கிச்சன் டிப்ஸ்



* அடை மாவு அரைக்கும் போது, இரண்டு வேகவைத்த உருளைக்கிழங்கையும் சேர்த்து அரைத்து அடை வார்த்தால் கூடுதல் ருசியாக இருக்கும்.
* குருமா செய்யும் போது ஒரு பிடி வறுத்த வேர்க்கடலையை தோல் நீக்கி அரை மணி நேரம் ஊறவைத்து பொடியாக அரைத்துச் சேர்த்தால் குருமாவின் சுவை அபாரமாக இருக்கும்.
* ரசம் கொதித்து இறக்கும் போது, கறிவேப்பிலை இல்லாவிட்டால் கறிவேப்பிலைப் பொடிைய தூவி இறக்கினால் வாசனையாக இருக்கும்.
* பூரி மாவு பிசையும் போது பிரட் துண்டுகளை நீரில் நனைத்து மாவில் சேர்த்து செய்தால் பூரி மொறுமொறுப்புடனும் சூப்பர் சுவையுடனும் இருக்கும்.

- அமுதா அசோக்ராஜா, திருச்சி.

* வீட்டில் நாம் வாங்கி வைத்துள்ள பீட்ரூட், கேரட் ஆகியவை வாடிப் போனால் நறுக்க கடினமாக இருக்கும். அதை உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் போட்டெடுத்தால் நறுக்க எளிதாக இருக்கும்.

* தேன்குழல் செய்யும் போது பொட்டுக்கடலை, வேர்க்கடலை, உளுத்தம் பருப்பு மூன்றையும் வறுத்து பொடி செய்து போட்டு பிழிந்தால் தேன்குழல் மிருதுவாகவும், அதிக சுவையுடனும் இருக்கும்.

*சாம்பார் செய்யும் போது சில சமயம் பருப்பு சேராமல் இருக்கும். அப்போது துவரம் பருப்பு சிறிதளவு எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து சாம்பாரில் சேர்த்து கொதிக்க விட்டால் சாம்பார் கெட்டியாகி விடும்.

- எஸ்.உஷாராணி, கோயமுத்தூர்.

* வத்தக் குழம்பு மற்றும் கறிக் குழம்பில் காரம் அதிகமாகிவிட்டால் கவலை வேண்டாம். சிறிது தக்காளியை எடுத்து மிக்ஸியில் அரைத்து ஊற்றுங்கள். காரம் குறைவதுடன் மணமும் ஏ ஒன்னாக இருக்கும்.

* ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் சோள மாவு சேர்த்து செய்து பாருங்கள். தோசை நன்கு சிவந்து மொறுமொறுவென நன்றாக இருப்பதோடு உடம்பிற்கு நல்லது.

* சுண்டலை தாளிதம் செய்து இறக்கிய பின் இரண்டு டீஸ்பூன் அவலை வறுத்து பொடித்து தூவினால் சுவையில் சூப்பராக இருக்கும்.

* உளுந்து வடை எண்ணெய் குடிக்காமல் இருக்க வடைக்கு அரைத்து எடுத்ததும் அதில் இரண்டு ஸ்பூன் அரிசி மாவை கலந்து வடை தட்டினால் மொறு மொறுவென்று சூப்பராக இருக்கும். எண்ணெயும் குடிக்காது.

- எம்.வசந்தா, சென்னை.

* புளித்த தயிர் ஒரு கப், ஒரு கப் ரவை, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி இலைகளை சேர்த்து ஐந்து நிமிடம் ஊற வைத்து வடை போல் தட்டி சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

* பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், தேவையான அளவு உப்பு எல்லாம் மிக்ஸியில் போட்டு அரைத்து வேகவைத்த கடலைப்பருப்பில் நன்றாக கலந்து பின்னர் தாளித்து சாப்பிட சுவையாக இருக்கும்.

* பயத்தம் பருப்பு வேகவைக்கும் போது குழையாமல் இருக்க குக்கர் பாத்திரத்தில் பருப்பை போட்டு, சிறிது உப்பு போட்டு, பருப்பு அலம்பிய நீரிலேயே வேகவைத்தால் நன்கு வெந்து விடும். குழையாமல் இருக்கும்.

* தோசை வார்க்கும் போது தேங்காய் துருவலை தோசை மேல் தூவி வார்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

- ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.

* கோதுமை மாவு, மைதா மாவு, ஒரு சிட்டிகை சமையல் சோடா, வெல்லம் சேர்த்து ஊற வைத்து, தோசையை எண்ணெய் ஊற்றி  வார்த்து பிறகு நெய் சேர்த்தால் வாசனையாக இருக்கும். 

* வெந்தய தோசைக்கு 1 டம்ளர் அரிசிக்கு 1 டீஸ்பூன் வெந்தயத்தை உளுந்துடன் சேர்த்து ஊறவைத்து அரைத்தால் நன்றாக மசிந்துவிடும். தோசை மிருதுவாக இருக்கும். 

* இட்லி மாவில் கோதுமை மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலைகள், பொட்டுக் கடலை சேர்த்து, ஒரு சிட்டிகை சோடா மாவு கலந்து பக்கோடா செய்ய கரகர மொறுமொறு ஸ்நாக்ஸ் தயார்.

- ராஜிகுருஸ்வாமி, சென்னை.

* கொத்தமல்லி, கறிவேப்பிலை தழையை வாங்கிய உடன் வாழைப்பட்டையில் சுற்றி வைக்க வாடாமல் இருக்கும்.

* பால் காய்ச்சும் போது பாத்திரத்தில் முதலில் கொஞ்சம் தண்ணீரை விட்டு பிறகு பால் ஊற்றிக் காய்ச்சினால் பால் பாத்திரத்தில் ஒட்டிக் கொண்டு அடிபிடிக்காது.

* தோசை கல்லில் ஒட்டாமல் இருக்க சிறிதளவு எண்ணெயை ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பையும் போட்டு, கல்லில் நன்கு தேய்த்து பிறகு ஊற்றலாம். 

- கே.காசி, கோவிலூர்.

இடியாப்ப பாயசம்

தேவையானவை: இடியாப்ப மாவு - ¾ கப், பாசிப்பருப்பு - ¾ கப், வறுத்த கடலைப்பருப்பு - ¼ கப், வெல்லம் - ¾ கப், நெய் - தேவையான அளவு, லேசாக நெய்யில் வறுத்த தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கி நெய்யில் வறுத்த தேங்காய் - 4 டேபிள்ஸ்பூன், கெட்டி தேங்காய்ப்பால் - ¼ கப், ஏலப்பொடி - 1 டீஸ்பூன், சுக்குப் பொடி - ½ டீஸ்பூன், உப்பு - 2 சிட்டிகை.

செய்முறை: இடியாப்ப மாவுடன் 1 சிட்டிகை உப்பு சேர்த்து நல்ல சூடான தண்ணீர் விட்டு கரண்டியின் பின் பக்கத்தால் கிளறி, மாவை பெரிய துளை உள்ள இடியாப்ப அச்சில் பிழிந்து வேகவைத்து எடுக்கவும்.

பிறகு அதனை தட்டில் கொட்டி, மேலே லேசாக நெய் தடவி நன்கு ஆறியதும் சுமார் 3 சென்டி மீட்டர் துண்டுகளாக வெட்டவும். பாசிப்பருப்பையும், கடலைப்பருப்பையும் தேங்காய் துண்டுகளுடன், பருப்புகள் குழைவாகும் வரை வேக வைத்த பின் வெல்லம், தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். அடுத்து இடியாப்ப துண்டுகள், ஏலம், சுக்குப்பொடி, உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதித்ததும், தேங்காய்ப்பால் ஊற்றி ஒரு கொதி வந்ததும் ஸ்டவ்வை அணைத்தால் சுவையான, சத்தான பாயசம் தயார்.

- எஸ்.பார்வதி கோவிந்தராஜ், நாகப்பட்டினம்.