மருதாணிச் சிவப்பு சிவப்பு!
இயற்கை 360∘
பண்டிகை நாட்கள், சுபமுகூர்த்தங்கள் என வைபவங்கள் வந்தாலே, மங்கலப் பொருட்களுக்கிடையே நிச்சயம் இடம்பெறுவது மருதாணியும்தான். பொதுவாக, விலையுயர்ந்த ஆபரணங்களை அணிந்து கொள்ளும்முன், பெண்கள் தங்கள் கைகளிலும் கால்களிலும் ‘மெஹந்தி’ எனும் மருதாணி அணிந்து கொள்வது வழக்கம். ஆனால், விலையுயர்ந்த ஆபரணங்களை அணியமுடியாத ஏழைகளுக்கு, இந்த வைபவங்களின் போது ஆபரணமாகத் திகழ்ந்ததே, இந்த மெஹந்தி எனும் மருதாணி கொண்டு வரைந்த ‘ஹென்னா’ எனும் உடல் ஓவியம்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா? அப்படிப்பட்ட மருதாணி வெறும் அலங்காரப்பொருள் மட்டுமல்ல, ஆரோக்கியத்தின் இருப்பிடமும் கூட என்பதும் உங்களுக்குத் தெரியுமா? மருதாணியின் பல்வேறு குணநலன்கள் பற்றியும், இது போன்ற பல சுவாரஸ்யமான வரலாற்றுச் சிறப்புகளையும் தெரிந்துகொள்ள, இயற்கை 360°யில் ஒரு பயணம் மேற்கொள்வோம் வாருங்கள்..! தலைமுடி கருக்கவும்...
கை விரல்கள் சிவக்கவும் பெரிதும் உதவும் மருதாணியின் தாவரப்பெயர் Lawsonia inermis.தோன்றிய இடம்: எகிப்து. தாவரப்பெயரில் உள்ள லாசோனியா என்பது, மருதாணியின் நிறமியைக் கண்டறிந்த ஸ்காட்லாந்து விஞ்ஞானியான டாக்டர் ஐசக் லாசோன் (Dr. Issac Lawsone) அவர்களின் பெயரிலிருந்து வந்ததுதான். மருதோன்றி, ஐவணம், அழவணம், குறிஞ்சி, தொய்யில் என்ற பல பெயர்களுடன் நம்மிடையே வலம் வரும் இந்த மருதாணியை, வடநாட்டவர் மெஹந்தி, மெஹந்திகா, ரக்த-கார்பா, மெஹதி என்றும், அண்டைய மாநிலத்தவர் மைலாஞ்சி, கோரின்டாக்கு, கோரிட்ட, மதுரங்கி என்றும், உலகின் பல்வேறு இடங்களில் ‘ஹென்னா’ (Henna), இனய் (Inai), எகிப்திய பிவட் (Egyptian pivet) என்றும் அழைக்கின்றனர்.
அல்-ஹின்னா (Al-Hinna) என்ற அரபி மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்ட ‘Henna’ எனும் சொல்லுக்கு, உடலில் வரையப்படும் ஓவியம் அல்லது ஓவியத்திற்கான நிறமி என்பது பொருளாகும். அதேபோல, ‘மருதோன்றி’ என்றும், ‘தோன்றி’ என்றும், ‘தொய்யில்’ என்றும் தமிழ் இலக்கியங்களில் மருதாணி அறியப்படுகிறது.
இதில் ‘மருதோன்றி’ அதாவது, மருவைப்போல சிவப்பு நிறத்தில் தோன்ற உதவும் தாவரம் என்பது மருவியே வழக்குமொழியில் மருதாணி ஆயிற்று எனப்படுகிறது. மேலும், தோலின் மருக்களையும், பாதங்களின் ஆணிகளையும் (மரு + ஆணி) மட்டுப்பட உதவுவதாலும் மருதாணி என அழைக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. ‘‘மருதாணி வைச்சது யாரு..?
கையெல்லாம் சிவக்குது பாரு..!” எனும் பாடல் வரிகளைப் போல, வைத்தவுடன் சிவக்கும் மருதாணி இலையின் சாறு இயற்கையானதொரு நிறமூட்டியாகும். அதிலுள்ள லாசோன் (Lawsone) எனும் செம்பு நிற தாவரச்சத்து, மருதாணி இலைகளையும் தண்டுகளையும் நசுக்கும் போதுதான் வெளிப்படும் என்பதுடன், இந்த தாவரச் சாயம் தற்காலிகமாக, அதாவது, ஓரிரு வாரங்கள் வரை, அடர் சிவப்பு நிறத்தை தோலுக்கும், கூந்தலுக்கும் தருகிறது; அழகூட்டுகிறது.
ஆனால், இந்த மருதாணி இலைகளும், அவற்றைப் பொடியாக்கி பெறப்படும் ஹென்னா அல்லது மெஹந்திப் பொடிகளும் வெறும் அழகு சாதனப்பொருட்கள் மட்டுமல்ல, சிறந்த மூலிகையும் கூட என்றுகூறும் சித்த, ஆயுர்வேத, யுனானி, பெர்சியன் உள்ளிட்ட இயற்கை மருத்துவ முறைகள், மருதாணியின் இலை, பூக்கள், வேர், விதை, பட்டை என ஒவ்வொரு பகுதியிலும் உள்ள எண்ணற்ற மருத்துவ குணங்களை நமக்கு எடுத்துரைக்கின்றன.
உண்மையில், மருதாணி இலை மற்றும் பூக்களில் இந்த ‘லாசோன்’ நிறமி தவிர, ட்ரை டெர்பனாயிடுகள், நாஃப்தோ-க்வினோன்கள், க்ளைக்கோசையிட்கள், ஃபளாவான்கள் மற்றும் ஃபீனாலிக் அமிலம் உள்ளிட்ட தாவரச்சத்துகளும், மருதாணியின் பிரத்யேக மணத்திற்குக் காரணமாக விளங்கும் பென்சீன், கரோட்டினாய்டுகள் மற்றும் சில அத்தியாவசிய கொழுப்பு எண்ணெய்களும் மருதாணி இலைகளுக்கும் பூக்களுக்கும் ஆரோக்கியத்தை அள்ளித்தருகின்றன.
மருதாணி இலை ஒரு மிகச்சிறந்த கிருமிநாசினி என்பதுடன், குளிர்ச்சியை ஏற்படுத்தும் தன்மையும் கொண்டது என்றுகூறும் இயற்கை மருத்துவ முறைகள், ஆன்டி ஆக்சிடென்ட் குணம், அழற்சிஎதிர்ப்பு பண்பு, நோயெதிர்ப்புத் திறன் மற்றும் காயங்கள் ஆறும் குணம் ஆகியனவும் நிறைந்ததால், மருதாணியை மிகச்சிறந்த மூலிகை என்று கொண்டாடுகின்றன. சித்த மருத்துவத்தின் தந்தையான அகத்தியர் தனது அகத்தியர் குணப்பாடத்தில் மருதாணி மலர்கள் மற்றும் வேர்களின் பலன்களை ‘மருதோன்றி வேரால் மறைத்து...’ என எழுதியுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
சருமத்தைக் காப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் மருதாணி இலைகளின் விழுது, மேற்பூச்சாக தோலின் காயங்கள், தழும்புகள், பருக்கள், மருக்கள், தீக்காயங்கள், தொழுநோய், சிரங்கு, மூட்டு வீக்கம் ஆகியவற்றில் பெரிதும் பயனளிப்பதுடன், புற ஊதாக் கதிர்களிலிருந்து சருமத்தைப் பாதுகாப்பதால், தோல் அலர்ஜி முதல் தோல் புற்றுநோய் வரை, பல்வேறு சரும நோய்களின் தீவிரத்தைக் குறைக்கவும் பெரிதும் உதவுகிறது. அத்துடன் முடி உதிர்வதையும், இளநரையையும் தடுக்கும் இந்த இலைகள், நகச்சுத்திக்கான மருந்தாகவும் பயன்படுகிறது.
பிரத்யேகமான மணம் நிறைந்த சிவப்பு அல்லது வெள்ளை நிற மருதாணிப் பூக்கள், ஒற்றைத் தலைவலி, தூக்கமின்மை, மன அழுத்தம் ஆகியவற்றில் நேரடியாகவும், இப்பூக்களிலிருந்து பெறப்படும் மருதாணி எண்ணெய் சிறந்த வலி நிவாரணியாகவும் வாசனைத் திரவியமாகவும் பயன்படுத்தப்படுகிறது.
கிளியோபாட்ரா தனது அழகுக்கு ஹென்னாவை கூந்தலில் பயன்படுத்தினார் என்றும், மார்க் ஆண்டனியை சந்திக்கும் பொருட்டு கடற்பயணம் மேற்கொண்ட அவர், Cyprinium என்ற மெஹந்தி எண்ணெய் கூடிய வாசனை திரவியத்தைப் பயன்படுத்தியதாகவும் நம்பப்படுகிறது. மருதாணி இலைகளை அரைத்து, தங்களது கை, கால்களில் வலி நிவாரணியாக, கெய்ரோவின் சுரங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் பலரும் பயன்படுத்துகின்றனர் என்றால், சாரா வால்ட்டர் எனும் ஹென்னா ஓவியர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கீமோதெரபிக்குப் பின் முடியிழந்தவர்களுக்கு ஹென்னா கிரீடங்கள் வரைந்து, நம்பிக்கையளிக்கிறார்.
வெளி உபயோகம் மட்டுமன்றி, செல்களின் வீக்கத்தை நன்கு கட்டுப்படுத்துவதால், மருதாணி இலையின் சாறு, தேநீராக வயிற்று அழற்சி, ஹார்மோன் குறைபாடுகள், வயிற்றுப்போக்கு, கல்லீரல் மற்றும் சிறுநீரக நோய்களில் உதவுகிறது என்று ஆயுர்வேத மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றாலும், போதிய தரவுகள் இல்லாத காரணத்தால் இதனை வெளிப்பூச்சாக பயன்படுத்த மட்டுமே ஆங்கில மருத்துவம் பரிந்துரைக்கிறது.
மீறி இதனை உட்கொண்டால், வாந்தி-பேதி மற்றும் செல்களுக்குள் நச்சுத்தன்மையை உருவாக்கி சிறுநீரக செயலிழப்பு வரை கொண்டு செல்லலாம் என்றும் எச்சரிக்கிறது அலோபதி மருத்துவம். இன்றுவரை அமெரிக்க எஃப்.டி.ஏ நிறுவனம் மருதாணிப் பவுடரை, குறிப்பாக ரசாயனங்கள் சேர்க்கப்பட்ட பொடிகளை தோலில் பயன்படுத்த தடைசெய்துள்ளது என்பதையும் நாம் இங்கு நினைவில்கொள்ள வேண்டும்.
பல நூற்றாண்டுகளாக நம்மிடையே இயைந்த மருதாணிச் சிவப்பு கண்டறியப்பட்ட வரலாறும் சுவாரஸ்யமானது. மேய்ப்பின்போது மருதாணி இலைகளை உண்ட ஆடுகளின் வாய் மிகவும் சிவந்து காணப்பட, காயம் என்று கருதிய மேய்ப்பர்கள் கண்டறிந்ததுதான் இந்தச் சிவப்பைத் தரும் இலைகள் எனப்படுகிறது.
இந்தியத் திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் முன்னிற்பது மருதாணியின் சிவப்பு நிறமே.உண்மையில் மெஹந்தி திருமணம் என்பது முக்கியமான நிகழ்வாக, திருமணத்திற்கு முந்தைய நாள் கொண்டாடப்படுவதுடன், சமீப காலங்களில் இது உலகம் முழுவதும் ஒரு ட்ரெண்டிங் நிகழ்வாகவும் மாறியுள்ளது எனலாம். அதிகம் சிவக்கும் மருதாணி, அதிக காதலைக் குறிக்குமாம்.
அதாவது, திருமணத்தின் போது, மருதாணியை வைத்த மணப்பெண்ணுக்கு கைகள் நன்கு சிவந்தால், பெண்ணுக்கு கணவன் மேல் அதிகக் காதல் இருக்கும், அவளது வாழ்க்கை சிறக்கும், புத்திர பாக்கியமும் உடனடியாகக் கைகூடும் என்பது நம்மிடையே நிலவும் ஒரு பொதுவான நம்பிக்கை.
இதற்கும் ஒரு சுவாரஸ்யக் கதை வழக்கில் உள்ளது. அசோகவனத்தில், தனிமையில் வாடிய சீதாப்பிராட்டி, தனது ஆற்றாமைகளை சுற்றியிருந்த செடிகளிடம் அழுது அரற்றிய போதெல்லாம், தனது இலைகளை அசைத்து, தனது பூக்களைச் சொரிந்து சீதைக்கு ஆறுதல் அளித்ததாம் மருதாணி.
அதன் காரணமாகவே, ராமருடன் சீதை இணைந்தவுடன் மருதாணியிடம் ‘வேண்டிய வரம் கேள்’ என்று சீதை கேட்க, ‘உனது கணவனை சேர்ந்தவுடன், மகிழ்ச்சியால் உனது முகம் மிக மிக அழகாகவும், சிவப்பாகவும் மாறியுள்ளது.
அதேபோல, ஒவ்வொரு பெண்ணும் தனது கணவனுடன் இணையும் போது, என்னை அணிந்து, சிவந்து, மகிழும் வரத்தைக் கொடு’ என்று கேட்டுப் பெற்றுக்கொண்டதாகவும், இதன் காரணமாகவே, திருமணத்திற்கு முன் மருதாணியை மணப்பெண் அணிந்து, விரல்கள் சிவந்து, மகிழ்ச்சியுடன் தனது இல்லறத்தைத் துவங்குவதாகவும் இந்த ராமாயணக் கதை கூறுகிறது. மகாலட்சுமியான சீதாப்பிராட்டிக்குப் பிரியமான செடி என்பதுடன், சுக்கிரனின் அம்சமும் மருதாணிதான் என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுவதால், வெறும் அழகுப்பொருளாக மட்டுமன்றி, சகல சௌபாக்கியங்களைத் தரும் மங்கலப் பொருளாகவும் இந்துக்களிடையே மருதாணி கொண்டாடப்படுகிறது.
கை-கால் நகங்களிலும் விரல்களிலும் மட்டுமன்றி உடல் முழுவதும் வரையப்படும் மெஹந்திக் கலை ஆப்பிரிக்க, எகிப்திய மற்றும் அரேபிய கலாச்சாரங்களில் 5000 வருடங்களுக்கும் மேலாக வழக்கில் இருந்ததை நம்மால் அறியமுடிகிறது. கிபி 700ம் ஆண்டிலிருந்தே, இந்த ஹென்னா எனும் உடல் ஓவியங்கள், எகிப்தியர்களால் பயன்படுத்தப்பட்டு வந்ததை, எகிப்திய மம்மீக்களின் நகங்கள் மற்றும் முடியில் ஹென்னா சாயலில் காணப்பட்டுள்ளதை வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தங்களது போர்த் தழும்புகளை மறைக்க, ஹென்னாவைப் பயன்படுத்திய ரோமானியர்களும், கிரேக்கர்களும், தங்களுக்கு மட்டுமன்றி, தங்களது குதிரைகளின் பிடரி மயிருக்கும் ஹென்னாவை பயன்படுத்தி அழகுப்படுத்தினர் என்றும் குறிப்புகள் காணப்படுகின்றன. இஸ்லாமியர்களிடையே இன்னும் பிரபலமாக விளங்கும் ஹென்னா, அவர்களின் ஹதீஸ் (Hadith) எனும் நபி மொழியில், ஆண்-பெண் இருபாலரும் கட்டாயம் இதனைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. உண்மையில் தங்களது வாழ்க்கைத் துணையின் பெயர் அல்லது தங்களைப் பற்றிய ஒரு குறிப்பை உடல் ஓவியமாக வரைந்து, திருமண வாழ்க்கைக்கு அராபியர்கள் தயார்படுத்திக் கொண்டனராம்.
அதேபோல, பிரியமானவர்களின் இறப்பையும், தங்களது உடல் ஓவியமாக வெளிப்படுத்திய அராபியர்கள் ஹென்னாவை ஆரம்ப நாட்களில், ஆண்கள், பெண்கள் என இருபாலினரும் பயன்படுத்தினர் என்றாலும், பிற்காலத்தில் இந்த உடல் ஓவியம், பிரத்யேகமாக பெண்களுக்கானது என்று மாறியது. மொராக்கோ, அல்ஜீரியா உள்ளிட்ட நாடுகளில் யூதர்கள் கல்வியறிவு பெறத் தொடங்கும் நாளிலிருந்து திருமணம், குழந்தைப்பேறு என ஒவ்வொரு நிகழ்விலும் இருபாலருக்கும் ஹென்னாவை முன்னிறுத்தியே கொண்டாடி மகிழ்கின்றனர்.
அதேசமயம் விலையுயர்ந்த ஆபரணங்களை அணிந்து கொள்ள முடியாத ஏழைப் பெண்களுக்கு, வைபவங்களின் போது ஆபரணமாக இந்த ஹென்னா என்ற உடல் ஓவியம் விளங்கியது என்றும் கூறப்படுகிறது. இப்படி பெண்மையுடன் இயைந்த மருதாணி என்ற மெஹந்தி அழகின் அடையாளம் மட்டுமல்ல, பாரம்பரியத்தின் மகிழ்ச்சியின், கலைநயத்தின் வெளிப்பாடும் கூட. ஆரோக்கியம், மகிழ்ச்சி, நம்பிக்கை, குணமடைதல், தற்காப்பு, இறையருள், மெய்ஞானம் ஆகியவற்றையெல்லாம் இந்த சின்னஞ்சிறு இலைகள் குறிப்பதுடன், கருத்தரிப்புக் கடவுள் என்றே உலகின் பல்வேறு நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.
வெப்ப மண்டலப் பகுதிகளில் நன்கு வளரும் தன்மை கொண்ட இந்த குத்துச்செடியின் வேர்கள் ஆழமாகப் பரவுவதால் மண் அரிப்பைக் கட்டுப்படுத்தும் முக்கியப் பயிராக விளங்குகிறது. விதைகளிலிருந்து வளரும் மருதாணிச் செடி ஏறத்தாழ 25 வருடங்கள் வரை, வருடம் முழுவதும் பூத்துக் குலுங்கி, இலைகளை நமக்குத் தருகின்றது. உலகளவில் மருதாணியை அதிகம் பயிரிடுவது இந்தியா, குறிப்பாக ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்கள். சிரியா, பிரான்ஸ், அல்ஜீரியா, ஜோர்டன் ஆகிய நாடுகளுக்கு இதன் இலைகளும், பூக்களும் ஹென்னா, இயற்கைச் சாயம், வாசனை திரவியங்கள் ஆகியன தயாரிக்க, பறித்தவுடன் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஆக, மருதாணி சிவந்தால், அதிகக் காதல் என்பதை அறிவியல் மறுத்தாலும், அதிக மகிழ்ச்சி, அதிக ஆரோக்கியம், அதிக இயற்கைப் பாதுகாப்பு என்பதை யாரும் மறுக்க முடியாது. மருதாணியின் சிவப்புடன், நாளும் பரவட்டும் இந்த Lawsonia inermis என்ற மருதாணியின் நன்மைகளும்.!!
(இயற்கைப் பயணம் நீளும்!)
டாக்டர் சசித்ரா தாமோதரன் மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்
|