சிறுகதை-தடுப்புச் சுவர்



வகுப்பறையில் இருந்த சுனிதா டீச்சர் செல்போனின் அதிர்வு சத்தத்தில் கவனம் கலைந்து எடுத்துப் பார்க்க, ‘மாதவன்’ என்று டிஸ்ப்ளேயில் வந்தது.
அந்த நேரத்தில் எதுவும் அவசரமில்லாமல் கணவன் அழைக்க மாட்டானே?

“என்னங்க, என்ன விஷயம்?”

“கொஞ்சம் உடம்பு சரியில்லை. உடனே புறப்பட்டு வா...” ஃபோனை வைத்துவிட்டான் மாதவன்.அன்று சனிக்கிழமையாதலால், அரை நாள் பள்ளி. பள்ளி நேரம் முடிய இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது. உடனே தலைமை ஆசிரியரிடம் விஷயத்தை சொல்லிவிட்டு, வீட்டுக்கு ஆட்டோவில் புறப்பட்டாள் சுனிதா.

வீட்டிற்கு செல்லும் வழியில் எல்லாம் என்ன ஆயிற்று இவருக்கு திடீரென்று? காலையில் நன்றாக இருந்த மாதிரிதானே தெரிந்தது? என்று யோசிக்கும் போதே வீடு வர, ஆட்டோக்காரரிடம், “இதோ வந்து விடுகிறேன். 

கொஞ்சம் இருங்கள்” என்று கூறினாள். “பரவாயில்லை மேடம், வெயிட் செய்கிறேன்” என்றார் ஆட்டோ ஓட்டுநர்.லிஃப்ட்டில் 3 ஆம் மாடியை அடைய, அவர்கள் வீட்டு ஃப்ளாட் கதவு திறந்திருக்க, ஹாலின் சோஃபாவில் சாய்ந்து அமர்ந்திருந்தான் மாதவன்.

அவன் அருகிலிருந்த மருத்துவ குறிப்புகள் அடங்கிய ஃபைலை எடுத்துக் கொண்டு லிஃப்ட்டில் நுழைந்து, சோர்வாக சுவற்றில் சாய்ந்து நின்று கொண்டான். அதற்குள் பீரோவிலிருந்து கணிசமான பணம், ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை எடுத்துக் கொண்டு தாமும் லிஃப்ட்டினுள் நுழைந்தாள் சுனிதா.

லிஃப்ட் கீழ்தளத்தை அடைய, வெளியில் கால் வைத்த மாதவன் தடுமாறினான். ஆட்டோ டிரைவர் ஓடி வந்து ஒரு புறம் பிடிக்க, மறுபுறம் சுனிதா பிடிக்க ஒருவாறு ஆட்டோவில் ஏற்றினர்.

வழக்கமாக மாதவன் செல்லும் அமைந்தக்கரையில் உள்ள அந்தப் பெரிய மருத்துவமனைக்கு ஆட்டோவை போக சொல்லிவிட்டு, பெரிய மகனுக்கு ஃபோன் செய்து உடனே மருத்துவமனைக்கு வர சொன்னாள் சுனிதா. பொறியியல் கடைசி வருடம் படிக்கும் அவனுக்கு அன்று விடுமுறை. ஆனால் நண்பர்களுடன் குரூப் ஸ்டடியில் இருந்தவன் அம்மாவின் குரலில், நிலைமையை புரிந்துகொண்டு, “உடனே வரேன்ம்மா” என்றான்.

“சுனிதா, மயக்கம் வர மாதிரியிருக்கு. உன் மேல் சாஞ்சுக்கட்டுமா?”

“என்னங்க, இப்படி எல்லாம் கேட்கறீங்க?” மனம் துணுக்குற, அவனை தோளில் சார்த்திக் கொண்ட சுனிதா, “டிரைவர், கொஞ்சம் வேகமாக போங்க” என்றாள்.ஒருவாறு ஆட்டோ மருத்துவமனையை அடைய, மாதவனால் எழ முடியவில்லை.

நிலைமையை உணர்ந்த ஆட்டோ டிரைவர், ரிசப்ஷனில் சொல்ல, தூக்கப் படுக்கையுடன் விரைந்து வந்து மாதவனை அதில் கிடத்தினர்.அதற்குள் அங்கு வந்த மருத்துவர், “என்ன ஆச்சு சார்?” என்று வினவினார்.“நேத்திலிருந்து யூரின் போக முடியலை சார். இன்னிக்கு ஒரே மயக்கமாயிருக்கு...” குழறிய குரலில் கூறிய மாதவன் உணர்விழந்தான்.

“மேடம், இவருக்கு ஏதாவது உடம்பு சரியில்லாமல் இருந்ததா? அதற்காக மருந்து ஏதாவது சாப்பிட்டாரா?

வயிற்றில் வலி ஏதாவது இருக்கா? காலையில் என்ன சாப்பிட்டார்?” டாக்டர் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக, “டாக்டர், அவருக்கு மூன்று மாதங்களாகவே கொஞ்சம் உடம்பு சரியில்லை. ஆனா, என்ன உடம்புக்கு, அதுக்கு என்ன சாப்பிட்டார்னு எனக்குத் தெரியாது...” சுனிதா கூறினாள்.

சட்டென்று ஞாபகம் வர, ஃபைலை எடுத்து நீட்டினாள். “அவருக்கு உடம்புக்கு எது வந்தாலும், இங்கேதான் வருவார் டாக்டர். இதுதான் அந்த ஃபைல்...”“இவரை அட்மிட் பண்றோம் மேடம், நீங்க வெளியில் வெயிட் பண்ணுங்க...”சுனிதா வெளியில் வர மூத்த மகன் அருணும், பத்தாம் வகுப்பு படிக்கும் மனோஜும் சுனிதாவின் அண்ணன் லிங்கம் மற்றும் அண்ணி பத்மாவுடன் வருவதைப் பார்த்தாள். அவர்கள் அருகில் வரவர, அவளுக்கு கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வடிந்தது.

அம்மா அழுவதைப் பார்த்து, மனோஜும் அழ, அம்மாவின் தோளை சுற்றி கைப்போட்டான் அருண்.“சுனிதா, நீ ஒன்னும் கவலைப்படாதேம்மா. அதுதான் அண்ணன்
வந்துட்டேன் இல்ல...” அண்ணன் ஆறுதல் அளிக்க, சீஃப் டாக்டர் அழைப்பதாக கூறினாள் சிஸ்டர்.பதைபதைக்கும் மனதுடன் உள்ளே சென்றனர் சுனிதாவும், லிங்கமும்.
“இவருக்கு முதலில் சிக்கன் குனியா நோய் வந்திருக்கு. அதுக்கப்புறம் மஞ்சள் காமாலையும் வந்திருக்கு.

குணமடையும் தருவாயில் அவருக்கு ரத்தத்தில் ப்ளேட்லெட்ஸ் குறைஞ்சிருக்கு. சில பரிசோதனைகள் செஞ்சிருக்கோம். அதன் முடிவுகள் வந்தால்தான் இவருக்கு லிவர் அல்லது கிட்னி பாதிக்கப்பட்டிருக்கானு தெரியும். இன்னிக்கு இரவுக்குள் மயக்கம் தெளிஞ்சுதுன்னா, பெரிய சிக்கல் எதுவும் இல்லைன்னு அர்த்தம். 

பார்க்கலாம்...” சுனிதா கண்களை மூடிக் கொண்டாள். பழைய நினைவுகள் அலையடித்தன.திருமணம் முடிந்து வரும் போது, சுனிதா +2தான் படித்திருந்தாள். அவளை அறிவியலில் பட்டமேற்படிப்பு படிக்க வைத்து, மந்திரி ஒருவரின் சிபாரிசின் மூலம் அரசு பள்ளியில் வேலை வாங்கிக் கொடுத்தது மாதவன்தான். மனைவியிடம் மிகவும் ஆசை அவனுக்கு.

“பன்னி, பன்னி, காபியை ஆத்திக் குடுக்கணும்னு கூட தெரியாதா? இப்படி சூடா தர? கிராமத்துல இருந்த நீ கல்யாணத்துக்கு முன்பு எங்கே காபி குடிச்சிருப்ப? நீச்ச தண்ணி குடிச்சதுனாலதான் ஒன்னும் தெரியல…”இது மாதிரி இருக்கும் அவன் திட்டுவது. அதுவும் நாத்தனார்கள் எதிரில் திட்டும் போது கௌரவ குறைச்சலாக கருதி, குன்றிப் போவாள் சுனிதா. 

எப்போதும் மட்டம் தட்டும் மாதவனிடமும் பேச்சு குறைந்தது. நாமும் அவரைப் போல் கை நிறைய சம்பாதிக்கிறோம். ஏன் அவருக்கு அடிபணிய வேண்டும் என்று எதிர்த்துப் பேச தொடங்கினாள். இதனால் அடிக்கடி சண்டை ஏற்பட எது சொல்ல வேண்டியது இருந்தாலும், பையன்களிடம் சொல்லி, அவனிடம் கூற சொல்லி விடுவாள்.

மாதவன் தன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டான். வீட்டில் டைனிங் டேபிளில் எல்லாவற்றையும் எடுத்து வைக்கும் சுனிதா, பசங்களுக்கு பார்த்து பார்த்து பரிமாறுவாள். ஆனால், மாதவன் சாப்பிட வரும் போது, அப்போது தான் சுவாரஸ்யமாக தொலைக்காட்சி நாடகங்களை பார்ப்பது போல் இருக்கவே, ஒன்று, இரண்டு நாட்கள் அவளை கூப்பிட்டு பார்த்த மாதவன், அவள் வராததால், தானே எடுத்துப் போட்டுக் கொண்டு, ஏனோ தானோ என்று சாப்பிடத் தொடங்கினான்.

ஒருமுறை அலுவலக வேலை விஷயமாக கட்டிட வேலை நடக்கும் ஒரு இடத்திற்கு செல்ல, ஏதோ ஒரு பூச்சி காலில் கடித்துவிட்டது. வீட்டில் இருக்கும் மருந்தை தடவிப் பார்த்தும் சரியாகாமல் டாக்டரிடம் செல்வதற்கு, சுனிதாவை கூட வரும்படி அழைக்க, அவள் அன்று பள்ளிக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும். 

லீவு போட முடியாது என்று நிர்தாட்சண்யமாக சொல்லி விட, தனியாகவே டாக்டரிடம் சென்றான் மாதவன். டாக்டர் பார்த்து விட்டு, காயம் செப்டிக் ஆகிவிட்டது. அதை குணப்படுத்த, தினமும் காயத்தை சுத்தப்படுத்தி, டிரெஸ்சிங் பண்ண வேண்டும் என்று கூறி விட, தனியாக மருத்துவமனைக்கு போக முடியாமல், வீட்டிற்கே ஒரு நர்ஸை வரவழைத்து, 3 மாதங்கள் டிரெஸ்சிங் செய்த பின்தான் அந்தக் காயம் ஆறியது.

இது நடந்து 3 மாதங்கள் ஆகிவிட்டது. அப்போதிலிருந்தே மாதவன் உடல்நிலை தேறவில்லை. ஒன்று மாற்றி ஒன்று உடம்பிற்கு வந்துகொண்டே இருந்தது. ஆனால் சுனிதா அதைப் பற்றியெல்லாம் கண்டு கொள்ளவேயில்லை. அவள் உண்டு, அவள் வேலை உண்டு, மகன்கள் உண்டு என்று வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

பழைய நினைவுகளிலிருந்து கலைந்தாள் சுனிதா.அவள் அமர்ந்திருந்த இருக்கைகளின் அருகில் இருந்த தூணின் அந்தப் புறத்தில் இருந்து நாத்தனார்களின் குரல் கேட்டது. “ராணி, நம்ம அண்ணனுக்கு ஒன்னுன்னா, அண்ணியை சும்மா விடக்கூடாது” என கலாவும் “ஆமாம்டி, அவங்கள படிக்க வைத்து, வேலை வாங்கிக் கொடுத்த அண்ணனை இப்படி படுக்க வைச்சுட்டாங்களே... மலை மாதிரி இருப்பார் அண்ணன்.

அவங்களை எப்படி சும்மாவிட முடியும்?” என ராணியும் பேசும் குரல் கேட்டு துணுக்குற்றாள் சுனிதா. ஐயய்யோ, இவங்க இப்படி பேசறாங்களே... மாதவனுக்கு ஏதாவது ஆகிவிடுமோ? அப்படி ஆகிவிட்டால் நம் கதி? சிறு வயது மகன்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது? நமக்கு பள்ளி வேலை, வீட்டு வேலை தவிர வேறு எதுவும் தெரியாதே? எல்லாவற்றையும் அவர்தானே பார்த்துப்பார் என்று பலவாறு நினைக்க, “வாங்கம்மா, சுனிதா இங்கே இருக்கா” என்று நாத்தனார்களை அருகே கூட்டி வந்தார் அண்ணன்.

அதே நேரத்தில், “சுனிதா யாரும்மா? கொஞ்சம் உள்ளே வாங்க. டாக்டர் கூப்பிடறாங்க...” நர்ஸ் அழைக்க, இதயம் துடிக்க சுனிதா உள்ளே நுழைந்தாள். “உங்க கணவர் அபாயக் கட்டத்தை தாண்டிட்டார். சில காம்ப்ளிகேஷன்ஸ் இருக்கு. அதனால, ரெண்டு மூணு நாள் இங்கேயே இருந்து சரி பண்ணிக்கிட்டுப் போங்க. நல்ல சத்தான உணவுகளை குடுத்தா, ஒரு மாசத்துல ‘ஜம்’ முனு ஆயிடுவார். ஊட்டச்சத்துக் குறைவால் அனீமிக்கா இருக்கார்.

இப்ப அவரைப் போய் பாருங்க...” டாக்டர் சொல்ல, ஐ.சியூவிற்குள் அவர்கள் நுழைந்தனர். அங்கே படுத்திருந்த மாதவன், கண்களை அனைவரை நோக்கியும் சுழலவிட்டு, சுனிதாவை பார்த்தவுடன் கண்கள் பிரகாசிக்க, “சுனிதா என் கூடவே இருப்பியா” என்று கேட்க, “உங்களை விட்டு நான் எங்கேயும் போக மாட்டேன்” என்று சுனிதா கூறினாள்.

என்னதான் படித்து, பெரிய வேலையில் இருந்தாலும், கணவனுடன் இருந்தால்தான் சமூகத்தில் மரியாதை என்று சுனிதாவும், தன் துணைக்கு அனைவர் முன்பும் மரியாதை கொடுப்பதே சரியான தாம்பத்தியம். கடைசி வரை தன்னுடன் இருக்கப் போகும் - தன்னில் சரி பாதியான மனைவிக்கு நிகர் அவள்தான் என்பதை மாதவனும் புரிந்துகொண்டனர். அவர்கள் இருவருக்குமிடையே இருந்த ‘ஈகோ’ என்னும் தடுப்புச் சுவர் அங்கே தவிடுபொடியானது. இந்த நிம்மதியான மனநிலை அவனுக்கு உடல் நிலை தேற நிச்சயம் கை கொடுக்கும்.

 வி.ஜி. ஜெயஸ்ரீ

வாசகர் பகுதி

இளநீர்... இளநீர்...

நாம் அருந்தும் பானங்களிலேயே இளநீர்தான் சுத்தமானதும், சத்து நிறைந்த தாகும். இளநீரில் சர்க்கரை, கொழுப்பு, பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம், கால்சியம், சல்பர், பாஸ்பரஸ், குளோரின் மற்றும் வைட்டமின் சியும் பி காம்ப்ளெக்ஸும் உள்ளன.

*கோடையில் தினமும் இரண்டு இளநீர் குடித்து வந்தால் சிறுநீர் கடுப்பு நீங்கும். உஷ்ணத்தால் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்தும்.

*வழுக்கை இல்லாத இளநீரை பகல் உணவுக்குப் பிறகு குடித்தால் உணவு எளிதில் ஜீரணமாகி, நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

*இளநீர் கொண்டு அம்மை தழும்புகளை கழுவினால் வடு மறையும்.

*தினமும் வெந்நீரில் சிறிது இளநீர் கலந்து முகத்தை கழுவினால் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பொலிவு பெறும்.

*இளநீரில் உள்ள பொட்டாசியம் இதயத்திற்கு பலன் தரும்.

*பேதி, மயக்கம், அசதி ஏற்படும் போது இரண்டு டம்ளர் இளநீர் சாப்பிடலாம்.

*உடம்பெல்லாம் அனல் போல் தகித்தால் இளநீர் ஒரு நாளைக்கு மூன்று முறை பருகினால் தேக சூடு குறையும்.

*உடல் சூட்டை கட்டுப்படுத்தி மலச்சிக்கல், வயிற்றுப் புண், வாய்ப்புண் போன்ற பாதிப்புகளை சரி செய்யும்.

*கோடை காலத்தில் உடலுக்குத் தேவையான நீர்சத்து வெளியேறும். அதை மீண்டும் உடலுக்கு அளிக்க இளநீர்தான் சரியான தீர்வு.

*நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வைரஸ் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும்.

*சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும்.

- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.