பிரசவித்த தாய்மார்களுக்கான ஒன்ஸ்டாப் டெஸ்டினேஷன்!
உடைகள் பலவிதம். பார்ட்டிவேர், கல்யாண புடவை, கல்லூரி ஆடைகள், அலுவலகத்திற்கு ஃபார்மல் ஆடைகள் என சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், கர்ப்பிணி பெண்களுக்கு என தனிப்பட்ட உடைகள் என்று எதுவுமே இல்லை.  அவர்களுக்கும் ஒரு அழகான உடையினை அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 2020ல் ‘புட்சி மெட்டர்னிட்டி வேர்’ என்ற பெயரில் அவர்களுக்கென பிரத்யேக வசதியான உடைகளை அறிமுகம் செய்துள்ளார் கோவையை சேர்ந்த தீபிகா.
‘‘என்னுடைய சொந்த ஊர் கோபிச்செட்டிபாளையம். விஷுவல் கம்யூனிகேஷன் படித்துவிட்டு சென்னையில் ஊடகத்துறையில் ஏழு வருடம் வேலை பார்த்து வந்தேன். அதன் பிறகு திருமணமாகி ஆஸ்திரேலியாவிற்கு சென்றுவிட்டேன்.  நான் கர்ப்பம் தரித்த போது மீண்டும் கோவைக்கே வந்துவிட்டோம். என் முதல் குழந்தையின் பிரசவ காலத்தில் தனிப்பட்ட உடைகள் என்று எதுவும் இல்லை. நானும் மற்ற பெண்களைப் போல் நைட்டி மற்றும் சுடிதார், டீஷர்ட், காட்டன் பேன்ட்ஸ் போன்ற உடைகளைதான் அணிந்தேன். இந்த உடைகள் அணிய நன்றாக இருந்தாலும், கம்பர்ட்டினை கொடுக்கவில்லை. ஆனால், அதற்கான தேவை அதிகமாக இருப்பதை நானும் என் கணவரும் உணர்ந்தோம். காரணம், நான் அனுபவித்த அசவுகரியம் என் தோழிகளுக்கும் இருப்பதாக கூறினார்கள். கர்ப்ப காலத்தில் அணியக்கூடிய சவுகரியமான உடைகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டோம். அதுதான் ‘புட்சி’ உருவாக காரணம்.

2020ல் எங்களின் பிராண்டினை இன்ஸ்டாவில் துவங்கினோம். விளம்பரம் செய்த இரண்டே வாரங்களில் அனைத்து உடைகளும் விற்பனையாயின. இவ்வளவு சக்சஸசாகுமான்னு நாங்க எதிர்பார்க்கவில்லை. அந்த சமயத்தில் கோவிட் ஆரம்பமானது.
எல்லோரும் வீட்டில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால், கர்ப்பிணி பெண்கள் எங்களின் உடைகளை ஆன்லைனில் வாங்க ஆரம்பித்தார்கள். அந்த நேரத்திலும் எங்களின் உடைகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது’’ என்றவர் இதற்கான பெரிய ஆய்வினை மேற்கொண்டுள்ளார்.
‘‘எனக்கு பிசினஸ் மற்றும் ஃபேஷன் பற்றி எதுவுமே தெரியாது. எங்க வீட்டிலேயும் யாரும் பிசினஸ் செய்ததில்லை.
ஆரம்பத்தில் ரொம்பவே கஷ்டமா இருந்தது. எப்படி செய்றது... என்ன செய்றதுன்னு தெரியல. வழிகாட்டவும் ஆட்கள் இல்லை. ஆனா, இதை சக்சஸா செய்யணும் என்ற எண்ணம் மட்டும் எனக்குள் இருந்தது.
முதலில் நான் கர்ப்பமாக இருந்த போது உடைகள் எப்படி வேண்டும் என்று யோசித்தேனோ அதன் படி டிசைன் செய்தேன். கடைகளுக்கு சென்று பருத்தி துணிகளை வாங்கினேன். அதில் டிசைன் செய்து அருகிலிருக்கும் லோக்கல் டெய்லரிடம் கொடுத்து தைத்து வாங்கினேன்.
அதன் பிறகு பெரிய அளவில் ஆர்டர்களை தைத்து தர யூனிட்கள் இருப்பது பற்றி கேள்விப்பட்டு அவர்களை சந்தித்தேன். ஆனால், ஐந்து வருடத்திற்கு முன்பு, அவர்கள் பெரிய அளவு ஆர்டர்களை மட்டுமே தைத்து வந்தார்கள், 30, 50 பீஸ் உடைகளை தைக்க மறுத்துவிட்டார்கள். அதனால் எங்களுக்கான தனிப்பட்ட தையல் யூனிட் ஒன்றை அமைத்தேன்.
எங்களிடம் வேலைக்கு சேர்ந்த டெய்லர்கள் எல்லோரும் திறமையானவர்கள் என்பதால், அவர்களிடம் இருந்தும் நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்’’ என்றவர், உடையினை எவ்வாறு வடிவமைத்தார் என்பது குறித்து விவரித்தார்.
‘‘கர்ப்பமான காலம் முதல் குழந்தை பிறந்து அவர்கள் பால் குடியை மறக்கும் அந்த இரண்டு வருஷங்கள் உடலாலும், மனதாலும் பெண்கள் பலவித மாற்றங்களை சந்திப்பார்கள். அந்த நேரத்தில் அவர்களுக்கு ஃபேஷனாக அமைத்து தரவேண்டும் என்ற எண்ணத்தில்தான் உடைகளை வடிவமைத்தேன்.
அதில் முக்கியமாக நைட்டிக்கு நோ சொன்னோம். பிரசவ காலத்தில் பெண்கள் பெரும்பாலும் நைட்டிதான் அணிவார்கள். அதில் குறிப்பாக ஃபீடிங் நைட்டியில் மார்பகப் பகுதியில் சிப்கள் தெரியும்படி பொருத்தப்பட்டு இருக்கும். இந்த அசவுகரியம் எல்லாம் இருக்கக் கூடாது என்று முடிவு செய்தோம்.நைட்டியாக இல்லாமல் உடைகளாக மாற்றி அமைத்தோம். இது போன்ற உடைகளில் பெரும்பாலும் உள்ளே லைனிங் துணி இருக்காது. டிரான்ஸ்பெரன்டாக இருக்கும் என்பதால் பேன்ட் அணிய வேண்டும். அது கர்ப்ப காலத்தில் சவுகரியமாக இருக்காது என்பதால் உடைகளை லைனிங் கொண்டே தயாரிக்க ஆரம்பித்தோம். குறிப்பாக ஃபீடிங் உடைகளில் சிப்கள் வெளியே தெரியாதபடி அமைத்திருக்கிறோம். இந்த உடைகளை வீட்டிற்குள் மட்டுமில்லாமல் வெளியேவும் அணிந்து செல்லலாம்.
பிரசவகால உடைகளை தொடர்ந்து நைட்வேர், லவுஞ்ச் வேர், உள்ளாடைகள், வெஸ்டர்ன் வேர் என அனைத்து டிசைன்களிலும் மெட்டர்னிட்டி உடைகள் எங்களிடம் உள்ளது. இது பார்க்க மெட்டர்னிட்டி உடைகள் போல் இருக்காது என்பதால் கல்லூரிப் பெண்களும் இந்த உடைகளை எங்களிடம் ஆர்டர் செய்கிறார்கள்’’ என்றவரின் டாப் செல்லிங் உடைகள் மூங்கிலான உள்ளாடைகள்.
‘‘நாங்க பிராண்டினை ஆரம்பித்த ஆறு மாசத்திலேயே சின்ன கட்டிங் டேபிள் மற்றும் ஐந்து தையல் மெஷின் கொண்டு சிறிய அளவில் யூனிட் ஒன்றை ஆரம்பித்தோம். கட்டிங் மாஸ்டர் மிகவும் திறமையானவர் என்பதால் அவரே மொத்த டீமையுமே வழிநடத்தினார். நாங்க பல உடைகளை விற்பனை செய்து வந்தாலும் எங்களின் டாப் செல்லிங் உடை உள்ளாடைகள்தான். ஃபீடிங் பிரா மற்றும் பேன்டிகளை முழுக்க முழுக்க மூங்கில் துணியில் தயாரிக்கிறோம்.
இந்தியாவில் முதல் பிராண்ட் மூங்கில் துணி கொண்டு உள்ளாடைகள் தயாரிப்பது எங்களுடையதுதான். இந்த துணி மிருதுவாக இருக்கும், சென்சிடிவ் சருமம் கொண்டவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. குறிப்பாக சருமத்தில் தொற்று, எரிச்சல், அரிப்பு அனைத்திற்கும் சிறந்தது, நிலையானது, ஈகோபிரண்ட்லியானது.
உள்ளாடைகளை தயாரிக்க திட்டமிட்ட போது, மார்க்கெட்டில் உள்ள துணிகள் குறித்து ஆய்வு செய்த போது, அனைத்திலும் பாலியஸ்டர் கலந்திருப்பது தெரிய வந்தது. இதற்கான மாற்றினை தேடிய போது மூங்கில் துணி பற்றி கேள்விப்பட்டோம். அன்று முதல் எங்களின் உள்ளாடைகளை இதில்தான் தயாரிக்கிறோம்.
அதன் தொடர்ச்சியாக பெண்களுக்கான சானிட்டரி நாப்கின்களையும் மூங்கிலில் உற்பத்தி செய்கிறோம். கர்ப்ப காலத்தில் கால்களில் வீக்கம் ஏற்படும். அதற்கான கம்ப்ரஷன் சாக்சும் மூங்கிலில் எங்களிடம் உள்ளது. இதைத் தொடர்ந்து சருமம் மற்றும் தலைமுடிக்கான பொருட்களும் விற்பனை செய்கிறோம்.
பொதுவாக பிறந்த குழந்தைகளுக்கு தேவையான உடைகள், ஃபீடிங் பாட்டில்கள், மெத்தைகள், பொம்மைகள் கொண்ட கடைகள் நிறைய உள்ளன. ஆனால், அந்தக் குழந்தையை சுமக்கும் தாய்மார்களின் தேவைக்கான பிரத்யேக கடைகள் என்று எதுவும் இல்லை.
அந்த இடத்தை நிரப்ப நினைத்தோம். கர்ப்பிணி பெண்கள் முதல் பிரசவித்த தாய்மார்களுக்கு தேவையான அனைத்திற்காக ஒரே கடைதான் புட்சி. இப்போது 2 வயது குழந்தைகளுக்கான உடைகள் மற்றும் பொருட்களையும் அறிமுகம் செய்திருக்கிறோம். ஆன்லைனில் மட்டுமில்லாமல் கோவை மற்றும் ஈரோட்டில் கடை அமைத்திருக்கிறோம். ஈரோட்டில் பிரான்சைசி முறையில் கொடுத்திருக்கிறோம். மேலும், தமிழ்நாடு முழுதும் இதர நகரங்களிலும் தனிப்பட்ட கிளைகள் மற்றும் பிரான்சைசி கடைகளை திறக்கும் எண்ணம் உள்ளது. அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறோம்’’ என்றார் தீபிகா.
ஷம்ரிதி
|