இமாச்சலப் பிரதேசத்தின் முதல் பெண் லாரி ஓட்டுநர்!



இமாச்சலப் பிரதேசத்தின் சோலன் மாவட்டம் பாகாவில் உள்ள அல்ட்ராடெக் தொழிற்சாலையில் இருந்து சிமென்ட் மூட்டைகளை லாரியில் ஏற்றி அதை ஓட்டிச் சென்று, 102 கி.மீ தொலைவில் உள்ள நலகார்க் என்ற தொழில்துறை பகுதியில் பாதுகாப்பாக சரக்குகளை கொண்டு சேர்க்க வேண்டும். 
இரவு நேரம் நெருங்கிக்கொண்டிருந்த வேளையில் சரக்குகளை வண்டியில் ஏற்றியதும் வழக்கமாக சரக்குகளை எடுத்து செல்லும் டிரைவர் தன்னால் வண்டியை ஓட்டமுடியாது என்று கூறி விடுகிறார். அந்த சமயத்தில் முக்கியமான முடிவினை கண்டிப்பாக எடுக்க வேண்டிய சூழல் என்று கூறும் நீல்கமல் தாகூர், எதைப் பற்றியும் சிந்திக்காமல், ஆபத்தான இமாச்சலப் பிரதேச சாலைகளில் இரவு நேரங்களில், நீண்ட கரடுமுரடான பாதையை கடக்க முடிவு செய்து அந்த வாகனத்தை ஓட்டிச்சென்று இலக்கை அடைந்திருக்கிறார்.

“அது ஆபத்தான பாதையாக இருந்தாலும் ஏதோவொன்று என்னை முன்னேறி போகத் தூண்டியது. அது முதல் முறை என்பதால் அந்த உணர்வை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. கனரக வாகனங்களில் பிரேக்கினை எப்படி கையாள வேண்டும் என்ற தெளிவு கூட எனக்கு கிடையாது. 

எங்க வீட்டின் கார் மட்டும்தான் நான் ஓட்டி பழகிய வாகனம். அந்த இரவு நேரத்தில் கனரக வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது நிறைய தடைகள் வந்தது. இருப்பினும் ஒரு வழியாக சேரவேண்டிய இடத்திற்கு சென்று சரக்குகளை பத்திரமாக ஒப்படைத்தேன்.

அங்கு என்னை வரவேற்க ஒரு கூட்டமே காத்திருந்தது” என்று கூறிய நீல்கமல் தாகூர் துணிச்சலாக கனரக வாகனத்தை இயக்கி இமாச்சலப் பிரதேச பாதையின் முதல் பெண் லாரி ஓட்டுநர் என்ற பாராட்டை பெற்றார். 

“29 வயதில் இருக்கும் போது ஒரு சாலை விபத்தில் என் கணவரை இழந்தேன். அதன்பின் என் ஐந்து வயது மகனையும் குடும்பத்தினரையும் நான்தான் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. என் கணவர் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றிருந்ததால், அதை ஈடுகட்ட முடியாத காரணத்தால், அவரின் இரண்டு ட்ரக்குகளையும் கைப்பற்றியது.

வயதான அம்மாவையும், பக்கவாதம் வந்த அப்பாவையும் வைத்துக்கொண்டு சமாளிக்க கஷ்டமாக இருந்தது. ட்ரக்குகள் இருந்தால், அதன் மூலம் கடனை கொஞ்சம் கொஞ்சமாக செலுத்துவிடுகிறேன் என்று பேசிய பிறகு தான் ட்ரக்குகளை மீட்க முடிந்தது. அதன் பிறகு என் கணவர் நிறுவிக்கொண்டிருந்த நிறுவனத்தை என் பொறுப்பில் எடுத்துக்கொண்டேன்.

எங்க கிராமத்தில் பெண்கள் யாரும் வாகனங்களை ஓட்டிப் பழகமாட்டார்கள். நானும் அப்படித்தான் வளர்ந்தேன். ஆனால், என் குடும்பத்தைக் காப்பாற்ற எனக்கு  அதைத்தான் தொழிலாக கையில் எடுக்க வேண்டி இருந்தது. மலைப்பகுதிகளில், இரவு நேரங்களில் சுமைகள் ஏற்றப்பட்ட கனரக வாகனங்களை இயக்குவது சவாலாக இருந்தது. தடைகளை தாண்டி சக்கரங்களை இயக்கினேன். என் நோக்கம் சரியானதாக இருந்ததால், என்னால் அந்த வேலையை செய்ய முடிந்தது.

அதே சமயம் ஒரு பெண்ணாக ஆண்களை வேலை வாங்குவதிலும் பல சிரமங்களை சந்தித்தேன். லாரி ஓட்டுனர்களை பணியமர்த்தும் போது அவர்கள் என்னை மதிக்கமாட்டார்கள். தாமதமாக வருவார்கள், சில நேரங்களில் லாரிகளை ஓட்ட மறுப்பு தெரிவிப்பார்கள். சிலர் சாவியை கையில் கொடுத்துவிட்டு எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் வேலையிலிருந்து நின்றுவிடுவார்கள். 

அன்றும் வழக்கமான ஓட்டுநர் மறுப்பு தெரிவித்ததால், அவர்களை மட்டுமே சார்ந்து நான் இல்லை என்பதை உணர்த்தவே எதைப் பற்றியும் சிந்திக்காமல் முதல் முறையாக இரவு நேரத்தில் கனரக வாகனத்தை இயக்கினேன்” என்றவர் அதன்பிறகு கின்னௌர், உனா, சிர்மௌர், தர்மசாலா மற்றும் லாஹவுல்-ஸ்பிடி போன்ற தொலைதூர இடங்களுக்கு இரவு, பகல் பாராது அதிக சுமைகள் ஏற்றப்பட்ட கனரக வாகனத்தை இயக்க ஆரம்பித்துள்ளார்.

வெயில், மழை, வெள்ளம், கடுமையான குளிர், பனிப்பொழிவு, நிலச்சரிவு, இயந்திரக் கோளாறுகள் போன்ற சாதகமற்ற சூழ்நிலை எதுவும் அவரை தடுக்கவில்லை. “துணிச்சலாக என் முதல் இலக்கை அடைந்த போது என்னை பாராட்டின சிமென்ட் கம்பெனி நிறுவனர் என்னை ஊக்குவித்தார். என்னுடைய அந்த செயலைப் பார்த்த மற்ற ஆண் ஓட்டுநர்கள் என்னை மதிக்கின்றனர். 

இரவு நேரங்களில் தனியாக வாகனம் ஓட்டும் போது எனக்கு துணையாக இருப்பது இசைதான். பாடல்களை கேட்டுக் கொண்டே வாகனத்தை இயக்கி இலக்கினை அடைந்திடுவேன். வாழ்க்கையில் சவால்களை ஏற்றுக்கொள்ளுங்கள். ஒருபோதும் நம்பிக்கையை விட்டுவிடாதீர்கள். எல்லாம் மாறும்” என மற்ற பெண்களுக்கு துணிச்சலான அறிவுரை தெரிவித்தார் நீல்கமல் தாகூர்.

ரம்யா ரங்கநாதன்

வாசகர் பகுதி


ஒப்பில்லாத ஓமம்!

* ஓமத்தை சுத்தமான துணியில் முடிந்து மூக்கால் உறிஞ்சினால் மூச்சுத்திணறலும், தலைவலியும் நின்று விடும்.

* ஓமத்தை வறுத்துப் பொடித்து, தேனில் குழைத்து, உணவு ஜீரணமாகாமல், கக்கி வாந்தி எடுக்கும் குழந்தைகளுக்கு கொடுத்தால் வாந்தி நின்று, ஜீரண சக்தி சீராகும்.

* ஓமத்தை துணியில் முடிந்து, வெந்நீரில் முக்கி, 3 ஸ்பூன் சாறு எடுத்து, தலைக்கு குளிப்பாட்டிய குழந்தைகளுக்கு குடிக்க தந்தால் சளி பிடிக்காது. வயிற்றுக்கும் நல்லது.

* வயிற்றுக் கடுப்பு சரியாக, ஓமத்தை மிளகுடன் சேர்த்து வறுத்துப் பொடித்து, வெல்லம் கலந்து, காலையிலும், மாலையிலும் உருட்டி சாப்பிட்டால் போதும்.

* ஓமம், சுக்குப்பொடி, வெல்லப் பொடியுடன்  தேனில் கலந்து உருண்டைகளாக்கி, இனிப்பு, கார தின்பண்டங்கள் சாப்பிட்டதும் எடுத்துக் கொண்டால் மந்தநிலை ஏற்படாது.

* ஓமம், மிளகு, சுக்கு இவற்றை வறுத்துப் பொடித்து, வெந்நீரில் சிறிது கலந்து பருக, வயிறு மந்தம் சரியாகி ஜீரணமாகும்.

- எஸ்.ராஜம்,  ஸ்ரீரங்கம்.