நலம் யோகம்! உடலுக்கு ஒளி... மனதுக்கு அமைதி!



நமது நோயின் தன்மைக்கு ஏற்ற மருந்து, மாத்திரைகளை எடுத்தாலும், நமது உடல்நிலை பின்னோக்கி செல்லாமல் இருக்க, சில வாழ்வியல் முறைகளும் இன்றைக்கு அவசியமானதாக இருக்கிறது என்பதனால், முறையான உடற் பயிற்சி, சுவாசப் பயிற்சி மற்றும் யோகா தெரபியையும் சேர்த்தே நோயாளிகளுக்கு வழங்க மருத்துவமனைகள் சில முன் வருகின்றன. இன்று மாடர்ன் மெடிசனோடு யோகா தெரபியையும் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு பரிந்துரை செய்கின்றனர். 

இதில் யோகா பயிற்சியாளர் என்பவர், ஆசனத்தின் இலக்கணத்திற்கு ஏற்ப உடலை வளைத்து, நெளித்துக் கொண்டு செல்பவர். யோகா தெரபிஸ்ட் என்பவர் நோயாளியின் உடலுக்கு எந்த அளவுக்கு நெகிழ்வுத் தன்மையும், பலமும் இருக்கிறதோ அதற்கு ஏற்ற ஆசனங்களை, இலக்கணம் மாறாமல் மாற்றங்களை செய்து கற்றுத் தருபவர். இனி இந்த இதழுக்கான ஆசனங்கள் சிலவற்றை தொடர்ந்து பார்ப்போம்…

பாலாசனம்

விரிப்பின் மீது மண்டி இட்டு அமர்ந்து கொள்ள வேண்டும். இப்போது பாத விரல்கள் இரண்டும் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். 
உடலையும், மனதையும் சற்று தளர்த்தியபடி மெதுவாக இடுப்பை கீழே இறக்கி குதிங்கால்கள் மீது உக்கார வேண்டும். 

கைகள் இரண்டையும் விரிப்பின் மீது வைத்து தளர்வாக, பொறுமையாய் முன் பக்கம் விரிப்பின் மீது நெற்றி படும் வரை குனிய வேண்டும். இதே நிலையில் ஐந்து நிமிடம் வரை இந்த ஆசனத்தில் தாராளமாய் இருக்கலாம். 

ஆசனத்திலிருந்து வெளிவர, மூச்சினை உள்ளே இழுத்துக் கொண்டே, முதுகுத்தண்டை நேராகக் கொண்டு வர வேண்டும். இப்போது இரண்டு கைகளையும் மென்மையாக தேய்த்து கண்களின் மேல் ஒத்தி வைத்து, பிறகு கண்களை மெதுவாகத் திறக்கலாம்.

பலன்கள்

*மனமும் உடலும் தளர்வடையும்.

*மன அழுத்தம் குறைகிறது.

*நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகிறது.

*உடலிலும் மனதிலும் உள்ள பதற்றம் குறைவதால் தூக்கமின்மை பிரச்னைகள் வராமல் இருக்கும்.

*வயிற்றுப்பகுதி தொடை மீது அழுத்துவதால், குடல் மற்றும் உள்ளுறுப்புகளுக்கு மசாஜ் கிடைக்கிறது.

*உணவு செரிமானம் சீராகி, மலச்சிக்கல் பிரச்னை குறைகிறது. 

*முதுகெலும்புக்கு ஓய்வும், தளர்வும் கிடைக்கிறது.

*ரத்த ஓட்டத்தை உடல் முழுவதும் துரிதப்படுத்தும். 

*இடுப்புவலி பிரச்னையில் இருந்து தப்பிக்கலாம்.

*கணுக்கால் பகுதி பலம் அடைவதுடன், நெகிழ்வுத் தன்மை கூடுகிறது.

*மார்பு பகுதி விரிவடைவதால் சுவாச செயல்பாடு சிறப்பாக இருப்பதுடன், உடல் முழுமைக்குமான ஆக்சிஜன் சப்ளை அதிகரிக்கும்.

பார்ஸ்வ பாலாசனம்

இதுவொரு  ஜென்டில் ட்விஸ்டிங் ஆசனா. முதலில் டேபிள் டாப் நிலைக்கு வந்து, படத்தில் காட்டியுள்ளது போல், இடது கை மற்றும் இடது முட்டிக்கு இடையே உள்ள இடைவெளிக்குள், வலது கையினை உள்ளே நுழைக்க வேண்டும். இப்போது வலது தோள் பட்டை முழுமையாக விரிப்பின் மீது பட வேண்டும். 

மேல் உடலின் எடை முழுவதும் வலது தோள் பட்டையில் தெரிய வேண்டும். இதுவே பார்ஸ்வ பாலாசனம். ஊசியின் கண்ணுக்குள் நூலை நுழைப்பதை போன்று இது இருப்பதினால் Thread and Needle pose என்றும் பெயர் உள்ளது.30 விநாடிகள் முதல் ஒரு நிமிடம் வரை இந்த ஆசன நிலையில் இருக்கலாம். உள் மூச்சு, வெளி மூச்சு இரண்டையும் எடுத்துக் கொண்டே, முதுகுத்தண்டை கவனிக்க வேண்டும். வலது பக்கம் செய்தது போலவே இடது பக்கமும், அதே கால அளவில், படத்தில் காட்டியிருப்பது போல் செய்தல் அவசியம்.

பலன்கள்

*நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகிறது.

*ரத்த ஓட்டம் மேம்படுகிறது.

*வயிற்றுப் பகுதி உறுப்புகளுக்கு மசாஜ் கிடைப்பதால் செரிமானம் சீராகிறது.

*மன அழுத்தம் குறைந்து, உடலின் நெகிழ்வுத் தன்மை அதிகரிக்கிறது.

*உடலில் உள்ள ஆற்றல் மையங்களை (chakras) சமநிலைப்படுத்துகிறது.

பச்சிமோட்டானாசனம்

இது மிகவும் சிறப்பானதொரு ஆசனம் ஆகும். விரிப்பின் மீது கால்களை நீட்டியபடி அமர்ந்து கொள்ள வேண்டும். இப்போது முதுகுத்தண்டு நேராக இருத்தல் வேண்டும். மூச்சினை உள்ளிழுத்தபடி கைகளை மேலே உயர்த்தி, முதுகுத் தண்டு வடத்தை நன்றாக உயர்த்தி, உடலுக்கு ஒரு நல்ல நீடிப்பை கொடுக்க வேண்டும். 

மூச்சினை இப்போது வெளியேற்றியபடி, முன்பக்கம் நன்றாகக் குனிந்து, கைகள் இரண்டும் கால் பாதங்களில் உள்ள பெரு விரல்களை பிடித்த நிலையில், நன்றாக உள் மூச்சு, வெளி மூச்சு எடுத்தபடி, இடுப்பு பகுதியிலிருந்து மேல் உடலை மடித்து, படத்தில் காட்டியிருப்பது போல், முன் பக்கமாக கொண்டுவர வேண்டும். இப்போது நெற்றி முட்டியில் படும் வரை கீழ்நோக்கி வருவதற்கான முயற்சியினை செய்ய வேண்டும்.

பலன்கள்

*மன அழுத்தம், பதற்றம், மனச் சோர்வை குறைக்க உதவும்.
*முதுகு தசைகளை தளர்த்தி நீட்டிக்க உதவுகிறது. 
*முதுகெலும்பு வலுவடைகிறது.
*தொடை எலும்புகள் மற்றும் கெண்டைக்கால் தசைகள் வலிமை பெறுகிறது.
*மூல பந்தம், உட்டியான பந்தம், ஜலந்தர பந்தம் என்ற மூன்று பந்தங்களுமே இந்த ஆசனம் செய்யும் பொழுது செயல்படுகிறது. 
*உடலில் உள்ள ஆற்றல் கலம் தூண்டப்படுகிறது.
*நீண்ட நேரம் இந்த ஆசனத்தில் இருப்பதற்கு, முறையான பயிற்சி எடுத்தவர்களால் அவர்களின் குண்டலினி சக்தி தூண்டப்படுவதை உணர முடியும்.

பூர்வோத்தனாசனம் (Upward plank pose)

கால்கள் இரண்டையும் நீட்டிய படி விரிப்பின் மீது அமர வேண்டும். கைகள் இரண்டையும் இடுப்புக்கு பின் பக்கமாக, உள்ளங் கைகள் தரையில் படும்படி வைக்க வேண்டும். இப்போது விரல்கள் அனைத்தும் உள் நோக்கி இருக்க வேண்டும். 

உள்ளங்கைகள் வழியாக, தரையில் இருந்து உடலுக்கு ஒரு உந்துதலைக் கொடுத்து இடுப்பை மெல்ல, படத்தில் காட்டியிருப்பது போன்று மேலே தூக்க வேண்டும். மார்பு பகுதி இப்போது நன்றாக விரிந்திருக்க வேண்டும். 

அதேநேரம், கழுத்து தளர்வாகவும், தலை துவண்ட நிலையிலும் இருக்க வேண்டும்.
30 விநாடிகள் முதல் ஒரு நிமிடம் வரை இந்த ஆசனத்தில் இருக்கலாம். இது பச்சிமோட்டானாசனாவுக்கு மாற்றான ஒரு நல்ல ஆசனமாக இருக்கிறது.

பலன்கள்

*லோவர் பேக் ஸ்டெங்தனிங், ஷோல்டர் ஸ்டெங்தனிங் இரண்டுமே இதன் மிக முக்கிய பலன்கள்.

*முதுகெலும்பு, முதுகு தசைகள், மணிக்கட்டுகள், புஜங்கள், கால்களை பலப்படுத்துகிறது.

* தோள் பட்டை மற்றும் மார்பும் விரிவடைவதால் சுவாசப் பிரச்னைகள் சரியாகும்.

 (நலம் யோகம் தொடரும்!)

ஆ.வின்சென்ட் பால்


வெள்ளை பூண்டின் மருத்துவ குணங்கள்!

* பாலில் பூண்டை சேர்த்து உண்டு வர ரத்தக் கொதிப்பு குணமாகும்.

* வெள்ளை பூண்டைச் சாறு எடுத்து, உப்பு கலந்து சுளுக்குக்கு மேற்பூச்சாக பயன்படுத்த குணம் காணலாம்.

* வெள்ளை பூண்டும் சிறிது ஓமமும் சேர்த்து கஷாயமாக்கி குழந்தைகளுக்கு அருந்த கொடுக்க வாந்தி குணமாகும்.

* பூண்டை பொன்னாங்கண்ணியுடன் சமைத்துண்ண மூல நோய் குணமாகும்.

* வெள்ளை பூண்டு, திப்பிலி, தூதுவளை இலை, கண்டங்கத்திரி இலை ஆகியவற்றை நீர்விட்டு கஷாயமாக்கி அருந்த இருமல், இளைப்பு ஆகியவை குணமாகும்.

* பூண்டை உபயோகித்து ரசம் செய்து உண்டால் வாயுத் தொல்லை குறையும்.

* வெள்ளை பூண்டை பாலில் அரைத்து பருக்கள் மீது பூச குணம் காணலாம்.

* வெள்ளை பூண்டுடன் விளாம்பிசினை அரைத்து தயிரில் கலந்து உண்ண ரத்தக்கடுப்பு குணமாகும்.

- டி.லதா, நீலகிரி.