The Biology Of Belief
மனம் பேசும் நூல் 8
Bruce Lipton என்ற உயிரியல் ஆய்வாளர் எழுதிய புத்தகம் இது. மனித எண்ணங்களை வைத்து, ஆய்வாளர் ஒருவர் எழுதிய புத்தகம் இதுவென சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால், இதுதான் உண்மை. நோய்கள் ஏற்பட காரணமாய் இருக்கும் அடிப்படை விஷயங்களை தன் புத்தகத்தில் இவர் கேள்விக்கு உட்படுத்தியுள்ளார்.மேலும், இந்தப் புத்தகத்தின் வழியாக அவர் சொல்வது, நம் எண்ணங்களின் வழியாக நோய்களையும் சரி செய்ய முடியும் என்பதே.
 “எண்ணம் போல் வாழ்க்கை” என்ற அடிப்படையில், மனிதர்கள் வாழ்வியலில் நடக்கும் சம்பவங்களை பார்க்கும்போது அல்லது மனிதர்கள் அவர்களின் அனுபவங்களைக் கூறும்போது, மேலிருக்கும் வரிகள் அவர்கள் வாழ்வில் சம்பந்தமில்லாமல் இருக்கிறதே என நமக்குத் தோன்றும். மனிதர்களின் எண்ணங்கள் நல்லதாய் இருந்தாலும், ஏன் நல்லவை நடப்பதில்லை என்கிற கேள்வியை எதிர்கொள்வதுதான், எண்ணங்கள் மீதே மனிதர்களுக்கு சந்தேகம் வரக் காரணமாக இருக்கிறது.
 மருத்துவ அறிவியலின்படி, மனிதன் தன் குடும்ப உறுப்பினர்களின் உடலமைப்பிலும், குணாதிசயங்களிலும், உணர்வுகளிலும் ஒத்துப்போவது போல் இருப்பதை பார்த்திருப்போம். டார்வின் தியரிபடி உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்து, தனது குணாதிசயத்தில் சிலவற்றை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் முக்கிய பங்கை வகிக்கின்றன என்பதே.உளவியல் ரீதியாய் மனிதர்கள், இரண்டு விதங்களில் தங்களின் தாக்கத்தை பிரதிபலிக்கின்றனர்.
முதலாவது மரபணு ரீதியாய் ஒரு நபரின் உடல் அமைப்பிலும், குணாதிசயத்திலும், தங்கள் முன்னோர் செயல்களை வெளிப்படுத்துகின்றனர். இரண்டாவதாக, காலம் காலமாய் கடத்தப்படுகிற தகவல்கள் வழி, தாங்கள் நம்புவதை அப்படியே அடுத்த தலைமுறையினரிடம் கடத்துகின்றனர். உதாரணத்திற்கு, ஆண் மற்றும் பெண் குழந்தைகள் குறிப்பிட்ட கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் வரையறைக்குள் வாழ வேண்டுமெனக் காலம் காலமாக கூறுவதைச் சொல்லலாம்.
நமது கலாச்சார நம்பிக்கை படி, பெரியவர்களின் பேச்சைக் கேட்டு சிறியவர்கள் நடக்க வேண்டும், பெற்றோர் மனம் கோணாமல் பிள்ளைகள் நடந்து கொள்ள வேண்டும் என போதிக்கப்படுகிறது.
குடும்ப அமைப்பிற்குள் நிகழும் சடங்கு, சம்பிரதாயங்களிலும், குறிப்பிட்ட முறைதான் இருக்க வேண்டுமெனக் கூறுவதெல்லாம், தலைமுறை தலைமுறையாக தகவல் வழி கடத்தப்படுவதாகவே இருக்கும். வீட்டில் இருக்கிற அல்லது நாம் நம்பும் மனிதர்கள் என்ன சொன்னாலும், ஏன்? எதற்கு? என்ற கேள்வியை முன் வைக்காமல் அப்படியே அதைக் கேட்டு நடக்க முயற்சிப்போம். எனவே, இந்தப் புத்தகத்தின் எழுத்தாளர், மருத்துவ ரீதியாய் உடலளவிலும், மனதளவிலும் ஏற்படும் மரபணு ரீதியான நோய்களுக்கு காக்னிடிவ் திங்கிங் வழியாக சரி செய்ய முடியும் என்ற ஆய்வை மேற்கொண்டுள்ளார். மனிதனின் செல் பயாலஜி வழியாகவும், எபிஜெனிடிக்ஸ் மற்றும் மனித மனதின் எண்ணங்களின் தாக்கத்தினை வைத்தும் ஆய்வு மேற்கொண்டவர், மனிதனின் மரபணு அல்லது ஜீன் வழியாக கடத்தப்படுகிற நோய்களை மாற்ற முடியும் என்கிறார்.
மேலும், சில உதாரணங்கள் வழியாக இன்னும் தெளிவாக நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஒரு நபர் மிக நேர்த்தியாக உடை உடுத்தி, லட்சணமாய், அமைதியாய் பேசுகிற நபராக இருக்கிறார் என வைத்துக்கொள்வோம். ஒருவரின் குணாதிசயத்தில் நேர்த்தியும், அழகும், அமைதியும் இருந்தால் ஈர்ப்பு தானாக வருமல்லவா? எனவே, அவ ரின் அழகு மற்றும் குணத்தை வைத்து, அவரிடத்தில் நண்பராய் இருக்க சிலர் ஆசைப்பட்டனர். ஆனால், இந்த அழகே அவரின் பிரச்னையாக மாறியது.
ஆம்! வீட்டில் இருப்பவர்கள் அவரை, ‘குழந்தையிலிருந்தே நீ மிகவும் அழகாக இருக்கிறாய்’ எனவும், ‘எனவே உன் மீது பிறரின் கண்கள் பட்டால், உடம்பு சரியில்லாமல் உனக்குப் போகும்’ எனவும் கூறி வர, அவர் இதனை ஆழமாக நம்பியதன் விளைவாக, யாராவது அவர் முன் வந்து, ‘மிக இயல்பாய் பார்க்க நீ அழகாய் இருக்கிறாய்’ எனச் சொன்னாலே, அவரின் உடல்நலம் பாதிக்கப்படும்.
இந்த சம்பவத்தின் வழியாக நமக்கு புரிவது, உண்மையிலே அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போகிறதா? அல்லது அவர் நம்புகிற பத்தாம் பசலித்தனமான மூட நம்பிக்கை வழியே உடல்நலம் சரியில்லாமல் போகிறதா என்பதையே? தனது வீட்டார் சொன்னதை முழுமையாக நம்பாமல், சக மனிதன் அவரை, ‘நீ அழகாய் இருக்கிறாய்’ எனச் சொன்னதை, வெறும் பாராட்டாய் மட்டுமே எடுத்திருந்தால் உளவியல் ரீதியாக அவர் பாதிக்கப்பட்டே இருக்க மாட்டார்.
பெரும்பாலும் பயத்தின் வழியாகத்தான் நமது குடும்ப அமைப்பும், சமூகத்தின் பிரதிபலிப்பும் இருக்கும். எனவே, பயத்தை எதிர்கொள்ளத் தெரியாது தவிக்கும் சமூகமாகவே இருக்கிறோம். இந்த உணர்வுதான், மனிதர்களை எதையும் ஆழமாக உணரவிடாமல் தடுத்து, மேலோட்டமாகப் பார்ப்பது, கேட்பது என்று வாழ்க்கையை கடத்த வைக்கிறது. யாரெல்லாம் பயத்தை எதிர்கொள்கிறார்களோ அல்லது யாரெல்லாம் போராடுகிறார்களோ அவர்கள் எல்லாம், புதுவித சிந்தனை தாக்கத்தை ஏற்படுத்தும் உயிர்களாக மாறிவிடுகிறார்கள் என்கிறார் இவர். உதாரணத்திற்கு, டார்வின் சொல்வது போல், வலிமையுள்ளது பிழைக்கும் என்ற கருத்தாக்கத்தை இந்தப் புத்தகத்தின் வழியாக நம்ப வைக்கிறார். புறச்சூழலில் இருக்கும் மூடநம்பிக்கைகளை வைத்து, எந்த விஷயத்தையும் முழுவதுமாக நம்பக்கூடாது. இதைத்தான் ‘நான் எதைச் சொன்னாலும், என்ன சொன்னாலும் நம்பிவிடாதே. பகுத்தறிந்து, ஆராய்ந்து நம்பு’ என்கிறார் தந்தை பெரியார்.
ஒருவருக்கு வருகிற வியாதிக்கு, வீட்டில் உள்ள பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி வழியாக தனக்கும் இப்படி வந்தது என்பார்கள். எதற்கெடுத்தாலும் காரணம் சொல்லியே பழகிவிட்ட காரணத்தால், நாம் நம்மை சரிபடுத்திக்கொள்ள மறந்து விடுகிறோம். மரபணு வழியாக வருகிற வியாதிகளை எதிர்கொள்ள சிலர், தங்களது வாழ்வியல் முறைகளை நேர்த்தியாக பின்பற்றும் ஒழுங்கு முறைக்குள் இருப்பார்கள். ஆனாலும், நோயின் பிடிக்குள் சிக்கிக் கொள்வார்கள். அவர்கள் இதற்குக் கூறும் காரணம், மரபணுவின் தாக்கம் என்பதே.
இந்தப் புத்தகத்தில் எழுத்தாளர் சொல்வது என்னவெனில், நம்முடைய புறச்சூழல்தான், நம் மனதின் வழியாக உள்நுழைந்து, நோய்களை ஏற்படுத்துகிறது. மனிதனின் மரபணு வழியாக உடலிலும், மனதிலும் நோய்களை கடத்துகிற வாய்ப்பு குறைவு என்கிறார். இங்கே செல்களை இயக்குவது நமது மரபணு அல்ல, மூளையின் சிக்னல் கடத்தலை நரம்பு செல்லான மெம்பிரேன்(Membrane) கட்டுப்படுத்துகிறது என்கிறார்.இந்த விளக்கம் அறிவியல் துறையில் விவாதத்திற்குரியது. நமது சிந்தனைகள் வழியே, மூளையில் இருக்கும் ரசாயனங்களை மாற்றி, உடலையும் மனதையும் புது விதமாய் வடிவமைக்க முடியும் என்கிறார் இவர். மனித உடலில் இருக்கும் செல்களை இவர் ஆய்வு செய்ததில், செல் வழியாகவே நமது மரபணுவின் தாக்கத்தை மாற்ற முடியும் என்கிறார்.
நாம் ஒவ்வொருவரும் இங்கு தனி நபர்கள். எனவே, மற்றவருக்கு நடந்ததெல்லாம், நமக்கும் நடக்கும் என்ற நியதி எதுவும் கிடையாது. நமது குடும்பங்களில் பார்த்த சம்பவங்கள், கேட்ட கதைகளை வைத்தே நமக்கும் அதனை சொல்வார்கள். நாம்தான் ஆராய்ந்து, சூழலுக்கு ஏற்ப நம்மைத் தகவமைத்து, நேர்மறை சிந்தனையோடு இருக்க பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதற்காக, நாம் சிந்திக்கும் முறைகளை மாற்றியமைப்பது ஒரே நாளில் நடந்துவிடாது. அதற்கு கொஞ்சம் அவகாசம் கொடுக்கவும் பழக வேண்டும்.
நம் மனது நாம் செய்வதை இயல்பாக நம்ப வேண்டும். அல்லது மனதை நம்ப வைப்பதற்கான செயல்களை தொடர்ந்து தீவிரப் பயிற்சியாக செய்ய வேண்டும். இங்கு பயிற்சி என்பது, சடங்கு, சம்பிரதாயம் மற்றும் மூட நம்பிக்கைகளின் வழியாக திணிக்கப்படும் சிந்தனைகளை தவிர்ப்பது.எனது உடலையும், மனதையும் முறையாக சரி செய்து ஆரோக்கியமாக வாழ்வேன் என்பதை நாம் ஆழமாக நம்பும் போதே, மரபணு ரீதியாக வரும் நோய்கள் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்.
காயத்ரி மஹதி, மனநல ஆலோசகர்
வாசகர் பகுதி
கிறிஸ்துமஸ் தகவல்கள்
*எகிப்து நாட்டில் மட்டும் கிறிஸ்துமஸ் ஜனவரி 7-ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. பண்டிகைக்கு முந்தைய 40 நாட்கள் விரதம் கடைபிடிக்கப்படுகின்றது.
*உக்ரைன் மக்கள் கிறிஸ்துமஸ் தினத்தன்று சிலந்தி வலையை கண்டால் அதிர்ஷ்டம் என்று நம்புகிறார்கள்.
*சுவீடனில் சிறு வயது பெண் குழந்தைகளுக்கு வெண்மை நிற உடை உடுத்தி, தேவதை போல் அலங்கரித்து, தலையில் கிரீடம் சூட்டி, சுற்றிலும் மெழுகுவர்த்தி ஏற்றி வைப்பது வழக்கம். இந்த அலங்காரத்துடன் அச்சிறுமி எல்லோருக்கும் உணவு வழங்கினால், இயேசுவே ஆசீர்வாதம் செய்வதாக கருதுகின்றனர்.
*நார்வேயில் கிறிஸ்துமஸுக்கு முந்தைய நாளில் துடைப்பங்களை எல்லாம் எடுத்து ஒளித்து வைத்து விடுவார்கள். சூனியக்காரிகள் வந்து அவற்றைத் திருடிச் சென்று விடுவார்கள் என்ற நம்பிக்கை.
*ஆஸ்திரேலியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று இரவு உணவுக்குப் பின்பு, கிரிக்கெட் விளையாடுவது வழக்கம்.
*ஸ்காட்லாந்து நாட்டில் டிசம்பர் 18 முதல் ஜனவரி 6 வரை 20 நாட்கள் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது.
*அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் வைக்கும் கிறிஸ்துமஸ் மரம் ‘ப்ளூரூம் கிறிஸ்துமஸ்’ என்று அழைக்கப்படுகிறது. 1961-ல் கென்னடி அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த போதுதான் வெள்ளை மாளிகையில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கும் வழக்கம் துவங்கியது.
* எல்லா நாடுகளிலும் கிறிஸ்துமஸ் தாத்தா (சான்டா கிளாஸ்) இருப்பது வழக்கம். ஆனால், ஜப்பான் நாட்டில் மட்டும் ‘கிறிஸ்துமஸ் பாட்டி’ தான் உண்டு. அன்றைய தினம் கிறிஸ்துமஸ் பாட்டி குழந்தைகளுக்கு ஏராளமான பரிசுகள் வழங்குவார்.
- ஆர்.பத்ம ப்ரியா, திருச்சி.
|