வாழ்நாள் முழுதும் இசைக் கச்சேரி நடத்துவேன்!
‘கலைமாமணி’ ஹேமலதா மணி
“வீணையை என் விரல்களால் மீட்டும்போது, மடியில் தவழ்கின்ற மழலையை கொஞ்சுவது போன்ற உணர்விருக்கும்” என்று மன நெகிழ்வுடன் வீணை மீதான பேரன்பை வெளிப்படுத்துகிறார் வீணை இசைக்கலைஞரான கலைமாமணி ஹேமலதா மணி.தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், கலைத்துறையில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி கலை மேம்பாட்டிற்காக உழைக்கும் சிறந்த கலைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கலைமாமணி உட்பட பல்வேறு சிறப்பு விருதுகளை வழங்கி சிறப்பித்து வருகிறது.
 2021, 2022 மற்றும் 2023ம் ஆண்டிற்கான கலைமாமணி விருது வழங்கும் விழா கடந்த அக்டோபர் மாதம் 11ம் தேதியன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிலையில், சிறந்த வீணை இசைக்கலைஞரான ஹேமலதா மணி அவர்களுக்கு, 2023ம் ஆண்டிற்கான கலைமாமணி விருது வழங்கப்பட்டது. அவர் திறமைக்கான அங்கீகாரம் கிடைத்ததற்கு வாழ்த்து தெரிவித்து அவரிடம் பேசத் தொடங்கிய போது, விருது பெற்ற அனுபவம் மற்றும் தன் இசைப் பயணம் குறித்தும் ஆனந்தத்துடன் பகிர்ந்து கொண்டார்.
 “முதலில் எனக்கு கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்த தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்திற்கு என் மனமார்ந்த நன்றியை சொல்லிக்கொள்கிறேன். அதிலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடமிருந்து விருது பெற்றது நெகிழ்ச்சியாக இருந்தது. என் வாழ்வில் மறக்க முடியாத தருணமாக அமைந்த இந்த நிகழ்வை எண்ணி திளைக்கிறேன்.
என்னுடன் ஒன்றிப்போன வீணையுடனான என் இசைப் பயணம் மிகவும் சுவாரஸ்யம் நிறைந்தது. என் வீட்டில் எப்பொழுதும் கர்நாடக சங்கீதம் ஒலித்துக்கொண்டே இருக்கும். என் அம்மா கர்நாடக சங்கீதம் பாடுவார். தந்தை காவல்துறை அதிகாரியாக இருந்தார். சிறு வயதில் நான் தஞ்சையில் இருந்ததால் வீணை மீது எனக்கு ஓர் ஈர்ப்பு இருந்தது.
தஞ்சையில் என் ஆரம்பகால ஆசிரியர்களிடம் வீணை வாசிக்க பயிற்சி பெற்றேன். சிறு வயதிலேயே எனக்கு பார்வைக் குறைபாடு பிரச்னை தொடங்கியது. இருப்பினும் நான் இசையை தேர்ந்தெடுத்தேன். மூன்று ஆண்டுகள் வீணை பயிற்சிக்கு பின்னர் திருவையாறு தியாகராஜா ஆராதனையின் போது என் முதல் வீணை கச்சேரி நடந்தது.
இதுவே என் முதல் மேடை அனுபவம். அதன் பின்னர் எத்திராஜ் கல்லூரியில் எகனாமிக்ஸ் படிப்பதற்காக சென்னை வந்தேன். குறிப்பாக என் குருவிடம் வீணை பயிற்சி பெறவேண்டும் என்பதற்காகவே இங்கு வந்தேன் என்றே சொல்லலாம். வீணை மேதை சிட்டி பாபு அவர்களின் வீணை வாசிப்புக்கு நான் மிகப்பெரிய ரசிகை. அவரே என் குருவாக அமைந்தது எனக்கு கிடைத்த வரம். 15 ஆண்டுகளுக்கும் மேலாக அவரிடம் பயிற்சி பெற்றேன். கலை பண்பாட்டுத்துறை மூலம் வழங்கப்பட்ட திட்டத்தின் கீழ் பிரபல கலை வித்துவான்களிடம் பயிற்சி பெரும் வாய்ப்பு கிடைத்த போது சிட்டி பாபு அவர்களே எனக்கு பயிற்சியாளராக அமைந்தார். மேடையின் நடுவில் அமர்ந்து கைகளில் வீணையை தழுவிப் பிடித்து அதை மீட்டுகின்ற தருணங்களே என் பொன்னான காலம்.
அடுத்தடுத்து நிறைய சபாக்களில் இசைக் கச்சேரிகளில் பங்கேற்க தொடங்கினேன். 1972ல் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி சபாவில் முதல் கச்சேரி நடைபெற்றது. அதிலிருந்து இப்போது வரையிலும் அரை நூற்றாண்டு காலமாக சபா கச்சேரிகளில் வாசித்துக் கொண்டிருக்கிறேன். 1970களிலேயே தமிழ்நாடு இசைக் கல்லூரியில் வீணையை முதன்மையாக தேர்வு செய்து படித்து, சங்கீத வித்துவான் தலைப்பு தேர்வில் தேர்ச்சிப்பெற்று ‘சங்கீத வித்துவான்’ பட்டம் பெற்றேன்.
சென்னையில் உள்ள கலாச்சார நிறுவனங்களான மியூசிக் அகாடமி, பார்த்தசாரதி சுவாமி சபா, கிருஷ்ண ஞான சபா, இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி போன்றவற்றிலும் இந்தியாவில் உள்ள பெரும்பாலான சபாக்களிலும், மட்டுமின்றி சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் இதுவரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீணைக் கச்சேரிகளை நடத்தியிருக்கிறேன்.
நவராத்திரி, மார்கழி போன்ற காலங்களில் சிறப்பு கச்சேரிகளை இப்போது வரை நடத்தி வருகிறேன். அந்தக் காலங்களில் இயல் இசை நாடக மன்றம் சார்பில் சபாக்களில் கச்சேரிகளை நடத்த ஸ்காலர்ஷிப் வழங்குவார்கள். அதன் உதவியுடன் பல கச்சேரிகளை நிகழ்த்தியிருக்கிறேன்” என்றவர் தன்னுடைய பார்வைக் குறைபாட்டினை அவர் பொருட்படுத்தியதே இல்லையாம். “பார்வையின்றி வீணை வாசிப்பதை பலரும் பாராட்டினாலும், நான் ஒருபோதும் அதை தடையாக எடுத்துக்கொண்டதே இல்லை. நான் அவ்வாறே வீணை வாசிக்க கற்றுக்கொண்டேன். என் திறமைக்கு கிடைத்த பட்டங்களும் அங்கீகாரமும் எல்லோரையும் போலவே எனக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. நான் இசையை தேர்ந்தெடுத்த போது என் குடும்பத்தினர் அனைவரின் ஆதரவும் எனக்கு கிடைத்தது. அம்மா அளித்த ஊக்கத்தினால் நிறைய கச்சேரிகளிலும் வானொலி நிகழ்ச்சிகளிலும் வீணை வாசித்தேன்.
1978ல் எனக்கு திருமணம் நடந்தது. என் கணவர் ஓ.எஸ்.மணி கடல் துறை பொறியாளர். வெளிநாட்டுக் கப்பல்களில் தலைமை பொறியாளராக பொறுப்பில் இருந்தார். அதனால் அவருடனே நானும் கப்பலில் பயணம் செய்தேன். பல்வேறு நாடுகளுக்கு கப்பலில் செல்வதிலேயே என் வாழ்க்கை நகர்ந்தது. இது எனக்கு புதிய அனுபவங்களையும் கொடுத்தது. இது போன்ற கப்பல் பயணங்களில் இருந்த போது ஓய்வு நேரங்களில் நாங்கள் செல்கின்ற நாடுகளிலேயே வீணை கச்சேரிகளை நடத்தியிருக்கிறேன்.
விடுமுறைக்கு சென்னைக்கு வரும் போதும் கச்சேரிகளை நடத்தவும் என் கணவர் ஊக்கம் அளித்தார். என் இசைப் பயணத்தில் என் கணவர் மட்டுமின்றி இரு மகள்களின் ஆதரவும் எனக்கு கிடைத்தது. என் மூத்த மகள் சாருலதா மணி, கர்நாடக இசைக் கலைஞர் மற்றும் திரைப்பட பின்னணி பாடகி. ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் ‘அஞ்சு வண்ணப்பூவே’ பாடலை பாடியிருந்தார். என் இளைய மகள் ஸ்ரீமதுமிதா, திரைப்பட பின்னணி பாடகி. என் இரு மகள்களுக்குமே ஆரம்பகால இசைப் பயிற்சியினை நான் அளித்தேன். அவர்களுக்கு நான் கலைமாமணி விருது பெற்றது பெருமையாக நினைப்பதாக கூறினார்கள்.
‘ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்’ என்பது போன்று நான் கலைமாமணி விருது பெறுவதை நேரில் கண்டு என் தாயார் லலிதா நெகிழ்ந்து போனார். என் திறமைக்கு மகுடம் வைத்தாற்போல தமிழ்நாடு அரசு அங்கீகாரத்துடன் ‘கலைமாமணி’ விருது பெற்றது ஒரு தனி உற்சாகத்தை அளிக்கிறது.
மேலும், இந்த துறையில் சாதிக்கவும் நிறைய பங்களிப்புகளை வழங்கவும் இந்த விருதுகள் ஊக்கப்படுத்துகின்றன” என்றவர், சாதனையாளர் விருது, ரோட்டரி கிளப் விருது போன்ற பல்வேறு விருதுகளும் பட்டங்களும் பெற்றுள்ளார். “இசை கடல் போன்றது. வாழ்நாள் முழுவதும் இசையை கற்கலாம்.
இப்போது தமிழ்நாடு இசைக் கல்லூரியில் பி.ஹெச்டி பட்ட படிப்பினை படித்துக் கொண்டிருக்கிறேன். என் இசைப்பயணத்தின் உதவியுடன் இளைய சமுதாயத்திற்கு நல்ல கருத்துக்களை ஆராய்ச்சி மூலம் கொடுக்க வேண்டும் என்பதும் இந்த ஆராய்ச்சி படிப்பினை மேற்கொள்ள என்னை ஊக்கப்படுத்தியது.
கலைஞர்கள் பட்டங்களும் விருதுகளும் பெறுவது மட்டுமின்றி கலையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதும் அவசியம். நான் வீணை ஆசிரியராகவும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறேன். நேரடி வகுப்புகளும் வெளிநாடுகளில் இருக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாகவும் பயிற்சி அளித்து வருகிறேன். வீணை பழமையான இசைக்கருவி. வீடுகளில் வீணை வைத்திருப்பதே ஒரு தனி அழகுதான். வீணையை வாசித்தல் ஒரு தெரபி. மனதிற்கு இதமளிக்கக்கூடியது. வீணையை தவிர்த்து எனக்கு கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் எழுதுவதிலும் ஆர்வம் உண்டு. நான் எழுதிய மோகனகல்யாணி குறுநாவல் 1994ம் ஆண்டு அமரர் ராமரத்னம் விருது போட்டியில் முதல்
பரிசினை பெற்றது.
என் கணவருடன் செய்த கப்பல் பயண அனுபவங்களை ‘ஹெல்காவில் ஏழு மாதங்கள்’ எனும் தலைப்பில் குங்குமம் இதழில் எழுதியிருந்தேன். ‘நீலக் கடலினிலே நித்தம் பயணம் செய்து’ எனும் பயணத் தொடரையும் எழுதியிருக்கிறேன்.
‘அன்புள்ள அம்மாவிற்கு’ சிறுகதை ஹிந்தி மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு ஒடிசா மாநிலத்தின் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அகில இந்திய வானொலியில் என்னுடைய பாடல் வரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கு விஸ்வநாத ராமமூர்த்தி அவர்கள் இசையமைத்து, வீரமணி குரலில் பாடல் வெளியானது.
சமீபமாக ‘சரஸ்வதி ஆரத்தி’ எனும் பாடலை நான் எழுத, என் இரு மகள்களும் அதனை பாடி, என் வீணை இசையுடன் இணைத்து ஒரு ஆல்பமாக வெளியானது. விருது பெற்ற கையுடன் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ‘மெல்போர்ன் வீணா ஃபெஸ்டிவல்’ நிகழ்ச்சியில் என் வீணைக் கச்சேரி இடம்பெறுகிறது. அங்கு என்னுடைய வீணை பாணி குறித்து பேசவிருக்கிறேன். ஆஸ்திரேலியாவில் மற்றொரு நிகழ்ச்சியிலும் என் கச்சேரி நடைபெறுகிறது. இங்கு திரும்பியதும் மார்கழி இசை நிகழ்ச்சிகளும் இருக்கும். இது போன்று தொடர்ந்து இசைக் கச்சேரிகளை நடத்திக்கொண்டே இருப்பேன்” என்றவர் கேட்பவரின் மனம் நெகிழச் செய்யும்படி, ‘சின்னஞ்சிறு கிளியே’ பாடலை இசைக்கலைஞருக்கே உரிய நளினத்துடன் வீணையில் வாசித்துக் காட்டினார்.
செய்தி: ரம்யா ரங்கநாதன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|