அன்பில் சத்தியவாகீஸ்வரர் கோவில்!



ராஜகோபுர தரிசனம்!

பத்தாம் நூற்றாண்டு வரிசையில் திருச்சி மாவட்டத்திலுள்ள அன்பில் எனும் ஊரில் அமைந்திருக்கும் சத்தியவாகீஸ்வரர் கோவில் பண்டைய சோழர் காலத்திலேயே (கிமு 9 முதல் கிபி 11ம் நூற்றாண்டு வரை) உருவானதாகக் கூறப்படுகிறது. முதலாம் பராந்தக சோழன் (கி.பி 907 - 955) காலத்தில் இந்தக் கோவில் பெரிதும் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என்று அங்குள்ள கல்வெட்டுகள், கோவிலின் கட்டிடம் மற்றும் சிற்பங்கள் பிரதிபலிக்கின்றன.

இந்தக் கோவிலில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகிய நாயன்மார்கள் பாடல் பாடியிருப்பதால், இது தேவாரப் பாடல் பெற்ற 274 திருத்தலங்களில் ஒன்று. அதனால் இத்தலம் கிபி 7ம் நூற்றாண்டுக்கு முந்தையதாக இருக்கக்கூடும்.ஆரம்பகால கட்டிடக்கலை பல்லவ காலத்தையும் ஒத்திருந்தாலும், பெரும்பாலான மேம்பாடுகள் சோழர்கள் காலத்தில் நிகழ்ந்தவை.ராவணன் குபேரனைத் தந்திரத்தால் வென்று, அவனது புஷ்பக விமானத்தைக் கவர்ந்தான்.

அதன் ஆணவத்தால் கயிலையை அடைந்த ராவணன், ஈசன் வாழ்ந்த மலையை பெயர்த்தெடுக்கத் தொடங்கினான். ராவணனின் கொட்டத்தை அடக்க ஈசன் தனது வலது பெருவிரல் நுனியை அழுத்த, ராவணனின் கைகள் சிக்கிக் கொண்டன. 

கடுமையான வலியால் துடித்த ராவணனின் அழுகுரல் அங்கு தவம் செய்து கொண்டிருந்த வாகீச முனிவரின் காதில் விழுந்தது. மனம் இளகிய வாகீச முனிவர், ‘ஈசனின் மனம் கனிய உனது இசையால் அவரைப் போற்றிப் பாடு’ என்று ராவணனுக்கு உபதேசம் கூறினார். அவனும் அவ்வாறே செய்ய ஈசனின் கருணையால் ராவணன் உயிர் தப்பினான்.

ஆனால், ஈசனின் கோவம் வாகீசர் மேல் திரும்பியது. ‘நீ பூலோகத்தில் பிறக்கக் கடவுவது’ என்று சாபமிட்டார். பூமியில் அவதரித்த வாகீசர், அன்பிலாந்துறை என்னுமிடத்தில் சுயம்புவாய் எழுந்தருளிய ஈசனை வழிபட்டார். 

அதனால் ஈசன், சத்தியவாகீசர் என்ற திருநாமம் கொண்டார். கிழக்கு நோக்கிய சன்னதியில் சுயம்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார் ஈசன். இவரை வணங்கினால் ஏழேழு ஜென்மங்களிலும் செய்த தீவினைகள் விலகி, நல்வாழ்வை அடையலாம் என்றும், ஒவ்வொரு பிறவியிலும் அடைந்திருக்கும் கடன்களிலிருந்தும் மீளலாம் என்றும் கூறப்படுகிறது.

பொதுவாக சிவன் கோயில்களில் இறைவன் சன்னதியைக் காட்டிலும் சற்று உள்ளடங்கி இறைவி சன்னதி அமைந்திருக்கும். ஆனால், இத்தலத்தில் இறைவி சன்னதி முன்னதாகவும், இறைவன் சன்னதி பின்னடங்கியும் அமைந்திருக்கிறது. மேலும் சௌந்தரநாயகி அம்மன் மணக்கோலத்தில் காட்சியளிப்பதும் தனிச் சிறப்புக்குரியது. பிரம்மன் வந்து இறைவனை வழிபட்டதால், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் என்றும், இறைவன் பெயர் சத்தியவாகீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறது.

அன்பில் சத்யவாகீஸ்வரர் கோவில் நுழைவாயிலில் அமைந்துள்ள ராஜகோபுரம், ஏழு நிலைகளுடன் உயரமாக கம்பீரமாக காட்சியளிக்கிறது. ஒவ்வொரு நிலையும் சிற்பக் கலையின் அற்புதங்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 

கோபுரம் திராவிடக் கட்டிடக்கலையின் சுருக்கமான வடிவாகவும், தமிழர் சிற்ப மரபின் அழகாகவும் விளங்குகிறது. மூலவர், உபதெய்வங்கள் மற்றும் புராணக் கதைகளைச் சேர்ந்த சிறந்த சிற்பங்கள் இரண்டாம் நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. புராணச் சிற்பங்களான, சிவபெருமான் பரம நடனத்தில் (நடராஜர்), விநாயகர், முருகன், நந்தி, தசாவதாரம், சிவ பார்வதிகள் ஆகியவை அழகாக செதுக்கப்பட்டுள்ளன.

கோபுரம் முதற்கட்டமாக சோழர்களால் உருவாக்கப்பட்டு, பிற்காலத்தில் நாயக்கர்கள் மற்றும் மராத்தியர்களால் புனரமைக்கப்பட்டதாகும். இது பல கால கட்டங்களைச் சேர்ந்த மரபுக் கலையை ஒட்டிய கலப்பாக்க கட்டிடமாக விளங்குகிறது. 

கோபுரத்தின் அடிப்பகுதியில் கல்வெட்டு எழுத்துகளை காணலாம்.இத்தலம் காவேரி நதிக்கரையில் அமைந்துள்ளது என்பதால், ஆற்றின் புனிதத்தன்மையும் கோபுர அழகையும் ஒன்றாக இணைக்கும் இடமாக உள்ளது.

திலகவதி