உயிரைக் காக்கும் தடுப்பூசிகள்!



தடுப்பூசிகள் பொது சுகாதார சாதனங்களில் ஒன்றாகும். எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றும்  கேடயமாக  உள்ளன.  அனைத்து வயதினரையும் கடுமையான மற்றும் ஆபத்தான நோய்களிலிருந்து தொடர்ந்து பாதுகாத்து வருகின்றன. தடுப்பூசிகள் பொதுவாக வைரஸ்கள் அல்லது பாக்டீரியா போன்ற குறிப்பிட்ட நோய்க்கிருமிகளுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, எதிர்காலத்திலும் அதனால் ஏற்படக்கூடிய நோயில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன.

பிறந்த குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்துவதன் மூலம் பல லட்சம் குழந்தைகளின் உயிர்கள் காக்கப்பட்டுள்ளன.  இந்தத் தடுப்பு மருந்தானது குறிப்பிட்ட வைரஸ் மற்றும் பாக்டீரியாவின்  நுண்ணுயிரில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அதனை உட்செலுத்தும் போது உடலில்  உள்ள அந்நியப் பொருளை கண்டறிந்து அழித்து நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும்.  

தடுப்பு மருந்து (Vaccine) என்பது ஒரு நோய்க்கான எதிர்ப்பாற்றலை ஊக்குவித்து அந்த நோயை உண்டாக்கும் கிருமிகளின் தாக்குதல்களிலிருந்து  உயிர்களைக் காக்கவோ அல்லது அதன் வீரியத்தை குறைக்க பயன்படுகிறது. உயிர்களை  காக்கும் தடுப்பூசிகள் குறித்த மாநாடு சென்னையில் கடந்த மாதம்  நடைபெற்றது. அதில் கர்ப்பிணி பெண்கள், பிறந்த குழந்தைகள் மற்றும் வளர்ந்த பெண்களுக்கு என்ன தடுப்பூசி அவசியம் என்று மருத்துவர்கள் விவரித்தார்கள்.

‘‘பொதுவாக குழந்தை பிறந்தவுடன் தான் நாம் தடுப்பூசிகளை போடுவது வழக்கம். ஆனால், இன்று  குழந்தை கருவில் இருக்கும் போதே அவர்களை பாதுகாக்க தடுப்பூசிகள் போடப்படுகிறது’’ என்றார் மகப்பேறு நிபுணரான டாக்டர் விஜயா. ‘‘கர்ப்ப காலத்தில் TT (Tetanus Toxoid) என்ற தடுப்பூசியினை தாய்மார்களுக்கு போடுவது வழக்கம்.  கருத்தரித்தவுடன் முதல் தடுப்பூசியும், நான்கு வாரம் கழித்து இரண்டாவது டோசேஜ் கொடுக்கப்படும்.

இப்போது Tdap (Tetanus, Dyptheria and Pertussis) என்ற தடுப்பூசி வழங்கப்படுகிறது. பாக்டீரியாவால் ஏற்படும் டெட்டனஸ் தசை  இறுக்கம் மற்றும் பக்கவாதத்தை ஏற்படுத்தும். டிப்தீரியா சுவாசப் பாதையை  பாதிக்கும். பெர்டுசிஸ் கடுமையான இருமலை ஏற்படுத்தும். இந்த நோய்  பாதிப்பில் இருந்து தாய் மற்றும் கருவில் இருக்கும் குழந்தையை பாதுகாக்க  உதவுகிறது. 

காரணம், குழந்தை பிறந்த ஆறு வாரம் கழித்துதான் இந்த ஊசியினை  குழந்தைக்கு போட வேண்டும். அதற்கு முன் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படாமல்  இருக்க கருவிலேயே போடப்படுகிறது. இவை தவிர நிமோனியா ஏற்படாமல் இருக்க  நீமோகாக்கல் (pneumococcal) மற்றும் நாய்க்கடியினால் ஏற்படும் பாதிப்பினை  தடுக்க ரேபிஸ் தடுப்பூசியும் கர்ப்ப காலத்தில் போடச் சொல்லி நாங்க வலியுறுத்தி  வருகிறோம்’’ என்றார் டாக்டர் விஜயா.

‘‘கருவில் தடுப்பூசி  போடப்பட்டாலும், குழந்தை பிறந்த நாள் முதல் அவர்களின் 16 வயது வரை தடுப்பூசிகள் உள்ளன. அவற்றை தவறாமல் டாக்டர்களின் ஆலோசனைப்படி போடுவது மிகவும் அவசியம். இது குழந்தைகளை மிகக் கொடிய நோயில் இருந்து  பாதுகாக்கும்’’ என்கிறார் குழந்தைநல நிபுணரான டாக்டர் சோமு சிவபாலன். ‘‘ஒரு  குழந்தை பிறந்தவுடன் BCG, பாக்டீரியாவால் ஏற்படக்கூடிய காசநோய்க்கான  தடுப்பூசி போட வேண்டும். இடதுகையில் போடப்படும் இந்த ஊசி தழும்பாக மாறும்.

அடுத்து போலியோ சொட்டு மருந்து மற்றும் Hepatitis B மஞ்சள் காமாலைக்கான ஊசி போடப்படும். இது ரத்தத்தினால் பரவக்கூடியது. இதில் Hepatitis A வகை மஞ்சள் காமாலை தண்ணீரில் உள்ள தொற்றினால் பரவும். Hepatitis B தடுப்பூசியினை  குழந்தை பிறந்த 15 நாட்களுக்குள் போட வேண்டும். ஆறு முதல் 10  வாரத்திற்குள் மறுபடியும் போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். இதனை  ஐந்து வயது வரை போட வேண்டும்.

ஆறு முதல் 14 வாரங்களில் Pentavalent  டிப்தீரியா, டெட்டனஸ், கக்குவான் இருமல், ஹெபடைடிஸ் பி, மூளைக்காய்ச்சல்  மற்றும் நிமோனியா போன்ற நோய்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கக்கூடிய  தடுப்பூசியினை குழந்தைக்கு செலுத்த வேண்டும். அதைத் தொடர்ந்து நிமோகாக்கல்  பிரைமரி மற்றும் பூஸ்டர் டோஸ் ஊசிகளை ஒரு வருஷத்திற்குள் போட்டுக் கொள்வது  அவசியம்.

ஒரு வயதிற்குள் ரோடோ வைரஸ் நோய்க்கான தடுப்பூசியும் போடலாம். இவை  தவிர மீசில்ஸ், ரூபெல்லா, அம்மை, காய்ச்சல், சளி போன்ற நோய்க்கான  தடுப்பூசியும் உண்டு. இதில் தற்போது புதிதாக சேர்க்கப்பட்டிருப்பது  ஜாப்பனிஸ் என்சிபிளாடிஸ் என்ற தடுப்பூசி. கொசுவினால் ஏற்படக்கூடிய இந்த வைரல் தொற்று மூளையினை பாதிக்கக்கூடும். இவை அனைத்தும் தற்போது பிறக்கும்  குழந்தைகளுக்கு போடப்பட்ட வருகிறது. 

இவற்றை போடுவது மிகவும் அவசியம் என்று சுகாதார துறை பெற்றோர்களுக்கு வலியுறுத்தி வருகிறது. இந்த வரிசையில் டெங்கு  மற்றும் RSV சுவாச மண்டலத்தை பாதிக்கக்கூடிய தொற்று ேநாய்க்கான தடுப்பூசிகள்  குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் வரும் காலத்தில் இந்த  நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாக்க முடியும்’’ என்றார் டாக்டர் சோமு  சிவபாலன்.

‘‘குழந்தைகளுக்கு பிறந்த நாள் முதல் அவர்களின் 14  வயது வரை பல தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும் முக்கியமாக பெண்  குழந்தைகளுக்கு HPV என்ற வைரஸ் தொற்றால் பரவக்கூடிய கேன்சர் நோய்க்கும்  இன்று தடுப்பூசி வந்துள்ளது. இதனை பெண் குழந்தைகள் மட்டுமில்லை ஆண்  குழந்தைகளுக்கும் அவசியம்’’ என்றார் மகப்பேறு மற்றும் புற்றுநோய் நிபுணரான  டாக்டர் ஜெயஸ்ரீ. ‘‘புற்றுநோய்கள் அனைத்தும் வைரஸ் கிருமியால் ஏற்படுவதில்லை.

ஆனால், சில வகை கேன்சர் வைரஸ் கிருமியின் பாதிப்பால் ஏற்படும். குறிப்பாக கர்ப்பப்பை  வாய், பிறப்புறுப்பு, ஆசன வாய் மற்றும் தொண்டையில் ஏற்படக்கூடிய  கேன்சர்களுக்கு முக்கிய காரணம் Human Papiloma Virus. இந்த வைரஸ் தொற்று பல  வகை இருந்தாலும் அதில் குறிப்பாக HPV 16 மற்றும் 18தான் முக்கிய  குற்றவாளிகள். இந்த குற்றவாளிகளை முற்றிலும் அழிக்கும் ஆயுதமாக இருக்கிறது  HPV தடுப்பூசி.

இதனை 9 முதல் 14 வயதுள்ள பெண் மற்றும் ஆண் குழந்தைகளுக்கு செலுத்துவதன் மூலம் அந்த வைரசிற்கான நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து  அவர்களுக்கு இந்த வகை புற்றுநோய் வராமல் பாதுகாக்கும். ஆண்  குழந்தைகளுக்கும் இந்த தடுப்பூசி போட முக்கிய காரணம் இந்த வைரஸ் கிருமி உடலுறவு காரணமாக பரவும். 

குறிப்பாக தொற்றுள்ளவர்களின் சருமம் மூலமாக மற்றவருக்கு பரவும். இந்த தடுப்பூசியினை திருமணமான மற்றும் 40 வயதிற்கு  மேலான பெண்களும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், 14 வயதிற்குள் போடும் போது  இருக்கும் மருந்தின் வீரியம், 45 வயதில் கொடுக்காது என்றாலும்  அவர்களுக்கும் அந்த நோய் வராமல் பாதுகாக்கும்.

இந்த தடுப்பூசி குறிப்பாக HPV   வைரஸ் நோய் கிருமியால் ஏற்படும் தொற்றினால் உண்டாகும் புற்றுநோய் வராமல்  தடுக்குமே தவிர மற்ற புற்றுநோயினை பாதுகாக்காது. மார்பக புற்றுநோயினை  சுய பரிசோதனை அல்லது மோமோகிராம் செய்து கண்டறியலாம். 

தற்போது உலகளவில் பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால் உலக சுகாதார அமைப்பு (WHO) கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்து உலகளவில் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறது’’ என்றார் டாக்டர் ஜெயஸ்ரீ.

செய்தி: நிஷா

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்