உங்களாலும் முடியும் தோழி!



வாழ்க்கையில் எல்லாமே நாம நினைக்கிறபடி சரியாக நடந்துட்டா அதிலொரு சுவாரஸ்யம் இருக்காது! ஒருவேளை மாறி நடந்துட்டா எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது என்று சிலநேரம் அலுத்துக் கொள்பவர்கள் இருக்கிறார்கள். நாம எதிர்பாராத நேரத்தில் ஏமாற்றமோ அல்லது அவமானத்தை சந்திக்கும் பொழுது அதிலிருந்து மீள்வதற்கு உணர்ச்சிவசப்படாமல்
நிதானமாக யோசித்தால் தீர்வு நிச்சயமாக கிடைக்கும்.

அந்தத் தருணங்களில் “நீ சாதிக்கப் பிறந்திருக்கிறாய்” என்று நம் ஆழ் மனதில் நினைத்துக் கொண்டாலே போதும் உங்களாலும் சாதனை படைக்க முடியும்.  இது அனைவருக்கும் பொருந்தும். அப்படிப்பட்ட சாதனை படைத்தவர்தான் சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்த வெண்ணிலா. இவர் தன் வாழ்க்கையில் தொடர்ந்து துயரங்களை சந்தித்தாலும், அதில் இருந்து மீண்டு வெற்றிப் பாதையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்.

“எந்தவொரு பிரச்னையாக இருந்தாலும் அதைத் தாண்டி வெளியே வரணும். ஒரு விஷயம் முடியாது என்றாலும் அது எப்போதுமே முடியாமல் போய்விடும். அவ்வாறு சொல்லாமல் தடைகள் ஏற்பட்டாலும் அதில் இருந்து வெற்றிக்கான பாதையை தேட வேண்டும் என்று என் அம்மா அடிக்கடி சொல்வாங்க. ஆனால் என் பெற்றோரை நான் இழந்த போது நான் உடலால் துவண்டு போனாலும் அம்மாவின் வார்த்தையை கடைபிடிக்க வேண்டும் என்று மீண்டும் எழுந்து வந்தேன்’’ என்று வெண்ணிலா சொல்லும் போது அவரது மன வலிமை மலைக்கச் செய்தது.

‘‘என் பெற்றோரை தொடர்ந்து என் கணவரின் பெற்றோரையும் நான் இழந்து நின்ற போது, ‘நீ எப்படி வாழ்ந்திடுவே பார்க்கலாம்’ என்று சவால் விட்டு உறவுக்காரர்
களின் கேலி, கிண்டல் எல்லாவற்றையும் என்னுடைய வைராக்கியத்தால் தூக்கி எறிந்துவிட்டு இன்று அவர்கள் மத்தியில் சாதித்துக் காட்டி இருக்கிறேன்’’ என்று கூறும் இவர், ‘நிலா ஹோம்மேட் புராடக்ட்ஸ்’ என்ற பெயரில் வித்தியாசமான கேக்குகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

“சொந்த ஊர் சேலத்தில் உள்ள மெய்யனூர் கிராமம். கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு நான் படித்த கல்லூரியிலேயே விரிவுரையாளராக பணியாற்றி வந்தேன். அந்த சமயத்தில் என் பெற்றோருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால் என்னுடைய ஒன்பது வருட விரிவுரையாளர் வேலையை ராஜினாமா செய்தேன். ஆனால் அவர்களை மட்டுமில்லாமல் என் கணவரின் பெற்றோரையும் இழந்தேன். நால்வரின் இழப்பு என்னை பெரிய அளவில் பாதித்தது.

நான் சோர்வாக இருக்கும் போது என் கணவர்தான் எனக்கு ஆறுதல் சொல்வார். நீ தனியாக இருந்தால் நடந்த விஷயங்களை நினைத்து கஷ்டப்படுவாய், அதனால் உனக்கு பிடிச்ச வேலையை செய். புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ள நினைத்தால் அதற்கான பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொள். இது உன்னுடைய மனதில் மாற்றத்தினை ஏற்படுத்தும் என்று என்னை ஊக்கப்படுத்தினார்.

என் கணவர் உணவுத்துறை சார்ந்த வேலையில் இருந்தார். அதனால் என் குழந்தைகளுக்கு ஆரோக்கிய உணவினை கொடுக்க விரும்பினேன். அந்த எண்ணத்தில் வீட்டில்

ஆரோக்கியமான உணவுகளை தயாரிக்கும் பயிற்சிக்கு சென்று அந்த உணவுகளை செய்ய கற்றுக் கொண்டேன்.

மேலும் மத்திய அரசு இது போன்ற உணவுக்காக அளிக்கும் பயிற்சியிலும் சேர்ந்து கற்றுக் கொண்டேன். அதன் பிறகு உணவுத் திருவிழாக்கள், உணவு சார்ந்த கண்காட்சிகளில் கலந்து கொள்ள துவங்கினேன். அங்கும் பல விஷயங்களை கற்றுக் கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. பிறகு நான் வீட்டில் இருந்தே உணவுகளை தயாரித்து தெரிந்தவர்களுக்கு கொடுத்தேன்.

அவர்கள் கொடுத்த ஊக்கம்தான் என்னை ‘நிலா ஹோம்மேட் புராடக்ட்ஸ்’ என்ற தொழிலை துவங்க மூலக்காரணமாக அமைந்தது. அதன் பிறகு விதவிதமான கேக் செய்யத் தொடங்கினேன். முதலில் சாக்லேட் கேக்தான் செய்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், அதனைத் தொடர்ந்து எந்தவித அலங்கார, ரசாயனப் பொருட்கள், பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர்கள் சேர்க்காமல் கேக்குகள், பிரெளனிகள், குக்கீஸ்கள், மப்ஃபின்கள் தயாரித்தேன். 

இவை தவிர சாமை, வரகு, கேழ்வரகு போன்ற சிறுதானிய கேக்குகளும் செய்கிறேன். இதனை முளைக்கட்டி தயாரித்து தருவதால், பலரும் அதையே விரும்பி கேட்கிறார்கள். கேக்குகளை தயாரிக்க நான் எந்தவித ஆர்டிபிஷியல் பொருட்களையும் சேர்ப்பதில்லை.

சுத்தமான வெண்ணெய், செக்கு எண்ணெய்கள், நாட்டுச்சர்க்கரை, சிறுதானிய மாவுகள், முட்டை, தயிர், பழவகைகள், பால், ஒரிஜினல் கொக்கோ பவுடர்களை மட்டுமே பயன்படுத்துகிறேன். சிறுதானிய கேக் வகைகளில் பழங்கள், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, ஓட்ஸ், பாதாம், முந்திரி, கேரட் போன்றவற்றை பயன்படுத்தி செய்கிறேன். 

இதில் மூங்கில் அரிசி மற்றும் பிரெளனிகளை சர்க்கரை சேர்க்காமல் சர்க்கரை நோயாளிகளுக்காக பிரத்யேகமாக தயாரித்து தருகிறேன். சிலர் சர்க்கரை சேர்க்காமல் வேறு மாற்று சேர்த்து கேக் கேட்பார்கள். அவர்களுக்கு பேரீச்சம்பழம், வாழைப்பழம், தேன், பனங்கற்கண்டு, வெல்லம், பனங்கருப்பட்டி, நாட்டுச்சர்க்கரை, தேங்காய், துளசி, சர்க்கரை பயன்படுத்தி கேக் தயாரிக்கிறேன்.
 
தற்போது ரசாயனம் இல்லாத நிறங்கள் மற்றும் கேக்குகளை ஈகோ ஃபிரண்ட்லி பாக்சில்தான் பேக் செய்து தருகிறேன். ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதால், தற்போது பனங்கிழங்கு, சங்குப்பூ, ஆவாரம்பூ, செம்பருத்தி, வெற்றிலை மற்றும் முருங்கைக்கீரை, கற்பூரவள்ளி, துளசி மற்றும் ஹெர்பல் கேக்குகளை செய்து கொடுக்கிறேன். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஆர்டரின் பேரில் கஸ்டமைஸ் செய்தும் தருகிறேன்’’ என்றவர், கேக் தயாரிப்பு குறித்து பயிற்சியும் அளித்து வருகிறார்.

‘‘எல்லோரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதால் எனக்கு தெரிந்த ஆரோக்கிய உணவினை மற்றவருக்கும் சொல்லித் தந்து வருகிறேன். முதலில் ஐம்பது பேருக்குதான் பயிற்சி அளித்தேன். தற்போது 200க்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறேன். 

பயிற்சியில் ஒவ்வொரு பொருட்களின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தினை புரிய வைக்கிறேன். ஆன்லைன் மற்றும் நேரடி பயிற்சி அளிப்பதன் மூலம் பெண்களை சுயமாக தொழில் செய்ய ஊக்கப்படுத்தும் விதமாக அமைகிறது.

என்னிடம் பயிற்சி எடுத்துக் கொண்டவர்களில் பலர் வீட்டில் இருந்தபடியே சுய தொழிலினை செய்து வருகிறார்கள். என்னுடைய வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என் கணவர் எனக்கு கொடுத்த ஆலோசனை மற்றும் ஊக்கம்தான். நான் தொழிலை விரிவுபடுத்தவும் முழு ஒத்துழைப்பு கொடுத்தார். 

என்னுடைய அனைத்து வளர்ச்சிக்கும் அவர்தான் பக்கபலமாக இருந்து வருகிறார்.என்னோட லட்சியமே பெண்களுக்கு வேலை வாய்ப்பை கொடுக்க வேண்டும்.  புதிய பெண் தொழில் முனைவோரை உருவாக்க  வேண்டும். கேக் செய்ய ஒரு தொழிற்சாலை அமைக்க வேண்டும்’’ என்றார் வெண்ணிலா.

மதுரை கணேசன்