என் வீடு ... என் பிசினஸ்... இரண்டு சமயலறைக்கும் வித்தியாசம் இல்லை!



கேக் வகைகளில் புதுமைகளை அறிமுகப்படுத்த ரூபியா தயங்குவதே இல்லை. அதையும் தாண்டி பிரவுனி பிரியர்களை, பிளாண்டி ரசிகர்களாகவே மாற்றி வைத்திருக்கிறார் இவர்.           
‘‘கடந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பலரையும் அணுகி கேக் ஆர்டர்களைப் பெற்றோம். இந்தாண்டு கிறிஸ்துமஸ் வரும் முன்பே, வாடிக்கையாளர்கள் எங்களைத் தேடிவர ஆரம்பித்துவிட்டார்கள்’’ என்கிற ரூபியா பர்வீன்-அஹத் ஹூசைன் தம்பதியர், நாகர்கோவில் Zara deserts and cakes என்ற பெயரில், ஹோம் மேட் ஃபுட் டிரக் ஷாப் ஒன்றை வெற்றிகரமாய் நடத்தி வருகின்றனர்.

தொழிலில் இவர் நிபுணத்துவம் பெற்றிருக்கிறார் என்பது சான்றிதழுக்கானது இல்லை. அர்ப்பணிப்புக்கானது என்பதற்கு ரூபியா ஒரு சிறந்த உதாரணம். நம்பிக்கையை மட்டும் மூலதனமாய் வைத்து, புதுவித பிராண்டை உருவாக்க முடியும் என்பதற்கு ரூபியாவின் வெற்றி நமக்கு எடுத்துக்காட்டு. ஆம்! நாகர்கோவில் முழுவதும், ரூபியாவின் சாக்லேட் கேக் சூப்பர் ஹிட்! 

வார இறுதி நாட்களில் காரப் பிரியர்களுக்கு, புதுமையான சிக்கன், மட்டன் இணைந்த கொரியன் கார்லிக் பன், அரபு நாட்டு ஸ்பெஷல் குனாஃபா பவுல் மாதிரியான கார உணவுகள் தனித்துவத்தோடு கிடைப்பதுடன் இனிப்பு வகை கேக்குகளான நட்ஸ் பிரவுனி, டபுள் சாக்லேட் மற்றும் டிரிபிள் சாக்லேட் பிரவுனி, பிரவுனி வித் ஐஸ்க்ரீம், குனாஃபா பிரவுனி, டபுள் மற்றும் 
டிரிபிள் சாக்லேட் பிளாண்டி, பிளாண்டி வித் ஐஸ்க்ரீம், சீஸ் கேக்ஸ், சாக்லேட் டர்ஃபிள் என இன்றைய GenZ, Gen alpha தலைமுறையினரிடமும் வெரைட்டிகளை சேர்ப்பதில் ரூபியா அப்டேட்டாக இருக்கிறார். 

பி.எஸ்.ஸி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்திருக்கும் ரூபியா, தன் குழந்தைகளுக்காக செய்த சுமாரான கேக் எப்படி முழுநேரத் தொழிலாக மாறியது? ரூபியாவின் தொழிலுக்காக, அவரின் கணவர் அஹத் ஹூசைன் துபாய் நாட்டு வேலையை துறந்தது? ரூபியா தன் கனவை நிஜமாக்கியது... குடும்பத்தின் கூட்டு முயற்சி குறித்தெல்லாம் நம்மிடம் விவரிக்க ஆரம்பித்தார்.‘‘கடையில் வாங்கும் கேக் பிடிக்காமல்தான், வீட்டிலேயே என் குழந்தைகளுக்கு கேக் செய்யத் தொடங்கினேன். 

கேக் நல்லா இருக்குதோ இல்லையோ ஆஹா... ஓஹோ... சூப்பர்னு குடும்ப மொத்தமும் சப்போர்ட் செய்ய, அம்மா சமைச்சதுல உப்பு கொஞ்சம் கம்மியா இருந்தாலும் அற்புதம்னு சொல்வோம் இல்லையா? அதுமாதிரிதான் இதுவும்’’, புர்காவுக்குள் தன் முகம் புதைத்து எளிமையாக நம்மைப் பார்த்து புன்னகைத்தவர், ‘‘குடும்பத்தினரின் இந்த அன்புதான் என் தொழிலுக்கான அஸ்திவாரமே’’ என்கிறார்.

‘‘தொடர்ந்து கேக் தயாரிப்பை விடாமல் முயற்சித்ததில், முதலில் குடும்பம்... நண்பர்கள்... பக்கத்து வீடு என எனது தயாரிப்பு நகர ஆரம்பித்து, ஒருநாள் உறவினர் ஒருவர் பணம் கொடுத்து கேக் செய்து தர வற்புறுத்த, என் தொழிலுக்கான பயணம் அன்று தொடங்கியது. 

பிறகு திருவிழா ஒன்றில் நான் போட்ட சின்ன ஸ்டாலில் கிடைத்த வரவேற்பு, என் தயாரிப்பின் உண்மையான மதிப்பை எனக்கு புரிய வைத்தது. இதையே ஒரு தொழிலாக என்னால் மாற்ற முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இங்குதான் விழுந்தது. இதில் ஆச்சரியமானவிஷயம் என்னவென்றால், எந்தவொரு பேக்கிங் வகுப்புக்கும் நான் இதுவரை சென்றதில்லை என்பதே.

குழந்தைகள் இரண்டையும், குடும்பத்தையும் மாமியார் பொறுப்பாக கவனித்துக் கொள்ள, YouTube பார்த்தே தயாரிப்பு முறைகளை கற்றுக் கொண்டேன். ஆனால், பார்த்ததை அப்படியே செய்யாமல், எனக்கென தனி ஸ்டைலை உருவாக்கியதில் வெற்றி கிடைத்தது. ஆரம்பத்தில் ஓவன் கூட என்னிடம் இல்லை. குக்கரில் தயாரித்து, அதில் கிடைத்த சிறு லாபத்தை மீண்டும் முதலீடு செய்து, கொஞ்சம் கொஞ்சமாக ஒரு ஹேண்ட் பிளெண்டர், பிறகு சின்ன ஓவன், அப்புறம் பெரிய மிக்ஸர் என படிப்படியாக எனது தொழிலை வளர்த்தேன்’’ என்று மீண்டும் நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார்.

‘‘இந்த நிலையில், என் மீதிருந்த அதீத நம்பிக்கையால், துபாயில் நல்ல சம்பளத்தில் பார்த்து வந்த தன் வேலையை உதறிவிட்டு, கேக் தொழிலில் எனக்கு கை கொடுக்க எனது கணவரும் இந்தியா திரும்பினார். 

இது நாங்கள் உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவில்லை. கணக்கிடப்பட்ட எங்களின் துணிச்சல் என்று வேண்டுமானால் சொல்லலாம். தனித்தனியாய் குடும்பம் பிரிந்து வாழ்வதைவிட, இருவரும் இணைந்து நமக்கான ஒரு தொழிலை உருவாக்குவோம் என யோசித்து ஆரம்பித்த பிசினஸ் இது.

ஆர்டர்களை பெற்றதுமே, தயாரிப்பு, புதிய ரெசிபிகளை கண்டுபிடிப்பது என கிச்சனை நான் ஆக்கிரமிக்க, மூலப் பொருட்கள் வாங்குவது, சேல்ஸ், பேக்கேஜிங், டெலிவரி என வெளி வேலைகளில் அவர் கவனம் செலுத்தினார். கடையை வாடகைக்கு எடுத்தால் அட்வான்ஸ், இன்டீரியர் என செலவு பிடிக்கும் என்பதால், சின்ன டிரக் ஒன்றை வாங்கி அதை மாலை நேரக் கடையாக மாற்றினோம்.

ஃபுட் டிரக்கில் 4 மணி தொடங்கி 10 மணி வரை வியாபாரம் சூடு பிடிக்கும். எங்களின் மினி ஃபுட் டிரக்கிற்கு நாங்கள் வைத்த பெயர் Zara deserts and Cakes. என் மகள் பெயர் Zara. என்றாலும், குடும்பத்தில் உள்ள நால்வரது முதல் எழுத்தையும் இணைத்தால் (ஜாரா, அர்மான், ரூபி, அஹத்) Zara வரும். இன்று எங்கள் தொழில் எங்களின் குடும்ப அடையாளமாக மாறி நிற்கிறது. Zara Cakes கேக் விற்கும் இடம் மட்டுமில்லை, எங்கள் குடும்பத்தின் கூட்டு முயற்சி’’ என்கிறார் அழுத்தம் திருத்தமாக. 

‘‘என் வீட்டு சமையலறைக்கும், பிசினஸுக்கான சமையலறைக்கும் வித்தியாசம் கிடையாது. என் குழந்தைகளுக்கு எப்படி ஆரோக்கியத்துடன் சுவையாக கேக் தயாரித்துக் கொடுக்கிறேனோ, அதே தரம்.. சுவை.. அக்கறையுடன் வாடிக்கையாளர்களுக்கும் தயாரித்து அளிக்கிறேன். ஒரு பொருள் நன்றாக இருந்தால், நமக்கான விளம்பரத் தூதர்களாக வாடிக்கையாளர்களே மாறுவார்கள். 

எங்களின் பிராண்ட் குறித்து வாய் வழியாக வாடிக்கையாளர்கள் புகழ்வதும், இன்ஃப்ளூயன்சர்ஸ் தானாகவே வந்து வீடியோ போடுவதும், பல லட்சம் செலவு செய்யும் விளம்பரத்தைவிட சக்தி வாய்ந்தது. எனது தயாரிப்பை எந்த பெரிய பிராண்டுகளும் காப்பி அடிக்கவே முடியாது. சுவையின் உண்மைத் தன்மையும் தயாரிப்போட தரமுமே இதற்கு சாட்சி’ என்று புன்னகை மாறாமல் விடை கொடுத்தார்.

இந்தியா திரும்புகிற முடிவை துணிந்து எடுத்தேன்!

அஹத் ஹூசைன்

‘‘வாடிக்கையாளர் ஒருவர், கார்ட்டூன் கதாபாத்திரம் இருக்கும் ஸ்பெஷல் டிசைன் கேக் வேண்டுமெனக் கேட்க, என் மனைவி ரூபியா அதை நேர்த்தியாகச் செய்து, புகைப்படம் எடுத்து அதை எனக்கு அனுப்பினார். அதைப் பார்த்த அடுத்த நிமிடம், என் மனைவி ஒரு தொழில்முறை பேக்கர் அளவுக்கு திறமையானவர் என்கிற உண்மை உரைக்கத் தொடங்கியது.

ரூபியாவின் திறமை உணர்ந்து, அவரோடு இணைந்து தொழிலை மேம்படுத்த இந்தியா திரும்புகிற முடிவை துணிந்து எடுத்தேன். அதுவரை நிரந்தர வேலை, நல்ல சம்பளம், செட்டில்ட் லைஃப் என வசதிகளோடு துபாயில் இருந்தவன் நான்.  

ஊர் திருவிழா ஒன்றில் ரூபியா சின்ன ஸ்டால் ஒன்றைப் போட, அங்கு வந்திருந்த வாடிக்கையாளர்களில் பலர், என் மனைவியை அடையாளம் கண்டு, உங்க கடை நாகர்கோவிலில் எங்கு இருக்கிறது எனத் தேடினோம். கண்டுபிடிக்க முடியவில்லை எனக் கேட்க, அந்த மொமென்ட் கிளிக் ஆனதுதான் மினி ஃபுட் டிரக் ஐடியா.

எதுக்கு இன்னும் டைம் வேஸ்ட் பண்ணணும் என யோசித்து என் முழுநேரப் பங்களிப்பையும், என் மனைவியின் தொழிலுக்கு கொடுக்கத் தொடங்கினேன். இன்று நாகர்கோவிலில் உள்ள பெரும்பாலான மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், கல்லூரி இளைஞர்கள் என பெரும்பாலும் GenZ, Gen alpha தலைமுறையினர் எங்களின் தொடர் வாடிக்கையாளர்கள்.

பிறந்த நாள், திருமண நாள், கிறிஸ்துமஸ், நியூ இயர், பிற முக்கிய நாட்கள் என ஆர்டர்கள் தொடர்ந்து வர ஆரம்பித்தது. அடுத்து நவீன மாடல் கேக் ஷாப் ஒன்றை வீட்டின் அருகிலேயே திறக்கும் எண்ணத்தில் இருக்கிறோம்’’ என்றவர், ‘‘எங்களின் இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமே, முதலாவது சுவை... இரண்டாவது தரம்... மூன்றாவது வீட்டில் தயாரிக்கப்பட்டது... ஆமாம்! எங்கள் தயாரிப்பில் கூடுதல் சுவையும், தனிப்பட்ட கவனமும் இருக்கென எங்களின் கடையினை மக்கள் தேடி வருகிறார்கள்.’’