மருத்துவ குணமிக்க தீர்த்தங்கள்!
தீர்த்தங்கள் எனும் திருக்குளங்களில் பொதுவாக மக்கள் நீராடுவது வழக்கம். இது புனித நீர் என்பதால் உடல் மற்றும் மனம் தூய்மையடையும் என்பது ஐதீகம். சில ஸ்தலங்களில் அமைந்துள்ள தீர்த்தங்கள் அபூர்வ சக்தி கொண்டது. அதில் சில தீர்த்தங்கள் சித்தசுவாதீனமின்மை, மனநலக்குறை ஆகியவற்றை நீக்கும் வல்லமை கொண்டது. சில தீர்த்தங்கள் மலட்டுத்தன்மையை நீக்கிப் பிள்ளைப்பேறினை அளிக்கின்றன. திருமணத் தடை, வறுமையை போக்கக்கூடிய தீர்த்தங்கள் உள்ளன.
 சிலப்பதிகாரத்தில், கணவனைப் பிரிந்துவாடும் கண்ணகியிடம் அவளுடைய தோழியான தேவந்தி பூம்புகாரில் உள்ள சோமகுண்டம், சூரியகுண்டம் எனும் தீர்த்தங்களில் மூழ்கி வழிபட்டால், பிரிந்து சென்ற கணவன் திரும்பி வருவான் என்று கூறுகிறாள். இதன்மூலம் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்தவர் கூடி மகிழத் தீர்த்தங்களில் மூழ்கி வழிபடும் வழக்கமும் நம்பிக்கையும் இருந்ததை அறிய முடிகிறது.
திருவெண்காட்டிலுள்ள சூரிய மற்றும் சந்திர தீர்த்தங்கள் ஆகியவையே சிலப்பதிகாரத்தில் கூறப்படும் சோமகுண்டம், சூரியகுண்டம் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இவற்றுடன் அக்னி தீர்த்தமும் உள்ளது. இத்தலத்துக்கு எழுந்தருளிய திருஞானசம்பந்தர் இத்தீர்த்தங்களை ‘வெண்காட்டு முக்குளநீர்’ என்றழைத்து, இதில் மூழ்கினால் ‘பிள்ளைப்பேறு உண்டாகும். இதில் ஐயுற வேண்டா’ என்று உறுதிபடக் கூறியுள்ளார்.
திருஞானசம்பந்தர் மேல் நம்பிக்கை வைத்து முக்குளங்களில் நீராடி வெண்காட்டாரை வழிபட்ட அச்சுதகளப்பாளர் என்ற சிற்றரசருக்குப் பிறந்தவரே சைவ சித்தாந்தத்தை பரப்பிய தேவநாயனார்.
திருவெண்காட்டில் அக்னி தீர்த்தக் கரையில் தனிச்சந்நதியில் விநாயகருடன், தேவநாயனாரும் எழுந்தருளியுள்ளார்.திருமுருகன் பூண்டியில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் ஒரு மண்டலம் நீராடி ஆலயத்தை வலம் வர, மன சஞ்சலம், சித்தப்பிரமை ஆகியன நீங்கும் என்ற நம்பிக்கை காலங்காலமாக நிலவிவருகிறது. மனநோயாளிகள் பலர் இங்கு தங்கி நீராடி வழிபடுகின்றனர். வட ஆற்காடு மாவட்டம், திருவிரிஞ்சிபுரம், சகாயசுவாமி ஆலயத்தில் பெரிய சிம்ம தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தத்தில் பெண்கள் கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில் நீராடி பிராகாரத்தில் உறங்குகின்றனர். அவர்கள் கனவில் அம்பிகை தோன்றி பூ, பழம், பாலாடை முதலியவற்றை அளித்தால் அவர்களுக்கு
புத்திரப்பேறு விரைவில் உண்டாகும் என்பது ஐதீகம். இது காலங்காலமாக இருந்து வரும் நம்பிக்கையாகும்.மதுராந்தகம் திருவெண்காடீசர் ஆலயத்திற்கு முன், சிறுகுட்டையாக ஒரு தீர்த்தம் உள்ளது. இதில் மூழ்கி வழிபடக் கருங்குட்டம், வெண்குட்டம் போன்ற சரும நோய்கள் தீருமென்று கூறுகின்றனர்.
மயிலாடுதுறையில் துலாக்கட்டத்திற்கு அருகில் கருங்குயில் நாதன் பேட்டை என்ற ஊர் உள்ளது. தற்போது காணாப்பேட்டை என அழைக்கப்படுகிறது. இங்குள்ள சத்திபுரீசுவரர் ஆலயத்தினையொட்டி கருணா தீர்த்தம் உள்ளது. இதில் மூழ்கி வர தோல் நோய்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது.
திருத்தினைநகர் எனப்படும் தீர்த்தனகிரியில் சிவக்கொழுந்தீசர் ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள தாமரைக்குளத்தில் நீராடி வந்தால் சருமம் சார்ந்த நோய் தீரும் என்று சொல்லப்படுகிறது. அக்னி வழிபட்டுப் பேறுபெற்ற தலமான அன்னியூரிலுள்ள அக்னி தீர்த்தத்தில் மூழ்கி இறைவனை வழிபட்டால் ரத்தக்கொதிப்பு, உஷ்ண ரோகம் முதலிய நோய்கள் நீங்கும் என்று நம்புகின்றனர். தலையாலங்கானம் என்னும் வரலாற்றுப் புகழ்பெற்ற தலத்திலுள்ள தீர்த்தத்தில் மூழ்கினால் வெண்குட்டம் குணமாகும். திருப்பயற்றூரில் உள்ள தீர்த்தத்தில் மூழ்கினால் கண் பார்வை சரியாகும். இக்கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள ஓர் கல்வெட்டில் கண் நோயால் வருந்திய ஒருவன் இத்தல தீர்த்தத்தில் மூழ்கி அந்நோய் நீங்கப் பெற்றுக் காணிக்கையாக நிலம் அளித்துள்ளான் என்று புராணங்கள் தெரிவிக்கிறது.
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் ஆலயத்திலுள்ள தீர்த்தம் இஷ்ட சித்தி என்பதாகும். இதில் மூழ்கி இதன் கரையிலுள்ள சூரியனை வழிபட்டால் இழந்த கண் பார்வையை பெறலாம் என்பது நம்பிக்கை. வடநாட்டு அரசன் காஞ்சியில் தங்கிப் படித்து வந்தபோது கண்களை இழந்தான்.
அவன் பெரியோர்களின் ஆலோசனைப்படி இஷ்டசித்தி தீர்த்தத்தில் மூழ்கி கச்சபேஸ்வரரையும் சூரியனையும் வழிபட்டு வந்ததன் பயனாக கண் பார்வையை மீண்டும் பெற்றான். இது போன்று மருத்துவ குணமிக்க அனேக தீர்த்தங்கள் தென்னகம் எங்கும் உள்ளன.
மகி
|