வெயிலுக்கு குளுகுளு காட்டன் பேன்ட்ஸ்!



‘‘வெயில் காலத்தில் காட்டன் உடை அணிய வேண்டும். அதே போல் இறுக்கமான உடைகளை தவிர்க்க வேண்டும் என்று பலரும் அறிவுரைக் கூறுவதை கேட்டிருப்போம். ஆனால் இது போன்ற உடைகளை வெயில் காலத்தில் மட்டுமில்லை, நாம் வாழ்நாள் முழுக்க அணிவதுதான் சிறந்தது. குறிப்பாக பெண்களுக்கு’’என்கிறார் திருப்பூரைச் சேர்ந்த அபிராமி. 
காரணம்,பெண்கள் இறுக்கமான உடை அணிவதால், அவர்களுக்கு உடலில் சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறார். அந்த அனுபவம்தான் அவரை காட்டன் பேன்ட்டுகளை தயாரித்து விற்பனை செய்ய தூண்டி இருக்கிறது.

‘‘சொந்த ஊர் திருப்பூர் தாராபுரம். பொள்ளாச்சியில் கல்லூரிப் படிப்பை  முடிச்சிட்டு அவினாசியில் உள்ள வங்கியில் வேலைக்கு சேர்ந்தேன். இதற்கிடையில் திருமணம், குழந்தைகள் என்றானதால், குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதால், வேலையை ராஜினாமா செய்தேன். 

ஆனால் எனக்கு சின்ன வயசில் இருந்தே தனித்துவமாக உடைகள் அணிய விருப்பம். மற்றவர்கள் போடும் அதே டிசைன் உடைகளை நான் தேர்வு செய்ய மாட்டேன். அதே போல் தனித்துவமான தொழில் செய்யவும் ஆசைப்பட்டேன். குறிப்பாக நான் செய்யும் பிசினஸ் எல்லோருக்கும் பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

அதனால் வேலையை விட்ட பிறகு என்ன செய்யலாம் என்று பல சிந்தனையில் ஈடுபட்டேன். அந்த சமயத்தில் என் சகோதரிக்கு PCOD பிரச்னை ஏற்பட்டது. அதற்கான சிகிச்சைக்கு போன போது டாக்டர் சொன்ன அந்த விஷயம்தான் என்னை இந்த பிசினஸ் செய்ய தூண்டியது என்று சொல்ல வேண்டும்’’ என்றவர், காட்டன் பேன்ட்ஸ் குறித்து விவரித்தார்.

‘‘முன்பெல்லாம் நாம் சுடிதார், பேன்ட் போடுவது வழக்கமாக இருந்தது. அது காற்ேறாட்டமாக இருக்கும். அணிவதற்கும் சவுகரியமாக இருக்கும். அதற்கு மாற்றாக வந்ததுதான் லெக்கின்ஸ். உடைக்கு ஏற்ப பல வண்ண நிறங்களில் இவை கிடைக்க ஆரம்பித்தது. அணிவதும் எளிது என்பதால் பெண்கள் இதை விரும்ப ஆரம்பித்தாங்க. ஆனால் இந்த உடை உடலை இறுக்கிப் பிடிப்பதாலும் காற்றோட்டம் இல்லாத காரணத்தாலும், பல பெண்களுக்கு வெஜைனல் பிரச்னை ஏற்படுவதாக என் சகோதரியை பார்த்த டாக்டர் சொன்னார்.

அவளை காற்றோட்டமான பேன்ட்டுகளை அணியச் சொல்லி ஆலோசனை வழங்கினார். நாங்க தேடிப் பார்த்த போது எல்லா இடங்களிலும் லெக்கின்ஸ்தான் இருந்தது. அப்பதான் காட்டன் பேன்ட்டுகளை நாமே தயாரித்தால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டது. உடலுக்கும் நல்லது. சருமத்துக்கும் பாதுகாப்பு என்பதால் அதையே பிசினஸா செய்ய நினைச்சேன்.

தையல் தொழில் என்று முடிவாகிவிட்டது. அதனால்  அதற்கான இயந்திரங்கள் வாங்கினேன். அடுத்து தையல் குறித்து பயிற்சியும் எடுத்தேன். மூன்றாவது கட்டம் என்ன துணியில் பேன்ட்டுகளை தயாரிப்பது என்ற கேள்வி. முழுக்க முழுக்க பருத்தியை தேர்வு செய்த போது, அது நம் உடலுக்கு ஏற்ப வளைந்து கொடுக்கவில்லை. 

ஒரு மாத தேடலுக்குப் பிறகு பருத்தி மற்றும் லைக்ரா இரண்டும் இணைந்த துணியினை கண்டறிந்தேன். இதில் பேன்ட்டுகளை தைத்து டிரையல் செய்தோம். சருமத்திற்கு மிகவும் மென்மையாக இருந்தது. மேலும் என்நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கொடுத்து பயன்படுத்த சொன்னோம். அவர்களும் பாசிடிவ் கமென்ட் கொடுத்ததால், அப்படித்தான் ‘வண்ணமாயிரம்’ உருவானது’’ என்றவர், பல பயிற்சிகள் மேற்ெகாண்டு முழுமையாக தையல் கலையை பயின்றுள்ளார்.

‘‘என் மகனுக்கு இரண்டு வயது என்பதால் என்னால் முழு நேரம் தைக்க முடியாது. அதனால் இரண்டு பெண்களை நியமித்தேன். அவர்கள் தையல் கலைஞர்கள் என்றாலும் என்னுடைய ஸ்டைலில் பேன்ட் தைக்க பயிற்சி அளித்தேன். நான் கட்டிங் செய்து கொடுத்திடுவேன். அவர்கள் தைத்து விடுவார்கள். நாங்க 30க்கும் மேற்பட்ட பேன்ட் டிசைன்களை வடிவமைக்கிறோம். முதலில் அனைத்து சைஸ்களிலும் நாங்க பேன்ட்டுகளை தைத்து வைத்திருந்தோம்.

ஆனால் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட நிறத்தில் வேண்டும் என்று கேட்டதால், பல பேன்ட்டுகள் விற்காமல் தங்கிப் போனது. அதனால் இப்போது ஆர்டர் முறையில் தைத்து தந்தாலும், கருப்பு, வெள்ளை மற்றும் கிரீம் போன்ற நிற பேன்ட்டுகள் மட்டும் எப்போதும் எங்களிடம் ஸ்டாக் இருக்கும்.

பொதுவாக பேன்ட் அணிபவர்கள் நீளமாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். நாங்க ஸ்டான்டர்ட் அளவு மற்றும் உயரத்திற்கு ஏற்ப டிசைன் செய்கிறோம். அதனால் கொஞ்சம் உயரம் அதிகமாக இருப்பவர்கள் அவர்களின் உயரத்திற்கு ஏற்ப தைத்து தரச்சொல்லி கேட்டார்கள். அவர்களிடம் அளவு பெற்று அதற்கேற்ப தைத்து தருகிறோம். அதிகபட்சம் ஐந்து நாட்களுக்குள் டெலிவரி செய்திடுவோம். தமிழகம் மட்டுமில்லாமல் தில்லி மற்றும் வெளிநாட்டிற்கும் ஆர்டரின் பேரில் டெலிவரி செய்கிறோம்.

என்னுடைய யூனிட் பெரியது எல்லாம் கிடையாது. மூன்று பேரைக் கொண்டு தான் நான் இந்த பிசினசை நடத்தி வருகிறேன். ஒரு நாளைக்கு ஆறு பேன்ட் தைக்க முடியும் என்பதால் என்னால் ஆர்டர்களை சரியாக டெலிவரி செய்ய முடிகிறது. முழுக்க முழுக்க ஆன்லைன் முறையில்தான் பிசினஸ் செய்து வருகிறேன். 

அதன் மூலம் பலரை அணுக முடிகிறது. இந்த காட்டன் பேன்ட்டுகளை கல்லூரி பெண்கள் முதல் வேலைக்கு செல்லும் பெண்கள் அனைவரும் அணியலாம்’’ என்று கூறும் அபிராமி வரும் காலத்தில் தன் யூனிட்டினை விரிவுபடுத்தி மேலும் பல டிசைன்கள் மற்றும் நிறங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்தார்.

ஷன்மதி

வாசகர் பகுதி

முக அழகை பராமரிக்க!

பெண்களின் முக அழகைக் கெடுக்கும் முகப்பருக்களை வராமல் தடுக்க என்ன செய்யலாம்...

*ரோஜா மலரின் இதழ்களை பன்னீர் விட்டு அரைத்து, அதைத் தொடர்ந்து முகத்தில் தடவி, கழுவி வந்தால் தொடக்க நிலையில் உள்ள முகப்பருக்கள் அகன்று விடும். முகமும் பளபளப்பாகும்.
 
*சந்தனத்தை தினமும் புதிதாக அரைத்து பருக்களின் மேல் தடவலாம்.

*கடைகளில் கிடைக்கும் புனுகை வாங்கி பருக்கள் மேல் தடவி வந்தால் பருக்கள் உதிர்ந்து விடும்.

*தேங்காய் எண்ணெய், எலுமிச்சை சாறு, சந்தனம் மூன்றையும் அளவான முறையில் கலந்து வைத்துக் கொண்டு தொடர்ந்து தடவி வந்தால் முகப்பரு அகலும்.

*வெங்காயத்தை பாதியாக நறுக்கி, பரு உள்ள இடத்தில் அழுத்தி தேய்த்தால் பரு இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

*ஜாதிக்காய், சந்தனம், மிளகு மூன்றையும் சம அளவாக எடுத்து, விழுதாக அரைத்து, பருக்களின் மேல் தடவி வந்தால் முகப்பரு மறைந்து விடும்.

*இரவு படுக்கைக்குச் செல்லும் முன், எலுமிச்சம் பழத்தை பாதியாக நறுக்கி, முகப்பரு உள்ள இடத்தில் லேசாக பூசி, சில நிமிடங்கள் ஊறவைத்து, பின்னர் குளிர்ந்த நீரால் கழுவி வந்தால் முகப்பரு அகன்று விடும்.

*முகப்பரு அகன்று இடத்தில் ஏற்படும் கரும்புள்ளியை நீக்க தினமும் காலை, மாலை, இரவு மூன்று வேளையும் படிகாரத்தை ஊறவைத்து, அந்த தண்ணீரால் முகத்தை கழுவலாம்.

- அ.திவ்யா, காஞ்சிபுரம்.