஜெயச்சந்திரன்
|