7 கண்டங்களின் உயரமான சிகரங்களை தொட்ட முதல் தமிழ்ப்பெண்!



கடந்த 2023ம் ஆண்டு மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு முத்தமிட்டு தன் சிகரம் தொடும் பயணத்தை தொடங்கிய முத்தமிழ்ச்செல்வி இந்த இரண்டு ஆண்டுகளில் 7 கண்டங்களில் உள்ள 7 உயரமான மலை சிகரங்களை ஏறி சாதனைப் படைத்துள்ளார். 
உலகின் மிக உயரமான சிகரங்களைத் தொட்ட முதல் தமிழ்ப்பெண் என்ற பெருமையும் பெற்றுள்ளார். விருதுநகர் மாவட்டம், ஜோகில்பட்டியை சேர்ந்த இவர், ஜப்பானிய மொழிப்பெயர்ப்பாளராகவும் ஆசிரியராகவும் பணியாற்றுகிறார். மலையேறும் சாகசங்களில் ஆர்வம் கொண்டதால் தொடர்ந்து சாதனைகளை செய்து, தன் வெற்றிப் பட்டியலில் சேர்த்துக்கொண்டே செல்கிறார்.

கடந்த 2023ம் ஆண்டு, மே 23ம் தேதியன்று ஆசிய கண்டத்திலேயே மிக உயரமான 8,849 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட் மலையை ஏறினார் முத்தமிழ்ச்செல்வி. முதன் முதலில் எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் தமிழ்ப்பெண் என்ற பாராட்டை பெற்றார். இத்துடன் நில்லாமல் தன் அடுத்தடுத்த இலக்குகளை தொடர்ந்த முத்தமிழ்ச்செல்வி, அதே 2023ம் ஆண்டு, ஜூலை 21ம் தேதியன்று ஐரோப்பா கண்டத்தின் மிக உயரமான 5,642 மீட்டர் உயரம் கொண்ட எல்ப்ரஸ் மலையை ஏறினார்.

தன் அடுத்த சாதனையாக அதே ஆண்டில் செப்டம்பர் 12ல் ஆப்ரிக்கா கண்டத்தின் 5,895 மீட்டர் உயரமுள்ள கிளிமஞ்சாரோ மலையை ஏறி வெற்றி கண்டார். இதனை தொடர்ந்து 2024, பிப்ரவரி, 13ம் தேதியன்று அமெரிக்க கண்டத்தில் உள்ள 6,961 மீட்டர் உயரம் கொண்ட அக்கோன்காகுவா மலைச் சிகரத்தை ஏறினார். அடுத்த மார்ச் 17ம் தேதியன்று ஆஸ்திரேலியா கண்டத்தில் அமைந்துள்ள 2,228 மீட்டர் உயரம் கொண்ட கொஸ்கியஸ்கோ மலையில் ஏறினார்.

2024ம் ஆண்டின் இறுதியில் டிசம்பர் மாதத்தில், அண்டார்ட்டிகா கண்டத்தில் உள்ள 4,892 மீட்டர் உயரம் கொண்ட வின்சன் மலையினை ஏறி முடித்தபோது தன் இலக்கினை முடிக்கும் காலத்தை நெருங்கிக்கொண்டிருந்தார். 

இதுவரையில் ஆறு கண்டங்களில் உள்ள உலகிலேயே ஆறு உயரமான மலைகளை ஏறியதை தொடர்ந்து, சமீபமாக கடந்த மாதம் ஜூன் 16ம் தேதியன்று வட அமெரிக்க கண்டத்தில் உள்ள மெக்கின்லி மலை எனப்படும் 6,190 மீட்டர் உயரம் கொண்ட டெனாலி மலைச் சிகரத்தைத் தொட்டு தன் இலக்கை  அடைந்துள்ளார் முத்தமிழ்ச்செல்வி. 

தற்போது உலகின் 7 கண்டங்களில் உள்ள மிக உயரமான 7 மலைச் சிகரங்களை ஏறி சாதனைப் புரிந்த முதல் தமிழ்ப்பெண் என இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தொடர்ந்து 2 ஆண்டுகளில் 7 மலைச்சிகரங்களை ஏறி தன் இலக்கினை அடைந்த இவருக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இவரின் இந்த மலையேற்ற சாகசங்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் அடுத்தடுத்த முயற்சிகளுக்கு தமிழக அரசு துணை நிற்கும் என்று
உறுதியும் அளித்துள்ளார்.

பொதுவாகவே மலையேற்றத்தின் போது பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடும். இவரின் டெனாலி மலையேற்றப் பயணத்தின்  போது  80  கிலோ எடையுள்ள பையினை சுமந்து கொண்டு மலையேறியுள்ளார். 

அதிகமான எடையை சுமந்ததுடன் பலத்த காற்று வீசியதால், கூடாரம் ஏதும் அமைக்காமலேயே தொடர்ந்து 16 மணி நேரம் உறைபனி குளிரிலேயே உறங்க வேண்டியிருந்ததாக குறிப்பிட்டிருந்தார். 

உறைபனிக் காற்றில் உறங்கியதால் கடும் தலைவலியினால் அவதிப்பட்டது மட்டுமில்லாமல், மறுநாள் கண் விழிப்போமா என்றபயத்தில் இருந்துள்ளார். அதிர்ஷ்டவசமாக தான் உயிருடன் மறுநாள் கண்விழித்ததாக கூறியுள்ளார்.

இவருடன் ஷேக் ஹசன் கான் என்பவரும் பயணம் செய்துள்ளார். அவர் கேரளாவின் தலைமைச் செயலகத்தில் வேலை பார்த்து வருகிறார். உறைபனியில் மாட்டிக்கொண்டவுடன் ஷேக் ஹசன் உடனடியாக கேரள அரசினை தன் சாட்டிலைட் போனினால் தொடர்பு கொண்டுள்ளார். 

உடனே கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பிரதமர் மோடியிடம் இது குறித்து தெரிவிக்க, உடனே இந்திய தூதரகம் இவர்களுக்காக பேஸ்கேம்பில் மருத்துவ உதவி செய்துள்ளனர். பேஸ்கேம்பினை அடைய இவர்கள் இருவரும் 18 மணி நேரம் நடந்து வந்துள்ளனர்.
முத்தமிழ்ச்செல்வி ‘இமயத்தை தொட்ட சாதனை பயணம்’ எனும் தன் சுயசரிதை நூலை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரம்யா ரங்கநாதன்