கிராமப்புற மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் மதுரை பொண்ணு!
இன்றைய நவீன காலக்கட்டத்தில் தொழில்நுட்பம் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது. எனினும் எல்லா வகையான தொழில்நுட்ப வளங்களின் பயன்பாடு அனைவரையும் சென்றடைவதில்லை.  குறிப்பாக கிராமப்புறம் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களின் அறிமுகம் கூட இருப்பதில்லை. மதுரையை சேர்ந்த ஹர்ஷினி கிஷோர் சிங் இந்த இடைவெளியை தகர்த்து கிராமப்புற மாணவர்களை தொழில்நுட்பங்களுடன் இணைக்க முயற்சி செய்து வருகிறார். 
“எனக்கு பூர்வீகம் மதுரைதான். என் அம்மா, அப்பா இருவருமே உயர் கல்வியை எட்டாதவர்கள். அதனாலேயே என்னை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்கிற மன உறுதியுடன், உயர்தரமான பள்ளியில் என்னை படிக்க வைத்தனர். நன்றாக படித்து டாப் ரேங்க்குகளை எடுத்தேன். பள்ளிப் படிப்பை முடித்திருந்த போது என் 16வது வயதில் ஏதேனும் தொழில் தொடங்க வேண்டுமென்ற விருப்பம் இருந்தது.  அப்போது ‘கிஃப்ட்வைஸ்’ பெயரில் கிஃப்ட்டிங் தொழிலை தொடங்கினேன். பெரிய கார்ப்பரேட் ஆர்டர்கள் வர தொடங்கிய போது, எனது ப்ராண்ட் ரெஜிஸ்டர் செய்யப்படாமல் இருந்ததாலும், போதிய அனுபவம் இல்லாததினாலும் என்னால் அதை தொடர முடியவில்லை. அப்போது என் பெற்றோர் ‘உனக்கு பிசினஸ் எல்லாம் செட் ஆகவில்லை, இனி அதை தொடராதே’ என்றார்கள்.  ஆனால் தோல்விக்குப் பின்னரும் தொழில் சார்ந்த படிப்பை தான் தேர்ந்தெடுப்பேன் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். கல்லூரி படிப்பிற்காக பெங்களூருக்கு சென்றேன். அங்கு பிபிஏ படிப்பில் இரண்டு வகை இருந்தது. ஒன்று வழக்கமான பிபிஏ படிப்பு. மற்றொன்று நான் தேர்ந்தெடுத்தது பிபிஏ ஆன்ட்ரப்ரனர்ஷிப். மாலை 4 மணி முதல் 8 மணி வரை கல்லூரி வகுப்புகளுக்கு செல்வேன்.
காலை முதல் மாலை வரை இன்டர்ன்ஷிப் மூலம் புதுப்புது பிசினஸ் ஐடியாக்களை கண்டறிவது என கல்லூரி நாட்கள் நகர்ந்தன. அப்போதே எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்தன. இந்த காலக்கட்டத்தில்தான் என்னுடைய ஸ்டார்ட்-அப் நிறுவனமான கிஃப்ட்வைஸ் ப்ராண்டை பதிவு செய்தேன். பின்னர் சிறப்பு பாடமாக லீடெர்ஷிப் பற்றி படிக்கத் தொடங்கினேன். அந்த சமயம் ‘டீச் ஃபார் இந்தியா’ (Teach For India) அமைப்பில் ப்ராஜெக்ட் கிடைத்தது.
அரசுப் பள்ளியில் 2 மாதங்களுக்கு தன்னார்வலராக செயலாற்றும் வாய்ப்பு அது. மாலை கல்லூரிக்கு செல்லும் முன் காலை ஒரு மணி நேரம் அரசுப் பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு பாடம் எடுப்பேன். நான் உயர்தரமான கல்வி நிறுவனங்களில் படித்தேன். ஆனால் நான் பாடம் எடுக்கும் பள்ளி மாணவர்கள் வறுமையிலும், பெற்றோர்களை இழந்தவர்களாகவும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாகவும் இருந்தனர்.
அடிப்படை வசதிகளை கூட அவர்களால் பெறமுடியாதிருந்தது. இந்த வேறுபாடுகள் என்னை அதிகம் சிந்திக்க வைத்தது. அதுதான் ரூரல் டெக் ரைஸ் (Rural Tech Rise) அமைப்பினை தொடங்க காரணமாக அமைந்தது’’ என்றவர் அமைப்பின் செயல்திட்டங்களை விளக்கினார்.
“என் அமைப்பில் நான்கு விதமான செயல்திட்டங்கள் உள்ளது. முதலில் கிராமப்புற மாணவர்களுக்கு இணைய பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் குறித்து பயிற்சி. தொடர்ந்து அதனை எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்தலாம் மற்றும் ஆன்லைன் மோசடி, ஆபத்துகளில் சிக்காமல் இருக்க வேண்டும் என்பது குறித்த நடைமுறை விளக்கங்கள்.
மேலும் சைபர் பாதுகாப்பு, டிஜிட்டல் நெறிமுறைகள் மற்றும் இணைய பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். என்னுடன் இருக்கும் எத்திக்கல் ஹேக்கர்கள், மாணவர்களின் கண்முன்னே அவர்களின் மொபைல் போன்கள் வெப் கேமராக்களை ஹேக் செய்து காண்பிப்பார்கள். மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களுக்கும் ஆரோக்கிய இணைய பயன்பாடு குறித்து சொல்லித்தருகிறோம். இரண்டாவதாக தொழில்நுட்பக் கல்வி. விர்ட்சுவல் ரியாலிட்டி மற்றும் ரோபோட்டிக்ஸ் அறிமுகம் கொடுக்கிறோம். VR கருவிகள் விளையாட்டிற்கு மட்டுமில்லாமல் கல்வி கற்றலுக்கு அவை எவ்வாறு உதவுகின்றன என்பதை புரிய வைக்கிறோம்.
மாணவர்களுக்கு VR கருவியை அணிவித்து அதன் மூலம் புதிய கற்றல் செயல்முறையை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி, கற்றலின் போது மாணவர்கள் ஈடுபாட்டுடன் இருக்கவும், புரிந்துகொள்ள கடினமாக இருக்கிற பாடங்களை இந்தத் தொழில்நுட்பம் மூலம் எளிமையாக புரிந்து கொள்ளவும் உதவினோம். மேலும் இது போன்ற தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் போது தொழில்நுட்பக் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை பற்றிய தெளிவும் அவர்களுக்கு கிடைக்கும்.
அடுத்ததாக கிராமப்புற மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தொழில்முனைவு பயிற்சிகளை வழங்கி வருகிறோம். நிதி அறிவுத்திறன், வணிக திட்டம், சிக்கல்களுக்கு தீர்வு காணும் திறன்கள் போன்றவற்றை அவர்களுக்கான எளிமையான பாடத்திட்டங்களாக தயாரித்து அதன்படி கற்பித்து வருகிறோம். ஷார்க் டேங்க் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி அதன் மூலம் அவர் களின் பிசினஸ் ஐடியாக்களை வெளிக்கொண்டுவர உதவுகிறோம். நான் பயிற்றுவித்த மாணவர்கள் தங்களுடைய நுண் வணிகங்களை தொடங்கியுள்ளனர்.
சிலர் வெற்றிகரமாக தங்கள் ப்ராண்ட் பெயரை பதிவு செய்திருக்கின்றனர். தொழில் செய்வதின் மூலம் குடும்பங்களுக்கும் பொருளாதார ரீதியாக இளம் வயதிலேயே அவர்களால் உதவ முடிகிறது. கிராமப்புற மாணவர்களுக்கான அடுத்த திட்டமாக நடமாடும் நூலகம் அமைத்திருக்கிறோம்.
ஆஸ்திரேலியா நாட்டின் மெல்பெர்ன் நகரின் Whitehorse Manningham Libraries மூலம் இலவசமாக பெறப்பட்ட ஆயிரக்கணக்கான புத்தகங்கள் கொண்டுவரப்பட்டு கிராமப்புற பள்ளிகளுக்கு வழங்கப்பட்டும், நடமாடும் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது” என்றவர், மேலும் தொடர்ந்ததில்... “என்னுடைய அமைப்பில் நான் பயிற்றுவித்த சில மாணவர்கள் தன்னார்வலர்களாக செயலாற்றுகிறார்கள். உண்மையாகவே சமூகத்தில் நல்ல தாக்கங்களை ஏற்படுத்த வேண்டுமென நினைப்பவர்கள் என்னுடன் இணைந்து செயல்படுகின்றனர். அமைப்பு மட்டுமில்லாமல் என் அக்கா நிறுவிய டிஜிசேஃப் எனும் நிறுவனத்தின் இணை நிறுவனராகவும் இருக்கிறேன். அதன் மூலம் மாணவர்களுக்கு இணைய பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பங்களை கற்றுக் கொடுக்க முடிந்தது.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியா கல்வியில் நன்கு வளர்ச்சியடைந்து வருகிறது. அதிக வசதிகள் கொண்ட கல்வி நிறுவனங்களால் தொழில்நுட்பங்களின் உதவியுடன் கல்வியை வழங்க முடிகிறது. ஆனால் அந்த வசதிகளை எட்ட முடியாத மாணவர்களுக்கு உதவ தன்னார்வலர்கள் முன் வர வேண்டும்.
என்னுடைய அமைப்பினை லாப நோக்கமற்றுதான் துவங்கினேன். மேலும் நான் இல்லையென்றாலும் எனக்கு அடுத்து இருப்பவர்கள் இதனை தொடர வேண்டும் என்பதுதான் என் நோக்கம். தன்னார்வலர்கள் சுயநலமின்றி சமூகத்தில் ஆரோக்கியமான தாக்கங்களை ஏற்படுத்துவதை வாழ்வின் நோக்கங்களில் ஒன்றாக வைத்துக்கொள்ளலாம்” என சமூக அக்கறையுடன் பேசினார் ஹர்ஷினி.
ரம்யா ரங்கநாதன்
வாசகர் பகுதி
வருடப்பிறப்பும், வேப்பம் பூ பச்சடியும்!
தமிழ் வருடப்பிறப்பன்று ‘வேப்பம் பூ பச்சடி’ செய்து உணவில் சேர்த்து சாப்பிடும் வழக்கத்தை நம் முன்னோர்கள் நமக்குத் தந்துள்ளனர். அதில் மிகப்பெரிய தத்துவம் அடங்கியுள்ளது. வருஷத்தின் ஆரம்ப நாளான அன்று ஆறு ருதுக்களும், நவக்கிரகங்களின் முறையும் மாறி நமக்கு நன்மை தருகின்ற நாளாகும். தீமையாகிய பலன்களையும் நாம் இறைவனின் செயல் என்று எண்ணி இன்பமாகவே அனுபவிக்க வேண்டும்.
கசப்புக்கு இருப்பிடம் வேம்பு. இனிப்புக்கு இருப்பிடம் கரும்பு. வேப்பம் பூவுடன் வெல்லம் சேர்த்து பச்சடி செய்யும் போது உலக வாழ்க்கையென்னும் வேம்பை, அன்பெனும் பாகினால் சமப்படுத்தி, நன்மை, தீமை ஆகிய இரண்டையும் சமநிலையில் அனுபவிக்க வேண்டும் என்னும் உணர்வைப் பெறவே, இந்த நாளில் வேப்பம்பூ பச்சடி செய்து சாப்பிடுவதை வழக்கத்தில் கொண்டு வந்துள்ளனர்.ஆதலின் வேப்பம்பூ பச்சடி செய்து, தமிழ் வருடப் பிறப்பில் உணவில் சேர்த்து, நற்பலன் பெறுவோம்.
- எஸ்.ஜெயப்பிரியா, மதுரை.
|