பூப்பெய்துதல் முதல் முதுமை வரை... வலுவிழக்கும் எலும்புகள்...
வலுவாக்கும் வழிகள்!
பெண் குழந்தை பிறந்தாலே நல்லபடியாக வளர்த்து கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும் என்பது முதன்மையான ஒன்றாக இந்தியப் பெற்றோர்களுக்கு இருக்கும். இது பழமையான கருத்தாக இருந்தாலும் ‘ஏன், பெண் குழந்தைகள் விஷயத்தில் இவ்வளவு கவனம் தேவை?’

என்றால், ஒரு பெண் கருவுறும் போது அவள் தன் குழந்தையின் கருவில் உள்ள கருமுட்டைகளையும் சேர்த்தே உருவாக்குகிறாள்.அதாவது, ஒரு பெண் குழந்தை கருவில் இருக்கும் போதே அதன் கருப்பையில் கருமுட்டைகள் உருவாகி இருக்கும்.
எனவே, எந்த ஒரு மரபணு மாற்றமும் பெண்களுக்கு வலிமையாகக் காணப்படும். பெண்களே ஆண்களைவிட ‘உயிர் பிழைத்தல்’ விதியின் படி எப்போதும் வேகமாக முன் நோக்கி நகரக்கூடியவர்கள் என்பதால், பெண் குழந்தை என்றாலே அதன் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து வகைகளிலும் சீராட்டி வளர்ப்பது இன்றியமையாததாகும்.  சரி, இப்படிப்பட்ட முக்கியத்துவங்களுக்குச் சொந்தமான பெண்கள் சரியான உடல் மற்றும் எலும்பு வலுவோடு இருக்கிறோமா? என்றால், ‘இல்லை’ என்பதே பெரும்பாலான பெண்களின் பதில். இந்நிலையில், எலும்பு வலிமை குறித்து பூப்பெய்திய பெண்கள் முதல் முதுமை தழுவிய பெண்கள் வரை இங்கே தெரிந்துகொள்வதோடு, அவற்றில் இயன்முறை மருத்துவத்தின் பங்கு என்ன என்பதையும் அறிந்துகொள்வோம்.
எலும்புகள்...
உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. இந்த எலும்புகள்தான் நமக்கு ஒரு வடிவத்தைக் கொடுத்து நடக்க, நிற்க, அமர உதவுகிறது. எலும்புகள் இல்லையென்றால் ஒரு புழுவை போலத்தான் நாம் இருப்போம்.
எலும்புகளுக்கு உதவ தசைகள், ஜவ்வுகள், தசை நாண்கள் என பல அதனைச் சுற்றி இருக்கும். எலும்புகளுக்கு வரும் பெரும்பாலான பிரச்னை எலும்பு முறிவுதான். இது தவிர ஏதேனும் கிருமித் தொற்று அல்லது புற்று நோய் எலும்புகளை அடைந்து எலும்பினை உருக்குலைக்கும். எலும்பு புரை...
எலும்புகளின் உள் பல அடுக்குகள் இருக்கும். இதன் அடர்த்தி குறைந்து எலும்புகள் வெறும் புல்லாங்குழல் போல ஆவதே எலும்பு புரை. இது ஒரு நிலைக்கு மேல் தொடர்ந்து, இதனால் முற்றிலும் தினசரி வாழ்க்கை பாதிக்கப்பட்டால் அது அடுத்தக்கட்ட எலும்பு புரை (ஆஸ்டியோபீனியா) என்பார்கள். ஆண், பெண் இருவருக்கும் நிகழலாம். வயதானவர்களுக்கு வரும் என்றாலும் பெரும்பாலும் சிறியவர்களுக்கு நிகழாது.
பூப்பெய்துதல்...
பிறந்த சிசுவிற்கு எலும்புகள் இன்னும் வளராமலும், அதிகம் கூடாமலும் இருக்கும். கிட்டத்தட்ட முப்பது வயதிற்கு முன்பு வரை எலும்புகள் வளர்ந்து கொண்டுதான் இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் அடர்த்தித் தன்மை என்பதும் கூடிக்கொண்டே போகும். எனவே பூப்பெய்தும் பெண்களுக்கும் அந்த வயதில் போதிய ஊட்டச்சத்துகள் தருவது அவசியம்.
இதனால் எலும்புகளின் அடர்த்தியானது பூப்பெய்திய பின் சுரக்கும் ஹார்மோன்களின் உதவியுடன் மேலும் அடர்த்தி அடையும். இதனை உணர்ந்தே நம் முன்னோர்கள் வயதிற்கு வரும் குழந்தைகளுக்கு ஏகபோக கவனிப்பினை வழங்கி வந்தார்கள்.
கர்ப்பிணிப் பெண்கள்...
வயிற்றில் வளரும் குழந்தையை ஒரு ஒட்டுண்ணி என்றுதான் அறிவியலில் கூறுவார்கள். ஏனெனில் தான் உயிர் வாழத் தேவையான அத்தனை விஷயங்களையும் தன் தாயின் உடம்பில் இருந்து எடுத்துக்கொள்ளும். ஆகவே அதில் எலும்பு வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச் சத்துகளையும் அப்படித்தான் குழந்தை எடுத்துக் கொள்ளும் என்பதால், நம் எலும்பு அடர்த்தி குறைய வாய்ப்புகள் அதிகம்.
தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள்...
உலக சுகாதார அமைப்பின் படி ஒரு தாய் குறைந்தது இரண்டு வருடங்கள் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதன் பின்பும் விருப்பம் இருந்தால் கொடுக்கலாம். எனவே, முதல் ஒரு வருடத்தில் குழந்தைக்குத் தேவையான அதிக ஊட்டச்சத்துகள் தாயிடமிருந்துதான் கிடைக்கும்.
ஆகவே, நாம் கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளவில்லை எனில் குழந்தைக்கு சேர வேண்டிய சுண்ணாம்புச் சத்து நம் உடலின் எலும்புகளில் இருந்துதான் செல்லும். இந்த நிலை வருடக் கணக்கில் தொடரும் போது நிச்சயம் முதுகு வலி வரும் அபாயம் உள்ளது. மாதவிடாய் நிறைவு காலம்...
மாதவிடாய் சுழற்சி நிறைவுற்ற பின் பெண்களுக்கான ஹார்மோன்கள் குறைய ஆரம்பிக்கும். இதில் பிரத்யேகமாக ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை சொல்லலாம். இந்த ஹார்மோன் உடலில் சுண்ணாம்புச் சத்தினை நன்றாக உறிஞ்ச உதவும்.
மேலும், ரத்தத்தில் சுண்ணாம்புச் சத்து சரியான அளவில் இருக்கவும் உதவி செய்யும். அதோடு, எலும்புகளில் புது எலும்பு செல் உருவாகவும் உதவும். எனவே, மாதவிடாய் முடிந்த பெண்கள் கட்டாயம் எலும்பு வலுவிழப்பிற்கு இரையாவார்கள். விளைவுகள்...
* தினசரி உடல் வலி இருப்பது.
* ஏதேனும் ஒரு மூட்டு கட்டாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கும் என்பதால், தினசரி மூட்டு வலியோடு இருப்பது. உதாரணமாக, கால் முட்டி வலி வருவது.
* எலும்புத் தேய்மானம் நிகழும் வாய்ப்பு இருப்பதால் இதனாலும் மூட்டு வலி பிரச்னைகள் இருக்கும்.
* விபத்து நேர்ந்தால் எளிதாய் எலும்பு முறிவு நிகழும் வாய்ப்பு அதிகம்.
* தொடர்ந்து ஒரு மணி நேரம் நின்றோ அல்லது அமர்ந்தோ வேலை செய்ய முடியாமல் அடிக்கடி உடல் அலுப்பு ஏற்படுவது.
* வளரிளம் பருவத்தில் இருக்கும் குழந்தைகளாய் இருந்தால் பள்ளி, கல்லூரியில் விளையாட்டில் முழு ஒத்துழைப்பு தர முடியாமல் போகலாம்.
* முதல் குழந்தை பிறந்த தாயாக இருந்தால், இரண்டாவது குழந்தையின் எடை குறைந்திடும். எலும்பு பலகீனமாய் பிறப்பதும், இரண்டாவது பிரசவத்தில் அதிக அயற்சியாய் காணப்படுவதும் ஏற்படும்.
* இளம் வயதிலேயே கருப்பையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியவருக்கு எளிதில் விரைவாய் எலும்புத் தேய்மானம், மூட்டு வலி வரும்.
இயன்முறை மருத்துவம்...
எலும்புகள் வலுவாக இருக்க உடற்பயிற்சிகள் கற்றுத்தரப்படும். ஒவ்வொரு தனி நபருக்கும் என்னென்ன உடற்பயிற்சிகள் தேவைப்படும், எத்தனை முறை செய்ய வேண்டும் என அனைத்தையும் உடலையும், தசைகளையும் பரிசோதனை செய்த பின் இயன்முறை மருத்துவர் பரிந்துரைப்பர்.
உடற்பயிற்சிகளின் பயன்கள்...
* உடற்பயிற்சிகள் எலும்புகளை வலிமையாக மாற்றுகிறது.
* உடற்பயிற்சிகள் தொடர்ந்து செய்வதால் செரிமானம் நன்றாக நடக்கும். இதனால் நாம் உண்ணும் உணவில் உள்ள சுண்ணாம்புச் சத்து எளிமையாக கிரகிக்கப்படும்.
*வயதான பின் உடற்பயிற்சிகள் செய்வதால் எலும்பு தேய்ந்துப் போவது, எலும்பு அடர்த்திக் குறைவதை தடுப்பது என அனைத்தையும் தடுக்க முடியும்.
* சுண்ணாம்புச் சத்து உடலில் கிரகித்து சேர வேறு சில ஹார்மோன்களும் உதவுகிறது என்பதால், தொடர் உடற்பயிற்சிகள் உடலில் உள்ள அனைத்து ஹார்மோன்களையும் சரியான முறையில், சரியான அளவில் சுரக்க வைக்கும்.
* உடற்பயிற்சிகள் தொடர்ந்து செய்வதால் ஒருவரின் தனிப்பட்ட ஒழுக்கம் என்பது உயரும். இதனால் அவர் உணவில் அக்கறையோடு இருப்பார். குப்பை உணவுகளை தவிர்த்து நல்ல உணவுகளை நாடி உண்பார்.
வருமுன் தடுப்போம்...
எலும்பு அடர்த்திக் குறைவை நூறு சதவிகிதம் நம்மால் தடுக்க முடியும். உணவு, உடற்பயிற்சி, வாழ்வியல் என இந்த முக்கியமான மூன்று விஷயங்களை நாம் கவனித்து மாற்றி அமைக்க வேண்டும்.
* ராகி, ஆரஞ்சு பழம், பால் போன்ற பொருட்களில் சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ளது. இதனை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுதல் அவசியம். மேலும், சந்தேகங்களை அருகில் உள்ள உணவியல் நிபுணரிடம் கேட்டுத் தெரிந்து அதன்படி பின்பற்றி வர வேண்டும்.
* தினசரி குறைந்தது 20 நிமிடங்களாவது வெயில் நம் மேல் படும்படி இருப்பது கட்டாயம்.
* எலும்புகளுக்கு வெறும் சுண்ணாம்புச் சத்தும், விட்டமின் டி சத்து மட்டும் போதுமானது கிடையாது. மேலும் மெக்னீசியம், பாஸ்பரஸ் சத்துகள் போன்ற வேறு சில சத்துகளும் இன்றியமையாதது ஆகும். இந்த சத்துகள் அதிகம் உள்ள உணவுகளையும் சேர்த்துக் கொள்ளுதல் அவசியம்.
* தினசரி உடற்பயிற்சிகள் செய்துவருதல் மேலும் எலும்புகளுக்கு வலு சேர்க்கும்.
* உடம்பிற்கு பலனில்லாமல் சுவைக்கு மட்டுமே இருக்கும் குப்பை உணவுகளை தவிர்த்து, தேர்ந்தெடுக்கப்பட்ட உணவுகளுக்கு மாறுவது அவசியம். அதேபோல ஒரு உணவினை சரியான முறையில்தான் சாப்பிடுகிறோமா? என்பதனையும் தெரிந்துகொள்ளுதல் அவசியம்.
உதாரணமாக, ராகியை வெறும் தூள் மாவாக அரைத்து அதனை இன்ஸ்டன்ட் தோசை எல்லாம் செய்து சாப்பிடுகிறோம். ஆனால், ராகியை புளிக்க வைத்தோ அல்லது முளைக்கட்டிய ராகியை தூள் மாவாகத்தான் பயன்படுத்த வேண்டும். இதுவே உடலினால் கிரகித்து எடுத்துக்கொள்ள முடியும். * புகை மற்றும் மதுப்பழக்கம் எலும்புகளின் அடர்த்தியை குறைக்கும் என்பதால் இவ்வகை பழக்கங்களையும் தவிர்ப்பது அவசியம்.மொத்தத்தில் எலும்புகளுக்கு தொடர் ஊட்டச்சத்துகளும், உடற்பயிற்சியும் அவசியம் என்பதை உணர்ந்து, இதனை படிக்கும் எந்த வயது பெண்ணாக இருந்தாலும் உடல் நலனில் அக்கறை கொண்டால் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாய் வாழலாம்.
சுகம் தரும் சூரிய ஒளி!
எதுவும் இலவசமாக கிடைக்கும் போது அதற்கு மதிப்பு இருக்காது என்பார்கள். அது போலத்தான் ஒரு நாளைக்கு முப்பது நிமிடங்கள் வெயிலில் இருந்தால் போதும், அன்றைய தினத்திற்கு தேவையான வைட்டமின் டி கிடைத்துவிடும். ஆனால், வெயிலை நாம் ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை.வைட்டமின் டி மட்டும் இல்லை. தூக்கம், ஹார்மோன் பிரச்னைகள் என பல வாழ்வியல் சார் பிரச்னைகளுக்கு வெயில் ஒரு வரப்பிரசாதம்.
இதை விட்டுவிட்டு அசைவம் சாப்பிடுவோர் மீனில்தான் வைட்டமின் டி இருக்கிறது என்று அதற்கு செலவு செய்வோம். சைவம் சாப்பிடுவோர் ஒரு பக்கம் விலை உயர்ந்த விதை வகைகள், அது இது என்று சாப்பிடுகிறோம்.சுண்ணாம்புச் சத்து உடலில் கிரகித்துக் கொள்ள மிக முக்கியமான ஒன்று வைட்டமின் டி என்பதால், எலும்பு வலிமையில் மிகப்பெரிய செயலாற்றும் என்பதை உணர்ந்து வெயிலில் தினசரி இருக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வோம்.
|