இளமை, ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் யோகா!



குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியோர் என அவரவர் உடல் அமைப்பிற்கும், வயதிற்கும், உடல் உழைப்பிற்கும் ஏற்ப ஆரோக்கியமான எளிய ஆசனங்களை சொல்லித் தருகிறார் யோகா ஆசிரியை பத்மபிரியதர்ஷினி. சென்னையை சேர்ந்த இவர் யோகா தெரபிஸ்ட் மட்டுமில்லாமல் யோகதத்துவா நிறுவன பயிற்றுனராக உள்ளார்.

ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக யோகா மற்றும் அக்குபங்சர் துறையில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, அதன் மூலம் யோகாவை மக்களிடம் எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பதற்கான சுவாரஸ்யமான வழியைக் கண்டுபிடித்துள்ளார்.  
யோகாவோடு அக்குபங்சர் மருத்துவ முறைகளையும் கற்றுத் தேர்ந்தவர், ஆரோக்கியமான வாழ்விற்கு யோகா எவ்வாறு உதவுகிறது என்பதையும் அதனை முறையாக கற்றுக்கொண்டு பயன் பெறுவது குறித்து விளக்குகிறார்.

யோகா பயிற்சிகள்...

யோகா மற்றும் அக்குபங்சர் இரண்டுமே உடல் வலிகளுக்கு சிறந்த மருந்து. அதனைப் பற்றி ஆராய்ந்த போதுதான் முதுகுவலி, இடுப்புவலி, தோள்பட்டை - முட்டி வலி, அல்சர் போன்ற வயிறு சம்பந்தமான பிரச்னைகளுக்கு யோகா - அக்குபங்சர் மூலம் நிரந்தர தீர்வு காணமுடியும் என்பதை அறிந்து கொண்டேன். 

இதனை அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் யோக தத்துவா மையத்தை  துவங்கி, எளிமையான யோகா பயிற்சிகளை கற்பித்து வருகிறேன்.

நான் அடிப்படையில் சாஃப்ட்வேர் இன்ஜினியர். ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தேன். கடந்த 12 ஆண்டுகளாக யோகா மற்றும் அக்குபங்சர் துறையில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறேன். ஐ.டி. துறையில் பணியாற்றிய போது, விபத்தில் சிக்கி கழுத்தில் பாதிப்பு ஏற்பட்டது. பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்டும் 2 ஆண்டுகளாக வலியை குணப்படுத்த முடியவில்லை. 

நான் ஏற்கனவே யோகா பயிற்சியினை மேற்கொண்டிருந்ததால், அதை செய்ய ஆரம்பித்தேன். சில வாரங்களிலேயே வலியில் இருந்து முழுவதும் விடுதலை கிடைத்தது. நான் கண்ட பயனை பலருக்கும் தெரிவிக்க விரும்பினேன். அதன் பிறகு யோகா மற்றும் அக்குபங்சர் குறித்து தீவிரமாக படிக்க ஆரம்பித்தேன். இப்போது பலருக்கு சொல்லித் தருகிறேன்.

யோகாவின் அவசியங்கள்...

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். இன்றைய அவசர யுகத்தில் சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த அழுத்தம் பலரையும் பாதிக்கிறது. தவறான பழக்கங்கள், முறையற்ற உணவு, தூக்கமின்மைதான் இந்த நோய்கள் ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது. வயதானவர்கள், இளைஞர்கள் முதல் பள்ளி செல்லும் மாணவர்கள் வரை சின்ன தலைவலி ஏற்பட்டாலும் அதற்கு மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. 

இந்த நிலையில்  யோகாசனத்தை முறையாக கற்றுக் கொண்டு தினமும் பயிற்சி செய்தாலே நோய்களில் இருந்து மீண்டு, ஆரோக்கியமாக வாழலாம். தினசரி யோகா பயிற்சியும், ஆரோக்கியமான சத்தான உணவும் ஒன்றிணையும் போது நோயிலிருந்து விரைவில் நிவாரணம் அடைய முடியும்.

யோகாவின் நன்மைகள்...

இன்று பலரும் கணினி முன் அமர்ந்து பார்க்கும் வேலையினைதான் பார்க்கிறார்கள். அதனால் கழுத்து, முதுகு மற்றும் மூட்டு சம்பந்தமான வலிகள் ஏற்படும். அதற்கு
எளிமையான யோகா பயிற்சிகள் நல்ல பலனை தரும். குறிப்பாக தற்போதைய வாழ்க்கை முறை மாற்றங்களால் ஏற்படக்கூடிய சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த அழுத்தம் போன்றவற்றில் இருந்தும் விடுபட தினமும் 15 நிமிடங்கள் மட்டுமே யோகா பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

யோகாவுடன் உணவுக்கட்டுப்பாடு, ஆரோக்கியமான சத்தான உணவுகள் தொடர்பாகவும் ஆலோசனை அளிக்கிறோம். என்ன உணவுகளை எந்த நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் கிடைக்கும் சத்துக்கள் குறித்தும் அறிவுறுத்துகிறோம். நாம் சாப்பிடும் உணவில் உள்ள சத்துக்கள்தான் உடல் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. அதனோடு யோகா இணையும் ேபாது ஏராளமான பயன்கள் கிடைக்கும்.

சர்க்கரை நோயில் இருந்து தற்காத்துக் கொள்ள யோகாசனங்கள் உள்ளன. அதன் மூலம் சர்க்கரை நோய்க்கான மருந்துகளை எடுப்பதை குறைக்கவும், பக்கவிளைவுகளை தடுக்கவும் முடியும். பலர் இரவு நேரங்களில் தூக்கமின்றி தவிக்கிறார்கள். 

இதற்கும் முறையான பயிற்சிகள் உள்ளன. மேலும் பல்வேறு நோய்களை கட்டுக்குள் வைக்கும் திறன் யோகாவிற்கு இருக்கிறது. யோகா, தியானம் போன்றவை உடல்நலனோடு மன நலனையும் பாதுகாக்கும். குறிப்பாக சர்க்கரை, மலச்சிக்கல், ரத்த அழுத்தம் போன்ற பல்வேறு நோய்களை எதிர்த்துப் போராடவும் யோகா உதவுகிறது.

கார்ப்பரேட் ஊழியர்கள், தொழில் துறையில் பணியாற்றுபவர்கள், குடும்பத் தலைவிகள், வேலைக்குப் போகும் பெண்கள், கல்லூரி மாணவிகள் என பலரும் ஆர்வமாக யோகா கற்க வருகிறார்கள். 

ஒருவர் தொடர்ந்து  யோகா செய்து வந்தால் வாழ்நாள் முழுவதும் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க முடியும்.யோகாவில் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என்கிற எண்ணங்கள் இருக்கிறது. வருங்காலத்தில் யோகாவின் பயன்கள் குறித்தும், சரிவிகித உணவு முறைகள் குறித்தும் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டிய அவசியம் எனக்குள்ளது’’ என பொறுப்புடன் பேசுகிறார், பத்மபிரியதர்ஷினி.

தனுஜா ஜெயராமன்