சர்வாதிகார சவுதி!



உலகளவில் பெண்களின் மேம்பாட்டிற்கு பாடுபட்டு ஐ.நா அமைப்பினால் விருது பெற்றுள்ள சமார் படாவி மற்றும் நஸிமா அல்-சடா உள்ளிட்ட பெண்ணுரிமை செயல்பாட்டாளர்களை சவுதி அரேபியா அரசு கைது செய்துள்ளது. கடந்த மே 15 அன்று தொடங்கிய பெண்ணுரிமை போராட்டங்கள் தொடர்பாக இவர்களோடு மேலும் பல்வேறு போராட்டக்காரர்களையும் அரசு மூர்க்கத்தனமாகக் கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது.

2012 ஆம் ஆண்டு ஐ.நா அமைப்பால் துணிச்சல் பெண் என விருது பெற்ற படாவி, பெண்கள் வாகனம் ஓட்டவும் முனிசிபல் எலக்‌ஷன்களில் ஓட்டுபோடவும் பல்வேறு மனுக்களை அரசுக்கு எழுதி அனுப்பிய போராளி. க்வாடிஃப் பகுதியைச் சேர்ந்த அல்-சடா, 2015 ஆம் ஆண்டு உள்ளூர்தேர்தலில் பங்கேற்று பின் போட்டியிட மறுக்கப்பட்ட வரலாறு கொண்டவர்.

“சீர்திருத்தப் பாதையில் நடைபோடும் என எதிர்பார்க்கப்பட்ட சவுதி அரேபியா தொழிலதிபர்கள், பெண்ணுரிமையாளர்கள், சீர்திருத்தவாதிகள் உள்ளிட்டோரை கைது செய்வது அரசின் சர்வாதிகார எண்ணத்தை வெளிப்படுத்துகிறது” என்கிறார் மனித உரிமை கண்காணிப்பகத்தைச் சேர்ந்த சாராலெ வொய்ட்சன்.