வெள்ளரிக்காயில் சகலமும் உள்ளது!
வாசகர் பகுதி
உடலுக்கு குளிர்ச்சி தரும் இதில் பல சத்துக்கள் உள்ளன. 100 கிராம் வெள்ளரிக்காயில் 13 கலோரி சத்துக்கள் உள்ளன. பச்சையாக சாப்பிடுவது நல்ல பலனை தரும். இதில் உள்ள பொட்டாசியம், பாஸ்பரஸ் சமைக்கும் போது வீணாகிவிடும் என்பதால், வெள்ளரிக்காயை தோளுடன் சாப்பிட வேண்டும். அதில் பல சத்துக்கள் நிறைந்துள்ளன.
 வயிறு உபாதைகள்
வெள்ளரிக்காயில் 96% தண்ணீர்தான் உள்ளது. இதனை ஜூஸாக சாப்பிட்டால் வாய்வு சம்பந்தமான பிரச்னைகள், வயிற்றில் உள்ள புண்கள் ஆறும். தினமும் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை 120 முதல் 180 மில்லி லிட்டர் வெள்ளரிக்காய் ஜூஸை குடித்தால் வயிற்றில் உள்ள புண்கள் ஆறுவதுடன் வயிறு எரிச்சல் தீரும்.வெள்ளரிக்காயை சிறிது சிறிதாக வெட்டி மிக்ஸியில் போட்டு அரைத்தால் வெள்ளரிக்காய் ஜூஸ் ரெடி. சர்க்கரை, உப்பு சேர்க்காமல் பருக வேண்டும்.
ரத்தக்கொதிப்பு: வெள்ளரிக்காய் சாறோடு இரண்டு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிட்டால் ரத்தக்கொதிப்பு கட்டுப்படும்.
முடக்குவாதம்
வெள்ளரிக்காய் ஜூஸோடு கேரட், பீட்ரூட் ஜூஸை கலந்து சாப்பிட முடக்குவாத பிரச்னை தீரும்.உடல் சூடு: வெயில் காலத்தில் வெள்ளரிக்காயை நறுக்கி பச்சையாக சாப்பிட உடல் சூடு குறையும். வியர்வையாக வெளியேறிய தண்ணீர் சத்துக்கு இது மாற்றாக அமையும். ஒரு கப் வெள்ளரிக்காய் ஜூஸோடு மோர், சிறிது உப்பு கலந்து குடித்தால் சூட்டினால் உடலில் ஏற்படும் தீங்குகள் நீங்கும்.
மலச்சிக்கல்
வெள்ளரிக்காயில் தண்ணீர் சத்து அதிகம் இருப்பதால் தினமும் இரண்டு சாப்பிட மலச்சிக்கல் சரியாகும்.
முகப்பரு
வெள்ளரிக்காயை சீவி முகம், கண், கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊறவிட்டு கழுவ முகம் பொலிவடையும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் முகப்பரு, கண்களை சுற்றியுள்ள கருவளையம் மறையும். தோல் சுருக்கம் நீங்கி தோல் மென்மையாகும். முகத்தில் இளமை பொங்கும்.
தலைமுடி: வெள்ளரிக்காயில் இருக்கும் சல்பர் முடியை நன்கு வளர உதவும். வெள்ளரிக்காய் சாறோடு கேரட், புதினா சாறு கலந்து தலைக்கு தேய்த்து ஊறவிட்டு குளித்தால் முடி கொட்டுவது குறையும். சாதாரண வெள்ளரிக்காயில் சகலமும் உள்ளது. பயன்படுத்தி பலன் பெறுங்கள்.
- எஸ்.விமலா சடையப்பன், திண்டுக்கல்.
|