முத்துக்கு முத்தான... சத்துக்கு சத்தான... முள் சீத்தாப்பழம்!
பாமர மனிதன் முதல் வசதியானவர்கள் வரை அனைவரும் விரும்புவது நோயில்லா ஆரோக்கியமான வாழ்க்கை. இன்று எல்லாமே நவீனமயமாகி வருகிறது. அதில் குறிப்பாக மருத்துவத் துறை தொழில்நுட்பத்தில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது. அதன் மூலம் எதிர்காலத்தில் வரக்கூடிய நோய்கள் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பிரச்னைகளை கண்டறிந்தாலும், அந்த நோயின் பாதிப்பு ஏற்படாமல் அதிலிருந்து காத்துக் கொள்ள ஆரோக்கியமான வாழ்க்கை மிகவும் அவசியம். ஒருவரின் ஆரோக்கியம் அவரின் கையில்தான் உள்ளது. ஆரோக்கியத்தின் மூலக்காரணம் உணவு. சம்பாதிப்பதே நன்றாக சாப்பிடத்தான் என்று கிடைத்த எல்லாவற்றையும் அள்ளிப் போட்டு கொள்ளக் கூடாது. அதே சமயம் அளேவாடு சாப்பிட்டாலும் உடற்பயிற்சியும் அவசியம். இல்லை என்றால் நோய்களின் கூடாரமாக நம்முடைய உடம்பு மாறிவிடும்.  இன்று சமூக வலைத்தளங்களில் ஆரோக்கிய உணவு சார்ந்த பதிவுகள் வருவதால் மக்கள் மத்தியிலும் ஆரோக்கிய உணவு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அவ்வகையில் நம் தமிழர் உணவுதான் நோய்களுக்கு சிறந்த மருந்து என்கிறார் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கோமதி தங்கபாண்டி.
இவர் தன் மகனுக்கு ஏற்பட்ட உடல் சார்ந்த பிரச்னையினை உணவு மூலமே சரி செய்து நோயிலிருந்து மீட்டெடுத்துள்ளார். மேலும், முழுக்க முழுக்க இயற்கை விவசாயத்தினை பின்பற்றி முள் சீத்தா பழங்களிலிருந்து மதிப்புக்கூட்டுப் பொருட்களைத் தயாரித்து ‘வனம்’, ‘ஹிமாவத்’ என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறார்.
‘‘எனக்கும் என் கணவருக்கும் சொந்த ஊர் அருப்புக்கோட்டைதான். பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சிருக்கேன். கணவர் மெக்கானிக்கலில் பொறியியல் படித்துவிட்டு ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்து வந்தார். திருமணத்திற்கு பிறகு நானும் அங்கு சென்றுவிட்டேன். சில காலத்திற்குப் பிறகு நாங்க குடும்பத்துடன் சொந்த ஊருக்கே திரும்பி வந்துவிட்டோம். அதன் பிறகு இயற்கை விவசாயம் செய்ய விரும்பி, பழநி அருகே பாப்பன்பட்டியில் பத்து ஏக்கர் தென்னந்தோப்பு வாங்கினோம்.
அருப்புக்கோட்டையில் நீர்வளம் குறைவு என்பதால்தான் பாப்பன்பட்டியில் நிலம் வாங்கினோம். தென்னையில் இருந்து தேங்காய் மட்டுமில்லாமல் அதிலிருந்து செக்கு முறையில் எண்ணெயும் தயார் செய்து விற்பனை செய்தோம்’’ என்றவர் விவசாயம் குறித்து பேசத் தொடங்கினார். ‘‘நாங்க விவசாய குடும்பம் இல்லை. ஆஸ்திரேலியாவில் இருக்கும் போதே இயற்கை விவசாயம் செய்ய விரும்பினோம். முடியவில்லை. அதனால்தான் இங்கு தென்னந்தோப்பு வாங்கினோம். இயற்கை முறையில் வாழ நினைத்தோம், ஆனால், என் இரண்டு பசங்களும் ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்ததால், அவர்களால் இந்த ஊருக்கு அடாப்ட் ஆக முடியவில்லை. உடல் உபாதைகள் ஏற்பட்டது. என் பையனுக்கு வயிறு வீங்கி கால் கோணலா நடக்க ஆரம்பித்தான். பல டாக்டர்களை பார்த்தோம்.
ஒவ்வொருவரும் ஒன்று சொன்னார்கள். இயற்கை மருத்துவர் ஊட்டச்சத்து குறைபாடு காரணம் என்று கூறினார். அதன் பிறகு அவரிடமே சிகிச்சை பெற ஆரம்பித்தோம். தினமும் காலையில் புத்து மண் குளியல். காலை உணவாக சுண்டல், பாசிப்பயறு, சூரியகாந்தி விதை, தேங்காய் பூ சேர்த்த சாலட், மதியம் முதுகுத் தண்டுக்கு வெந்நீர் மற்றும் குளிர்ந்த நீர் ஒத்தடம், சுண்ணாம்பும் சர்க்கரையும் கலந்து மூட்டுகளில் பூசுதல்.
இரவு ஏதாவது ஒரு ஜூஸ். இரண்டு மாதங்கள் தொடர்ந்து இதை பின்பற்றினோம். அவனுக்கு மட்டுமில்லை நாங்களும் அதைத்தான் சாப்பிட்டோம். கொஞ்சம் கொஞ்சமாக அவன் இயல்பு நிலைக்கு மாறினான். இப்போது நன்றாகிவிட்டான்.
என் பையனைப் போல் பல குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டு இருப்பாங்க. அவங்களுக்கு சத்தான உணவுப் பொருட்களை தரணும் என்ற எண்ணம் வந்தது. அப்படித்தான் ‘வனம்’ உருவானது. இயற்கை விவசாயம் செய்பவர்களிடம் பொருட்களை வாங்கி அதை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய ஆரம்பித்தோம்.
என் கணவரின் நண்பர் ஒருவர் புற்றுநோய் கட்டியால் பாதிக்கப்பட்டிருந்தார். எங்களிடம் வந்து முள் சீத்தாப் பழம் கிடைக்குமா? என்று கேட்டார். அவருக்கு முள் சீத்தாப் பழம் சாப்பிட சொல்லி மருத்துவர்கள் பரிந்துரை செய்ததாக கூறினார். எங்கள் தோட்டத்தில் இரண்டு முள் சீத்தாப் பழ மரங்கள் இருந்தன. அவர் கேட்கும் வரை எங்களுக்கு முள் சீத்தாப் பழம் கேன்சருக்கு நல்லதுன்னு தெரியாது. நிறைய முள் சீத்தாப் பழக்கன்றுகளும் வாங்கி விளைவித்தோம். மூன்று வருடத்தில் பழங்களாக அதனை விற்பனை செய்தோம். அந்த மர இலைகளிலும் ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் அதிகம். அதிலிருந்து டீ பேக்ஸ் உற்பத்தி செய்து வருகிறோம். இலைகளை சோலார் மூலம் காய வைத்து தயாரிக்கிறோம். மேலும், மலைத்தேன், பாரம்பரிய அரிசிகள், சிறுதானியங்கள், எண்ணெய் வகைகள், அவல் போன்றவற்றையும் விற்பனை செய்கிறோம்.
இயற்கை விவசாயத்தினை கடைபிடிப்பதால், எங்க தோப்பில் உள்ள மரம், செடிகளுக்கு மாடுகளின் சாணம் கொண்டு பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம் உரங்களை தயாரித்து பயன்படுத்தி வருகிறோம். எங்களின் ஸ்பெஷாலிட்டியே மதிப்புக்கூட்டும் பொருட்களை தயாரிப்பது என்பதால், அதை முள் சீத்தாப் பழத்திலும் கடைபிடிக்க துவங்கினோம். பழம் காயாக இருக்கும் போது துண்டுகளாக்கி, காயவைத்து பவுடராக விற்பனை செய்கிறோம். பால், வெந்நீரில் கலந்து சாப்பிடலாம்.
புற்று நோயாளிகள்தான் சாப்பிட வேண்டும் என்றில்லை. ஐந்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லோரும் சாப்பிடலாம். இந்தப் பழத்தின் விதைகளை தோல் நீக்கி கூழாக அரைத்து நாட்டுச் சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு கேண்டிகளாக ‘ஹீமாவத் ஆர்கானிக்ஸ்’ என்ற பெயரில் விற்பனை செய்கிறோம்.
எங்கள் நோக்கமே நோய் எதிர்ப்பு சக்தி வழங்கும் முள் சீத்தாப் பழங்களை எந்த வகையிலாவது மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான்’’ என்றவர், தாங்கள் தயாரிக்கும் அனைத்துப் பொருட்களையும் உணவு தரக்கட்டுப்பாடு மையத்தின் மூலம் சோதனை செய்த பிறகுதான் விற்பனையே செய்கிறார். ‘‘கணவர் மார்க்கெட்டிங் பார்த்துக் கொள்கிறார். நான் விற்பனை மற்றும் உற்பத்தியில் கவனம் செலுத்துகிறேன். பனிரெண்டு வகையான புற்று நோய்களை குணப்படுத்துவதாக கூறப்படும் முள் சீத்தாப் பழத்தை இயற்கையான கீமோதெரபி என அழைக்கத் தொடங்கிவிட்டனர். இப்படி நம் உடலுக்கு அனைத்து ஆரோக்கிய வளங்களை தரும் பழங்கள் மற்றும் காய்கறிகளை இயற்கை முறையில் விற்பனை செய்து மக்களை காப்போம்’’ என்கின்றனர் கோமதி தங்கபாண்டி தம்பதியினர்.
செய்தி: கலைச்செல்வி
படங்கள்: கமலக்கண்ணன்
|