நலம் யோகம்!



உடலுக்கு ஒளி... மனதுக்கு அமைதி!

கடந்த இதழ்களில் இயம, நியமங்கள் குறித்து தெரிந்து கொண்டோம். இந்த இதழில் ஆசனங்கள் மற்றும் ஆசனப் பயிற்சிகள், பிராணாயாமம் குறித்து தெரிந்து கொள்வோம்.அஷ்டாங்க யோகத்தின் மூன்றாவது படி நிலையே ஆசனம். 
அடுத்தடுத்த படிநிலைகளுக்கு மனமானது சென்று உச்சபட்ச சமாதி நிலையை எய்த வேண்டுமெனில், நமது உடலானது ஆரோக்கியமான கருவியாக இயங்க வேண்டும். இதற்கு ஆசனங்கள் மற்றும் ஆசனப் பயிற்சிகள் அவசியமாகிறது. 
நான்காவது பிராணாயாமம். பிராணன், அயமம் என்ற இந்த இரண்டு வார்த்தைகளை சேர்த்தால் பிராணாயாமம் என்று வருகிறது. பிராண என்றால் உயிர் வாழ்வதற்கு அவசியமான ஆற்றல். அதாவது, உயிர் ஆற்றல். அயமம் என்றால் கட்டுப்படுத்துதல் (control). எனவே, பிராணாயாமா என்பது மூச்சுப் பயிற்சி மட்டுமல்ல, இது உயிர் ஆற்றலை மேம்படுத்தும் பயிற்சியும் ஆகும்.

முதல் மூன்று படிநிலைகளான இயம, நியம ஆசனங்கள் உடலை சார்ந்தது. கடைசி மூன்றான இந்த தாரணை தியானம், சமாதி ஆகியவை மனதை சார்ந்தது. இந்த பிராணாயாமம், பதியாகாரம் இவை இரண்டும் புறத்துக்கும், அகத்துக்கும் இடையே ஒரு பாலமாக அமைகின்றன.

முறையான பிராணாயாமா பயிற்சிகளை மேற்கொண்டால் வலிகளிலிருந்து சுலபமாக விடுபடலாம். உடலில் இருக்கும் ஜீரண மண்டலம், ரத்த ஓட்ட மண்டலம், நரம்பு மண்டலம் என அனைத்து மண்டலங்களையும் ஆரோக்கியமாக வைக்க இது உதவும்.நம் மூச்சும், நம் மனமும் நெருங்கிய தொடர்புடையவை. 

இதைத்தான் சலே வாதே, சலே சித்தம், நிச்சலெ நிச்சலம் பவே தத் என ஸ்லோகம் குறிப்பிடுகிறது. அதாவது, மூச்சு அசையும் பொழுது சித்தம் அசைவிற்கும், மூச்சு அசையாமல் இருக்கும் பொழுது சித்தமும் அசைவில்லாமல் இருக்கும் என்று இதற்குப் பொருள்.

சேது பந்தாசனம்

ஆங்கிலத்தில் இதனை Bridge Pose என்று கூறுவார்கள். விரிப்பின் மீது மல்லாந்துபடுத்து, முட்டிகள் இரண்டையும் மடக்கி, இரு பாதங்களையும் உடலுக்கு அருகில் வைக்க வேண்டும். கைகள் இரண்டால், அந்தந்த காலின் கணுக்கால்களை படத்தில் காட்டியிருப்பது போல் பிடித்துக்கொள்ள வேண்டும். 

இந்த நிலையில் தலை, தோள்பட்டை, பாதங்கள் தரையில் இருக்க, மூச்சினை நன்றாக உள்ளிழுத்தபடி இடுப்பை மட்டும் மேல் நோக்கி உயர்த்த வேண்டும். இதுவே சேது பந்தாசனம். இப்போது மூச்சை வெளியே விடுத்தபடி, இடுப்பு பகுதியினை கீழே இறக்கி, கால்களை நீட்டி சவாசனத்தில் உடலை தளர்த்திக் கொள்ள வேண்டும்.

ஏக பாத சேது பந்தாசனம்

இதனை ஆங்கிலத்தில் One Legged Bridge Pose என்பார்கள். முதலில் சேது பந்தாசனம் நிலைக்கு உடலைக் கொண்டு வந்து, வலது காலை உயர்த்தி, கால் பாதம் வானத்தை நோக்கி பார்த்த நிலையில் உயர்த்திப் பிடித்து, முப்பது வினாடிகளுக்கு அப்படியே பிடித்திருந்துவிட்டு, பிறகு காலை கீழே இறக்க வேண்டும். வலது காலில் செய்ததை அப்படியே இடது காலை உயர்த்தி செய்தல் வேண்டும்.

பலன்கள்

*இந்த ஆசனங்கள் வழியே சிறுசிறு மாற்றங்களைச் செய்வதன் மூலமாக, முதுகுத் தண்டுக்கு நெகிழ்வும், ஆரோக்கியமும் கூடும். முதுகுவலி குறையும்.
*கழுத்துப் பகுதி, மேல் முதுகு, நடு முதுகு, பிட்டம், தொடைகள், கண் மற்றும் கால் தசைகள் வலுப்பெறும்.
*மார்பு மற்றும் தோள்களின் நெகிழ்வுத் தன்மை மேம்படும்.
*தைராய்டு சுரபி தூண்டப்படும்.
*செரிமான மண்டலத்தின் செயல்பாடுகள் மேம்படுகிறது.
*பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் குறைவதை நன்றாக உணர முடியும்.
*ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், சோர்வு நீங்கி உடலுக்கு புத்துணர்வு கிடைக்கிறது.
*மன அழுத்தத்திற்கு காரணமான Cortisol ஹார்மோனை கட்டுப்படுத்துவதால், மன அழுத்தம், பதட்டம் குறைத்து மன அமைதி கிடைக்கும்.
*உளவியல் பிரச்னைகளுக்கு பலணுண்டு.
*உடலின் தோரணையை (Posture) இந்த ஆசனம் மேம்படுத்தும்.

உபவிஷ்ட கோனாசனா

ஆங்கிலத்தில் இதனை Wide-Angle Seated Forward Bend என்பார்கள். விரிப்பின் மீது தண்டாசனத்தில் அமர்ந்த நிலையில், படத்தில் காட்டியிருப்பது போல், ஆங்கில எழுத்து வடிவமான வி(V) வடிவில் இரண்டு கால்களையும் இரண்டு பக்கவாட்டிலுமாக நன்றாக விரித்துக் கொள்ள வேண்டும். 

முதுகுத் தண்டுவடம் இப்போது நேராய் இருத்தல் அவசியம். கால்கள் இரண்டின் பாதவிரல்கள் உள்நோக்கி இருக்க, இடுப்பு மற்றும் தொடைப் பகுதியின் தசைகள், முட்டிக் கால்கள் இரண்டிலும் நன்றாக விரிந்திருப்பதை உணர முடியும்.

இப்போது நுரையீரல் நிரம்பும் அளவுக்கு உள் மூச்சை நன்றாக இழுத்து, கைகள் இரண்டையும் தோள் பட்டை உயரத்திற்கு உயர்த்த வேண்டும். உள் மூச்சினை இப்போது வெளியேற்றியபடி, இடுப்பு பகுதிக்கு மேலிருக்கும் உடல் பகுதியை முன் பக்கம் மெதுவாக வளைத்து மெல்ல மெல்ல கொண்டு செல்ல வேண்டும். இப்போது இரண்டு கைகளால், பாத விரல்கள் அல்லது கணுக்கால்களை பிடித்துக் கொள்ளலாம்.

உடல் நெகிழ்வுத் தன்மை அதிகம் உள்ளவர்கள் நன்றாக உள் மூச்சையும், வெளி மூச்சையும் எடுத்த நிலையில், தாடைப் பகுதியானது தரை வரை அல்லது தரை விரிப்பு வரை அல்லது மார்புக்கு கீழே தொடும் வரை தாடையை கொண்டு வரலாம். இதுவே உபவிஷ்ட கோனாசனம்.உள் மூச்சை இழுத்த நிலையில், உடம்பின் மேல் பகுதியை நேராக்கி, பாத விரல்களிலிருந்து கைகளை விலகிக்கொண்டு, பிறகு கால்கள் இரண்டையும் நேராக இணைத்து, தண்டாசனத்தில் உடலை தளர்வுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பலன்கள்

*முதுகுத் தண்டுவடம், தோள்கள், இடுப்புத் தசைகள், தொடை தசைகள், கெண்டைக்கால் தசைகள் வலிமை பெறும்.
*ரத்த ஓட்டம் மற்றும் உடலின் நெகிழ்வுத் தன்மை மேம்படும்.
*சியாடிகா வலி (Sciatica Pain), கீழ்முதுகு வலிக்கு நிவாரணம் கிடைக்கும்.
*இடுப்பு பகுதி ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், பெண்களின் மாதவிடாய் நேர Cramps எனப்படும் அடி வயிற்று வலி குறைவதுடன், மாதவிடாய் சுழற்சி சீராகும்.
*கர்ப்பப்பை சிக்கல்கள் குறையும்.
*உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தாராளமாய் இந்த ஆசனத்தை செய்தால் பலன் உண்டு.
*நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி மன அழுத்தம், பதட்டத்தைக் குறைக்கும். மன அமைதி மேம்படும்.

ஆ.வின்சென்ட் பால்