ஆக்டோபஸ் நாயகன்அமெரிக்காவின் பாஸ்டன் நகரிலுள்ள வண்ண மீன்கள் காட்சியகம். தொங்கும் விளக்குகளிலிருந்து வெளியாகும் மெல்லிய ஒளி வெளிச்சத்தைப் பரப்புகிறது. நுழைவாயிலை அலங் கரிக்கும் பிரமாண்ட கண்ணாடித் தொட்டியில் அமைதியாக நீந்திக்கொண்டிருந்தது ஆக்டோபஸ். காட்சியகத்துக்குள் நுழைந்த வில்சன் மேனஷியைப் பார்த்தவுடன் உற்சாகமாகி அப்படியும் இப்படியும் துள்ளிக்குதிக்கிறது அந்த ஆக்டோபஸ்.

கண்ணாடித் தொட்டியின் மேல் பாகத்தை மெலிதாக நீக்கி, அதன் விளிம்பில் வலது கை விரல்களை வைக்கிறார் வில்சன். அடுத்த நொடியில் வில்சனின் விரல்கள் மீது ஏறி அவரின் கையை வாஞ்சையுடன் வருடு கிறது ஆக்டோபஸ்.

நாய், பூனை, யானை, கரடி போன்ற உயிரினங்களைப் பழக்கப்படுத்தி அவற்றுடன் உறவாடும் மனிதர்களைப் பார்த்திருப்போம். இதில் வில்சன் கொஞ்சம் வித்தியாசமானவர். அவர் உறவாடி நட்பு கொள்வது கடல் வாழ் உயிரினங்களுடன். அதுவும் மனிதர்களிடம் அவ்வளவு சீக்கிரத்தில் பழகாத  ஆக்டோபஸுடன்.

ஆக்டோபஸின் பிடியில் மாட்டிக்கொண்டு உயிர் பிழைத்து வந்தவர்களின் கதை களைக் கேட்டிருப்போம். ஆனால், வில்சனின் அன்புப் பிடியில் மாட்டிக்கொண்ட ஆக்டோபஸ்கள் அவரிடம் குழந்தையைப் போல விளையாடுகின்றன.

ரகசிய மொழியில் பேசுகின்றன. பதிலுக்கு வில் சனும் ஆக்டோபஸுடன் உரையாடுகிறார்.  தனது வாழ்நாளில் சுமார் 7,800 மணி நேரங்கள் ஆக்டோபஸுடன் இருந்திருக்கிறார் வில்சன். அவரை அமெரிக்கர்கள் ‘ஆக்டோபஸ் நாயகன்’ என்று செல்லமாக அழைக்கின்றனர். இத்தனைக்கும் வில்சனின் வயது 84.

கடலின் அடியாழத்தில், பவளப் பாறைகளில் அதிகமாக வாழக்கூடிய ஆக்டோபஸிற்கு எலும்புகள்  இல்லை. சீக்கிரமாகவே வளர்ந்து விடுகின்றன. சுமார் 300 வகையான ஆக்டோபஸ்கள் இப்போது இருக்கின்றன. கடல் வாழ் உயிரினங்களிலேயே அதிக அறிவாற்றல் வாய்ந்த ஆக்டோபஸை மனிதர்கள் ஜோதிடத்துக்குப் பயன்படுத்துகின்றனர்.  

அதன் எட்டு கைகளையும் எப்படி வேண்டுமானாலும் அசைக்க முடியும்.   எங்கு வேண்டுமானாலும் ஊடுருவிச் செல்ல முடியும். ஆனால், ஆக்டோபஸ்கள் சில மாதங்கள்  மட்டுமே உயிர் வாழ்கின்றன. பசிபிக் பெருங்கடலில் வாழும் ராட்சத ஆக்டோபஸ்கள்  மட்டும் அதிகபட் சமாக 4-5 ஆண்டுகள் வரைக்கும் வாழ்கின்றன.