செய்யும் தொழில் Sustainable-லா இருக்கணும்!



உணவு மனிதனின் உணர்வுகளுடன் தொடர்புடையது. உண்ணும் போது மட்டுமல்லாமல் உணவை தயார் செய்வதிலும் ரசனை இருக்க வேண்டும். உணவுக் கலையில் பேரார்வம் கொண்ட ரேவதி தன் உணவகத்தில் வழங்கப்படும் ஒவ்வொரு உணவுப் பொருளையும் ரசனையோடும் உணர்வுப்பூர்வமாகவும் வடிவமைக்கிறார். 
பத்து வருடங்களாக பேக்கிங் துறையில் தன் தனித்துவமான திறமைகளை வெளிப்படுத்தி வந்த இவர் இப்போது ‘பேக் அண்ட் ஆர்ட் கஃபே’ எனும் உணவகத்தை தொடங்கியுள்ளார். கலைநயமான யூரோபியன் காஃபி, வாயில் கரையும் கேக் வகைகள், தென்னிந்திய பாரம்பரிய சுவைகளில் ஃபியூஷன் உணவுகள் என எல்லாவற்றையும் ஒரே இடத்தில் கிடைக்கும்படி செய்திருக்கிறார் இந்த உணவகத்தின் நிறுவனர் ரேவதி.

“எந்த உணவையும் அதன் சரியான சுவையிலேயே தயாரித்துவிட முடியும் என்ற தன்னம்பிக்கை என்னிடம் இருந்தது. உணவகம் தொடங்க அதுவே முக்கிய காரணமாகவும் அமைந்தது” என பேசத் தொடங்குகிறார் ரேவதி. “பத்து வருடங்களுக்கு முன்பு பேக்கிங் செய்ய தொடங்கியதில் தவறுகளால் கற்றுக்கொண்டதுதான் அதிகம். 

அந்த தவறுகள்தான் இன்று தன்னம்பிக்கையுடன் உணவினை தயாரிக்க உதவுகிறது. இன்றளவும் புதிதாக கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன். ஆரம்பத்தில் வீட்டிலேயே கேக் வகைகளை செய்ய தொடங்கிய போது ஆர்டர்கள் அதிகமாக வந்து கொண்டே இருந்தாலும் குறைவான ஆர்டர்களை மட்டுமே ஏற்றுக்கொண்டேன். ஒரு கேக் செய்ய தொடங்கினால் அதனை முழு நிறைவுடன் செய்து முடிக்க வேண்டும்.

அதுவே எனக்கு முழு திருப்தி அளிக்கும். முடிந்தவரை தரத்தில் என்றுமே குறைவு வைத்ததில்லை. அதனாலேயே நிறைய ஆர்டர்கள் வந்ததால், தனியாளாக சமாளிக்க முடியாத சமயத்தில் என்னுடன் இணைந்து வேலை செய்ய பெண் ஒருவரை நியமித்தேன். 

வாடிக்கையாளர்களுக்கு கேக்குகளை நானே தயாரிக்கும்போதுதான் எனக்கு தன் நிறைவு கிடைக்கும். அதனால் ஆரம்பத்தில் அவர் எது செய்தாலும் என் மேற்பார்வையில் செய்ய அனுமதிப்பேன். காலப்போக்கில், அந்த இடத்தில் நான் இல்லையென்றாலும் அதே உணவுப்பொருளை நான் செய்யும் அதே சுவையிலேயே தயாரிக்கும் அளவிற்கு அவர் கைத்தேர்ந்தார். “உங்களால் இன்னும் நிறைய செய்ய முடியும்” என்ற தன்னம்பிக்கையை எனக்கு அளித்தார்.

ஃபுட் ஆர்ட்டில் இருந்த பேரார்வத்தினால் இதனை தொடங்கினேன். பின்னர் எனக்காக என்னுடன் இணைந்த ஊழியர்களின் வளர்ச்சியில் பங்கெடுக்க விரும்பி இதனை தொழிலாக மாற்றினேன். எனக்கும் ஊழியர்களுக்கும் கைப்பக்குவமும் எண்ணங்களும் ஒத்துப்போனதால் அவர்களே எனக்கு பக்க பலமாக இருக்கின்றனர். 

ஒரே வகையான உணவை எங்களில் யார் கிச்சனில் உள்ளே சென்று செய்தாலும் அதன் சுவை மாறாமல் ஒரே மாதிரியாகவே இருக்கும். அதற்கேற்றார் போல் எங்க உணவகத்தின் செஃப் அனைவரும் பயிற்சி பெற்றிருக்கின்றனர். 2014ல் ஹோம் பேக்கிங் தொடங்கினேன். பத்து வருடங்கள் முடிந்து 11வது வருடத்தில் அடி எடுத்து வைக்கும் போதுதான் இந்த ரெஸ்டாரன்ட் ஓபன் செய்திருக்கிறேன்.

என்னுடைய இந்த பேஷன், ஆத்மார்த்தமானது. அதனால் அவசர அவசரமா தெரிந்ததை வைத்து தொழில் தொடங்காமல் இது சஸ்டெய்னபிளா இருக்க விரும்பினேன். வயசானாலும் பேக்கிங் உபகரணங்களை கொண்டு என்னால கேக்குகளை தயாரிக்க முடியும். காரணம், ஃபேஷன் அண்ட் பெர்ஃபெக் ஷன். நான் முழு நேரம் இதில் கவனம் செலுத்த முக்கிய காரணம் என் கணவர், அம்மா, குழந்தை என்று தான் ெசால்லணும்’’ என நெகிழ்ந்தவர் உணவகத்தின் சிக்னேச்சர் ஃபுட்ஸ் பற்றி விளக்கினார்.

“நம்ம ரெஸ்டாரன்ட்ல கிடைக்குற இத்தாலியன் டிராமிசு ரொம்ப ஸ்பெஷல். இதற்காகவே வாடிக்கையாளர்கள் வருவாங்க. ட்ரெஸ் லெச்சஸ் கேக், இதன் ஸ்பெஷாலிட்டி வாயில் வைத்ததும் கரையும் தன்மையில் இருக்கும். இதை தயாரித்து விற்பனை செய்பவர் எங்களின் அந்த கேக்கினை சாப்பிட்டு, ‘இந்த டேஸ்ட்ல ட்ரெஸ் லெச்சஸ் நான் சாப்பிட்டதே இல்ல, ரொம்பவே நல்லாயிருக்கு’ என்றார். 

அதே உணவுப்பொருளை தயார் செய்து விற்பனை செய்யும் ஒரு நபரிடம் இருந்து வந்த பாராட்டு எனக்கு சந்தோஷமா இருந்தது. ஸ்பெஷல் ரோஸ் மில்க் கேக் முட்டை, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் எதுவுமே சேர்க்காம ரொம்ப பாரம்பரியமான முறையில தயார் செய்கிறோம்.

ரொம்ப மென்மையான பஞ்சு போல சுவையும் நல்லாயிருக்கும். இந்தக் கேக்கினை மென்மையா தயாரிப்பது சுலபமில்லை. ரொம்பவே கஷ்டம். ஆனாலும் விடாமுயற்சியோடு சரியான சுவைக்கு கொண்டு வந்துவிடுவோம். இது தவிர்த்து மெயின் உணவுகளில் பாரம்பரிய சுவையில் ஃபியூஷன் உணவுகளையும் அளித்து வருகிறோம். ஃபேமிலியா வரும் போது வயசானவங்களும் இருப்பாங்க இரவு நேரங்கள்ல பீட்சா, பர்கர் போன்ற உணவுகளையெல்லாம் சாப்பிட மாட்டாங்க. 

அவர்களுக்கு கோழி ரசம் பவுல் நிறைவான உணவா இருக்கும். அதில் நெய் சோறு, காரசாரமான கோழி ரசம், செட்டிநாடு வறுத்த கறி, ஸ்டிர் ஃப்ரைடு வெண்டைக்காய், அவித்த முட்டை வைக்கப்பட்டு வெங்காயம், நட்ஸ் எல்லாம் போட்டு கார்னிஷ் செய்யப்பட்டிருக்கும். சைவப் பிரியர்களுக்கு தயிர் சாதம் பவுல், ரைஸ் சீஸ் பால்ஸ், ச்சீஸ் ஸ்டேக் வித் ரைஸ் போன்ற உணவு வகைகள் உள்ளன.

இவை தவிர சைவ, அசைவ சூப் வகைகள், சாலட்கள், சிக்கன், சாட் உணவுகள், கார்லிக் பிரெட், மஷ்ரூம் டோஸ்ட், பன்னீர் பாப்கார்ன் போன்ற பலவகையான உணவுகளும் உள்ளன. என் பாட்டி செய்யக்கூடிய மலேசியன் பட்டர் கேக் ரொம்ப நல்லாயிருக்கும். அதையும் இங்கு வைத்திருக்கிறோம். தவிர்த்து மலேசியன் பாண்டன் கேக், மெக்சிகன் ட்ரெஸ் லெச்சஸ், இத்தாலியன் டிராமிசு, ஆஸ்திரேலியன் லேமிங்டன், பெல்ஜியம் சாக்லேட் ப்ரவுனி, சீஸ் கேக் மற்றும் ப்ரெட் வகைகளும் உள்ளன.

சாக்லேட் கேக்குகளில் 100% தூய்மையான முழு சாக்லேட்டை பயன்படுத்துகிறோம். நல்ல நறுமணமான சுவையான காஃபி தயாரிக்க ஃபிரஷ் காஃபி பீன் பயன்படுத்துகிறோம்’’ என்றவர், யூரோப்பியன் காஃபி ஆர்ட்டினை முறைப்படி பயின்றுள்ளார். “நாங்க தயாரிக்கும் கேக் வகைகளில் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, ரசாயனங்கள், அனிமல் ஃபேட் சேர்க்காமல் பாரம்பரிய முறையில் தயாரிக்கிறோம்.

அதனால் எங்களின் கேக் மிருதுவாக இருக்கும். பதப்படுத்தும் பொருட்களையும் சேர்ப்பதில்லை. எனக்கு ஆரோக்கிய முறையில் சமைக்கப்பட்ட உணவு பிடிக்கும். அதனால் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து சமைக்கிறேன். 

என் உணவகத்தில் சாப்பிடும் போது வயிறு உப்புசம் போன்ற பிரச்னைகள் ஏற்படாது. இந்த பத்து வருட அனுபவத்தில் எந்த பொருளை எவ்வளவு, எப்படி, எப்போது பயன்படுத்தினால் என்ன நடக்கும் என்பதையெல்லாம் நிறைய தவறுகள் மூலமாகவே கற்றுக்கொண்டேன்” என்றவர் பேக்கிங் தொழில் பற்றி பேசினார்.

“பேக்கிங் செய்ய தொடங்கினதுமே அதை உடனே பெரிய தொழிலாக மாற்ற நான் விரும்பல. நாம் தயாரித்து கொடுக்குற உணவுப்பொருளின் தரம் உயர்வானதா இருக்கணும். அப்படி இருந்ததால்தான் நிறைய வாடிக்கையாளர்கள் வரத்தொடங்கினார்கள். ஒரு டிஷ் செய்ய தொடங்கினால் அதை சிறப்பாக செய்துமுடித்துவிட முடியும் என்கிற தன்னம்பிக்கை வந்ததும்தான் நான் இதை தொடங்கினேன்.

தொழில் தொடங்க போகிறோம் எனில் அதில் ஒரு தெளிவு இருக்க வேண்டும். நான் ஹோம் பேக்கிங் ஆரம்பித்த போது என் உணவின் தரம் எப்படியிருந்ததோ அதே தரத்தில்தான் இன்றும் கொடுத்து வருகிறோம். அதை பராமரிப்பது ரொம்ப முக்கியம். என்னோட வளர்ச்சி மெதுவானதா இருந்தாலும் அது நிலைத்தன்மையுடன் இருக்கணும்” என்று புன்னகைத்தார் ரேவதி.

செய்தி: ரம்யா ரங்கநாதன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்