சாதிக்கும் பழங்குடி பெண்கள்ஒரு காலத்தில் நாப்கின் என்றாலே ‘என்ன...?’வென்று கேட்ட  பழங்குடிப் பெண்கள், இன்று நாப்கினைத் தயாரிக்கும் அளவுக்கு ‘பேட் உமன்’களாக உயர்ந்து நிற்கின்றனர். தெலுங்கானாவின் ஒருங்கிணைந்த பழங்குடி மேம்பாட்டு ஏஜென்சியின் கீழ் இயங்கும் நாப்கின் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்துவதே இந்த ஆதிவாசிப் பெண்கள் தான்.  கடந்த பிப்ரவரியில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம், மாதத்துக்கு 6000 - 7000 யூனிட் நாப்கின்களை உற்பத்தி செய்தது.

அவற்றை விற்பனை செய்யாமல், ஆதிவாசிப் பெண்களுக்கும் ஆசிரம பள்ளி மாணவிகளுக்கும் இலவசமாக வழங்க, பேட் உமன்களின் புகழ் தெலுங்கானாவின் பட்டிதொட்டியெங்கும் பரவியது.

கெமிக்கல் இல்லை, 100% நேச்சுரல், மலிவான விலை என்பதால் நகரப் பெண்கள், பிராண்டட் நாப்கின்களைத் தூக்கியெறிந்துவிட்டு ஆதிவாசிப் பெண்களின் தயாரிப்பை வாங்க ஆரம்பித்துள்ளனர். இதனால் ஆர்டர்கள் அதிகரிக்க, நான்கு இடங்களில் கிளைகளை விரிவாக்கியிருக்கிறது பழங்குடி மேம்பாட்டு ஏஜென்சி.

தெலுங்கானாவில் உள்ள அனைத்து ஆதிவாசிப் பெண்களுக்கும் மாதந்தோறும் இலவச நாப்கின், மூன்று மாதத்தில் 40,000 யூனிட் உற்பத்தி என்ற இலக்குகளோடு இரவு பகல் பாராமல் உழைத்துக்கொண்டிருக்கிறது பேட் உமன்களின் டீம்.