கிச்சன் டிப்ஸ்
* புளித்த மோரில் ஜவ்வரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து, அரைத்து அதனுடன் ரவை, மைதா, உப்பு தேவையான அளவு சேர்க்கவும். இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து அரைத்த விழுதையும் கலந்து, உருண்டைகளாக்கி ஆவியில் வேக வைத்து எடுத்து ‘சட்னி’யுடன் பரிமாறலாம்.  * தினமும் ரசம் தயாரிக்கும்போது, எலுமிச்சை இலை, வெற்றிலை, கற்பூரவல்லி இலை, கொய்யா இலை என இவற்றில் ஏதாவதொன்றை சேர்த்துக்கொள்ள மருத்துவக் குணம் நிறைந்த ரசம் கிடைக்கும்.
* ரசம் தயாரித்து இறக்கும் போது பன்னீர் சில துளிகள் சேர்த்தால் ‘பன்னீர் ரசம்’ அலாதியான மணம் வீசும்.
* ரசத்துக்கு புளி சேர்ப்பதற்குப் பதிலாக நாரத்தம் பழத்தைப் பிழிந்த சாறினை சேர்க்கலாம்.
- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.
* சப்பாத்தி தயாரித்த பின் வெள்ளைத்துணியை நினைத்துப் பிழிந்து அதை சப்பாத்தி வைத்த பாத்திரத்தில் மூடி அதற்கு மேல் மூடியை போட்டு மூடினால் மிருதுவாக இருக்கும்.
* குங்குமப்பூவை எதில் கலப்பதால் இருந்தாலும் சிறிது பாலில் கலந்து சேர்க்க நிறமாக இருக்கும்.
* தேங்காய் பர்ஃபி செய்யும் போது ஒரு கைப்பிடி முந்திரியைப் பொடி செய்து தயாரிக்க மிகச் சுவையாக இருக்கும்.
- ஜி.இந்திரா, திருச்சி.
* அடை மாவை இட்லித்தட்டில் ஊற்றி வேக விட்டு அதை உதிர்த்து உசிலிக்கறி செய்தால் மிகவும் ருசியாக இருக்கும்.
* புளிக்குப் பதிலாக குழம்பு, ரசத்தில் பாதி புளியும், சிறிது ஆம்சூர் (மாங்காய்) பொடியும் சேர்த்தால் நன்றாக இருக்கும். உடலுக்கும் நல்லது.
* கட்லெட் செய்யும் போது பிரெட் தூள் இல்லாவிட்டால் சிறிது ரவையில் புரட்டி எடுத்துப் பொரிக்கலாம்.
* வடைக்கு உளுந்தை அரைத்த கையோடு வடை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் வடை அதிக எண்ணெய் குடிக்கும்.
* குலோப் ஜாம் மிக்ஸில் சிறிது உப்பு, காரம், வெங்காயம் சேர்த்து பிசைந்து உருட்டிப் போட்டு பொரித்தெடுத்தால் ருசியான மெது பக்கோடா தயார்.
- ஆர்.எம்.பிரதிக்ஷா, அசூர்.
* புளியை கொஞ்சம் கெட்டியாகக் கரைத்து உப்பு சேர்த்து மிளகாய்களை ஊறப் போட்டுக் காய வைத்துக்கொண்டால் மோர் மிளகாயை விட இது ருசியாக இருக்கும்.
* குழம்பில் காரம் அதிகமாகிவிட்டால் எலுமிச்சம் பழத்தைக் கொஞ்சம் பிழிந்து விடுங்கள் அல்லது புளியைக் கொஞ்சமாக கரைத்துச் சேர்த்தால் காரம் குறைந்துவிடும்.
- கே.ஆர்.உதயகுமார், சென்னை.
* தேங்காய்ப்பால் எடுக்கும்போது சிறிது சமையல் உப்பைச் சேர்த்தால் பால் அதிகமாக கிடைக்கும்.
* அடை செய்யும் போது ஒரு கப் கேரட் துருவலை சேர்த்துக்கொண்டால் அதன் ருசியே அலாதி.
* மூக்குக்கடலை சுண்டல் தாளிக்கும்போது, இரண்டு கேரட்டை துருவி, வெங்காயத்துடன் சேர்த்து வதக்கினால் சுவை அதிகமாகும்.
* குளிர்ந்த பாலில் சிறிதளவு மைதாவை கலக்கி கொதித்துக் கொண்டிருக்கும் கஸ்டர்டில் சேர்த்தால் நன்றாக கெட்டியாகிவிடும்.
- கே.பிரபாவதி, கன்னியாகுமரி.
* கொத்தமல்லி விதையை சிறிதளவு நெய் விட்டு வறுத்துப் பொடி செய்து சாம்பார் செய்து முடித்தவுடன் இந்தப்பொடியைப் போட்டு மூடி வைத்தால் சாம்பார் நல்ல மணத்துடன் இருக்கும்.
* வேர்க்கடலையை ஒன்றிரண்டாகப் பொடி செய்து பக்கோடா மாவில் கலந்து செய்தால் கரகரப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.
* எந்தவிதப் பாயசமாக இருந்தாலும் அதில் ஒரு மேசைக்கரண்டி வெந்த பயத்தம்பருப்பை சேர்த்தால் சுவை அதிகரிக்கும்.
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.
* கீரை நிறம் மாறாமல் இருக்க சிறிது உப்பு சேர்த்து வேகவைக்க வேண்டும்.
* சோளத்தை வேக வைக்கும் போது ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்க்க, அதில் இயற்கையாக உள்ள இனிப்புச்சுவை தூக்கலாக தெரியும். ருசியும் கூடும்.
* காலையில் அரைத்த தேங்காய்ச் சட்னி மீதமாகிவிட்டால் அத்துடன் புளித்த மோர் அல்லது தயிருடன் மஞ்சள்தூள் சேர்த்து தாளித்துக் கொதிக்கவிட வேண்டும். இதுவே மதிய உணவுக்கான மோர்க்குழம்பு ஆகிவிடும்.
* சப்பாத்தி, பூரி செய்வதற்காக மாவை உருட்டித் தேய்க்கும்போது மைதா மாவுக்குப் பதிலாக சோள மாவைப் பயன்படுத்தினால், தேய்ப்பதற்குச் சுலபமாக இருக்கும்.
- இரா. அமிர்தவர்ஷினி, புதுச்சேரி.
* இரண்டு பங்கு பாசிப்பருப்பு, ஒரு பங்கு கடலைப்பருப்பு என்ற விகிதத்தில் அரைத்த மாவில் மைசூர் பாகு செய்தால் மிருதுவாக இருக்கும்.
* அல்வா செய்யும் போது, சிறிது சோள மாவு சேர்த்துக் கிளறினால் அல்வா கெட்டிப் படும்.
* பட்சணங்கள் மீந்துவிட்டால் ஒரு சிறு துண்டுத் துணியில் ஒரு கைப்பிடி கல் உப்பைப் போட்டு, ஒரு முடிச்சாகக் கட்டி பட்சணம் வைத்துள்ள பாத்திரத்தில் போட்டு வைத்தால் சிக்கு வாடை வீசாது.
- கீதா ஹரிஹரன், கேரளா.
பாசிப்பருப்பு புட்டு
தேவையானவை: பாசிப்பருப்பு - 2 கப், வெல்லம் - பொடித்தது ½ கப், தேங்காய்த்துருவல் - ½ கப், ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்.
செய்முறை: பாசிப்பருப்பை நீரில் களைந்து, குடிநீரில் அரைமணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து விட்டு கெட்டியாக அரைக்கவும். இட்லித் தட்டுகளில் அந்த மாவை ஊற்றி ஆவியில் வேகவைத்து, எடுத்து, சூடாக இருக்கும் போதே உதிர்த்து வைக்கவும். பொடித்த வெல்லத்தை சிறிது நீர்விட்டுக் கரைத்து கொதி வந்ததும் இறக்கி வடிகட்டவும். உதிர்த்த பாசிப்பருப்பில் பாகை சிறிது சிறிதாக விட்டுக் கிளறி, தேங்காய்த் துருவல், ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும். சுவையான, சத்தான ஸ்நாக்ஸ் தயார்.
- ஆர்.பத்மப்ரியா, ஸ்ரீரங்கம்.
|