ஆரோக்கியம் காக்கும் ‘தினசரி கீரை’!



ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக் கியமான கீரை வகைகள் எளிதில் நமக்கு கிடைத்தாலும் அவற்றை முறையாக சமைத்து உண்ண நேரமில்லை என்பவர்கள் பலரும் உண்டு. இனி அந்தக் கவலை இல்லை. 
ஆரோக்கியமான முறையில் மதிப்புக்கூட்டல் செய்யப்பட்ட கீரைப் பொடிகளை கொண்டு நொடிகளில் உணவாக தயாரித்து சாப்பிடலாம். திருச்சியை சேர்ந்த லட்சுமி ப்ரியா பலவகையான கீரைகளை ஆரோக்கிய முறையில் பொடியாக தயாரித்து ‘தினசரி கீரை’ என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறார்.

“என் மகனின் ஆரோக்கியம் மேம்பட கீரை உதவியது போல, கீரையின் ஊட்டச்சத்துக்களை எல்லோரும் பெறணும், நலமுடன் வாழணும் என்பதே என் எண்ணம். காரணம், என் மகன் பிறந்தபோதிலிருந்தே அவனுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருந்தது. 

அவனுடைய குடல் பலவீனமாக இருந்ததால் வளர வளர அவனால் சரியான உணவுகளை எடுத்துக்கொள்ள முடியவில்லை. அப்போது அவனின் ஆரோக்கியம் மோசமான நிலையில் இருந்ததால் உணவில் சில கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள்.

அதே சமயம் எடுத்துக்கொள்ளும் உணவும் ஆரோக்கியமானதாகவும் அளவாகவும்  இருக்க வேண்டும் எனவும் எனக்கு அவர்கள் ஆலோசனை வழங்கினார்கள். அதனால் ஒவ்வொரு உணவினையும் ஆரோக்கியமாக தேர்ந்தெடுத்து அவனுக்கு கொடுக்க ஆரம்பித்தேன். ஆனால் அவனால் எதையுமே முழுமையாக சாப்பிட முடியவில்லை. அதற்கான திடமும் அப்போது அவனிடம் இல்லை. எனவே காய்கறிகள் அரைத்து கூழ்மப்பொருள் போன்றுதான் கொடுப்பேன்.

என் மகன் கொஞ்சம் கொஞ்சமாக உணவு உட்கொள்ளும் நிலைக்கு வந்ததும், இது போன்ற ஆரோக்கியமான உணவுகளை எளிமையான முறையில் எவ்வாறு தயாரித்து கொடுக்கலாம் என்ற யோசனையில் இருந்த போதுதான் என் அம்மா, பாட்டி எல்லோரும் கீரை வகைகளை பொடியாக செய்து உணவில் சேர்த்து அவனுக்கு கொடுத்துப்பார் என்றார்கள். 

அவனால் முழுமையாக அவற்றை எடுத்துக்கொள்ள சிரமம் இருந்ததாலும் அளவாகத்தான் அவனால் சாப்பிட முடியும் என்பதாலும் அவர்கள் சொன்னபடியே கீரையை முறையாக சுத்தம் செய்து, காயவைத்து, பொடியாக்கி, அதனை சூப் வைத்தும், சாதத்துடன் சேர்த்து உணவாக அவனுக்கு கொடுப்பேன்.

என் மகனுக்கு சரியாக நடக்கக் கூட உடலில் தெம்பு இருக்காது. எனவே முடக்கத்தான் கீரையை அவனுக்கு அடிக்கடி கொடுக்க ஆரம்பித்தேன். உடல் ஆரோக்கிய குறைபாடு இருந்ததால் வயிற்றுப் புண்ணால் அவதிப்படுவான். 

அந்த நேரத்தில் மணத்தக்காளி கீரையை தருவேன். இப்படி அவனுடைய  ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒரு வகையான கீரையை உணவில் சேர்க்க ஆரம்பித்தேன். அவன் உணவினை அளவோடு சாப்பிட்டாலும், அவனுடைய ஆரோக்கியத்தில் முன்னேற்றம் தெரிந்தது.

அதிலிருந்து என் மகனுக்கு ஆரோக்கியமான உணவை கொடுப்பதிலும் அதில் கீரையை சேர்த்துக்கொடுக்க வேண்டுமென்பதிலும் உறுதியாக இருந்தேன். சிறுவயதில் நடக்கவே சிரமப்பட்ட என் மகன் பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்தான். இப்போது பொறியியல் கல்லூரியில் படிக்கும் என் மகன் சிறந்த ஆரோக்கியத்துடன் இருக்கிறான். 

என் பெரிய மகளுக்கு ஒருமுறை கழுத்து நரம்பு சார்ந்த பிரச்னை ஏற்பட்டபோது வல்லாரை கீரை அதிகமாக கொடுத்தேன். அவளின் உடல் நலமும் மேம்பட ஆரம்பித்தது’’ என்றவர் தன் தொழில் வளர்ச்சியை பற்றி பகிர்கிறார்.

“பதினெட்டு வருஷங்களுக்கு முன்பு என் மகனுக்காக கீரைப் பொடிகளை தயாரிக்கும் போது உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர்களுக்கும் கொடுத்தேன். சுவை பிடித்து அவர்கள் மேலும் கேட்க எல்லோருக்காகவும் சேர்த்து கூடுதலாக தயாரிக்கத் தொடங்கி, மாதத்திற்கு 10 முதல் 15 கிலோ வரையிலான கீரைப் பொடிகளை அரைத்து தயாரித்தேன். என்னை சுற்றியுள்ளவர்களின் ஆரோக்கியத்தில் பங்கெடுப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

ஆனால் அப்போது இதனை தொழிலாக மாற்றும் எண்ணம் இல்லை. பலர் கீரைப் பொடிகளை கேட்டால், என்னுடைய வீட்டிலேயே சிறிய அளவில் கீரைத் தோட்டம் அமைத்தேன். அதில் கீரைகளை விளைவித்து பொடிகளை தயாரிக்க ஆரம்பித்தேன். 

பின்னர் வேளாண் சார்ந்த கல்வி நிறுவனங்களுக்கும், வேளாண் அமைப்புகளுக்கும் சென்று ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை எவ்வாறு சிறந்த முறையில் வளர்ப்பது, சிறந்த உரங்களை பயன்படுத்தும் முறைகள், ஊட்டச்சத்து குறைவில்லாமல் கீரையை மதிப்புக்கூட்டல் பொருளாக மாற்றுவதற்கான பயிற்சிகளை மேற்கொண்டேன். வேளாண்துறை சார்ந்தவர்களும் எனக்கு ஆதரவு அளித்தார்கள்.

மேலும் என் இரு பிள்ளைகளுக்கும் அவர்களின் ஆரோக்கியத்திற்காக நான் செய்த விஷயங்கள் தெரியும் என்பதால் அவர்கள்தான் இதனை தொழிலாக மாற்ற சொல்லி ஐடியா கொடுத்தார்கள். இப்போது ‘தினசரி கீரை’ தொடங்கப்பட்டு 4 வருஷங்களாகிறது. 

தொழில் வெற்றிகரமாக நடைபெற பொருளின் தரமும் ஊட்டச்சத்து குறைவில்லாமல் ஆரோக்கியமான முறையிலும் கீரைப் பொடியை மக்களுக்கு வழங்குவதுதான் காரணம்’’ என்றவர், கீரைப் பொடி தயாரிப்பில் ஆரோக்கியமான படிநிலைகளை கையாள்வதாக கூறினார்.

‘‘தரமான பொருட்கள் தயாரிக்க முதலில் ஆரோக்கியமான கீரை வகைகள் வேண்டும். அதனால் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கீரைகளை வாங்குகிறோம். அவர்களுக்கு ஆரோக்கியமான முறையில் கீரை விளைவிப்பது குறித்த பயிற்சியும் வேளாண் துறை உதவியுடன் கொடுத்திருக்கிறேன். கீரைகளை மஞ்சள் சேர்த்த தண்ணீரில் நன்கு அலசுவோம். அதன் பிறகு அதில் உள்ள கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்களை நீக்க சில நொடிகள் அவிக்க வேண்டும்.

பின்னர் சோலார் ட்ரையர் கொண்டு கீரைகளை உலரச் செய்து,  வாடிக்கையாளர்களின் தேவையை பொருத்து அவற்றில் மிளகு போன்றவற்றை சேர்த்து அரைத்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருளான கீரைப் பொடி தயாரிக்கப்படுகிறது. இதில் முடக்கத்தான், வல்லாரை, முருங்கை, பொன்னாங்கண்ணி, தூதுவளை, மணத்தக்காளி, புளிச்சை, அகத்தி, பிரண்டை, கரிசலாங்கண்ணி என பல வகைகளில் பொடிகளை தயாரிக்கிறோம்.

ஆரம்பத்தில் பல சிரமத்தினை சந்தித்தோம். பொடிகளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டுமே சந்தைப்படுத்த முடிந்தது. பிறகு தரத்திலும் பேக்கேஜிங்கிலும் கவனம் செலுத்தி வட மாநிலங்கள் உட்பட இந்தியா முழுவதும் விற்பனை செய்கிறோம். உணவே மருந்து எனும் நம் முன்னோர்கள் கருத்துப்படி சித்த மருத்துவர்களும் எங்க கீரைப் பொடிகளை உணவில் சேர்த்துக்கொள்ளும்படி பரிந்துரை செய்கிறார்கள்.

 வெளிநாடுகளில் உள்ள தமிழ் சங்கங்களும் எங்களிடம் இருந்து கீரைப் பொடிகளை வாங்கி பயன்படுத்துவதற்காக அனுமதி பெற சாம்பிள்களை அனுப்பி இருக்கிறோம். எல்லோரும் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நலமுடன் வாழ வேண்டும் என்பதே என் ஆசை” என மனம்
மகிழ்ந்தார் லட்சுமி ப்ரியா.

ரம்யா ரங்கநாதன்