10 வயது குழந்தைகளும் எளிதாக Coding செய்யலாம்!



கணினி, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகள் மற்றும் வேலைகளுக்கு கணினி குறியீட்டு மொழிகள்(coding languages) மற்றும் நிரலாக்க மொழிகள் (programming languages) குறித்த அறிவு அடிப்படைத் திறனாக கருதப்படுகிறது. 
கணினி துறை சார்ந்த படிப்பை முடித்ததும் வேலைக்கு செல்கின்ற, குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் இளைஞர்கள் இந்த மொழிகள் குறித்து நன்கு அறிந்திருந்தால்தான் பெரு நிறுவனங்களில் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

உயர் தரமாக, நிறுவனத்தில் வேலைக்கு சேரும் முன்னரே கல்லூரி படிப்பின் போதே மாணவர்கள் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் இன்டெர்ன்ஷிப் செய்திருக்க வேண்டும். அத்தகைய விண்ணப்பதாரர்களுக்கே நிறுவனங்கள் முன்னுரிமை தருகின்றனர். மற்ற இளைஞர்கள் பெரும்பாலான நிறுவனங்களால் நிராகரிக்கப்படுகின்றனர். 

இந்த துறை சார்ந்த வேலைதான் வேண்டுமெனில் அடிப்படைத் திறன்களை மேம்படுத்திக்கொள்வதே சிறந்தது. பள்ளி, கல்லூரி படிப்புகளின் போதே கணினி மொழிகள் குறித்த அறிவினை வளர்த்துக்கொண்டால் வேலைக்கு செல்லும் போது திணற வேண்டியதில்லை.

இது போன்ற சிக்கல்களை களையவும் மாணவர்கள் கணினி மொழிகள் சார்ந்த திறன்களை வளர்த்துக்கொள்ளவும் உதவி வருகிறது ‘கோடு பண்ணு’ (Code Pannu). தூத்துக்குடியை சேர்ந்த அனிதா ‘கோடு பண்ணு’ எனும் ப்ராண்டை தொடங்கி குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை நடைமுறை கற்றலாக கணினி குறியீட்டு மற்றும் நிரலாக்க மொழிகளை கற்பித்து வருகிறார். ‘கோடு பண்ணு’ தொடங்கியது குறித்து  அதன் நோக்கத்தை பகிர்கிறார் அனிதா.

“எனக்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் 15 வருடம் அனுபவம் உண்டு. என் முழுநேர பணியிலிருந்து விலகி பகுதி நேரமாக வீட்டிலிருந்தபடி வேலை செய்து கொண்டிருந்தேன். கொரோனா ஊரடங்கு காலத்தின் போது நிறைய பேர் ஆன்லைன் கோர்ஸ்களை படிக்க ஆர்வம் காட்டினர். அதில் கோடிங் அண்ட் ப்ரோக்ராமிங் குறித்த படிப்புகளும் அடங்கும். 

இது நல்ல விஷயம்தான் என்றாலும், ஆன்லைன் கோர்ஸ்களை வழங்கும் சிறு கல்வி நிறுவனங்கள் சில, உடனடியாக பயிற்றுவிப்பாளர்களை நியமிக்க வேண்டும் என்கிற அவசரத்தில், கல்வித் தகுதி, பணி அனுபவம், பாடங்கள் குறித்த அறிவு போன்றவற்றில் சிறந்தவர்களா என்பதையெல்லாம் பொருட்படுத்துவதில்லை. 

ஆங்கிலம் தெரிந்திருந்தால் போதும், பாடங்கள் குறித்த பயிற்சி அவர்கள் அளிப்பதாக கூறி பயிற்றுவிப்பாளர் வேலைக்கான சம்பளம் என தொகையை நிர்ணயித்து விளம்பரங்கள் செய்கிறார்கள். இதனால் அனுபவமில்லாத பலரும் சேருகின்றனர்.

பணம் கட்டி அந்த கோர்ஸ்களை படிப்பவர்களுக்கு இறுதியில் என்ன படித்தோம் என்பதே தெரியாமல் போய்விடுகிறது. சிலரின் இந்த ஏமாற்று வேலைகள் குறித்து, என் சீனியர் ஒருவருடன் கலந்துரையாடும் போது, ‘தொழில் நோக்கம் இல்லாமல் உண்மையாகவே மாணவர்களை வழிகாட்ட நினைப்பவர்கள் இதில் களம் இறங்கினால்தான் ஏமாற்று வேலைகளுக்கு இடமில்லாமல் போகும்.

துறையில் அனுபவம் பெற்ற வழிகாட்டிகள் பயிற்றுவிக்க முன்வந்தார்கள் எனில் பிரச்னைகளை சரிசெய்ய முடியும்’ என்று அவர் சொன்னதும்தான் இந்த நடைமுறை சிக்கல் குறித்து சிந்திக்க தொடங்கினேன். தகவல் தொழிநுட்பத் துறையில் நல்ல அனுபவமும் உண்டு என்பதாலும், நானே இதனை முன்னெடுப்பு செய்யலாம் என்பதாலும், மாணவர்களை பயிற்றுவிக்க ‘கோட் பண்ணு’ எனும் ஆன்லைன் நிறுவனத்தை தொடங்கினேன்.

நட்பு வட்டாரத்தில் தெரியப்படுத்தியபோது ஆர்வமுள்ள குழந்தைகள் கோடிங் அண்ட் ப்ரோக்ராமிங் குறித்து தெரிந்துகொள்ள முன்வந்தனர். அவர்களின் வயதினை பொறுத்து கற்றலின் நிலைகளை அமைத்து சுலபமாக பயிற்றுவித்ததால் எளிமையாக புரிவதாக சொன்னார்கள். தற்போது 35 நாடுகளிலிருந்து குழந்தைகள் ஆன்லைன் மூலம் படிக்கின்றனர்” என்றவர், இதன் மூலம் மாணவர்களிடம் ஏற்பட்ட நன்மைகளை பகிர்கிறார்.

‘‘கோட் பண்ணு தொடங்கிய பின் பெரிதாக விளம்பரங்கள் ஏதும் செய்யவில்லை. எல்லா குழந்தைகளுக்கும் கற்றுத்தர முடியுமா என்று தெரியாது. ஆனால், இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நினைத்துதான் இந்த நிறுவனத்தை தொடங்கினேன். 

கணினி மொழிகளின் அடிப்படை விஷயங்கள் புரியாமல், ஏன் இன்ஜினியர் கோர்ஸ் எடுத்து படிக்கிறோம் என்று தெரியாமலேயே பல மாணவர்கள் அந்த துறையில் தேர்ச்சிப் பெற்று வெளிவருகின்றனர். விளைவு படித்த படிப்பிற்கான வேலை அவர்களுக்கு கிடைப்பதில்லை. சிறுவயதிலேயே கற்றுக்கொள்ளதொடங்கும்போது அவர்களின் ஆர்வத்தை பொறுத்து மேல் படிப்புகளை தேர்ந்தெடுத்துக் கொள்ள உதவும்.

பயிற்றுவிப்பாளர்களை தேர்ந்தெடுக்கும் போது அவர்கள் ப்ரோக்ராமிங் படித்தவர்களாகவும் அதில் பணி அனுபவம் பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும். சிறந்த பயிற்றுவிப்பாளர் கிடைத்தால்தான் மாணவர்களின் அறிவு தாகங்களை தீர்க்க முடியும். பள்ளியில் கணினி பாடங்களை தேர்ந்தெடுத்து படிக்கும் போது பாடத்திட்டத்தில் இருக்கும் சில கோடுகளை மட்டும் மாணவர்கள் செய்முறை தேர்வுக்காக பயிற்சி செய்வார்கள்.

கணினி மொழிகள் குறித்த அடிப்படை விஷயங்களை தெளிவாக படித்திருப்பார்களா என்பதுக்கூட தெரியாது. இதனைத் தொடர்ந்து கல்லூரி படிப்பிற்கு செல்லும் போது பாடத்திட்டத்தில் கணினி மொழிகளில் அடுத்தடுத்த கடினமான நிலைகள் இருக்கும். 

பள்ளிப்படிப்பின் போதே அடிப்படைகளை தெரிந்துகொள்ளாத மாணவர்களும், கணினி பாடம் அல்லாது வேறு பாடங்களை படித்து வந்த மாணவர்களும், மேல் படிப்பில் கணினி மொழிகள் கற்கும் போது இந்த கடினமான நிலைகளை புரிந்துகொள்ளவே சிரமப்படுகின்றனர்.

இதனை மனப்பாடம் செய்ய முடியாது. இந்நிலை முதலாம் ஆண்டு முதல் இறுதியாண்டு வரையிலும் தொடர்ந்து சொந்த ப்ராஜெக்ட்டுகளுக்கு கூட பிறரின் உதவியை நாட வேண்டி இருக்கும். 

அதையும் கடந்து வேலைக்கு விண்ணப்பிக்கும்போது கணினி மொழிகள் தெரியாமல் திணறுவார்கள். சிறுவயது முதலே கணினி மொழிகளை கற்பதால், மேல் படிப்புகளின் போது வேலை அவர்களுக்கு சுலபமாக கிடைக்கிறது. இதனை ஊக்குவிக்கும் விதத்தில்தான் நாங்க செயல்பட்டு வருகிறோம்.

பள்ளிப் பருவத்தில் எங்களிடம் படித்த மாணவர்கள் கல்லூரிக்கு போகும் போது அங்குள்ள பாடத்திட்டத்தினை கண்டு பயப்படுவதில்லை. ஏற்கனவே பயிற்சி பெற்று இருந்ததால், சுலபமா புரிந்து கொள்ள முடிகிறது. ஆரம்பத்தில் கணினி மொழிகள் குறித்த அடிப்படைகள் கூட தெரியாமல் இருந்தவர்கள் இப்போது சரளமாக ப்ரோக்ராமிங் செய்கின்றனர். 

மாணவர்களிடம் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. தனியாக கோர்ஸ் எடுத்து படிக்க வேண்டும் என்பது என் கருத்தல்ல. ஆனால், சிறுவயது முதலே கணினி மொழிகளை படிக்க துவங்குவது துறையில் சிறந்து விளங்க உதவியாக இருக்கும்” என்றவர், கோர்ஸ்களை மாணவர்களுக்கு புரியும் வகையில் எளிமையாக  அமைத்துள்ளார்.

“ப்ரோக்ராமிங் சுலபம் என்றெல்லாம் சொல்லவில்லை. ஆனால், சிக்கல் இல்லாமல் கற்றுக்கொள்ள முடியும். பயிற்சி பெற வரும் மாணவர்களில் சிலர் ஆர்வத்துடன் பயில வருவார்கள். சிலருக்கு பெரிதாக ஆர்வமிருக்காது. 

அவர்களின் வயது, ஆர்வம், கற்றுக்கொள்ளும் விதம் பொறுத்து பாடங்களை முடிந்தவரை சுலபமாக கற்றுத்தருகிறோம். இந்த வயது குழந்தையால் இந்தப் பாடத்தினை கற்க முடியும் என்றால் அதை மட்டுமே கற்றுத்தருகிறோம். அவர்களுக்கு மேலும் ஆர்வம் இருந்தால் கூடுதல் கணினி மொழிகளுக்கான பயிற்சி அளிக்கிறோம்.

பத்து வயதிற்கு உட்பட்ட மற்றும் மேற்பட்ட குழந்தைகள் கற்றுக் கொள்ளும் விதமாகத் தான் கணினி மொழிக்கான பாடத்திட்டங்களை அமைத்திருக்கிறோம். எங்க குழுவில் உள்ள எல்லோருமே ஐ.டி துறையில் அனுபவம் உள்ளவர்கள் என்பதால் நடைமுறையில் நிறைய ப்ரோக்ராமிங் மற்றும் கோட்களில் அனுபவம் பெற்றவர்கள். அதனால் குழந்தைகளுக்கு ஏற்ப ஈசி, மாடரேட், ஹார்டு என்ற மூன்று நிலைகளில் கற்பிக்கிறோம்.

நிறைய கோடுகளை செய்ய வைத்து பயிற்சி கொடுக்கும் போது சரளமாக அவர்களால் கோட் செய்யமுடியும். ஆனால், ஒரு குழந்தைக்கு ஈஸி நிலையில் உள்ள கோடுகளைதான் செய்ய வருகிறது எனில் ஈஸி கோட் பயிற்சிகளை மட்டுமே அதிகமாக கொடுப்போம். கடினமான நிலைகளில் உள்ள கோட்களை கொடுத்து கஷ்டப்படுத்த மாட்டோம். 

குறிப்பிட்ட வயதில் அடிப்படைகளை தெரிந்துகொண்டாலே போதுமானது. சில குழந்தைகள் அட்வான்ஸ்டு கோர்ஸ்களை எடுத்து தொடர்ந்து படிப்பார்கள். எனினும் கணினி மொழிகள் குறித்த அடிப்படைகளை எல்லோரும் கற்றுக்கொள்வது சிறந்தது. ஆர்வத்தினை பொறுத்து மேலும் தொடரலாம்” என்கிறார் அனிதா.

ரம்யா ரங்கநாதன்