மீண்டும் வருமா? உறவும் மகிழ்வும்!



உன்னத உறவுகள்

அறுபது, எழுபது வயதைக் கடந்தவர்கள் பாக்கியசாலிகள் என்றுதான் கூற வேண்டும். காரணம், தங்களின் சிறு வயதிலேயே அவர்கள் அனைத்து சந்தோஷங்களையும் கண்டுகளித்து, உறவுகளுடன் உறவாடி அவர்களின் அரவணைப்பினைப் பெற்றிருக்கிறார்கள். ஆனால், இவையாவும் இன்றைய பிள்ளைகளுக்கு தெரிய வாய்ப்பில்லை. 
அம்மா, அப்பா, உடன்பிறப்பு இவர்களுடன் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் அனைத்து வசதிகளுடன் வாழ்வதுதான் வாழ்க்கை என்று நினைக்கிறார்கள். கணினி யுகத்தில் பிறந்து அது மட்டுமே உண்மையான சந்தோஷம் என்று நினைக்கிறார்கள். எல்லாவற்றையும் விட நடைமுறை வாழ்க்கையில் நாம் அனுபவித்த சுகங்களை பிள்ளைகள் இழந்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை. அதை அவர்களுக்கு புரியும் படி எடுத்துச் சொல்லலாம். 

திருமணம் போன்ற நிகழ்வுகளில் உறவுகள் ஒன்று கூடுவது மனமகிழ்ச்சியைத் தந்தது. வீட்டிற்கு வந்த உறவுக்கார பிள்ளைகளை உடன் அழைத்துச் சென்று தங்களின் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவர்களையும் விளையாட்டில் சேர்த்துக் கொள்வார்கள். 

வீட்டில் பெண்மணிகள் ஒன்று கூடி கல்யாண சீர் வரிசைகளை செய்யத் தொடங்குவார்கள். வீடு முழுவதும் பலகார மணம் வீசும். கல்யாணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் களைகட்டும். பெண்கள் திருமணத்திற்கு அணியப்போகும் புடவைகள் மற்றும் நகைகள் குறித்து பரிமாறிக் கொள்வார்கள். பெண் பிள்ளைகளுக்கு ஒரே நிற பாவாடை, தாவணி அணிய திட்டமிடுவார்கள். 

இந்த மகிழ்ச்சியும் அன்பும் அரவணைப்பும் முன்புபோல் காணப்படாதா என்பதுதான் நம் ஆதங்கம்.பரம்பரையாக வீடுகளில் நிலபுலன்கள் இருந்தன. விவசாயம் ஏதாவது ஒரு வகையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும். அரிசிக்கும், மளிகைப் பொருட்களுக்கும் பஞ்சம் இருக்காது. நிறைய வீடுகளில் நெல், அரிசி போன்றவற்றைக் கொடுத்துவிட்டு, வீட்டுக்கு வேண்டிய வேறு பொருட்களை வாங்கிக் கொள்வார்கள். 

தங்கள் தோட்டத்தில் விளையும் காய்கறிகளையும் பண்ட மாற்று முறையில் மாற்றிக் கொள்வார்கள். பிள்ளைகள் கடைக்கு செல்ல ஆர்வமாக இருப்பார்கள். காரணம், மளிகைக் கடைக்காரர் பிள்ளைகள் கையில் பொருட்கள் தந்த பிறகு, கொஞ்சம் முந்திரியோ, திராட்சையோ, பொட்டுக் கடலையோ தரத் தவறமாட்டார். பிள்ளைகளுக்கும் எந்தப் பொருள் எங்கு கிடைக்கும் என்பது நடைமுறை வாழ்க்கையில் கற்பிக்கப்பட்டது. இன்றைய பிள்ளைகளுக்கு அனைத்தும் ஆன்லைனில்தான் வாங்கத் தெரிகிறது. கடைக்கு செல்லும் பழக்கம் முற்றிலும் மறைந்துவிட்டது. 

வீட்டு வேலைகளுக்கு கிரைண்டர், வாஷிங் மெஷின் இல்லாத காலம். ஆனால், வீட்டிற்கு வரும் விருந்தினர்களே ஆளுக்கு ஒரு வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார்கள். பாட்டி இட்லிக்கு மாவு அரைக்க, அத்தை பொடி வகைகளை உரலில் இடித்து சலித்துக் கொண்டிருப்பார். இன்று போல் கேட்டரிங் சர்வீஸ் எல்லாம் அன்று கிடையாது. வீட்டிற்கும் மண்டபத்திற்கும் ஆட்கள் நேரடியாக வந்து சமைத்துத் தருவார்கள். 

இருப்பினும் வீட்டில் செய்ய வேண்டிய வேலைகளை உறவினர்கள் அனைவரும் தங்களுக்குள் பிரித்துக் கொண்டு செய்வார்கள். உறவுகளின் பலம் அந்தளவுக்குக் காணப்பட்டது. இன்று இவற்றையெல்லாம் யோசித்தால், பிரமிப்பாக இருக்கிறது. எப்படிப்பட்ட காலக்கட்டத்திலும் உறவினர்கள் தோள் கொடுத்து உதவ முன்வருவார்கள். 

வாய்விட்டு உதவியினைக் கேட்க யாரும் தயங்கியது இல்லை. இன்று திருமணங்கள் பிரமாதமாக நடத்தியும் ஆத்மார்த்தமான திருப்தி கிடைப்பதில்லை. காரணம், 
அன்புடன் அழைக்க ஆளில்லை, உரிமையுடன் உறவுகளை உதவி கேட்க முடியவில்லை. இதுதான் வசதிகளின் வலுவோ என்று யோசிக்க தோன்றுகிறது. 

பெண்கள் ஆற்றங்கரையில் குளிப்பது வழக்கமாக இருந்தது. யாரும் எந்தத் தவறான கருத்துகளையும் முன்வைக்கமாட்டார்கள். ஆண்களும் பெண்களுக்கு துணையாகச் செல்வார்கள். ஒவ்வொரு விஷயத்திலும் குடும்பத்தின் மகிழ்ச்சி காணப்பட்டது. 

இன்று ஆடம்பர ஹோட்டலில் தங்கினாலும், ரகசிய கேமரா உள்ளதா என ஆராய வேண்டியுள்ளது. எதுவுமே, எந்த விஷயமுமே விகல்பமாக யோசித்திருக்க மாட்டார்கள். மொத்தத்தில் நாம் உறவுகளையும், சந்தோஷத்தையும் இழந்து விட்டு வாழ்ந்து வருகிறோம். 

சிறிய விஷயங்களில் கூட மகிழ்ச்சியும் அன்பும் கிடைத்தது. பிள்ளைகள் தெருவில் விளையாடுவதைப் பார்த்து வண்டியில் வருபவர்கள் ஒதுங்கிப் போவார்கள். பொறுமையும், நிதானமும் அனைவரிடமும் இருந்தது. பசி எடுத்தால் நண்பரின் வீட்டிற்கு தயக்கமின்றி சாப்பிட செல்லலாம். பெரியவர்கள் அனைத்துப் பிள்ளைகளையும் ஒன்றாக பாவிப்பார்கள். பணக்காரன், ஏழை என்ற பாகுபாடு இருக்காது. 

ஒரு வீட்டில் விசேஷம் நடந்தால் அருகில் இருப்பவர்கள் வரிந்து கட்டிக் கொண்டு உதவிக்கு வந்து விடுவார்கள். இவற்றையெல்லாம் பார்த்து வளர்ந்த பிள்ளைகளும் உதவும் குணத்தை நடைமுறையில் கற்றுக் கொண்டார்கள். அனைத்து நற்குணங்களும் பெரியவர்கள் செய்யும் வேலைகளிலிருந்தே பிள்ளைகளும் கற்றுக் கொண்டார்கள். நல்ல செயல்கள், பழக்க வழக்கங்கள் போன்றவற்றை சொல்லிப் புரிய வைப்பதைவிட பார்த்துக் கற்றுக் கொள்வது என்பது இயல்பாகவே அமைவதாகும். 

வீட்டுக்கு வருபவரை ‘வாங்க’ என்று வரவேற்பதை பார்த்து பழகும் பிள்ளைகளும் நாளை பெரியவர்கள் ஆனதும் தங்கள் வீட்டுக்கு வரும் விருந்தினரை அதே போல் வரவேற்பார்கள். பள்ளியில் கற்றுத்தராத இத்தகைய பழக்கங்கள் வீட்டின் சூழலைப் பொறுத்தே பின்பற்றப்படும். இதுதான் நம் தமிழ் பண்பாடு, பாரம்பரியம் எனலாம்.

இன்றைய சூழலில் நினைத்தபடி யார் வீட்டுக்கும் போக முடியாது. ஒரு ‘போன்’ செய்துவிட்டு வந்திருக்கலாமே என்பார்கள். தண்ணீர் கூட காசு கொடுத்து வாங்கும் காலம் என்பதால், அதிலும் சிக்கன நடவடிக்கைதான். ஒரு வீட்டில் ஒரு இழப்பு நடந்திருந்தது. பத்து நாட்கள் காரியம் முடியும் வரை வீட்டில் அடுப்பு மூட்டி சமைக்கக்கூடாது. உடன் உறவுகள் கலந்து பேசி ஒவ்வொரு நாளும் ஒரு வீட்டிலிருந்து காலை காபி முதல் இரவு உணவு வரை செய்து அனுப்பினார்கள். 

இப்பொழுது அனைத்திற்கும் கேட்டரிங் வசதி வந்துவிட்டது. ஆனால், அன்பு, பாசம், பந்தம் மட்டும் எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்க முடியாது. மீண்டும் அத்தகைய காலகட்டம் வருமா? பாசம் செழிக்குமா? பரோபகாரம் ஓங்குமா என்பதையெல்லாம் இன்றைய இளைஞர்கள் வாழ்வைப் பொறுத்தே அமையும். நிறைய சந்ததிகளை உருவாக்கி அவர்கள் வாழ்வில் உறவின் மகத்துவத்தை எடுத்துரைப்போம். பரிவோடு பாச பந்தத்தை உணர்வோடு அறியச் செய்வோம்.

சரஸ்வதி நிவாசன்