சமத்துவம் இன்மையை களைந்த இந்தியாவின் முதல் பெண் பவுன்சர்!



குறிப்பிட்ட சில வேலைகள் ஆண்களுக்கானது என்று இந்த சமூகத்தில் பதிவாகியுள்ளது. பெண்களால் சவால் நிறைந்த வேலைகளை செய்ய இயலாது என்பதுதான் அவர்களின் பொதுவான சிந்தனையாக இருந்து வருகிறது. 
ஆனால் இது போன்ற சிந்தனைகளை தகர்த்து இந்தியாவின் முதல் பெண் பவுன்சர் (Bouncer) ஆக கம்பீரமாக பணியாற்றி வருகிறார் மெஹருனிஷா சௌகத் அலி.

“நான் ஒரு ராணுவ அதிகாரியாக வேண்டுமென விரும்பினேன். அதற்கு என் அப்பா சம்மதிக்கவில்லை. பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்றாலும் அதற்கு பெற்றோர்களின் ஆதரவு இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். 

15 வயதில் நான் ராணுவத்தில் சேர விரும்பிய போது என் சகோதரர்கள் ‘அதில் ஆண்களைதான் சேர்ப்பார்கள், பெண்களை சேர்க்கமாட்டார்கள்’ என்றனர். நானும் அதை நம்பி ராணுவத்தில் சேர்வதற்காக விண்ணப்பிக்காமல் விட்டுவிட்டேன். அதுதான் நான் செய்த மிகப்பெரிய தவறுன்னு சொல்லணும்.

பின்னர் ஒருமுறை நான் குடும்பத்தினருடன் டெல்லிக்கு சென்றிருந்த போது அங்கு உயரம் மற்றும் வலிமையான மனிதர்கள் சீருடைகள் அணிந்தபடி சென்றனர். நான் அவர்களை போலீஸ் அதிகாரிகள் என நினைத்துக்கொண்டேன். ஆனால் அவர்கள் பவுன்சர் என்பது அதன் பிறகு தான் எனக்கு தெரிந்தது. அப்போதுதான் நான் ஒரு பவுன்சர் ஆகவேண்டும் என்ற கனவு எனக்குள் எழுந்தது” என்றவர், தன் 16 வயதில் டெல்லியில் உள்ள ஒரு செக்யூரிட்டி கம்பெனியில் ஃபீமேல் செக்யூரிட்டி கார்ட் ஆக பணியில் சேர்ந்தார்.

“அந்த சமயத்தில் பெண்கள் யாரும் பவுன்சராக இல்லை. அப்படியே இருந்தாலும் ஆண்களே பவுன்சர் என அழைக்கப்பட்டனர். பெண்கள் அவ்வாறு அழைக்கப்படவில்லை. பெண் பவுன்சர் எதற்கு, ஒரு ஆண் ஓங்கி அறைந்தால் அந்தப் பெண் அவ்வளவுதான் என்றெல்லாம் பேசினார்கள். என் முதல் ட்ரிப், IPL நிகழ்வுக்காக ஜெய்ப்பூர் செல்லவேண்டியிருந்தது. அங்கு ஆண் பவுன்சர்களுக்கு சிக்கன், மட்டன் போன்ற உணவுகள் கொடுக்கப்பட்டது.

ஆனால் எனக்கு காய்கறியும் பூரியும் கொடுத்தனர். விஷயம் என்னுடைய சீனியர் காதுகளில் சென்றடையும் வரை 2 நாட்களுக்கு நான் சாப்பிடவில்லை. ‘ஏன் ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறான உணவுகளை கொடுக்கிறீர்கள், ஆண்களை விட பெண்கள் தாழ்ந்தவர்களா?’ என கேட்டேன். உடனே அவர் இருபாலருக்கும் இனி சமமான உணவு அளிக்கும்படி ஆணையிட்டார். இதுதான் என் முதல் வெற்றியென நம்புகிறேன். 

கொஞ்சம் கொஞ்சமாக இந்த துறையில் இருந்த சமத்துவமின்மையை களைந்தேன். சமமான ஊதியம், பதவி, பணியிடத்தில் ஆண், பெண் இருவரையும் சமமாக நடத்துவது என எனக்கான எல்லா உரிமைகளையும் பெற்றேன்” என்றபடி தன் பணி அனுபவங்களை பகிர்ந்துகொண்டவர், தற்போது சொந்தமாக Mardani & Dolphin Security Service Pvt Ltd எனும் செக்யூரிட்டி கம்பெனியை நடத்தி வருகிறார்.

‘‘என்னுடைய நிறுவனத்தில் ஆண், பெண் என இருவரும் பணிபுரிகின்றனர். இந்த துறைக்கு வந்தபின் நான் நிறைய உடற்பயிற்சிகளை செய்து என் உடல் தோற்றத்தை பராமரிக்கிறேன். நான் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல... மக்களுக்கும் இந்த உலகிற்கும் பெண்களும் ஆண்களை போலவே பலம் கொண்டவர்கள் என்பதை காட்டுவதற்கு” என்கிறார் கட்டுடல் மற்றும்  கம்பீரமான தோற்றத்தில் இருக்கும் மெஹருனிஷா.

ரம்யா ரங்கநாதன்