கைவினைப் பொருட்களாக மாறும் வாழை மட்டைகள்!
தமிழர்களின் அனைத்து மங்கள நிகழ்வுகளிலும் வாசலில் நம்மை முதலில் வரவேற்பதில் முந்தி இருப்பவை வாழை மரங்கள்தான். அதே போல் கோயில் வழிபாடுகள் மற்றும் வீட்டில் செய்யப்படும் பூஜைகளிலும் முக்கியமாக வாழைப் பழங்கள் வைப்பது இன்றும் வழக்கமாக பின்பற்றப்பட்டு வருகிறது. ‘வாழையடி வாழையாக வாழ்க’ என வாழ்த்துவதும், வாழையின் நீட்சியை போல தலைமுறையும் வளர வேண்டும் என்பதால்தான். பல மரங்கள் இருக்க முக்கனிகளுள் ஒன்றான வாழைக்கு மட்டும் ஏன் இந்த தனிச்சிறப்பு? காரணம், வாழை மரத்தின் ஒவ்வொரு பாகமும் நமக்கு பலவிதங்களில் பயன்படுகின்றன.  வாழையைக் கொண்டு 400க்கும் மேற்பட்ட மதிப்புக் கூட்டுப் பொருட்களை உருவாக்க முடியும். உணவாக மட்டுமில்லாமல், அதன் நாரை பூத்தொடுக்க பயன்படுத்துவது, ஆடைகளில் துவங்கி வீட்டின் அலங்காரப் பொருட்கள், பைகள், கூடைகள் என பல மதிப்புக் கூட்டுப் பொருட்களை உற்பத்தி செய்து வருகிறார் ஈரோடு அருகே அத்தாணி கிராமத்தைச் சேர்ந்த வித்யா குறிஞ்சிநாதன். இவர் ‘சப்தகிரி எக்கோ பிராடக்ஸ்’ என்ற பெயரில் வாழையின் நார் மற்றும் பட்டைகளை வைத்து 30 விதமான வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்து அசத்தி வருகிறார்.
 ‘‘எனக்கு சொந்த ஊர் ஈரோடு, கோபிச்செட்டிப் பாளையம். பி.எஸ்.சி காஸ்டியூம் டிசைனிங் படிச்சேன். பாலிடெக்னிக் கல்லூரியில் டெக்ஸ்டைல் விரிவுரையாளராக இருந்தேன். குழந்தைகள் பிறந்ததால் வேலையை தொடர முடியல. அதன் பிறகு பள்ளி ஒன்றில் ஆங்கில திறன் ஆசிரியராக வேலை பார்த்தேன்.
மேலும் மாணவர்களுக்கு லைஃப் ஸ்கில், சாஃப்ட் ஸ்கில் குறித்தும் பிரிலான்ஸ் முறையில் பயிற்சி அளித்து வந்தேன்’’ என்றவர் பெண்களுக்கான சானிட்டரி நாப்கின் மூலம் தன்னுடைய பிசினஸ் பயணத்தை துவங்கியுள்ளார். ‘‘மாத இதழ் ஒன்றில் நாப்கின் பயன்படுத்துவதால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் பற்றி படித்தேன். மேலும், பல நாப்கின்களில் காலாவதி தேதி குறிப்பிடப்படுவதில்லை என்பதை படித்ததும் நான் அதிர்ச்சியானேன். எனக்கும் பெண் குழந்தைகள் இருப்பதால், ஒரு தாயாக எனக்குள் பயம் தொற்றிக் கொண்டது. அதனால் நாப்கின்கள் குறித்து ஆய்வு செய்தேன். அதன் தயாரிப்பு குறித்து பயிற்சி மேற்கொண்டேன். அதன் பிறகு தயாரித்து விற்பனை செய்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தது.
என்னுடைய நாப்கின்கள் முழுக்க முழுக்க ரசாயனமற்றது. மூலிகைப் பவுடர்கள் பயன்படுத்திதான் இந்த நாப்கின்களை தயாரிக்கிறேன். அதனால் மாதவிடாயின் போது ஏற்படும் வலி, எரிச்சல், அரிப்பு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுத்தவில்லை என்று என் வாடிக்கையாளர்கள் கூறினார்கள்.
அதுவே எனக்குள் பெரிய உற்சாகத்தை கொடுத்தது. நான் தயாரிக்கும் பொருட்கள் மனிதர்களையும் சுற்றுச்சூழலையும் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்’’ என்றவர், வாழை நார் மற்றும் பனையோலை கொண்டு மதிப்பு கூட்டுப் பொருட்கள் உற்பத்தியிலும் பயிற்சி பெற்றுள்ளார். ‘‘எங்க ஊரில் வாழை விவசாயம்தான் அதிகம். வாழைத்தார்கள் அறுவடைக்குப் பிறகு வாழை மரங்களை வயலில் அப்படியே விவசாயிகள் விட்டுவிடுவார்கள். அதை காலி செய்தால் போதும் என்பதுதான் விவசாயிகளின் நோக்கமாக இருக்கும். அந்த மரங்களை நாங்க வெட்டிக் கொண்டு வருவோம். தண்டு வரும் வரை உரித்து, ஈரப்பதம் இல்லாமல் காய வைத்து, மிஷினில் நாராக பிரித்து எடுப்போம். அந்த நாரினை கைத்தறியில் கொடுத்து படுக்கை மற்றும் தரை விரிப்புகளாக நெசவு செய்வோம்.
சணல் பொருட்கள் செய்வது குறித்த பயிற்சியினை நான் மேற்கொண்டிருக்கிறேன். அந்த டெக்னிக்கினை இதில் பயன்படுத்தி லேப்டாப் பைகள், வாட்டர் பாட்டில் பைகள், கூடைகள், ஹேண்ட் பேக்குகளை தயாரிக்கிறோம்.
வாடிக்கையாளர் விருப்பத்திற்கு ஏற்பவும் செய்து தருகிறோம். கூடைகளை இயற்கை முறையில் தயாரிப்பதால், அதில் வைக்கப்படும் காய்கறி, பழங்கள் சீக்கிரம் கெட்டுப் போவதில்லை. மேலும், சணல் பைகளை விட வாழைநாரில் செய்யப்படும் பைகளுக்கு ஆயுள் அதிகம்.
நாங்க சுற்றுவட்டாரத்தில் உள்ள 10 காடுகளில் இருந்து வாழை மரங்களை கொண்டு வருவோம். அந்த மரங்களை அறுவடை செய்த ஐந்து நாட்களுக்குள் வெட்டி விட வேண்டும். மழைக்காலங்களில் மட்டும் சிரமமாக இருக்கும். என் கணவர் விவசாயம் செய்வதால், இந்த மரங்களை கொண்டு வரும் பணியினை அவர் பார்த்துக் கொள்கிறார். பிளாஸ்டிக்கிற்கு சிறந்த மாற்றுதான் இந்த வாழை நார் கூடைகள். மக்களும் அதனை புரிந்து கொண்டுள்ளனர்.
எங்களின் பொருட்களுக்கு அரசு தரப்பிலும் ஊக்கம் அளிக்கிறார்கள். அந்தியூர் தோட்டக்கலை துறை அதிகாரி மல்லிகா அவர்கள் மிகவும் உதவிகரமாக இருக்கிறார். அவரின் உதவியுடன் விவசாய கண்காட்சியில் என் தயாரிப்புகளுக்கு விற்பனை செய்ய ஸ்டால் அமைத்துக் கொடுத்தார். நான் கற்றுக் கொண்டதை மற்ற பெண்களுக்கும் சொல்லித் தந்து அவர்கள் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க வழிகாட்டியாகவும் இருக்கிறேன். ஆதரவற்ற பெண்களுக்கும் பயிற்சி தருகிறேன்.
தற்போது நெசவாளர்கள் வாழைநார்களைப் பயன்படுத்தி ஆடைகள் நெய்ய ஆரம்பித்துவிட்டனர். அதனால் வாழைநாரின் தேவை அதிகம் இருக்கிறது. நார்களை நூல் வடிவத்தில் மாற்ற பல இயந்திரங்கள் வந்துவிட்டன. அதனை வாங்க அரசு மானியம் வழங்குகிறது.
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்தில் (MSME) தாங்கள் செய்யும் தொழிலை பதிவு செய்து லோன் சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம். அதே சமயம் இயந்திரங்களை விற்பனை செய்பவர்கள் சில சலுகைகள் தருவதாக கூறுவதால், அதை நம்பி பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதனால் எந்த இயந்திரங்கள் வாங்கும் போதும் கவனமாக செயல்பட வேண்டும்’’ என்ற வித்யா குறிஞ்சிநாதன் பல சவால்களையும் தாண்டி இந்தத் தொழிலில் ஜொலிக்கிறார்.
செய்தி: கலைச்செல்வி
படங்கள்:ராஜா
|