நியூஸ் பைட்ஸ்



சதுரங்கத்தில் சாதனை படைக்கும் சிறுமி

சில நாட்களுக்கு முன்பு ரோட்ஸ் தீவில்  ஐரோப்பியன் கிளப் கோப்பைக்கான சதுரங்கப் போட்டிகள் நடந்தன. இதில் பங்கேற்ற முன்னாள் பெண்கள் உலக சாம்பியனும், கிராண்ட் மாஸ்டருமான மரியா முசசொக்கைத் தோற்கடித்து, உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் போதனா சிவானந்தன். 
லண்டனைச் சேர்ந்த இந்த சதுரங்க இளவரசியின் வயது 10. உலக சாம்பியனை வென்ற இளம் வீராங்கனை என்ற சிறப்பையும் தன்வசமாக்கியிருக்கிறார் போதனா. மட்டுமல்ல, கடந்த 2024ம் வருடம், மார்ச் மாதத்தில் 10 வயதுக்குட்பட்ட உலகின் தலைசிறந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் பட்டியல் வெளியானது. இதில் நம்பர் ஒன் வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டார் போதனா. ஹங்கேரியில் நடந்த 45வது செஸ் ஒலிம்பியாட்டில் பங்கு பெற்ற இங்கிலாந்தின் பெண்கள் அணியில் இடம்பிடித்தார். 

அப்போது போதனாவுக்கு வயது 9. இங்கிலாந்தின் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தின் கால்பந்து அணி என எந்தவொரு இங்கிலாந்து விளையாட்டு அணியிலும் 9 வயதுடையவர் இடம்
பிடித்ததே இல்லை. இங்கிலாந்து விளையாட்டு அணியில் இடம் பிடித்த மிக இளையவர் என்ற சாதனையையும் தன்வசப்படுத்தினார் போதனா.

இந்தியாவின் பழமையான டீக்கடை

கொல்கத்தாவிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் ஒரு நகரம், செராம்பூர். அதன் மையத்தில் அமைந்திருக்கிறது, நரேஷ் ஷோமே’ஸ் தேநீர்க்கடை. 100 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகிறது இந்த தேநீர்க்கடை. இத்தனைக்கும் 5 அடி அகலம், 7 அடி நீளம் கொண்ட சிறிய கடை இது. கடந்த 100 வருடங்களில் சில முறை மட்டுமே சுவற்றுக்கு பெயின்ட் அடித்திருக்கின்றனர். 

ஒருமுறை கூரையைப் பழுது பார்த்திருக்கின்றனர். ஆனாலும், இன்னமும் வலுவாக இருக்கிறது இந்தக் கடை. முதலாளி இல்லாத நேரங்களில், தன்னார்வலர்கள் கடையை பார்த்துக் கொள்கின்றனர். நீண்ட வருடங்களாக கடையின் வாடிக்கையாளர்களாக இருப்பவர்கள்தான் தன்னார்வலர்களாக மாறுகின்றனர். இவர்கள் யாரும் சம்பளம் பெற்றுக்கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜப்பானின் முதல் பெண் பிரதமர்

சமீபத்தில் சனாயே டகாய்ச்சி என்ற பெண் ஜப்பானின் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பதுதான் உலக அரசியலில் ஹாட் டாக். கடந்த 1885-ம் வருடத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் ஜப்பானிய பிரதமர்களாக இருந்திருக்கின்றனர். ஆனால், ஒரு பெண் கூட பிரதமராக இருந்ததில்லை. 

இந்நிலையில் ஜப்பானின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை தன்வசமாக்கியிருக்கிறார், சனாயே. மட்டுமல்ல, ஜப்பானின் பழமைவாத கட்சியான எல்டிபி (Liberal Democratic Party)யின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார் சனாயே. 

69 வருடங்களாக இயங்கி வரும் எல்டிபியின் முதல் பெண் தலைவரும் இவரே. எண்பதுகளின் பிற்பகுதியில் அமெரிக்காவுக்குச் சென்று, அங்குள்ள ஒரு பெண் அரசியல்வாதியிடம் வேலை செய்தார். இதற்காக ஒரு கல்வி நிறுவனம் ஸ்பான்சர்ஸிப் செய்தது. இரண்டு வருடங்களில் அமெரிக்க அரசியல் குறித்த நுணுக்கங்களை அறிந்து கொண்ட சனாயே, 1989-ல் ஜப்பானின் சட்டமன்ற ஆய்வாளராக வேலை செய்ய ஆரம்பித்து, இன்று பிரதமராக உயர்ந்துவிட்டார். 

சாதனை பெண்

உலகளவில் பிரபலமான ரேஸிங் சாம்பியன்ஷிப் போட்டி, ‘வேர்ல்டு ராலி- ரெய்டு சாம்பியன்ஷிப்’. இதனைச் சுருக்கமாக ‘W2RC’ என்று அழைக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் உலகின் வெவ்வேறான நாடுகளில் ஐந்து முறை நடக்கிறது இந்தப் போட்டி. கார், பைக், டிரக் உள்ளிட்ட வாகனங்களுக்குத் தனித்தனி பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன. சமீபத்தில் போர்ச்சுக்கலில் ‘W2RC’ நடந்தது. இதில் பெண்களுக்கான பைக் ரேஸில் கலந்து கொண்டு, வெற்றி பெற்றிருக்கிறார்  ஐஸ்வர்யா பிஸே.

‘W2RC’யில் வெற்றிபெற்ற முதல் இந்திய மற்றும் ஆசியப் பெண்ணும் இவர்தான். மட்டுமல்ல, ‘W2RC’யில் கலந்து கொண்ட முதல் இந்தியப் பெண்ணும் இவரே. 2019-ம் வருடம் நடந்த பெண்களுக்கான உலகளாவிய மோட்டார் சைக்கிள் பந்தயமான எஃப்ஐஎம் பஜாஸ் வேர்ல்டு கப்பில் பங்கேற்று வெற்றி பெற்றார். 

இதன் மூலம் உலகளவிலான மோட்டார் ஸ்போர்ட்ஸில் வெற்றி பெற்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றார். இதற்கு முன்பு இந்தியாவைச் சேர்ந்த எந்தப் பெண்ணும் உலகளவிலான பைக் ரேஸில் கலந்து கொண்டு வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கால்பந்து பாட்டி

வாழ்க்கையில் ஒருமுறை கூட விளையாடாத கால்பந்து விளையாட்டில் புகழ்பெற்றவராக, வழிகாட்டியாக வலம் வருகிறார் லைபி ஃபன்ஜோபாம் என்ற பெண்மணி. கால்பந்து வீராங்கனைகளின் மத்தியிலும், மணிப்பூர் பெண்களின் மத்தியிலும் பிரபலமான ஓர் ஆளுமை இவர். லைபி உருவாக்கிய கால்பந்து வீராங்கனைகள் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் சாதனைகள் புரிந்து வருகின்றனர். 

இப்போது லைபியின் வயது 65. சில வருடங்களுக்கு முன்பு ‘ஆன்றோ மஹிலா மண்டல் அசோஷியன்’ (Amma) எனும் ஃபுட்பால் கிளப்பை ஆரம்பித்தார் லைபி. இந்த கிளப் பெண்களின் மத்தியில் கால்பந்து விளையாட்டை ஊக்குவித்ததோடு மட்டுமல்லாமல், பெண்களுக்கு பாதுகாப்பு அரணாகவும், அவர்கள் தங்களது வாழ்க்கையின் நோக்கத்தை அறிந்து கொள்வதற்கான ஓர் இடமாகவும் இருந்து வருகிறது. 

த.சக்திவேல்