ஐ.ஐ.டியில் படிக்க தேர்வாகி இருக்கும் அரசுப் பள்ளி மாணவிகள்!
விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் சிறு நகருக்கு அருகிலுள்ள கிராமம்தான் படந்தால். இங்குள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் ‘பிளஸ் டூ’ தேர்ச்சிப் பெற்ற யோகேஸ்வரி, மும்பை ஐ.ஐ.டி.யில் ‘விண்வெளிப் பொறியியல்’ பட்டப்படிப்பிற்காக சேர்க்கை பெற்றுள்ளார். ஐ.ஐ.டியில் ஆண்டிற்கு பல மாணவர்கள் தேர்ச்சிப் பெறுகிறார்கள். இதில் இவர் தேர்ச்சிப் பெறுவதில் என்ன ஆச்சரியப்பட இருக்கிறது என்ற கேள்வி நம்முடைய மனதில் எழும்.
 ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் உள்ள ஐ.ஐ.டிகளில் பல நூறு பேர்கள் பலவித பாடங்களில் பொறியியல் படிப்பிற்காக சேர்கிறார்கள், படிக்கிறார்கள். அதில் ஒரு மாணவிதான் யோகேஸ்வரி என்று நினைத்தால் அதுதான் இல்லை. காரணம், இவர் ஒரு மாற்றுத்திறனாளி (உயரம் குறைவானவர்). சாதாரண கிராமத்தில் பிறந்த இவருக்கு விண்வெளிப் பொறியியல் மேல் ஆர்வம் ஏற்பட காரணம் அந்தப் படிப்பில் தேர்ச்சிப்பெற அதற்கு இவர் எடுத்துக் கொண்ட சிரத்தைப் பற்றி பகிர்ந்தார்.
‘‘சின்ன வயசில் இருந்தே அகன்று விரிந்த வானம் மேல் எனக்கு தனிப்பட்ட ஈர்ப்பு இருந்தது. நீல நிறத்தில் போர்வை போர்த்தியது ேபால் இருந்தாலும், தினமும் இதன் தோற்றம் புதுசாகத்தான் இருக்கும். மேலும், அந்த வானத்திற்கு பின் ஒளிந்திருக்கும் அதிசயங்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் எனக்குள் இருந்தது.
பள்ளியில் படிக்கும் போது ‘நான் முதல்வன்’ திட்டம் குறித்த சுற்றறிக்கையை விருதுநகர் ஆட்சியர் எங்களின் பள்ளிக்கு அனுப்பி வைத்திருந்தார். நான் நன்றாக படிப்பேன் என்பதால், தலைமை ஆசிரியர் அந்த திட்டத்தில் இணைய என்னுடைய பெயர் மற்றுமொரு மாணவனின் பெயரையும் பரிந்துரைத்தார். அதன் அடிப்படையில் அந்த திட்டத்தில் சேர்ந்து பயிற்சி பெற நான் தேர்வானேன்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பதுடன் மாணவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படிப் படிக்கலாம் என அனைத்தும் இதில் வழிகாட்டப்படும். நான் தமிழ் வழிக் கல்வியில் படித்தேன்.
+2வில் 450க்கும் குறைவான மதிப்பெண்களை பெற்றிருந்தேன். எனக்கு ஆங்கிலம் எழுதவும், சரளமாகப் பேசுவதற்கும், நேர்முகத் தேர்வுக்கு தயாராவது குறித்தும் நான் முதல்வன் திட்டம் மூலம் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. அது எனக்கு புதிய பாதையைத் திறந்து கொடுத்தது. பயிற்சியில் பாடங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருந்தது. புரிந்து கொள்ள சிரமமாக இருந்தாலும் 40 நாட்கள் பயிற்சியில் ஓரளவிற்கு புரிதல் கிடைத்தது. இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் வரை JEE தேர்வு என்றால் என்னென்னு தெரியாது. அதன் பிறகு JEEக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும், தேர்விற்கு எப்படி தயாரிக்கணும்னு தெரிந்துகொண்டேன். பயிற்சி பெற்றதால், JEE மெயின் தேர்வில் தேர்ச்சிப் பெற்றேன்.
அதனைத் தொடர்ந்து JEE அட்வான்ஸ் பயிற்சி பெற்றேன். அதிலும் தேர்ச்சிப் பெற்றதால் ஐ.ஐ.டி மும்பையில் படிக்க இடம் கிடைத்தது. நான் முதல்வன் திட்டம் இல்லை என்றால் என்னால் இந்தப் படிப்பை படித்திருக்க முடியுமான்னு நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. நான் முதல்வன் திட்டத்தை அறிமுகப்படுத்திய தமிழக முதல்வருக்கும், பரிந்துரைத்த மாவட்ட ஆட்சியருக்கும், என் பள்ளி தலைமை ஆசிரியருக்கும்தான் என் நன்றியினை தெரிவிக்க வேண்டும்.
வழக்கமான சிவில், கணினி துறைகளைத் தேர்ந்தெடுப்பதைவிட வித்தியாசமாக படிக்க நினைத்தேன். அதில் விண்வெளிப் பொறியியல் என்னை ஈர்த்தது. சின்ன வயதில் நான் வியந்த விஷயங்களை தெரிந்துகொள்ள போகிறோம் என்று நினைக்கும் போது ரொம்பவே சந்தோஷமா இருக்கு. எங்க வீட்டில் என்னையும் சேர்த்து ஐந்து பேர்.
அப்பா நாகர்கோவிலில் டீ மாஸ்டரா இருக்கார். மாதம் ஒரு முறைதான் வீட்டிற்கு வருவார். அம்மாவுக்கு பட்டாசு தொழிற்சாலையில் வேலை. பெரிய அண்ணன் பி.காம் முடித்துவிட்டு நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார். சின்ன அண்ணன் உடல் பயிற்சி ஆசிரியர் படிப்பை முடித்திருக்கிறார்’’ என்ற யோகேஸ்வரியை தொடர்ந்தார் அவரின் அம்மா கனகவல்லி. ‘‘யோகேஸ்வரி பிறந்த போது உருவத்தில் வித்தியாசம் ஏதும் தெரியவில்லை. அவருக்கு பத்து வயது ஆகும் வரை அதற்கான உயரம் இல்லை. நாங்களும் வளர்ந்துவிடுவாள் என்று இருந்துவிட்டோம். ஆனால், வளர்ச்சி இல்லை என்பதால் டாக்டரிடம் காட்டினோம். அப்போதுதான் யோகேஸ்வரி உயர வளர்ச்சி இல்லாத சிறுமியென்று தெரிய வந்தது. 17 வயதில் அவர் பத்து வயது சிறுமியின் உடல் வளர்ச்சிதான் பெற்றிருந்தார்.
அவரின் இந்தக் குறை எங்களுக்குள் ஒரு நடுக்கத்தை ஏற்படுத்தியது. அந்த நடுக்கம் யோகேஸ்வரி ஐ.ஐ.டி சேரும் வரை இருந்தது. இன்று என் மகள் நல்ல நிலைக்கு வந்திடுவாள் என்ற நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது. அந்த நம்பிக்கை எங்களின் நடுக்கத்தை போக்கி இருக்கிறது.
எங்களைப் போல் பொருளாதார பின்னணியைச் சேர்ந்தவர்களுக்கு நான் முதல்வன் திட்டம் ஒரு வரப்பிரசாதம் என்றுதான் சொல்ல வேண்டும்” என்கிறார் கனகவல்லி. உருவத்தில் கடுகாக இருந்தாலும், தரமான கல்வி நிறுவனத்தில் படிப்பதன் மூலம் இனி பல உயரங்களைத் தொடப்போகிறார் என்ற நம்பிக்கை இப்போது யோகேஸ்வரிக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் பிறந்திருக்கிறது.
யோகேஸ்வரியை தொடர்ந்து அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் படித்து ஐ.ஐ.டியில் இடம் பிடித்துள்ளார் பழங்குடியின மாணவியான ராஜேஸ்வரி. தமிழக அரசின் பழங்குடி நலத்துறையினர் வழங்கிய JEE ஆன்லைன் பயிற்சி மூலம் வெற்றியை பெற்றிருக்கிறார்.
ஐ.ஐ.டி தொழில்நுட்ப நிறுவனத்தில் படிக்க JEE மெயின் மற்றும் அட்வான்ஸ் தேர்வுகளில் தேர்ச்சிப்பெற வேண்டும். அது அவ்வளவு சுலபமில்லை. மெயின் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்கள் அட்வான்ஸ் தேர்வில் தோல்வி அடைந்திடுவார்கள்.
அதுவும் பின் தங்கிய கிராமத்தில் இருந்து வந்து JEE தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்று சாதனை படைத்திருக்கும் ராஜேஸ்வரி தன் பயணம் குறித்து விவரித்தார். ‘‘சேலம் மாவட்டம், கல்வராயன் மலையில் இருக்கும் கருமந்துறை கிராமம்தான் என் ஊர்.
9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வழியில் படிச்சேன். அப்பா டெய்லர், அம்மா கூலி வேலைக்குப் போறாங்க. என்னோட பொறந்தவங்க மூணு பேர். அக்கா பி.எஸ்சி வேதியியல் முடிச்சிட்டு சென்னையில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்றாங்க. அண்ணன் பி.எஸ்சி கணிதம் முடிச்சிட்டு டெய்லரிங் வேலை செய்றார். தங்கை பரமேஸ்வரி அரசுப் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கிறாங்க.
அப்பா எட்டாம் வகுப்பு வரைதான் படிச்சிருக்கார். அவருக்கு கல்வியின் அவசியம் தெரியும். அதனால் எங்களை நல்லா படிக்க வைச்சு நல்ல வேலைக்கு அனுப்ப ஆசைப்பட்டார். ஆனால், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த வருடம் நாங்க அவரை இழந்தோம்.
அவரின் கனவினை நிறைவேற்றணும்னு அம்மாவும் அண்ணனுங்களும் எங்களை ஊக்கப்படுத்தி படிக்க வச்சாங்க. நான் 11ம் வகுப்பில் சேர்ந்த போது பொறியியில் படிக்கச் சொல்லி என் ஆசிரியர்கள் என்னை ஊக்கப்படுத்தினார்கள்.
அப்போதுதான் அவர்கள் ஐ.ஐ.டி தேர்வுகள் குறித்து சொன்னாங்க. JEE மெயினில் வெற்றி பெற்றால் என்.ஐ.டி. போன்ற கல்வி நிறுவனங்களிலும், அட்வான்ஸ்டு தேர்வில் வெற்றி பெற்றால் தான் ஐ.ஐ.டி.யில் படிக்க முடியும்னு சொன்னாங்க. மெயின் தேர்வுக்கு தமிழ் கல்வி வழியில் உள்ள மாநில அரசு புத்தகங்களை புரிந்து கொண்டு படித்தாலே இதில் தேர்ச்சிப் பெற்று விடலாம். இந்த தேர்வில் தேர்ச்சிப் பெற வாய்ப்புகள் அதிகம். ஆனால், அட்வான்ஸ் தேர்வுக்கு NCERT புத்தகங்களை படிக்கணும். அது ஆங்கிலத்தில் இருக்கும். அதை நன்றாக புரிந்துகொள்ள வேண்டியது அவசியம் என்பதால், அந்த புத்தகங்களை சேகரிக்க ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் தடுமாறினாலும், போகப்போக புரிந்துகொண்டு படிக்க துவங்கினேன்.
ஐ.ஐ.டி தேர்வுகளுக்காக அரசின் பழங்குடி நலத்துறையினர் சார்பாக பள்ளிகளிலேயே பயிற்சிகள் அளிக்கப்பட்டது. அதில் சேர்ந்து 11ம் வகுப்பில் இருந்தே பயிற்சி எடுத்தேன். தினமும் காலை, மாலை ஒரு மணிநேரம் ஆன்லைனில் வகுப்புகள் நடக்கும். மற்ற நேரங்களில் பள்ளிக்கூட பாடங்களில் கவனம் செலுத்துவேன்.
தமிழ், ஆங்கிலம்னு ரெண்டிலும் வகுப்புகள் நடக்கும். மேலும், என் ஆசிரியர்களும் JEE தேர்வு படிப்பதற்காக எனக்கு உதவி செய்தாங்க. சந்தேகங்களை அவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டேன்.
கடந்த ஜனவரியில் JEE மெயின்ஸில் தேர்ச்சிப் பெற்றேன். அதனைத் தொடர்ந்து அட்வான்ஸ் தேர்வுக்கு தயாரானேன். இதுக்கிடையில் +2வில் 600க்கு 521 மதிப்பெண் பெற்றேன். +2 முடித்ததும் JEE அட்வான்ஸ்டு தேர்வில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். அதற்காக ஈரோடு பெருந்துறையில் உள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் பயிற்சி எடுத்தேன்.
தேர்வில் அகில இந்திய அளவில் பழங்குடியினர் பிரிவில் 417 ரேங்க் வாங்கினேன். ஐஐடியில் படிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. இப்ப குமிழி பள்ளியில் திறன் மேம்பாட்டு பயிற்சியினை பெற்று வருகிறேன். சென்னை ஐ.ஐ.டியில் விண்வெளி பொறியியல் துறை படிக்க ஆசை’’ என கனவுகளோடு சொல்கிறார் ராஜேஸ்வரி.
மா.வினோத்குமார், கண்ணம்மா பாரதி
வாசகர் பகுதி
பெண்களின் உடல் கோளாறுகளை நீக்கும் அருமருந்து!
பிரண்டை என்ற அற்புத மூலிகை பல உடல் கோளாறுகளை நீக்கும் சக்தி கொண்டது. முக்கியமாக பெண்களுக்கு ஏற்படும் பலவித உபாதைகளின் அருமருந்து.
*பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்யும் ஆற்றல் கொண்டது. வெறும் வயிற்றில் பிரண்டைச் சாறு ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெயில் கலந்து ஒரு வாரம் சாப்பிட்டால் மாதவிடாய் சீராகும்.
*பிரண்டையை துவையலாக அரைத்து உணவில் சேர்த்துக் கொண்டால் அஜீரணக் கோளாறு நீங்கும்.
*உடம்பில் அரிப்பு பிரச்னை இருந்தால் பிரண்டையை நெய் விட்டு வதக்கி, உப்பு சேர்த்து அரைத்து சாப்பிடலாம். *மூட்டுவலி உள்ளவர்கள், பிரண்டையை நல்லெண்ணெயில் நன்றாக வதக்கி, அந்த எண்ணெயை வடிகட்டி தேய்த்து வந்தால் வலி குணமாவதுடன் எலும்பு மற்றும் மூட்டு எலும்புகளுக்கு வலிமை தரும்.
*அடி வயிற்றுப்பகுதியில் சதை அதிகமாக இருப்பவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் சதை களைந்து விடும்.
*பிரண்டையை காயவைத்து, நெருப்பில் எரித்து சாம்பலாக்கி, ஒரு பங்கு சாம்பலில் மூன்று பங்கு தண்ணீர் விட்டு கரைத்து, வடிகட்டி பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி பத்து நாட்கள் வெயிலில் வைக்க வேண்டும். நீர் வற்றி உப்பு மட்டும் தங்கி இருக்கும். அதில் இரண்டு கிராம் அளவினை பாலில் கலந்து சாப்பிட ஊளைச் சதை குறையும்.இப்படி பல நோய்களுக்கு அருமருந்தாகப் பயன்படும் பிரண்டையை உணவில் சேர்த்து நோய்களிலிருந்து விடுபடுவோம்.
- அ.திவ்யா, காஞ்சிபுரம்.
|