குத்துச் சண்டையை தேர்வு செய்யாமல் இருந்திருந்தால் என் தலைவிதி மாறியிருக்கும்!
கடந்த மாதம் கிரேட்டர் நொய்டா, ஷஹீத் விஜய்சிங் பதிக், உட்புற மைதானத்தில் உலக சாம்பியன்களான மீனாட்சி ஹூடா, ஜெய்ஸ்மின் லம்போரியா, முன்னாள் உலக சாம்பியன் நிகத் ஜரீன் தலைமையிலான சிங்கப்பெண்கள் இதுவரை செய்யாத தங்கப் பதக்க அறுவடையினை நிகழ்த்தினார்கள். இந்திய அணி 20 கிலோ எடைப் பிரிவுகளில் ஒன்பது தங்கம், ஆறு வெள்ளி மற்றும் ஐந்து வெண்கலப் பதக்கங்களை பெற்றது. அதில் ஏழு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் தங்கப் பதக்கங்களை வென்றனர்.  மீனாட்சி ஹூடா, 48 கிலோ எடைப் பிரிவில், மூன்று முறை ஆசிய சாம்பியனான ஃபர்ஸோனா ஃபோசிலோவாவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார்.
2025 லிவர்பூலில் நடந்த உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் கால் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த நிகத் ஜரீன், நொய்டாவில், 51 கிலோ எடைப் பிரிவில் உலக காலிறுதிப் போட்டியாளர் குவோ யி சுவானை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி, நிகத் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலை நிறுத்தினார்.
“இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடந்த போட்டியில் வெற்றி பெறுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார் நிகத். 29 வயதாகும் நிகத் ஜரீன் குத்துச் சண்டையில் 2022, 2023ல் தங்கப் பதக்கங்களை வென்றவர். இரண்டு முறை உலக சாம்பியனாக இருந்துள்ளார். குத்துச் சண்டை போட்டிகளில் முத்திரை பதித்ததினால், 2021ல் நிகத் ஹைதராபாத் பாங்க் ஆஃப் இந்தியாவில் அதிகாரியாக நியமனம் பெற்றார். செப்டம்பர் 2024ல், தெலுங்கானா காவல்துறையில் துணை காவல் கண்காணிப்பாளராக நிகத் நியமிக்கப்பட்டார்.
‘‘அப்போது எனக்கு 12 வயது. அப்பாவுடன் அந்த விளையாட்டு மைதானத்திற்குள் நுழைந்தேன். மைதானத்தில் சிறுவர்கள் குழுக்களாகப் பிரிந்து பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அதில் ஓரத்தில் சிறுவர்கள் குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். என் கண்கள் அவர்களை விட்டு நகரவில்லை. அப்போது அப்பாவைப் பார்த்து, ‘ஏன் குத்துச்சண்டை போட்டியில் பெண்கள் பயிற்சி பெறவில்லை’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘இங்குதான் சிறுமிகள் குத்துச் சண்டை பயிற்சியில் ஈடுபடுவதில்லை.
ஆனால், வட இந்தியாவில் பல பெண்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். குத்துச் சண்டை ஜாம்பவான் முகமது அலியின் மகள் லைலா அலி குத்துச் சண்டை வீராங்கனையாக இருந்தார். உனக்கு விருப்பம் இருந்தால் சொல், அந்தப் பயிற்சியில் சேர்த்து விடுகிறேன்’ என்றார். நானும் அப்பாவிடம், ‘டிஷ்யூம் டிஷ்யூம்’ என்று குத்துச் சண்டை போடணும்’’ எனச் சொல்ல, உடனே பயிற்சியாளரிடம் பேசி குத்துச் சண்டை பயிற்சியில் என்னை சேர்த்துவிட்டார்.
அம்மாவிடம் சொன்ன போது, அவங்க ‘பெண் பிள்ளைக்கு குத்துச் சண்டையா’ன்னு வினவ, நான் அவரிடம், ‘குத்துச் சண்டையில் நான் சாதிச்சா, என்னை கல்யாணம் செய்து கொள்ள ஆண்கள் வரிசையில் நிற்பார்கள்’ என்று சொல்லி சமாதானம் செய்தேன்’’ என்றவர், பயிற்சிக் காலத்தில் பல சிக்கல்களை சந்தித்துள்ளார்.
‘‘பயிற்சிக்கு நான் சந்தோஷமாக செல்ல, அங்கு பயிற்சியில் ஈடுபட்ட சிறுவர்கள் அனைவரும் பின்வாங்கினார்கள். காரணம், குத்துச் சண்டை என்பது ஒருவராக பயிற்சி பெற முடியாது. எதிராளியுடன்தான் பயிற்சி பெற வேண்டும்.
பெண் பிள்ளையோடு எங்களால் பயிற்சி பெற முடியாது என்று சிறுவர்கள் பின்வாங்கினார்கள். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், ‘பெண் பிள்ளையை அரைக்கால் சட்டை அணியச் செய்து பயிற்சிக்கு அனுப்புவதா?’ என்றார்கள். நானும் அப்பாவும் அதை பொருட்படுத்தவில்லை.
பயிற்சியின் போது, எதிராளி தாக்கியதால் கண் பகுதியில் ரத்தம் கட்டிக் கொண்டு வீங்கியது. அம்மா பதற, அப்பாவோ, ‘இந்த உலகமே நம்ம மகளைப் பார்த்து ஆச்சரியப்படும்’ என்று சொன்னார். அவரின் எண்ணத்தை நான் நிறைவேற்ற ஆரம்பித்தேன்’’ என்றவர், பல வெற்றிக் கனிகளை குவிக்கத் துவங்கினார்.
‘‘என்னுடைய 15 வயதில் துருக்கியில் நடைபெற்ற ஜூனியர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் தங்கப் பதக்கம் வென்றேன். தொடர்ந்து தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பதக்கமும் என் வசமாக்கிக் கொண்டேன்.
அடுத்து தன் 25 வயதில் துருக்கியில் நடந்த உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 51 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றேன். அது எனக்கான அடையாளத்தை கொடுத்தது. இந்தச் சாதனைகளை புரிய குத்துச் சண்டை மேடைகளில் மட்டுமில்லாமல், மேடைக்கு வெளியிலும் சமூகத்துடன் போராட வேண்டியிருந்தது’’ என்று கூறும் நிகத், தெலுங்கானா நிசாமாபாத் நகரத்தைச் சேர்ந்தவர்.
‘‘என்னுடைய ரோல் மாடல் குத்துச் சண்டை வீராங்கனையான மேரி கோம். அவரைப் போல் ஒரு வீராங்கனையாக மாற வேண்டும் என்பது என் கனவு. ஆனால், அவரே என்னுடைய நேரடி போட்டியாளராக அமைவார் என்று நான் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.
ஆசிய விளையாட்டு, ஒலிம்பிக்ஸ் போன்ற சர்வதேச போட்டிகளில் ஒவ்வொரு உடல் எடைப்பிரிவிலும் ஒரே ஒரு வீராங்கனைதான் இந்தியாவின் சார்பில் பங்கேற்க வேண்டும் என்பது விதி. இந்திய குத்துச்சண்டை களத்தில் முடி சூடா ராணியாக வலம் வந்த மேரி கோமும் 48 கிலோ எடைப்பிரிவில் போட்டி போட்டதால், ஆற்றல் அனுபவம் மிகுந்த மேரி கோமை மீறி, என்னால் பயணிக்க முடியவில்லை. டோக்கியோ 2020 ஒலிம்பிக்ஸின் குத்துச் சண்டை போட்டிக்கு வழக்கம் போல மேரி கோம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதை எதிர்த்து குரல் கொடுத்தேன். ‘எங்க இருவருக்கும் இடையே குத்துச் சண்டை போட்டி நடக்கட்டும். அதில் வெற்றிப் பெறுபவர் இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக்ஸில் கலந்து கொள்ள வேண்டும் என்று சவால் விட்டேன்.’ அதற்கு பலர் விமர்சனம் செய்தார்கள். ஆனால், நான் நினைத்தது போல் போட்டி ஏற்பாடு செய்யப்படும் என்று எனக்குத் தெரியவில்லை.
அந்தப் போட்டியில் என்னால் மேரி கோமை வெற்றிப் பெற முடியவில்லை. தற்போது மேரி கோம் ஓய்வு பெற்று இருப்பதால், துருக்கி இஸ்தான்புல்லில் நடந்த மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 52 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சார்பில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றேன்.
சர்வதேசப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய குத்துச் சண்டை வீராங்கனைகளான மேரி கோம், சரிதா தேவி, ஜென்னி, லேகாவுக்கு அடுத்தபடியாக ஐந்தாம் வீராங்கனையாக நான் இணைந்திருக்கிறேன் என்று நினைக்கும் போது பெருமையாக உள்ளது.
குத்துச் சண்டை ஆண்களுக்கான விளையாட்டு என்று அப்பா நினைத்து என்னை அதில் சேர்க்காமல் இருந்தால் என் தலைவிதியே மாறியிருக்கும். என்னுடைய இந்த வெற்றிக்கு அப்பா ஒருவர் என்றால், இரண்டாமவர் என் பயிற்சியாளர் ராவ்’’ என்கிறார் நிகத் ஜரீன்.
பாரதி
|