கிரான்பெர்ரி
இயற்கை 360°
குறிப்பிட்ட ஒரு நாட்டில் மட்டுமே விளைகிற இப்பழத்தை அந்த நாட்டவர்கள் உட்கொள்வதைக் காட்டிலும் அதிகம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பதனிடப்பட்ட இந்தப் பழமும், இதன் சாறும் உலகெங்கிலும் பயன்படுத்தப்படுவதுடன், அலோபதி உள்பட அனைத்து மருத்துவத் துறைகளாலும் அங்கீகரிக்கப்பட்ட மருந்தாய் வலம் வருகிறது. ஆம், அமெரிக்காவில் விளையும் குருதிநெல்லி எனப்படும் Cranberry பழம் குறித்தே இயற்கை 360°யில் பார்க்கப் போகிறோம்!
 பெயருக்கேற்ப ரத்த சிவப்பு நிறத்தில் காணப்படும் Cranberry பழத்தின் தாவரப்பெயர் Vaccinium macrocarpum. தோன்றிய இடம் அமெரிக்கா. 12,000ம் ஆண்டுகளுக்கு முன், பூர்வகுடி அமெரிக்கர்கள் மற்றும் சிவப்பிந்தியர்கள், அமெரிக்கக் காடுகளில் விளைந்த ரத்த சிவப்பு குறுதிநெல்லி பழங்களை நேரடியாய் உட்கொண்டதுடன், இயற்கை மருந்தாகவும் தாவர நிறமியாகவும் பயன்படுத்தியுள்ளனர்.

16ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாணிப நோக்கில் அமெரிக்க பயணம் மேற்கொண்ட ஐரோப்பியர்களும், ஜெர்மானியர்களும் கொக்கு போல் குனிந்து நின்ற குருதிநெல்லிப் பூக்களை ‘Cranberry’ என அழைக்க அதுவே பெயராகி நிலைத்தும்விட்டது.அதிகளவில் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட இயற்கை தாவரம் இது எனலாம்.  அதிக நார்ச்சத்தும், அதிக நீர்த்தன்மையும் உள்ள கிரான்பெர்ரி பழத்தில், ஃப்ரக்டோஸ் பழச் சர்க்கரையும், புரதங்களும் அவற்றுடன் அத்தியாவசிய வைட்டமின்களாக C, E, K, B1, B6, B9 மற்றும் சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், மாங்கனீஸ், செம்பு, துத்தநாகம் உள்ளிட்ட கனிமச் சத்துகளும் நிறைந்துள்ளது. ஒரு கப் கிரான்பெர்ரி பழத்தில் 87% நீர்த்தன்மையுடன் 46 கலோரிகள், 4 கிராம் நார்ச்சத்து, 4 கிராம் சர்க்கரை, 1 கிராம் புரதம் மற்றும் 2 மி.கி சோடியம் உள்ளது. நனது அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான 25% வைட்டமின் சி, 9% வைட்டமின் ஏ, 16% மாங்கனீஸ் தேவைகளை பூர்த்தி செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.குருதி நெல்லி தரும் மருத்துவப் பலன்கள் ஏராளம்.
இதில் புளிப்பும் துவர்ப்பும் கசப்பும் சேர்ந்ததொரு சுவைக்கு காரணமான, ஆன்த்தோ-சயனின்கள், ப்ரோ-ஆன்த்தோ சயனிடின்கள் அதிகம் உள்ளது. இதன் தாவரச் சத்துகள் சிறுநீரகப் பையில், ஒரு படலம் போல உருவாகி, பாக்டீரியாக்கள், குறிப்பாக E.coli மற்றும் Proteus வகைகள் ஒட்டி வளர்வதைத் தடுத்து, சிறுநீரக கிருமித்தொற்று என்றாலே, Cranberry extract என்கிற அளவில் அமெரிக்க சிறுநீரக அமைப்பு (ANS), அமெரிக்க பொது மருத்துவர்கள் சம்மேளனம் (AAP) மற்றும் அமெரிக்க மகப்பேறு மருத்துவக்கழகம் (ACOG) உள்ளிட்ட அமைப்புகள், தக்க சான்றுகளுடன் இதனை பரிந்துரைக்கின்றனர்.
இதிலிருக்கும் ஆன்த்தோ-சயனின், கண் ஆரோக்கியம், சரும ஆரோக்கியம் மற்றும் கல்லீரல் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், ஈறுகளில் உள்ள பாக்டீரியா தொற்றைத் தவிர்க்க உதவுவதால், பற்படலங்களிலிருந்தும், பற்சிதைவுகளில் இருந்தும், வாய் துர்நாற்றத்திலிருந்தும் பாதுகாப்பு அளிப்பதால், கிரான்பெர்ரி பழத்தை மென்று விழுங்குமாறு அமெரிக்க பல் மருத்துவ அமைப்பு அறிவுறுத்துகிறது. இதில் உள்ள பாலி-ஃபீனல்கள், சாலிசிலிக் அமிலம், கேட்டச்சின் மற்றும் எபி-கேட்டச்சின் உள்ளிட்ட ஆன்டி-ஆக்சிடென்ஸ், இதய நோய், உடற்பருமன், வயிற்றுப்புண், பெருங்குடல் அழற்சி, மாதவிடாய் வலிகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் ஃபளாவனால்கள், குவர்செடின், மிர்செடின், உருசாலிக் அமிலம் இவற்றின் அழற்சி எதிர்ப்புப் பண்புகளால், குடல், கணையம், கல்லீரல் மற்றும் ரத்தப் புற்றுநோய்களை மட்டுப்படுத்தும் என ஆரம்பகட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இவ்வளவு தாவரச்சத்துகள் நிறைந்த கிரான்பெர்ரி பழத்தை, பறித்தவுடன் உட்கொள்ளும்போது அவற்றின் சத்துகள் ஞாபகத்திறனை அதிகரித்து, செரிமானத்தையும், நோய் எதிர்ப்பையும் கூட்டி, அலர்ஜியை போக்குவதுடன், கொழுப்பைக் குறைத்து சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது.
அதேபோல் ரத்த அழுத்தத்தையும் சீர்படுத்துகிறது. இந்தப் பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள் அனைத்தும் குறையாமல் கிடைக்க, பழத்தினைப் பதப்படுத்தாமல் அப்படியே உட்கொள்வதே நல்லது என்கின்றனர் ஊட்டச்சத்து வல்லுநர்கள்.
ஆனாலும், கிரான்பெர்ரியில் அதிகளவு உள்ள வைட்டமின் K, ரத்த உறைதலை மாற்றக்கூடும் என்பதால், ஆஸ்பிரின் போன்ற மருந்துகளை உட்கொள்ளும்போது கூடுதல் கவனம் தேவை. இதன் அதிக ஆக்சலேட்கள் சிறுநீரகக் கற்களை ஏற்படுத்தவும், மூட்டு நோயை உண்டாக்கவும், ஒவ்வாமை மற்றும் மூச்சுத்திணறலையும் ஏற்படுத்தவும் கூடும். இதிலுள்ள அதிக நார்ச்சத்து, வயிற்றுப்போக்கு மற்றும் இரைப்பை அழற்சியையும் உருவாக்கலாம்.
பெண்கள் கர்ப்ப காலத்திலும், குழந்தைக்கு பாலூட்டும் போதும் உட்கொள்வதில் அதிக கவனம் தேவை.ஆரம்ப நாட்களில் அமெரிக்கப் பழங்குடியினரிடையே, இறைச்சியில் சேர்க்கப்படும் உணவாகவும், இயற்கை நிறமியாகவும் விளங்கிய கிரான்பெர்ரி, அம்புகளில் செலுத்தப்பட்ட விஷத்தை முறிக்கவும் பயன்பட்டுள்ளது. மேலும் கிரான்பெர்ரி பழங்களை மாலையாகக் கோர்த்து அணிந்து மகிழ்ந்ததுடன், கிறிஸ்துமஸ் மரங்களை அலங்கரிக்கவும் பயன்படுத்தி வந்ததை வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.
தாமாக முளைத்து வளர்ந்த கிரான்பெர்ரி கொடிகளை, 1816ல், கேப்டன் ஹென்றி ஹால் என்பவர் மாசசூசெட்ஸில் தமது நிலத்தில் விளைவித்து வெற்றிபெற, அமெரிக்கா எங்கும் பரவி, 19ம் நூற்றாண்டில் 40,000 ஏக்கர் நிலப்பரப்பில் கிரான்பெர்ரி புரட்சி ஒன்றும் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
இதில் பள்ளி மாணவர்கள் உள்பட அனைவரும் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். அதுவரை கைகளால் பறிக்கப்பட்டுவந்த கிரான்பெர்ரி பழங்கள் பிரத்யேக மரக்கருவிகள் கொண்டு பறிக்கப்பட்டன. தற்போது லேசர், ஏ.ஐ. உள்ளிட்ட நுட்பங்கள் உதவுகின்றன.
அமெரிக்கா மற்றும் கனடா நாடுகள் மட்டுமே இந்தப் பழத்தை 98% சாகுபடி செய்து, இவற்றில் 95% பழத்தை ஏற்றுமதி செய்கின்றன. சீனா, மெக்சிகோ, கொரிய நாடுகள் அதிகளவில் கிரான்பெர்ரியை இறக்குமதி செய்கின்றன.
கிரான்பெர்ரியின் குணநலன்களால் ஈர்க்கப்பட்டு, நமது நாட்டிலும் உற்பத்தி செய்கிற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு தோல்வி அடைந்ததுடன், இறக்குமதி செய்த பழங்களை மட்டுமே நாம் பயன்படுத்தி வருகிறோம். இங்கு நீலகிரி மற்றும் சிவாலிக் மலை நிலங்களில் விளைகிற Karondas என்கிற காட்டு நெல்லி குருதிநெல்லிக்கு இணையான பழமாக கருதப்படுகிறது.
கிரான்பெர்ரி பழங்கள் 95% வரை பதனிடப்பட்டு உலர் பழங்களாகவும், ஜூஸ், ஜெல்லி, காம்போட், ஜாம், சாஸ் எனவும் வலம் வருகிறது. இந்தப் பழம் பதனிடப் படும்போது, அத்தியாவசிய வைட்டமின்கள் நீக்கப்படுவதுடன், சுவைக்காக சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவு பன்மடங்காகிறது.
உலர் பழத்தில் தயாரிக்கப்படும் தேநீர் மிகப்பிரபலமான பானமாக ஐரோப்பாவில் வலம் வருவதுடன், விருந்துகளிலும் கேளிக்கை விழாக்களிலும் காக்டெய்ல், மாக்டெய்ல் பானங்களில் விருப்பத் தேர்வாய் கிரான்பெர்ரி ஜூஸ் உள்ளது.
கிறிஸ்துமஸ், புதுவருடம், தேங்க்ஸ் கிவிங் உள்ளிட்ட கொண்டாட்டங்களில், வீட்டை அலங்கரிக்கவும், விருந்தினரை உபசரிக்கவும் பயன்படுவதுடன், கிரான்பெர்ரி மாலை அணிவது தற்போதைய அமெரிக்க ஃபேஷனாகவும் வலம் வருகிறது.
வருடம் முழுவதும் காய்க்கும் கிரான்பெர்ரிக்கு இலையுதிர்காலக் குளிர் அவசியம் என்பதுடன், அதிக குளிரும் பெரிதாய் உதவுகிறது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் அறுவடை மேற்கொள்ளப்பட்டு, அமெரிக்க, கனடா நாடுகளில் இப் பழத்திற்கான விழாக்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.
‘Super food’ என அமெரிக்கர்களால் கொண்டாடப்படும் கிரான்பெர்ரி, இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதங்களில் ஒன்று என்றாலும், ஓ... அமெரிக்க ஏகாதிபத்தியமே... உனக்கு கிரான்பெர்ரி எனும் பெயரும் உண்டோ!
எனச் சொல்லும் அளவுக்கு, ஒரே ஒரு பழத்தை வைத்துக்கொண்டு, அதன் வளங்களை சர்வதேசமயமாக்கிய அமெரிக்காவிடமிருந்து, மூலிகை வளங்கள் அதிகம் நிறைந்த இந்தியா இன்னும் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும் என கிரான்பெர்ரியும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் நமக்கு மிகத்தெளிவாக எடுத்துரைக்கின்றது!
(இயற்கைப் பயணம் நீளும்!)
|