மனதில் விழும் கீறல்!
மூளையின் முடிச்சுகள்
மதம் மனிதனை மிருகமாக்கும் என்பார்கள். ஆனால், சில நேரங்களில் மதம் மனிதனின் அக வாழ்க்கையை நோயாக்கும் என்பதற்கும் ஒருசில உதாரணங்களை காண நேரிடுகிறது. இந்த உலகிலுள்ள அனைத்து அனுபவங்களையும் பெற ஒரு ஜென்மம் பத்தாது என்பது போல, மனிதர்களுக்கு ஏற்படும் விதவிதமான நம்பிக்கைகளால், அவர்களின் உறவுகள் படும் அவஸ்தையை பார்க்கும் போது, ஒரு ஜென்மம் மட்டுமல்ல, பத்து ஜென்மம் கூட பத்தாது என்பது நிரூபணமாகிறது.
 புராணக் காலத்தில் இருந்தே மத நம்பிக்கைகளை பல்வேறு விதங்களில் நாம் பார்த்து வருகிறோம். காரைக்கால் அம்மையார் சிவனின் மீதான காதலை வெளிப்படுத்த பேய் உருவம் கொண்ட வரத்தை கேட்டதும், ஆண்டாள் மனிதப்பிறவியில் இருக்கும் யாரையும் திருமணம் செய்ய மாட்டேன், இறைவனை விரும்புவதே தனது ஜென்ம பலன் என்ற ரீதியில், சூடிக்கொடுத்த சுடர்க்கொடியானதையும் நாம் படித்தும், பக்திப் பாடல்கள், உபந்யாசங்கள் வழியாகவும் கேட்டிருக்கிறோம்.
புராணகாலப் பெண்கள் மட்டும்தான் இப்படி இருந்தார்களா என்றால், அப்படியில்லை. இன்றும் இறைவனை விரும்பி தங்களை ஒப்படைக்கும் பெண்கள், இறைவனுக்கு தொண்டு செய்கிறேன் என்று தங்கள் எண்ணங்களை, செயல்களை முழுக்க முழுக்க அர்ப்பணிக்கும் பெண்கள் என்று பலவிதமாக பெண்கள் இருக்கிறார்கள்.
மதம் சார்ந்த கல்வி நிறுவனங்கள், ஆசிரமங்கள், தியான மண்டபங்கள், கோவில்களில் தங்களின் மனநிம்மதிக்காகவும், கவுரவத்துக்காகவும் கடவுளின் மீதான தீராத பற்றுக்கொண்ட நபர்கள் அதில் இணைகிறார்கள் அல்லது இணைக்கப்படுகிறார்கள்.
அங்கே அவர்கள் தொடர்ந்து கேட்கும் கதைகளும், உரையாடல்களும், போதனைகளும் அவர்களை மூளைச் சலவை செய்து, அதன் மூலமாக சிலரின் வாழ்க்கை புரட்டிப் போடப்படுகிறது. விளைவு, மன நிம்மதிக்காகச் சென்றேன் என்று சொல்பவர்கள், மன அழுத்தத்துக்குள் சென்றுவிடுவதை ஒருசில சம்பவங்கள் வழியே நாம் தொடர்ந்து காண நேர்கிறது.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பலவிதமான கனவுகளுடனே வளர்ப்பார்கள். அப்படித்தான் தங்களின் ஆசை மகளுடன் ஒரு பெற்றோர் வந்திருந்தனர். தங்கள் மகளை நன்றாகப் படிக்க வைத்து, நல்ல பதவியில் அமர்த்திப் பார்க்க ஆசைப்பட்டிருக்கின்றனர் அவர்கள். ஆனால், அந்த பெண்ணோ தான் கடவுளுக்கு மிகவும் பிடித்தவள், அவரை மட்டுமே காதலிப்பேன், அவரோடு மட்டும்தான் என்னுடைய காதலும், வாழ்வும் இருக்குமென கூறியிருக்கிறார்.
தங்கள் மகள், கடவுள் மீதான பக்தியில் இப்படி பிதற்றுகிறார், மாற்றிவிடலாம் என சாதாரணமாக நினைத்தனர் பெற்றோர். ஆனால் இது வெறும் பக்தியல்ல, அதிதீவிரமான மனப் பிறழ்வு என்பதை போகப்போக தங்கள் மகள் நடத்தை வழியாக உணர ஆரம்பித்தனர்.
குறிப்பிட்ட ஒரு கடவுளுக்கான விசேஷ தினத்தில், அப்பெண், நேர்த்தியாகவும் அழகாகவும் உடை உடுத்தி, தனது காதலனை சந்திக்கும் மனநிலையில், ஆசையோடு கிளம்பி இருக்கிறார். அந்தப் பெண்ணுடன் அவரின் அம்மாவும், சித்தியும் புதுப் புடவை உடுத்தி கோயிலுக்கு கிளம்ப, அவர்களின் புது உடையினை பார்த்த பெண், தனது இயல்புக்கு எதிரான போக்கில் அப்போது நடந்திருக்கிறார்.
தன் காதலனைப் பார்க்க செல்லும் போது இவர்களும் எப்படி அழகாக உடை உடுத்தி வரலாம் என்று அழுது, அரற்றி, சண்டையிட்டு, அவர்கள் கட்டியிருந்த புடவையை மாற்ற வைத்திருக்கிறார். சாதாரண புடவையில் அவர்கள் இருவரையும் பார்த்த பிறகே, இயல்பு நிலைக்கு வந்திருக்கிறார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகே, பெற்றோர் மருத்துவமனைக்கு பெண்ணை அழைத்து வந்தனர்.
பெண் குழந்தைகள் வளரும் போது மார்பக வளர்ச்சி, உடல் எடை குறைவு இவற்றை வைத்து வீடுகளிலும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் கிண்டலும் கேலியுமாகப் பேசுவது இயல்பு. குறிப்பிட்ட பெண்ணின் உடல் எடையும், மார்பக வளர்ச்சியும் சரியாக இல்லாததால், அவரின் திருமண வாழ்வை அண்டை வீட்டார் பகடி செய்திருக்கிறார்கள்.
எந்தவொரு ஆணாலும் காதலிக்கப்பட முடியாத அளவிற்கு தன் உடல்வாகு இருக்கிறது என யோசிக்க ஆரம்பித்த பெண், இதைப்பற்றி யாரிடம் பேசுவது என்று தெரியாத நிலையில், கடவுளிடம் வேண்டுவோம் என ஆரம்பித்த சாதாரண செயல், விபரீத நடவடிக்கை வரை அவரை கொண்டு சென்றிருக்கிறது. முதலில் தினமும் கோவிலுக்குச் செல்வது, சொற்பொழிவு, உபன்யாசம் கேட்பதெனத் தொடங்கி, பிறகு தொடர்ச்சியாகச் சொல்லப்படும் பக்திக் கதைகளில் வருகிற ஆண் கடவுளை பெண்கள் நேசிப்பதைப்போல, தானும் கடவுளை நேசித்து, அவரையே திருமணம் செய்து கொள்ளலாம் என்கிற அளவிற்கு கற்பனையை வளர்த்திருக்கிறார். விளைவு, நிஜ வாழ்வை தவிர்த்து கற்பனை வாழ்விற்குள் தன்னை தொலைத்திருக்கிறார்.
இந்தப் பெண்ணின் பிரச்னை தொடங்கிய முக்கிய இடம் புல்லிங் எனச் சொல்லப்படுகிற கேலி மற்றும் கிண்டல். இன்றைக்கும் பள்ளிகளில் மூன்றில் ஒரு மாணவர் புல்லிங் செய்யப்படுகிற காரணத்தால்தான், வளரிளம் பருவத்திலும், வளர்ந்த பின்னும்கூட அவர்கள் தீவிர மன உளைச்சலில் சிக்குகின்றனர் என்கிறது ஒருசில மனநல ஆய்வுகள்.
இதன் காரணமாக அவர்களின் ஒட்டு மொத்த திறமையுடன், அவர்களின் வாழ்வும் சேர்ந்தே வீணாகும் அளவிற்கு குறிப்பிட்ட குழந்தையின் எதிர்காலம் மாறிப்போகலாம். மனிதர்கள் உணர்வுகளில் மென்மையானவர்கள். அதில் சிறு கீறல் விழும் போது, அவர்களின் வாழ்வும் தலைகீழாக புரட்டிப் போடப்படும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
காயத்ரி மஹதி, மனநல ஆலோசகர்
|