சோலார் என்ஜினியர்களாக மிளிரும் கிராமத்துப் பெண்கள்!
இந்தியாவின் தொலைதூர கிராமப்புறங்களில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் சூரிய மின்சக்தி பொறியாளர்களாகவும், தொழில்முனைவோர்களாகவும் மாறியுள்ளனர்.  Bindi International எனும் அமைப்பு முற்றிலும் விளிம்புநிலை சமூகத்தில் உள்ள பெண்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக பெண்களுக்கு தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்கி வருகிறது. அமைப்பின் இயக்குனர் ஹர்ஷ் திவாரி கிராமப்புற பெண்களின் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து பேசுகையில்... 
“நான் பொறியியல் முடித்துவிட்டு கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்தேன். ஒரு வங்கியுடன் ஃபெல்லோஷிப்பில் இருந்தபோதுதான் இந்தியாவின் கிராமப்புறங்களை பற்றி தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
நகர்ப்புற மக்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் கிராமப்புற மக்களுக்கு கிடைப்பதில்லை, அந்த இடைவெளியை என்னால் உணர முடிந்தது. குறிப்பாக பெண்களுக்கான வளர்ச்சிகள் கிராமத்தில் மிகவும் குறைவு.
அதனால் எனக்கு தெரிந்த தொழில்நுட்பக் கல்வியை பயன்படுத்தி பெண்களுக்கு மத்தியில் அடிப்படை வளர்ச்சியை ஊக்குவிக்க நினைத்தேன். அதன் முதல் கட்டமாக சூரிய மின்சக்தி தொடர்பான தொழில்நுட்பங்களை பெண்களுக்கு பயிற்றுவிப்பதற்கான முன்னெடுப்புகளை தொடங்கினேன்.
பெண்களும் ஆர்வமுடன் பயிற்சியில் ஈடுபட்டார்கள். அவர்களால் சூரிய மின்சக்தி நிறுவல்களை திறம்பட நிர்வகிக்க முடியும் என்பதை உறுதியாக நம்பினேன். போதிய மின்சார வசதி அல்லது முற்றிலும் மின்சார வசதி அல்லாத கிராமங்களை சார்ந்த பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
ஐந்து மாத பயிற்சியில் சூரிய சக்தி பொறியியல் சார்ந்த பல்வேறு தொழில்நுட்பத் திறன்கள் அளிக்கப்படும். சால்டரிங் (soldering), வயரிங் (wiring), பேட்டரி அமைப்பு (battery setup), தவறுகளை கண்டறிதல்( fault-finding), நிறுவல் (installation) மற்றும் மேம்படுத்துதல் (upgrading) போன்ற பயிற்சிகளை அளித்தோம். காலம் காலமாக ஆண்கள் மட்டுமே செய்யக்கூடிய, சிக்கலாக கருதப்படும் தொழில்நுட்பம் சார்ந்த மர்மங்களை இந்த திட்டம் முழுமையாக நீக்கியது. மேலும், பெண்களுக்கு பொறியியல் படிப்பு சார்ந்த இந்தப் பயிற்சியினை நேரடி கற்றல் முறையில் பயிற்சி அளித்ததால், அவர்களும் எளிதாக பயின்றனர். பெண்கள், முதலில் வீட்டு விளக்கு அமைப்புகளை உருவாக்க கற்றுக்கொள்வார்கள். பல முறையான பயிற்சிகளுக்கு பிறகு சூரிய மின்சக்தி பொறியாளர்களாக அவர்கள் கருதப்படுவார்கள்.
பயிற்சி பெற்ற பெண்கள் சூரிய மின்சக்தி பயன்படுத்தி விளக்குகளை அமைக்கவும் அதனை பராமரிக்கவும் இயக்கவும் முடியும். இவர்களுக்கு புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (Ministry of New Renewable Energy) சார்பில் சான்றிதழ் வழங்கப்படும். ஜார்கண்ட், ராஜஸ்தான், மேற்குவங்காளம், மிசோரம் மற்றும் நாகலாந்து உட்பட 10 மாநிலங்களில் உள்ள கிராமங்களை சேர்ந்த பெண்கள் சோலார் எஞ்சினியர்களாக வேலைப் பார்த்து வருகிறார்கள்” என்றவர், பயிற்சி பெற்ற பெண்களில் சிலர் தொழில்முனைவோர்களாகவும் இருப்பதாக கூறினார்.
“பெண்கள் பயிற்சி பெற்றவுடன் தங்களின் கிராமங்களிலேயே எரிசக்தி குறித்த வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதில் ஒரு குழு பெண்கள் சோலார் பொறியியலாளராக தங்களின் கிராமத்தில் இயங்கிக் கொண்டிருக்க, மற்ற குழு பெண்கள் ‘சோலார் சகிஸ்’ என்ற பெயரில் தொழில்முனைவோர்களாக வலம் வருகிறார்கள்.
இரு பெண்கள் குழுவும் சோலார் தொழில்நுட்பத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பதால் தங்கள் கிராமத்தின் சுற்றியுள்ள பகுதியில் சோலார் மூலம் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்கிறார்கள். விவசாயம், சிறு தொழில் மற்றும் பிற உற்பத்திகளில் சூரிய சக்தி மூலம் இயங்கக்கூடிய உபகரணங்கள் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கான பிரத்யேக பயிற்சியினை சோலார் சகிஸ் குழுப் பெண்களுக்கு தனிப்பட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
சூரிய சக்தி தொழில்நுட்பம் பயின்ற இந்தப் பெண்கள் தாங்கள் வசிக்கும் கிராமங்கள் மட்டுமில்லாமல் அருகிலுள்ள மற்ற கிராமங்களுக்கும் சென்று சூரிய சக்தி சார்ந்த தீர்வுகளை பரிந்துரை செய்கின்றனர். சூரிய சக்தி அமைப்புகளில் கோளாறு ஏற்பட்டாலும் இந்தப் பெண்களே அதனை சரி செய்யவும் முன்வருகிறார்கள்.
ஆரம்ப காலத்தில் பெண்களை இந்தப் பயிற்சிக்கு அவர்களின் வீட்டில் உள்ளவர்கள் அனுமதிக்க தயங்கினார்கள். பயிற்சியின் போது அவர்களுக்கு எது நடந்தாலும் நாங்க பொறுப்பேற்றுக் கொள்வோம் என உறுதியளித்த பிறகுதான் அவர்கள் பயிற்சிக்கே வந்தார்கள். இப்போது கிராமத்தில் உள்ள பெண்கள் நிபுணத்துவம் பெற்று சோலார் என்ஜினியர்களாக இருக்கின்றனர். தங்கள் குடும்பங்களுக்கு ஒரு நிலையான வருமானத்தை ஈட்டித் தருகின்றனர். இந்த திட்டத்தில் பயனடைந்த 300 பெண்களால் 3,000 வீடுகள், பள்ளிகள், ஆரம்ப சுகாதார மையங்களில் மின்சார வசதி ஏற்படுத்தி தர முடிந்திருக்கிறது. எங்க அமைப்பின் மூலம் 6,000க்கும் மேற்பட்ட சூரிய உலர்த்திகள், மைக்ரோகிரிட்கள், சோலார் டார்ச் மற்றும் சமையல் அடுப்புகளை கிராமப்புற வீடுகளுக்கு வழங்கி இருக்கிறோம்.
வீட்டு வேலைகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் இன்று புதிய திறன் மற்றும் நம்பிக்கையுடன் சமூகத்தில் வாழ்ந்து வருகிறார்கள். கிராமங்களில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் சமூக கூட்டத்தில், இன்று பெண்களுக்கும் தனிப்பட்ட இடம் ஒதுக்கப்பட்டு அவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுகிறார்கள். ‘நான் ஒரு சோலார் என்ஜினியர்’ என்று அவர்கள் பெருமையாக கூறுகிறார்கள். இந்த வளர்ச்சியைதான் அவர்களிடம் எதிர்பார்த்தேன்.
குழந்தைகளும் தங்களின் தாயைப்போல் நம்பிக்கையுடன் வளர்கிறார்கள். எனக்கு கிடைத்த வாய்ப்பு மூலம் சமூகத்திற்கு என்னால் ஏதோவொன்றை திருப்பித் தர முடிந்ததை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று புன்னகைக்கும் ஹர்ஷ் திவாரி, பெண்களுக்கு தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகளை அளிப்பதன் மூலம் கிராமங்களுக்கு மின்சாரத்தை கொண்டுவருவதோடு மட்டுமல்லாமல் பாலின பாகுபாடுகளை களைந்து பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தினேன்!
-சோலார் என்ஜினியர் தவ்ரி தேவி
‘‘ராஜஸ்தானில் மலைகளால் சூழப்பட்ட நிச்லகர் பகுதிதான் என் சொந்த ஊர். அங்கு மின்சாரம் வசதிகள் கிடையாது. சுற்றுப்புறம் எங்கும் மண் குடிசை வீடுகள்தான். 5ம் வகுப்புக்கு மேல் வீட்டுச்சூழல் காரணமாக படிப்பைத் தொடர முடியவில்லை. வீட்டு வேலைகளை செய்தும், ஆடுகளை மேய்த்துக் கொண்டும் இருந்தேன். ஐந்து மாத சூரிய மின்சக்தி பொறியியல் பயிற்சி திட்டம் பற்றி தெரிய வந்ததும் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டேன்.
கிராமத்தை தாண்டி பயணிக்க வேண்டும் என்பதால் முதலில் வீட்டில் தயங்கினர். ஆனால், நான் விடாமுயற்சியுடன் செயல்பட்டேன். பயிற்சி முடிந்து சோலார் என்ஜினியர் என்ற பட்டத்துடன் திரும்பிய போது என் கிராமத்து மக்கள் என்னை மிகவும் சந்தோஷமாக வரவேற்றனர். என் பயிற்சி மூலம் கிராமத்திற்கு மின்சார வசதிகளை ஏற்படுத்தினேன்.
இப்போது சோலார் என்ஜினியராக மாதம் ரூபாய் 5,000க்கும் மேல் சம்பாதிக்கிறேன். கிராமத்தில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தியதற்காக இந்திய குடியரசு தலைவரிடமிருந்து ‘ஆதி சேவா கௌரவ்’ விருதினையும், பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் இணை அமைச்சரிடமிருந்து ‘பழங்குடி திறமை விருதினையும்’ பெற்றேன்.
ரம்யா ரங்கநாதன்
|