சமூக நீதிக்கான வைக்கம் விருது!



தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 17ம் தேதி ‘சமூக நீதி’ நாளாக கடைபிடிக்கப்படுகிறது. ‘வைக்கம்’ என்ற இடத்தில் தந்தை பெரியார் நடத்திய ஒரு போராட்டத்தின் நூற்றாண்டை நினைவுக்கூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ‘வைக்கம் விருது’ வழங்கப்படும் என்பதை 2023ம் ஆண்டு சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். 
தமிழ்நாட்டில் மட்டுமின்றி பிற மாநிலங்கள், பிற நாடுகள் என உலக அரங்கில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்து, அவர்களின் நலனுக்காக போராடி, சமூகத்தில் தாக்கங்கள் மற்றும் மாற்றங்களை ஏற்படுத்தும் சமூக ஆர்வலர்களை கவுரவித்து ஊக்குவிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது. 

இதன்படி அமெரிக்காவைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான தேன்மொழி சௌந்தரராஜன் என்பவருக்கு 2025ம் ஆண்டிற்கான ‘வைக்கம் விருது’ வழங்கப்படஉள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தேன்மொழி சௌந்தரராஜன், அமெரிக்காவின் கலிபோர்னியா நகரத்தில் வசித்து வருகிறார். இந்திய வம்சாவளியான தேன்மொழி ஓர் இந்திய அமெரிக்க உரிமை ஆர்வலர், எழுத்தாளர் மற்றும் ஆய்வாளராகவும் செயல்பட்டு வருகிறார். அமெரிக்காவில் ஈக்குவாலிட்டி லேப்ஸ் (Equality Labs) எனும் இயக்கத்தினை தொடங்கி ஒடுக்கப்பட்ட அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளி மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். 

“எந்த சாதிய அடையாளமும் இல்லாமல் வாழலாம் என்பதற்காக 1970களில் என் பெற்றோர் கோயம்புத்தூரிலிருந்து அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்தனர். அமெரிக்காவில் இருக்கும் வரை சாதி அவர்களை பின்தொடராது என்று நினைத்தார்கள். ஆனால், அந்த வலி அவர்களை அமெரிக்காவிலும் தொடர்ந்தது. அங்கும் அவர்கள் தீண்டாமைக்கு ஆளானதை நான் சிறுவயது முதலே பார்த்தேன். இதுவே நான் போராட்டத்தை முன்னெடுக்க காரணமாக அமைந்தது. தெற்காசியாவிலிருந்துதான் சாதி தொடங்கியது என்று நமக்குத் தெரியும். 

ஆனால், அமெரிக்காவிலும் ஏன் அது தொடர்கிறது? அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் ஏன் தீண்டாமையை கடைபிடிக்கிறார்கள்? அங்குள்ள மதத் தலங்களில் ஏன் தலித்துக்களை அனுமதிப்பதில்லை? தெற்காசியாவில் மட்டுமல்ல, தெற்காசியர்கள் செல்லும் எல்லா இடத்திலும் இந்தப் பிரிவினைகள் இன்றும் பார்க்கப்படுகிறது. 

ஈக்குவாலிட்டி லேப் இயக்கத்தின் மூலம் இதைப்பற்றி பேசத் தொடங்கியதும் மக்கள் வெளிப்படையாக தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை பகிர்ந்து கொள்ள முன்வந்தார்கள். சில இடங்களில் மற்ற சாதியினருக்காக சமைப்பதற்கும், பிராமண குடும்ப உறுப்பினர்களுக்காக மட்டும் சமைப்பதற்கும் வெவ்வேறு சமையலறைகள் இருப்பதாக சிகாகோவில் உள்ள என் நண்பர் சொன்னார். 

என் பெற்றோருக்கு மட்டுமல்ல சக வகுப்பு நண்பர்களால் நானும் தீண்டாமையை அனுபவித்திருக்கிறேன். நான் தலித் என்பதால் சக பிராமண நண்பர்கள் என் தட்டைக்கூட தொட மாட்டார்கள். ஈக்குவாலிட்டி லேப்ஸின் மற்ற இணை நிறுவனர்களுடன் இணைந்து அமெரிக்காவில் சாதியின் பரிமாணங்களை ஆராய்ந்தபோது, என் தனிப்பட்ட அனுபவம் போல அமெரிக்கா முழுவதும் நூறாயிரக்கணக்கான தெற்காசியர்களின் அனுபவங்களை கேட்டறிந்தோம். 

அதில் சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களில் நான்கில் ஒருவர் உடல்ரீதியாக தாக்கப்படுகிறார்கள். மூன்றில் ஒருவர் கல்வி நிறுவனங்களிலும், மூன்றில் இரண்டு பேர் பணியிடத்தில் பாகுபாட்டினை சந்திக்கிறார்கள். நம் சமூகம் குடியேறும் இடங்களிலெல்லாம் பாகுபாடும், பிற்போக்குத்தனமும் பின்தொடர்வதால் சாதி உலகமயமாவதைப் பார்க்கிறோம். அவர்கள் புனிதமான கருவறைக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.

மக்களை வெளிப்படையாக இழிசொற்களால் அழைப்பது, வீட்டுவசதி மட்டுமின்றி பணியிடத்திலும் பாகுபாடும் உள்ளது. உணவக வேலை முதல் கட்டிடத் தொழில்கள், விவசாயத் தொழிலாளர்கள், தொழில்நுட்பம், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் வரை, பல தொழில்களில் பாகுபாடுகளை சந்தித்தவர்கள் அது குறித்து பேச முன்வந்துள்ளனர். அம்பேத்கர், அயோத்திதாசர், அய்யன் காளி இவர்களை போல, நாமும் இத்தகைய அநீதியைக் காணும்போது, நாம் அனைவரும் விடுதலை பெறும் வரை ஓயாமல் குரல் எழுப்ப வேண்டும். 

அமெரிக்க மனிதவளத் துறை அமெரிக்க இனத்தின் கட்டமைப்புகளில் மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சாதியைப் பற்றி அறிந்திருக்கவில்லை. அது சார்ந்த பிரச்னையை முன்வைத்தால் கூட, இரு இந்தியர்களுக்குள் எவ்வாறு பாகுபாடு தோன்றும் என்றே கேட்பார்கள். 

எனவே DEI-ஐ (Diversity, Equity, Inclusion), சாதி சமத்துவப் பயிற்சியை வலியுறுத்துவது, அனைத்து குறை தீர்க்கும் பிரிவுகளும் சட்டத்தின் ஆட்சியை செயல்படுத்த வேண்டும் என்பதையும், நமது மக்கள் எங்கிருந்தாலும் பாதுகாக்க வேண்டும் என்பதை முன்வைத்தோம். ஆனால், எந்த பலனும் இல்லை. 

ஈக்குவாலிட்டி லேப்ஸ் இயக்கத்தின் சார்பாக உடல் ரீதியான வன்முறை, இழிசொற்கள், தவறான தகவல் பிரச்சாரங்கள், அப்பட்டமான பொய்கள் போன்ற ஆதிக்க சாதியினரின் செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தோம். இந்த பாகுபாட்டினால் எவ்வளவு காயமடைந்துள்ளோம் என்பதைப் புரிந்துகொள்வதற்காக, அறிவார்ந்த ஆய்வுகளையும் போராட்டங்களையும் தொடர்ந்து செய்து வருகிறோம். 

சட்டப்பூர்வமாக அல்லது கொள்கை ரீதியாக நாம் என்ன செய்தாலும், மன ரீதியாக நம்மை பலப்படுத்திக் கொள்வது அவசியம். எனவே, சாதியைப் பற்றி நன்கு அறிந்த சிகிச்சையாளர்கள் மூலம், சோமேடிக் முறைகளில் மக்களுக்குப் பயிற்சி அளித்து, அவர்களை முன்னேற வைக்கிறோம்’’ என பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் தேன்மொழி, ‘தி ட்ராமா ஆஃப் காஸ்ட்’ (The Trauma of Cast) என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.

“பாதிக்கப்பட்ட இந்தியர்கள் அமெரிக்காவிற்கு சென்றதும் புதிய வாழ்க்கை, புதிய உலகம் என நடந்த எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ள முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர்களின் குழந்தைகள் குழப்பத்துடன் வளர்கிறார்கள். 

தங்கள் வரலாற்றின் ஒரு பகுதி மட்டுமே தெரிவதால் அவர்களுக்குள் நிறைய கேள்விகள் எழுகின்றன. நாங்கள் மேஜையில் சாப்பிடும் போது அவர்களுக்கு ஏன் உணவு தரையில் பரிமாறப்படுகிறது? ஏன் உடைந்த கோப்பையில் உணவு கொடுக்கப்படுகிறது? இந்தக் கேள்விகளுக்கு கருத்துச் சொல்ல உனக்கு உரிமை இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால், இங்கு எல்லோருக்கும் எல்லா உரிமையும் உள்ளது. 

எந்த மனிதனையும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தக்கூடாது என்பதை புரியவைக்க முயற்சிக்கிறோம். எங்க இயக்கத்தின் உதவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதி மேலாதிக்கத்தை மறப்பது குறித்தும் பயிற்சியளிக்கிறோம். இதனால் சாதிப் பிற்போக்குத்தனத்தின் மரபுகளை அவர்களால் எதிர்கொள்ள முடிகிறது” என்றவர், ‘வைக்கம் விருது’ அறிவிக்கப்பட்டதை குறித்து பெருமையடைகிறார். 

“தமிழக அரசிடமிருந்து தகவல் வந்தபோது எனக்கு விருது கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. அந்தத் தருணம் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். நாட்டில் என்ன நடந்தாலும், தமிழ் மக்கள் எப்போதும் நீதிக்காக நிற்பார்கள். 

நாம் எங்கிருந்தாலும், பயமற்றவர்களாக இருப்போம். இந்த விருது எனக்கு மிகவும் உத்வேகமளித்த வைக்கம் போராட்டத்தின் பெயரில் வழங்கப்படுகிறது. சமத்துவத்தின் அடிப்படையில் விருது பெறுவதில் ஒரு தமிழச்சியாக மிகவும் பெருமைப்படுகிறேன். 

இந்த விருது எனக்கு மட்டுமல்ல, சாதியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் அழிப்பதற்கும் துணை நிற்கும் ஒவ்வொரு தனி நபருக்காகவும்தான். புலம்பெயர்ந்தோரிடையே நாங்கள் செய்யும் பணியையும், சாதியால் உலகம் முழுவதும் மக்கள் துன்பப்படுவதையும் கருத்தில் கொண்டதற்கு தமிழக முதல்வருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். 

நம் வாழ்நாளில் சாதியை ஒழிக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம். தமிழர்களாகிய நாம் சுதந்திரம், கண்ணியம் மற்றும் சுய நிர்ணயம் ஆகியவற்றிற்கான போரில் ஒன்றுபட முடியும் என்பதையும், சட்டத்தின் ஆட்சியை செயல்படுத்துவதில் முன்னிலை வகிப்போம் என்பதையும் அறியக்கூடிய ஒரு நம்பிக்கையின் அளவீடாக இந்த விருது விளங்குகிறது” என்றார்.

 ரம்யா ரங்கநாதன்