உயிரியல் ரொம்பவே சுவாரஸ்யமானது!உலகறிந்த அறிவியல் மேதை சர். வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன். பிறப்பால் ஒரு தமிழர். இங்கிலாந்தில் குடும்பத் துடன் வாழ்ந்து வரும் இவர், கேம்பிரிட்ஜில் உள்ள மருத்துவ ஆய்வுக் கழகத்தில் தலைமை  விஞ்ஞானியாகவும் பணியாற்றி யவர். 2009-ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு வழங்கப்பட்டது. அதில் ஒருவர் இவர்.

மற்ற இருவர்: தாமஸ் ஸ்டெயிடிஸ் மற்றும் அடா யோனத்.   ‘நமது உடலின் இயக்கத்திற்கு முக்கிய காரணமான மரபணுக் களில் உள்ள ‘ரைபோசோம்’கள் என்கிற மிகச் சிறிய செல்கள் எப்படி புரதத்தை உற்பத்தி செய்கின்றன மற்றும் உயிர்களின் மூலக்கூறுகள் எவ்வாறு இயங்குகின்றன’ என்பதைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு இவர்களுக்கு வழங்கப்பட்டது.

வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் சமீபத்தில் ‘Gene Machine’ என்ற நூலை எழுதியிருக்கிறார். அதையொட்டிய நேர்காணல் இது. உங்களின் புத்தகத்தை மக்கள் எதற்காக படிக்க வேண்டும்?

ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் உயிர்களின் மூலக்கூறுகளைப் பற்றி கற்றுக்கொள்வதற்காகவும், நமக்குள் அறிவியல் எவ்வாறு வேலை செய்கிறது மற்றும் விஞ்ஞானிகள் என்பவர்கள் யார் என்பதை அறிந்துகொள்ளவும் இப்புத்தகம் உங்களுக்கு உதவியாக இருக்கும். ஒரு அறிவியல் புத்தகத்தை எப்படி இவ்வளவு சுவாரஸ்யமாக எழுதினீர்கள்?

‘ரைபோசோம்’கள் பற்றிய கதைதான் இந்தப் புத்தகம். இதை எழுதும்போதே ஒரு கதையை எழுதுவதைப் போல உள்ளுக்குள் உணர்ந்தேன். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது ஜேம்ஸ் வாட்சன் எழுதிய ‘The Double Helix’ என்ற புத்தகத்தைப் படித்தேன். உயிரியல் சம்பந்தமான அற்புதமான புத்தகம் அது. ரொம்பவே பர்சனலாக அதை அவர் எழுதியிருந்தார்.  

இத்தனைக்கும் நான் இயற்பியலைத்தான் முதன்மை பாடமாக கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறேன். உயிரியல் சார்ந்த விஷயங்கள் இவ்வளவு சுவாரஸ்யமானதா என்று ஆச்சர்யப் படும்படி அந்தப் புத்தகம் இருந்தது.  தவிர, உயிரியலுக்கு என்று தனிப்பட்ட இலக்கு உள்ளது. அது மர்மங்கள் நிறைந்தது. அந்த மர்மங்களைக் கண்டறிந்து அதை சரி செய்வது ரொம்பவே சுவாரஸ்யமானது. அதைத்தான் இப்புத்தகத்தில் செய்திருக்கிறேன். அதுவும் பர்சனலாக.

நோபல் பரிசு...இந்த அளவுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. என்றாலும் இங்கிலாந்தில் எனக்கான அங்கீகாரம் கிடைப்பது கடினமாகவே இருந்தது. அங்கேயுள்ள டி.வி. சேனல்களிலும், பல செய்தித்தாள்களிலும் என்னைப் பற்றிய எந்த செய்தியும் வெளிவரவேயில்லை. நோபல் என்னவென்பதைப் பற்றி அறியாதவர்களாகவே மக்கள் இருக்கிறார்கள் என்பதை இந்தப் புத்தகத்தில் பேசியிருக்கிறேன். புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சி வெளிப்பாடுகளுக்காகத்தான் இப்பரிசு கொடுக்கப்படுகிறது.

நீங்கள் நினைப்பதைப் போல இந்தப் பரிசைப் பெற்றவர்கள் எல்லோரும் பெரிய ஜீனியஸ்கள் அல்ல. பலருக்கு அதிர்ஷ்டத்தால் கூட நோபல் கிடைத்திருக்கிறது. அறிவியல் துறைகளில் நோபல் வென்ற பலர் விஞ்ஞானிகள் கூட இல்லை. நோபல் பரிசு என் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்த நான் ஒருபோதும் அனுமதித்ததில்லை.

தமிழில்: த.சக்திவேல்