எமோஷனில் கனெக்ட் ஆவதே என் போட்டோகிராஃபி!
அனிதா சத்யம்
‘‘போக்குவரத்து வசதி உள்பட அடிப்படை வசதி ஏதுமற்ற, கடைக்கோடி பகுதியில் வாழுகிற மக்கள்தான் என் டார்கெட். காரணம், யாராவது வந்து நம்மைக் காப்பாற்ற மாட்டார்களா என்கிற ஏக்கப் பார்வை அவர்கள் கண்களில் ததும்பி வழியும்’’ என்கிற புகைப்படக் கலைஞர் அனிதாவின் புகைப்படங்களை அத்தனை எளிதில் நம்மால் கடந்து செல்ல முடியவில்லை.
சாதாரணமானவர்களின் வலிகளை... மனித உணர்வுகளை... கடைக்கோடி மக்களின் வாழ்வியலை புகைப்படங்கள் வழியாக கடத்துகிறார். அனிதாவின் புகைப்படத்தில் இருக்கும் பெண்களின் முகங்கள் நம் அருகில் வந்து கதை பேசுகிறது. குழந்தைகளின் பார்வை, அவர்களின் வலிகளைக் கடத்துகிறது. அனிதாவிடம் பேசியதில்...

‘‘எனக்கு ஆர்ஜின் காரைக்குடி என்றாலும், பிறந்து, வளர்ந்து, படித்தது எல்லாம் மகாராஷ்டிரா மாநிலம் புனே. வட மாநிலப் பழக்கவழக்கம் சார்ந்தே என் வளர்ச்சி இருக்க, பிறந்த ஊரின் தொடர்பு வேண்டுமென தமிழ்நாட்டு மாப்பிள்ளையாகப் பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள்.  தமிழ்நாட்டின் குடும்ப அமைப்பு, பழக்க வழக்கம், கலாச்சாரம் குறித்த புரிதல்கள் இல்லாமலே ஆரம்பத்தில் கஷ்டப்பட்டேன். இங்கே பெண்கள் ஒரு வட்டத்திற்குள் சுழல்வது ஆச்சரியமாகவும், அதே சமயம் அடக்குமுறையாகப் பட்டாலும், நானும் கணவர், குழந்தை, குடும்பமென இயல்பு வாழ்க்கையில் பொருந்திப் போனேன்.
என் 39 வயதில் உடல்நிலை பாதிக்கத் தொடங்கியது. என்னவென புரியாமலே மருத்துவர்களிடம் மாற்றி மாற்றிக் காண்பித்ததில், பலகட்ட பரிசோதனைக்குப் பிறகே, மார்பக புற்றுநோயின் தொடக்க நிலை எனத் தெரியவர, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன்.
கேன்சருக்கான மருத்துவம் எப்படியானது, அது என் உடலை என்னவெல்லாம் செய்யும் என்கிற அடிப்படை புரிதலற்று அவற்றைச் சந்தித்தபோது, துவண்டே போனேன். பக்க விளைவுகள் பலவற்றையும் சந்திக்க நேர்ந்தது. தொடர்ந்து இரண்டு மாதங்கள் மருத்துவமனையிலே இருக்க வேண்டிய நிலை.
குழந்தைகளைப் பிரிந்து மருத்துவமனையில் இருந்தது மன உளைச்சலைத் தர, செத்துப் போவேனோ என்ற பயம் எழ ஆரம்பித்தது. “எப்பம்மா வீட்டுக்கு வருவ” என மகள் அழத் தொடங்கினாள்.
அவளுக்கு அப்போது எட்டு வயது. தெரிந்தவர் வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்றாள். மகன் விடுதியில் தங்கிப் படித்தான். மரணம் பயத்தை தந்த கடுமையான காலகட்டம் எனக்கு அது. மன உளைச்சலின் உச்சத்தில் இருந்த நாட்கள் அவை. கேன்சருக்கு சரியான மருத்துவம் இருக்கா? இருந்தா அதைப் பண்ணுங்க. இல்லையா, என்னை என் குடும்பத்தில் வாழ அனுப்புங்க. இருக்கும்வரை என் பிள்ளைகளோடு வாழ்ந்துவிட்டு சாகிறேன் என மருத்துவர்களிடம் சொல்ல ஆரம்பித்தேன்.
ஒரு நாளைக்கு குறைந்தது 15 மாத்திரைகள் கைகளில் இருக்கும். சுவையானவற்றை சாப்பிட முடியாது. முடியெல்லாம் கொட்டும். கை, கால்கள் வீங்கும். எனக்கு என்ன செய்யுதுனே சொல்லத் தெரியாத நிலை அது. கடும் காய்ச்சல், பார்வைக்குறைவு, உயிரை வாட்டும் வலி சாவைத் தொட்டுவிட்டுதான் திரும்பினேன்...’’ நோயின் வலியில் நரக வேதனைகளை அனுபவித்த அனிதாவுக்கு அப்போது மருந்தாக இருந்தது அவரின் கேமரா மட்டுமே. வலியிலிருந்து கவனத்தைத் திருப்ப, புகைப்படங்கள் எடுக்கத் தொடங்கி இருக்கிறார் அனிதா.
‘‘எனக்கு ஏன் கேன்சர் வந்தது என்பதே இங்கு பெண்கள் பலருக்கும் இருக்கிற விடை தெரியாத கேள்வி. ஃபேமிலி ஹிஸ்ட்ரி தாண்டி, மன அழுத்தம், தங்களை கவனிக்க முடியாத நிலை, பிரச்னைகளை வெளியில் சொல்லவே முடியாமல் இருக்கும் சூழல்... இதெல்லாம் மன ரீதியாகப் பெண்களைத் தாக்கி, உடலையும் பாதிக்கிறது’’ என்றவர், ‘‘என் கணவரும் குழந்தைகளும் கிளம்பியதுமே, காலை 9 முதல் மாலை 3.30 வரை Let me go out என எனக்கு நானே சொல்லிக் கொண்டு, கேமரா மற்றும் டூ வீலரோடு கிளம்புவேன்.
கடைக்கோடி கிராமங்களில் இருக்கும் காலனிக்குள் வாழுகிற விளிம்பு நிலை பெண்கள்தான் என் டார்கெட். அவர்கள் அருகில் அமர்ந்து பேச ஆரம்பித்து அப்படியே, அவர்களின் உணர்வுகளை புகைப்படங்களாக்கி கருப்பு, வெள்ளையில் பதிவேற்றத் தொடங்கினேன்.
நான் எடுக்கும் புகைப்படங்களில் அவர்களின் எமோஷனும் அன்பும் மட்டுமே என் கண்களுக்குத் தெரியும். அப்படியே அவர்களோடு கனெக்டாகி... அவர்கள் கஷ்டத்தை கேட்கும் போது, நம்மைக் கட்டிப் பிடித்து அழ ஆரம்பித்து விடுவார்கள்.
காது கொடுத்துக் கேட்கத்தான் ஆளில்லை என்கிற அளவுக்கு பெண்களுக்கு பிரச்னைகள் இருந்தது. அக்கறை செலுத்த ஆளில்லாத வசதியான பெண்களையும் சந்திக்க நேர்ந்தது. சில பெண்கள் நோய் இருப்பதை குடும்பத்தில் உள்ளவர்களிடம் சொல்லாமலே வலியை தாங்கிக் கொண்டிருந்தார்கள். இவர்களின் துயரங்களையெல்லாம் கேட்டபோது, என் பிரச்னை ஒன்றுமே இல்லையென தோண ஆரம்பித்தது.
தானே புயலில் பாதித்த கடைக்கோடி மக்களுக்கு நான் செய்த உதவிகள், அவர்களை எடுத்த புகைப்படங்கள் பத்திரிகை ஒன்றில் வெளியாக, என் முகத்திலும் ஊடக வெளிச்சம் பட்டது. எனது புகைப்படங்களை பார்த்தவர்கள், இதழில் அட்டைப் படமாக பயன்படுத்தலாமா எனக் கேட்டனர்.
அப்படியே மலையாள பட உலகின் பிரபல இயக்குநர் அடூர் கோபால கிருஷ்ணன் சாருடன் இணைந்து பணியாற்றும் இடத்திற்கு கொண்டு நிறுத்தியது. அந்தளவுக்கு உணர்வுப்பூர்வமாக புகைப்படங்களை எடுக்கிறேனா என்பது ஆச்சரியமாக இருந்தது? இயக்குநர் ரஞ்சித்தும் என் புகைப்படங்களுக்கு தொடர்ந்து கை கொடுத்தார்.
இந்த நிலையில்தான் என்னைப்போல கேன்சர் சர்வைவர் யாரும் இருக்கிறார்களா எனத் தேட ஆரம்பித்தேன். அப்போது திருச்சியில் இருக்கும் கேன்சர் மருத்துவமனை பற்றித் தெரியவர, அங்கு சென்றதில், அதிகபட்சம் ஒரு மாதம் உயிர் வாழப்போகிற நித்யா குறித்த தகவல் கிடைத்தது. நித்யாவைப் பார்க்க கேமராவோடு கிளம்பினேன்.நித்யாவுக்கு 32 வயது. அவரின் கரங்களில் 7 வயது பெண் குழந்தை இருந்தாள்.
அந்தக் குழந்தையை பார்த்த போது என் மகள் நினைவுவர, நித்யாவின் நிலை என்னை என்னவோ செய்தது. கணவன் அவளை கைவிட்டு இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு போக, மன உளைச்சலில் நித்யாவின் அம்மாவும் இறந்து போக, நிர்கதியாகி மகளுடன் சித்தி குடும்பத்தில் தஞ்சமடைந்திருந்தார் நித்யா. சித்தி குடும்பத்தின் பிரச்னைகளும் நித்யாவை பாதித்திருந்தது.
கேன்சர் நோயில் பாதிக்கப்பட்ட நித்யா பழைய சோற்றை மட்டுமே சாப்பிட்டு, மகளோடு வறுமையில் உழன்றார். ஒடுங்கிப்போன அவர் தேகத்தையும், அவரின் வறுமையையும் பார்த்த பிறகு, சே, இதுக்கு மேல என்னடா வாழ்க்கை எனத் தோன்ற, நித்யாவுக்கு வேண்டியவற்றை செய்து கொடுக்க ஆரம்பித்தேன்.
நான் உன்னைப் பார்க்க திருச்சி வருகிறேன் எனச் சொன்னதுமே, நேர்த்தியாய் சேலை கட்டி எனர்ஜியுடன் ரெடியாகி மகளோடு நிற்பாள். நான் மால் பார்த்ததில்லை என்பாள். அழைத்துச் சென்றேன். திருச்செந்தூர் போகணும் என்றாள். ஷாப்பிங் செய்தோம். புத்தாடைகளை எடுத்தோம். அவள் பிறந்தநாளில் சென்று சிறப்பாய் தரிசித்தோம். நித்யா விரும்பியதை எல்லாம் நிறைவேற்றினேன்.
நித்யா அனுமதிக்க, இரண்டு மூன்று புகைப்படங்களோடு, நண்பர்கள் சிலர் உதவியில் கொஞ்சம் பணம் திரட்டினேன். அதுவும் பற்றாக்குறைதான். இன்னும் தேவைப்பட்டது. என் நகைகளை வைத்து பணத்தை தயார் செய்து, நித்யாவுக்கு சர்ஜரி செய்யச் சொல்லி மருத்துவரிடம் கொடுத்தேன்.
‘நித்யா கூடுதலாக ஒரு மாதம் இருப்பாளா? மகளோடு சந்தோஷமாக இருந்துவிட்டுப் போகட்டுமே’ என்று மருத்துவரிடம் உறுதிகாட்ட, அறுவை சிகிச்சைக்குப்பின் கோவிட் வரை, இரண்டரை ஆண்டு உயிர் வாழ்ந்தார் நித்யா. மதுரையில் இருந்த பிரபல மருத்துவமனையும், திரைத்துறை சார்ந்த பிரபலங்கள் சிலரும் இதற்கு உதவினார்கள்.
இது எனக்கு கொஞ்சமாக மனநிறைவு தர, தொடர்ந்து கேன்சரால் பாதிக்கப்பட்ட பெண்களை சந்திப்பது, அவர்களின் படங்களை சிறு குறிப்புடன் டாக்குமென்ட் செய்து, அவர்கள் அனுமதியில் வலைத்தளத்தில் பதிவேற்றுவது என இருந்தேன்.
அப்போது மார்பக புற்றுநோயில் பாதிக்கப்பட்ட ஸ்வர்ணா என்ற பெண் வசதியின்மையால் ஆயுர்வேத மருத்துவத்தை நாடி, திடீரென ஒருநாள் தன் 8 வயது பெண் குழந்தையை விட்டுவிட்டு இறந்து போனாள்.
அரசு மருத்துவமனையில், காலையில் கொடுக்கிற 4 இட்லியை மூன்று வேளை சாப்பிடுகிற கேன்சர் நோயாளிகளையும் பார்த்தேன். கேன்சர் நோயாளிகளுக்கு ஏற்ற சூழலில் அரசு மருத்துவமனைகள் இல்லை என்பதை இங்கே ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்’’ என்கிற அனிதா, ‘‘பெண்களின் இந்த எமோஷனில் கனெக்ட் ஆவதே என் போட்டோகிராஃபி.
நான் சாதாரணமானவர்களின் கஷ்டங்களை காது கொடுத்துக் கேட்கிறேன். அவர்களோடு கனெக்ட் ஆகிறேன் என்பதுதான் என் புகைப்படத்திற்கான உயிர்ப்பு’’ என்கிறார் அழுத்தமாக.
‘‘ஆண்கள் நோயில் பாதிக்கப்பட்டாள், பெண் எல்லாமுமாக நின்று கணவனை கவனித்து, குடும்பத்தையும் தூக்கி சுமப்பாள். அதுவே பெண் எனில், அநாவசியமாக ஆண் விலகிச் செல்கிறான்.
குடும்பத்திற்காக உழைக்கும் வரை மட்டுமே பெண் மதிக்கப்படுகிறாள்’’ எனத் தன் அனுபவங்களில் சிலவற்றைப் பகிர்ந்தவர், ‘‘பெண்கள் இங்கே எல்லாவற்றையும் மனதுக்குள் வைத்து புதைத்துக் கொள்பவர்கள். அவர்களின் மன அழுத்தம் நோயாக வெளிப்படும் போதுதான் பிரச்னையை உணர்கிறார்கள். அதீத மனஅழுத்தம் பெண்களுக்கு கேன்சர் நோயை உண்டு பண்ணுகிறது. வீட்டுக்குள்ளேயே பெண்கள் முடங்காதீர்கள். உங்கள் கோபமோ... வருத்தமோ... கவலையோ... உடனே வெளியில் கிளம்பி நான்கு தெருவையாவது சுற்றி வாருங்கள். நம்மைச் சுற்றி இருக்கிற உலகை கண் திறந்து பார்த்தாலே நம் மனம் மாறும்’’ என்கிறார் இவர்.
‘‘நான் வெளி உலகத்திற்கு வந்ததால்தான் கேன்சரில் பிழைத்து, இதோ 15 ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். கேன்சர் என்பது நோயே இல்லை. அதை வெல்ல நம்மால் முடியும். வாழ்க்கை மீது நம்பிக்கை இருக்கணும்... தைரியமாய் செயல்படணும்’’ எனப் பெண்களுக்கு தனது கருத்தை பதிவு செய்த அனிதா, கேன்சருக்கு எதிரான போரில் ஜெயித்த வராய், வாழும் உதாரணமாகத் தன்னையும் நேசித்து... வாழ்க்கையையும் நேசித்து வாழ்ந்து தீர்க்கிறார்.
செய்தி: மகேஸ்வரி நாகராஜன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|