கல்வியே எங்களின் அடையாளம்!



அழகுப் போட்டிகள் பெண்கள் மற்றும் ஆண்களுக்குமானது மட்டுமல்ல, திருநர்களுக்குமானது என்பதை ஒவ்வொரு ஆண்டும் உறுதிப்படுத்தி வருகின்றனர் பார்ன் டூ வின் (Born To Win) அமைப்பினர். கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற திருநர்களின் கலைத் திருவிழாவினை பற்றி பகிர்ந்தார் அமைப்பின் நிறுவனர் ஸ்வேதா. “கடந்த 15 ஆண்டுகளாக திருநங்கைகளுக்கான அழகுப் போட்டிகளை நடத்தி வருகிறோம். இது ஒன்பதாவது சீசன். 

இதன் மூலம் அவர்களின் திறமைகள் வெளிப்படுத்தப்பட்டு, அடிப்படை தேவைகள் மற்றும் உரிமைகள் கிடைக்க உதவி செய்கிறோம். மேலும், அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, சம உரிமை, அதிகாரமளித்தல் மற்றும் ஆரோக்கியமாக வாழும் சூழல் போன்றவற்றையும் செய்து தருகிறோம். மிஸ் சௌத் இந்தியா ட்ரான்ஸ் குயின் போட்டியில் பங்கேற்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட திருநங்கைகளுக்கு குறைந்தது ஒரு மாதக் காலம் பயிற்சியினை அளிப்போம். இந்த முறை திருநங்கைகளின் ராம்ப் வாக் நிகழ்விற்கு நானே அவர்களுக்கு கொரியோகிராஃபி செய்தேன். போட்டியில் இரண்டு சுற்றுகள் இருந்தன. 

முதல் சுற்று ராம்ப் வாக், இரண்டாவது சுற்றில் நடுவர்களின் கேள்விகளுக்கு அவர்கள் பதிலளிக்க வேண்டும். இதில் திருநங்கை சுவாதி மிஸ் சவுத் இந்தியா ட்ரான்ஸ் குயின் 2025 பட்டத்தை வென்றார். இந்த ஆண்டு அழகுப் போட்டி திருநங்கைகளுக்கு மட்டுமின்றி திருநம்பிகளுக்கும் நடத்தப்பட்டதுதான் நிகழ்ச்சியின் கூடுதல் ஸ்பெஷல். 
மும்பையில் ஒரு அமைப்பு முதல் முறையாக திருநம்பிகளுக்கான அழகுப் போட்டியினை  நடத்தியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நடைபெறுவது இதுவே முதல் முறை. எங்களின் அறிவிப்பினைப் பார்த்து ஒடிசா, மேற்குவங்கம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து போட்டியில் பங்கு பெற வந்திருந்தார்கள். 

அவர்களுக்கும் எப்படி நடக்க வேண்டும், நிற்க வேண்டும், எவ்வாறு தன்னை சுய அறிமுகம் செய்ய வேண்டும், நடுவரின் கேள்விகளுக்கு எவ்வாறு தன்னம்பிக்கையுடன் பதிலளிக்க  வேண்டும் போன்ற பயிற்சிகளை அளித்தோம். திருநம்பிகளுக்கான போட்டியில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த திருநம்பி ருத்ரா ஆஷிக் மிஷரா முதலிடத்தைப் பிடித்து மிஸ்டர் சவுத் இந்தியா ட்ரான்ஸ் கிங் 2025  என்ற பட்டத்தை வென்றார். 

திருநங்கைகளுக்கு கிடைக்கும் ஒருசில வாய்ப்புகள் கூட திருநம்பிகளுக்கு கிடைப்பதில்லை. கல்வி இடைநிற்றல், வேலையின்மை போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு ஆதார் மற்றும் பான் அட்டையினை பெற உதவி செய்திருக்கிறேன்’’ என்றவரை தொடர்ந்தார் அழகி ராணியாக வெற்றி பெற்ற திருநங்கை ஸ்வாதி. 

“இந்தப் போட்டி பற்றி அறிந்ததும், 2021ல் பங்கேற்றேன். முதல் நான்கு ஆண்டுகள் டாப் 7 லிஸ்ட்டில் கூட என்னால் இடம் பெற முடியவில்லை. ஒவ்வொரு முறையும் இதற்காக தனிப்பட்ட பயிற்சி செய்திருக்கிறேன். இந்தாண்டு கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே கடுமையாக உழைத்தேன். 

அதற்கான பலன்தான் இந்தாண்டு டைட்டில் வின்னர் பட்டம். அதற்கு நான் ஸ்வேதா அம்மாவிற்குதான் நன்றி சொல்லணும். எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்தார். நான் மாநிறமாக இருப்பேன். அதனால் வெற்றி பெற முடியாது என்ற தாழ்வு மனப்பான்மை எனக்குள் இருந்தது. ஸ்வேதா அவர்கள்தான் எனக்கு நம்பிக்கை அளித்தார்.

இந்த ஆண்டு போட்டியில் முதல் ஏழு இடத்தில் தேர்வானேன். பின்னர் நடுவர்கள் ‘ஒரு நாள் பிரதம மந்திரியாக உங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டால், உங்களுடைய முதல் கையெழுத்து என்னவாக இருக்கும்?’ என்ற கேள்வியை கேட்டபோது, “திருநர்களுக்கும், மாற்றுத்திறனாளி பெண்களுக்கும் 50% இட ஒதுக்கீடு வழங்கி இலவச கல்வி அளிப்பேன்” என்று தன்னம்பிக்கையோடு  பதில் சொன்னேன். 

அதன் பிறகு டைட்டில் வின்னராக என் பெயரை அறிவித்த போது என்னுடைய சந்தோஷத்துக்கு அளவே இல்லை. இந்த வெற்றியின் பலனாக நான் ஃபேஷன் டிசைனிங் படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எங்களுடைய பெற்றோரும் சமூகமும் எங்களை ஏற்றுக்கொள்ள மறுத்த போது, ஆதரவு தந்து, ஊக்கமளித்து, வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் ஸ்வேதா அம்மா அவர்களின் தொண்டு அமைப்புகள் இருக்கும் வரை எங்களின் கனவுகளை நோக்கி எங்களால் தைரியமாக பயணிக்க முடியும்” என்று நெகிழ்ந்தவரை தொடர்ந்து திருநம்பி ருத்ரா ஆஷிக் மிஷரா தன் வெற்றிப் பாதையினைப் பற்றி பகிர்ந்தார். 

“நான் 2018ல் இந்த அமைப்பில் சேர்ந்தேன். இந்த ஆண்டு திருநம்பிகளுக்கும் அழகுப் போட்டி நடத்த இருப்பதைப் பற்றி தெரிவித்த போது எனக்கும் அதில் பங்கேற்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. போட்டிக்கான முழு பயிற்சி அளித்தார்கள். இரண்டாவது சுற்றில் நடுவர்கள், ‘உங்கள் வாழ்வில் முக்கியமான இரண்டு நபர்கள் யார்?’ என்று கேட்டார்கள். என் வாழ்வில் முக்கியமான முதல் நபர் ஸ்வேதா அம்மாதான். 

நான் வீட்டை விட்டு வந்த போது எனக்கு ஆதரவளித்து ஊக்கப்படுத்தியது அவர்தான். அடுத்த முக்கியமான நபர் என் துணைவி. எனக்கு மிகவும் பக்கபலமாக இருப்பவர். நான் இந்தப் போட்டியில் வென்றது சந்தோஷமாக இருந்தாலும், என்னைப் போன்ற திருநம்பிகள் பலர் உள்ளனர். அவர்களுக்கு நம்பிக்கையான வாழ்க்கையினை இந்த வெற்றிக் கொடுக்கும். 

நான் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவன். என் அப்பா ராணுவத்தில் இருந்தார். அவருக்கு சென்னைக்கு மாற்றமானதால், கல்லூரிப் படிப்பு சென்னையில் படித்தேன். முதுகலை மற்றும் பி.எட் படிப்பில் சேர்ந்த போது உடை குறித்து சில கட்டாயங்கள் இருந்ததால், என்னால் படிப்பைத் தொடர முடியவில்லை. 

நான் ஒரு அத்லெட்.  ஓபன் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறேன். விளையாட்டு இட ஒதுக்கீடு மூலம் எனக்கு ரயில்வே துறையில் வேலை கிடைத்தது. ஆனால், ஒரு பெண் போலீசாகத்தான் நான் அதில் வேலை செய்ய முடியும் என்றார்கள். 

எனக்கு அதில் விருப்பமில்லை. அதனால் என் பெற்றோரும் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. நான் வேலை தேடி பல்வேறு மாநிலங்களுக்கு சென்றேன். தமிழ்நாட்டுக்கு வந்தபின் ஸ்வேதா அவர்களின் அமைப்பில் சேர்ந்தேன். படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லை என்பதால் ஒரு நிறுவனத்தில் செக்யூரிட்டி வேலை செய்தேன். 

அடுத்த ஒரு வருடத்தில் என் கல்வித் தகுதி, கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் எல்லாம் பார்த்து என்னை செக்யூரிட்டி ஆபீஸராக ப்ரொமோட் செய்தார்கள். 3 வருட பணி அனுபவத்துடன் வேறொரு நிறுவனத்தில் இப்போது கோஆர்டினேட்டர் வேலை செய்கிறேன். 

கல்விதான் எங்களுக்கான அடையாளம். பொதுவாக ஆண், பெண் என இரண்டு பாலினம் இருப்பது போல், எங்களுடைய பிரிவிலும் திருநங்கை, திருநம்பி இருவரும் அடங்குவர். குடும்பத்தினரும் சமூகமும் இதனை புரிந்து கொண்டு எங்களைப் போன்றவருக்கு ஆதரவளிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார் திருநம்பி ருத்ரா ஆஷிக் மிஷரா.

ரம்யா ரங்கநாதன்