இது தலையாட்டி பொம்மையின் கதை!
தமிழ்நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் கலை வண்ணத்தை உலகம் முழுக்க பறைசாற்றுபவைதான் கைவினைப் பொருட்கள். அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பம்சம் வாய்ந்த கைவினைப் பொருட்கள் உள்ளன. இந்த சிறப்பு இந்தியாவின் வேறு எந்த மாநிலங்களுக்கும் இல்லை என்பதே தனிப்பெருமை. அவ்வகையில் ‘தென் இந்தியாவின் நெற்களஞ்சியம்’ என அழைக்கப்படும் தஞ்சை மாவட்டம் பல சிறப்புகளை தன்னுள் வைத்துள்ளது. அதில் மிகவும் முக்கியமானது தலையாட்டி பொம்மைகள். பொம்மைகளை படுக்க வைத்தாலும், உடனே மறுபடியும் நிற்கும் அமைப்பே இந்த பொம்மைகளின் சிறப்பம்சம்.  தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் அருகில் தலையாட்டி பொம்மைகள் மற்றும் இதர கைவினைப் பொருட்களை குடும்பத்தாருடன் இணைந்து அந்தக் கலையினை தலை நிமிர வைக்கும் முயற்சியில் தலைமுறைகளைத் தாண்டி உழைத்து வருகிறார் கலைச்செல்வி ராஜேந்திர பிரபு. அவருடனான உரையாடலிலிருந்து...
 ‘‘நான் பிறந்தது திருவாரூர் மாவட்டம். பத்தாவது வரை படிச்சிருக்கேன். திருமணமாகி தஞ்சாவூருக்கு வந்துவிட்டேன். என் கணவர் எதை பார்த்தாலும் அப்படியே தத்ரூபமாக சிலையாக செய்யும் ஆற்றலுடையவர். அவரும் அவர் குடும்பத்தாரும் பரம்பரையாக ராஜா, ராணி தலையாட்டி பொம்மைகள், கழுத்து, இடுப்பு தனித்தனியே ஆடும் நடன பொம்மைகள், செட்டியார் பொம்மைகளை செய்து வந்தாங்க.
 இவை அனைத்துமே பாரம்பரிய முறையில் மண்ணால் மட்டுமே தயாரித்து வந்தாங்க. மண்ணை கையால் குழைத்து செய்யப்படும் இந்த தலையாட்டி பொம்மைகளுக்குதான் புவியியல் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது. ராஜா, ராணி தலையாட்டி பொம்மைகள் மட்டுமே சோழர் மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்டவை. மற்றவை அனைத்தும் இடைப்பட்ட காலத்தில் வந்தவை’’ என பொம்மைகள் குறித்த வரலாற்றை விவரிக்கிறார் கலைச்செல்வி.
 ‘‘என் கணவருக்கு உதவியாகத்தான் இந்த வேலைக்கு வந்தேன். நாங்க மண்ணிற்கு பதில் காகித துகள்கள், சாக் பவுடர், இயற்கையாக கிழங்கு மாவினால் செய்கிற கூழ் வைத்து பொம்மைகள் செய்கிறோம். பிளாஸ்டிக், ரப்பர் போன்ற பொருட்களை கொண்டும் இந்த பொம்மைகளை தயாரிக்கிறார்கள். ஆனால், பாரம்பரியமான இந்த பொம்மைகளின் அடையாளமே கீழே படுக்க வைத்தால் தானாக நிமிர வேண்டும் என்பதுதான்’’ என்றவர் அதன் வரலாற்றினை விவரித்தார்.
‘‘தஞ்சை பெரிய கோயிலுக்கும் தலையாட்டி பொம்மைகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. தஞ்சை பெரிய கோயிலின் அஸ்திவாரம் தலையாட்டி பொம்மையின் அடிப்பாகம் போல் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் ஒன்றை கட்ட வேண்டும் என்று இராஜ ராஜ சோழன், சிற்பக்கலை ஆசிரியர் குஞ்சர மல்லன் ராஜ ராஜ பெருந்தச்சன் என்பவருடன் கலந்து பேசிக் கொண்டிருந்தார்.
தான் கட்டப் போகும் கோயில் காலங்காலமாக நிலைத்து நிற்க வேண்டும் என்று இராஜ ராஜ சோழன் விரும்பினார். குஞ்சர மல்லன் மரக்கால் வடிவில் தலையாட்டி பொம்மை மாதிரியை முதன் முதலாக வடிவமைத்துள்ளார். தலையாட்டி பொம்மைகளுக்கு பின்புலத்தில் அறிவியல் காரணமும் உள்ளது.
இந்த பொம்மை எப்படி சாய்ந்தாலும் நிமிரும். அதே போல் அவர்கள் கட்டிய கோயிலையும் பூமி சுழற்சிக்கு ஏற்றார் போல் அமைத்து, எந்த இயற்கை சீற்றங்களையும் தாங்கக் கூடிய வகையில் இருக்குமாறு வடிவமைத்துள்ளனர். சர் ஐசக் நியூட்டனின் புவி ஈர்ப்பு விசைக்கு முன்னரே தலையாட்டி பொம்மைகள் வழக்கில் இருந்ததாக குறிப்புகள் உள்ளன’’ என்று பல செய்திகளை கூறியவர் பொம்மைகளின் தயாரிப்பை பற்றி கூறத் தொடங்கினார்.
‘‘இந்த பொம்மைகளை முன்பு மண்ணால்தான் செய்து வந்தோம். ஆனால், அவை உடைந்துவிடுவதாலும், மணல் தட்டுப்பாடு மற்றும் விற்பனையிலும் பாதிப்பு ஏற்பட்டது. அதனால் காகித துகள் கொண்டு பொம்மைகளை தயாரிக்க துவங்கினோம்.
காகித தூள், சாக் பவுடர், இயற்கையாக மாவு வைத்து தயாரிக்கப்பட்ட கூழ் ஆகியவற்றை சப்பாத்தி மாவு போல் பிசைந்து முதல் பாதி அச்சில் வார்ப்போம். பின்பு அதன் முதுகுப் பகுதி உறுதியாக இருக்க காகிதங்களை பின்புறத்தில் ஒட்டுவோம். இது அரை மணி நேரம் காய வேண்டும். அதன் பிறகு பின் பாதியையும் அச்சில் வார்த்து ஒட்டுவோம். இந்த பொம்மையின் அடிப்பாகம்தான் மிகவும் முக்கியம். அதை மட்டும் மண்ணால் செய்கிறோம். அச்சில் எடுத்த பொம்மையை அடிப்பாகத்துடன் ஒட்டி ஒரு நாள் முழுக்க வெயிலில் காய வைக்க வேண்டும். மேல் பகுதி எடை குறைவாகவும் அடிப்பாகம் எடை அதிகமாகவும் இருப்பதால் எந்தப் பக்கம் படுத்தாலும் பொம்மை எழுந்து நிற்கும்.
அச்சில் வார்ப்பதால், பொம்மையின் முக அமைப்பு வழவழப்பாக இருக்க எம்ரி அட்டை கொண்டு தேய்க்க வேண்டும். அதன் பிறகு வர்ணம் பூசி கடைசியாக கண்களை வரைவோம். மழைக் காலங்களில் பெரிய அளவில் உற்பத்தி இருக்காது. அந்த சமயத்தில் அச்சுகளை தயார் செய்யும் வேலையில் ஈடுபடுவோம். போலி பொம்மைகளும் மார்க்கெட்டில் உள்ளது’’ என்றவரின் மகனும் சிற்பக்கலை வல்லுனராம்.
‘‘என் மகன் சென்னை, மாமல்லபுரத்தில் இருக்கும் சிற்பக்கலை கல்லூரியில் ஃபைன் ஆர்ட்ஸ் படிக்கிறார். நிறைய சிலைகளை வடித்துள்ளார். சிற்பக்கலையில் தேசிய அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். மகள் எம்.டெக் படிக்கிறாள். இந்த பொம்மைகளை ‘கலை பைபர் வொர்க்ஸ்’ என்ற பெயரில் ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறோம். அந்த வேலையை என் இரு பசங்களும் பார்த்துக் கொள்கிறாங்க. இந்தத் தொழிலில் தற்போது எங்களுக்கு அடுத்து யாரும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மூத்த தலைமுறையினர் மட்டுமே இதனை தொடர்ந்து வராங்க. 500 குடும்பங்கள் செய்து வந்த தொழிலை தற்போது 40 குடும்பத்தார் மட்டுமே செய்கிறோம்.
அதில் பெண்கள்தான் முழுமையாக ஈடுபட்டு வருகிறோம். இந்த பொம்மை நம் மண்ணின் அடையாளம். அதை காப்பாற்ற வேண்டும். இந்த கைவினைக் கலை அழியக் கூடாது என்பதற்காக அரசு தரப்பிலும் நிறைய உதவிகள் செய்றாங்க.
கல்லூரி மாணவர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் என பலருக்கு அரசு அறிவுறுத்தல் பேரில் வகுப்பு எடுத்து வருகிறேன். கலைத்திருவிழா ஏற்பாடு செய்து எங்களைப் போன்ற கைவினைக் கலைஞர்களுக்கு அரசு ஊக்கம் அளிக்கிறது. குழந்தைகளுக்கு பள்ளிகளில் பாரம்பரிய பொம்மைகள் குறித்து விழிப்புணர்வு தருகிறேன். அரசு கண்காட்சிகள், நவராத்திரி போன்ற பண்டிகை காலங்களில் விற்பனைகள் அதிகமாக இருக்கும். திருமணம் போன்ற விழாக்களுக்கு ரிட்டன் கிஃப்டாகவும் தலையாட்டி பொம்மைகளை கொடுக்க ஆர்டர் செய்றாங்க. பிற மாநிலத்தவர், வெளிநாட்டினர் மிகுந்த ஆர்வமுடன் வாங்க முன் வராங்க.
சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இருந்தும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். எங்களுக்கு பிறகு என் சந்ததி நம்முடைய பாரம்பரிய அடையாளத்தை காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. கைவினைக் கலையினை அழியாமல் காக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன்தான் குடும்பமாக உழைக்கிறோம்’’ என்றார் கலைச்செல்வி ராஜேந்திர பிரபு.
செய்தி: கலைச்செல்வி
படங்கள்: பரணிதரன்
|