ஸ்மார்ட் ஷூஸ்மார்ட்போன், ஸ்மார்ட்  டி.வி, ஸ்மார்ட் ஹோம் வரிசையில் இப்போதைய புதுவரவு ஸ்மார்ட் ஷூ. ‘நைக்’ நிறுவனம் இந்தப் புதிய மாடல் ஷூவை  அறிமுகப்படுத்திபலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
‘நைக் அடாப்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மாடல் ஷூ, உங்களின் பாத அளவுக்குத் தகுந்த மாதிரி அதுவாகவே பொருந்திக் கொள்ளும் ஆற்றல் வாய்ந்தது. ஸ்மார்ட்போன் மூலம்  ஷூவின் செயல்பாடுகளைக்  கட்டுப்படுத்துவதற்காக ஒரு செயலியும் உள்ளது. இனி குனிந்து ஷூவை மாட்ட வேண்டிய அவசியம் இருக்காது.

சில வருடங்களுக்கு முன் வெளியான ‘பேக் டூ த ஃப்யூச்சர்’  என்ற ஹாலிவுட் படத்தில் கதாநாயகன் இந்த மாதிரியான ஒரு ஷூவைப் பயன்படுத்துவதைப் பார்த்திருப்போம். அந்த ஷூவைக் கூட வடிவமைத்தது ‘நைக்’ தான்.கூடைப்பந்தாட்ட வீரர்களை மனதில் வைத்து இந்த ஷூ தயாரிக்கப்பட்டுள்ளது. காலில் அணிந்திருக்கும் உணர்வே இருக்காது. அத்துடன்  ஷூ லேஸ் இதில் கிடையாது.  

ஷூவிற்குள் பாதத்தை நுழைத்து ஸ்மார்ட் போனில் உள்ள செயலியைத் தட்டினாலே போதும் கால்களில் அப்படியே பிட்டாகி விடும். கொஞ்சம்கூட இறுக்கமாகவோ அல்லது தளர்வாகவோ இருக்காது. ‘‘கூடைப்பந்தாட்ட வீரனுக்கு பாதத்தில் தான் நிறைய வேலையிருக்கும். காலணி சரியாக பொருந்திக்கொண்டால் மட்டுமே உடலில் இரத்த ஓட்டம் சீராகப் பாயும்.

இரத்த ஓட்டம் சீராகப் பாய்ந்தால் மட்டுமே வீரர்களால் சிறப்பாக விளையாட முடியும். இதை மனதில் வைத்தே இந்தக் காலணியை  உருவாக்கியிருக்கிறோம். அதே நேரத்தில் இந்தக் காலணியை சாதாரண மக்களும் பயன்படுத்தலாம்...’’ என்கிறார்‘நைக்’  நிறுவனத்தின் அதிகாரி ஒருவர். இந்த  மாதம்  விற்பனைக்கு வரவுள்ள ‘நைக் அடாப்ட்’டின் விலை சுமார் ரூ.25,000