கல்வி மட்டுமே மாற்றத்தைத் தரும்!
இந்திய அளவில் ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் திருநங்கை பேராசிரியர் ஜென்சி.ஒவ்வோர் ஆண்டும் சென்னையில் நடைபெறும் புத்தகக் காட்சிக்கு நீங்கள் செல்பவரெனில், கண்டிப்பாக ஜென்சியின் குரலை தவறவிட்டு இருக்க மாட்டீர்கள்.  ஆம்! “வாசகப் பெருமக்களின் கனிவான கவனத்திற்கு... தங்களிடம் உள்ள நுழைவுச்சீட்டின் ஒரு பகுதியில், பெயர், முகவரி, கைபேசி எண்களைப் பூர்த்தி செய்து, அரங்கினில் வைக்கப்பட்டுள்ள பரிசுக் கூப்பன் பெட்டியில் போடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்...” இது, ஜென்சியின் குரலே.  சென்னை லயோலா கல்லூரியில் ஆங்கிலத் துறையில், துணை பேராசிரியராய் பொறுப்பேற்றிருக்கும் முனைவர் ஜென்சியை, தமிழக முதல்வர் அழைத்து தனது வாழ்த்தை பதிவு செய்திருக்கிறார். ஜென்சியிடம் பேசியதில்...உங்களைப் பற்றி...
திருத்தணிப் பக்கம் உள்ள ஆர்.கே.பேட்டை புதூர் என்ற சின்ன கிராமம்தான் எனக்கு ஊர். என் சிறுவயதில் அப்பா இறந்துவிட, அம்மா பூ வியாபாரம் செய்துதான் படிக்க வைத்தார். எனக்கு ஒரு அண்ணன் மற்றும் அக்கா இருக்கிறார்கள். +2வரை அரசுப் பள்ளியில், தமிழ் வழிக் கல்வியில்தான் படித்தேன். ஆங்கிலத்தில் பி.ஏ., எம்.ஏ. மற்றும் எம்ஃபில் வரை அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எனது படிப்பு தொடர்ந்தது.
பத்து, பனிரெண்டாம் தேர்வுகளில் பள்ளியில் முதல் மாணவனாகவும், பி.ஏ தொடங்கி எம்.ஃபில்வரை கல்லூரியில் கோல்டு மெடலிஸ்டாகவும் வலம் வந்தேன். பி.எச்டி ஆய்வுப் படிப்பிற்காகவே, சென்னை லயோலா கல்லூரியில் இணைந்து எனது ஆய்வை நிறைவு செய்தேன். தற்போது சென்னை லயோலா கல்லூரியில், எனக்கு ஆங்கிலத்துறை துணை பேராசிரியர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி அறிவிப்பாளராய் உங்கள் பணி குறித்து...
நன்றாகப் பேசுவது இயல்பிலே வரும். அகில இந்திய வானொலியில் சிறிது காலம் அறிவிப்பாளராக இருந்திருக்கிறேன். பெண் தன்மையோடு என் குரல் இருப்பதால், கடந்த ஆறு ஏழு ஆண்டுகளாக சென்னைப் புத்தகக் காட்சியின் பபாசி அலுவலகத்தில் அமர்ந்து, வாசகர்களின் செவிகளில் எனது குரலை பதிவு செய்திருக்கிறேன்.
திருநங்கையாக உங்கள் பயணம்...
ஆறு வயசில் எனக்குள் பெண் தன்மையை உணர்ந்தேன். படிப்பில் ஆர்வம் இருந்ததால், என் பெண் தன்மையை மறைத்து படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினேன். பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்தால் எங்கே எனது கல்வி தடைபடுமோ என்ற பயத்தில், வெளியில் யாரிடமும் சொல்லவில்லை.
ஆனாலும், என்னைச் சுற்றி இருந்தவர்கள், என் நடை, உடை பாவனைகளைப் பார்த்து, வெளிப்படையாகவே கேலியும் கிண்டலும் செய்தார்கள். அந்த வலியை வார்த்தைகளில் விவரித்துவிட முடியாது. பிறர் என்னைப் பார்ப்பதும், அணுகுவதும் வித்தியாசமானதாய் இருக்கும்.
ஆனால், படிப்பு விஷயத்தில் நான் கெட்டி. மற்ற மாணவர்கள் பெயிலாகி நிற்கும் போது, எனது மதிப்பெண் ஆசிரியர்களால் பாராட்டுக்கு உள்ளாகும். உடல் ரீதியாக என்னைக் குறையாக பார்ப்பவர்கள் மத்தியில் கல்வி ரீதியாக உயர்ந்து நிற்பது, கல்வி மீது கவனத்தை குவிக்க உத்வேகப்படுத்தியது.
கல்லூரி செல்லும் போது மாற்றுப் பாலினத்தவர் ஆங்காங்கே தெருக்கேட்பது, பாலியல் தொழிலில் ஈடுபடுவதைப் பார்க்கும்போது, எங்கே நானும் இவர்களைப்போல மாறிவிடுவேனோ என்கிற பயம் வந்தது. கல்வி மட்டுமே நம்மை கரை சேர்க்கும் என்பதை அப்போதே தீர்க்கமாய் நம்பினேன். கல்லூரிக்குள் நுழைந்த பிறகே, இந்திய அளவில் ஆங்கிலத் துறையில் பேராசிரியராக வரவேண்டும் எனத் தீர்மானித்தேன். எம்ஃபில் படிக்கும்வரை, பொருளாதார ரீதியாக அம்மா உதவினார். ஆய்வுப் படிப்பில் இணைவதற்கு சென்னை வந்தபோது அம்மா உயிரோடு இல்லை. என்னுடைய படிப்பு மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்கு பகுதிநேர வேலைகள் செய்து வருமானத்தைத் தேடினேன். அப்போதுதான் அனைத்து இந்திய வானொலியில் பகுதிநேர அறிவிப்பாளர் பணி கிடைத்தது. தொண்டு நிறுவனம் ஒன்றிலும் பணியாற்றினேன்.
காவல் பயிற்சி கல்லூரியிலும் திருநங்கை மக்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பயிற்சிகளை வழங்கி இருக்கிறேன். டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியிலும், ஆங்கிலத்துறை ஆசிரியர் பணியை பகுதிநேரமாகச் செய்து வந்தேன். ஒருசில மாணவர்களுக்கு ஹோம் டியூசன்களும் எடுத்திருக்கிறேன். இந்த வருமானத்தில்தான் எனது ஆய்வுப் படிப்பு மற்றும் பாலின மாற்று அறுவை சிகிச்சை போன்றவற்றை செய்து கொண்டேன்.
அம்மா இருந்தவரை பாலின மாற்று அறுவை சிகிச்சையை நான் மேற்கொள்ளவில்லை. அவர் இருந்திருந்தால், நான் அறுவை சிகிச்சை செய்து கொண்டதை கண்டிப்பாக ஏற்றுக் கொண்டிருப்பார். சென்னை வந்தபிறகே என் நட்பு வட்டம் விரிவடைந்து, மாற்றுப் பாலின மக்களோடு பழகும் வாய்ப்புகள் கிடைத்தது. பி.எச்டி ஆய்வுக்குள் நுழைகிறவரை ஆண் உடையில்தான் வலம் வந்தேன். அறுவை சிசிக்சைக்கு பிறகே நான் முழுமையாக மாறினேன்.
பேராசிரியராய் பணி வாய்ப்பு பெற்றது குறித்து...
நான் எனது வேலைக்கான கல்வித் தகுதியோடு, திறமையோடு இருக்கிறேன் என்பதே முக்கியம். என்னைப் பொறுத்தவரை புரொபஸர்தான் ஃபர்ஸ்ட். மாற்றுப்பாலினம் செகண்டரிதான். எவ்வளவுதான் படித்தவர்களாக நாங்கள் இருந்தாலும், வேலை வாய்ப்பென வரும்போது எளிதில் கிடைப்பதில்லை. அரசு ஒதுக்கீடும் எங்களுக்கு இல்லை. தகுதி இருந்தாலும், அரசு வேலைக்காக நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்ட வேண்டியுள்ளது.
கல்லூரிப் பேராசிரியராக மாறவேண்டும் என்கிற குறிக்கோளோடு பல்வேறு கல்லூரிகளுக்கும் முயற்சித்ததில், என் பாலினம் குறித்து தெரிந்ததும் வேலை கொடுக்க யாரும் முன்வரவில்லை. எங்கள் நிலை உணர்ந்து, எங்கள் கல்வித் தகுதியை வைத்தாவது, கருணை அடிப்படையில் அரசு வேலை வாய்ப்பை எங்களுக்கும் வழங்க வேண்டும். ஆண், பெண் என்பது எப்படி இயற்கையோ... அதுபோலத்தான் மாற்றுப் பாலினமும்.
எனது குடும்பம் என்னைப் புறக்கணிக்காமல் ஏற்றுக்கொண்டதால்தான், இன்று உங்கள் முன்பு பேராசிரியராய் நிற்கிறேன். பாலினம் எல்லோருக்கும் வேறாக இருக்கலாம். ஆனால், உணர்வுகள் ஒன்றுதான்.
உடல் சவால்களை எதிர்கொள்ளும் குழந்தைகள் எந்த நிலையில் பிறந்தாலும் என் குழந்தையென ஏற்றுக்கொள்ளும் பெற்றோர், பாலினக் குளறுபடியில் பிறக்கும் குழந்தைகளை ஏற்க மறுப்பதேன்? இது யார் குற்றம்? எந்தக் குடும்பத்திலும் இது நிகழலாம்தானே. குடும்பமும், சமூகமும் இதைப் புரிந்துகொண்டால், வீட்டைவிட்டுச் செல்லும் நிலை எந்த மாற்றுப் பாலினக் குழந்தைக்கும் நேராது. மாற்றுப் பாலினத்தவர் பலரும், முனைவர் ஜென்ஸி மாதிரி, கற்றவர்களாகக் கண்டிப்பாய் உருவாக முடியும். இதற்கு அரசும் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அக்கறை செலுத்த வேண்டும். அரசாங்கம் நினைத்தால் மட்டுமே இவை சாத்தியம். அரசு ஆதரவு கரம் நீட்டினால் நாங்களும் சாதிப்போம். தலைநிமிர்ந்து நிற்போம்.
செய்தி: மகேஸ்வரி நாகராஜன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|