தங்கப்பெண் மானுபாகர்!தன் பதினாறு வயதில் துப்பாக்கி சுடும் போட்டியில் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றெடுத்து இந்தியாவை பெருமைப்படுத்தியிருக்கிறார் மானுபாகர். ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்த 49 ஆவது உலக துப்பாக்கி விளையாட்டுச்சங்கம் (ISSF) நடத்திய ஜூனியர் அளவிலான வேர்ல்ட் கப் போட்டியில் ஏர் பிஸ்டல் பிரிவில் பங்கேற்று நான்கு நாட்களில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார் இந்த இளம்சுட்டி.

ஹரியானாவின் கோரியா கிராமத்தில் கொண்டாட்டங்கள் இன்னும் ஓயவில்லை. இம்மாதத்தில்தான் மெக்சிகோவில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் பத்து மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தனிநபர், கலப்பு என இருபிரிவிலும் தங்கப்பதக்கங்கள் வென்றிருந்தார் மானுபாகர். “எனக்கு பாக்சிங், கபடி, கிரிக்கெட், டென்னிஸ்,  கராத்தே, தாங்டா (மணிப்பூர் தற்காப்புக்கலை) ஆகியவையும் பிடிக்கும்” என நீளமான பட்டியல் வாசிக்கிறார் மானுபாகர்.

மானுபாகர் முதல் தங்கப்பதக்கம் வென்ற நாளிலிருந்து ஒருவாரத்திற்கு அவர் படித்த பள்ளியிலுள்ள மாணவ மாணவிகளுக்கு அவரின் அம்மா இனிப்புகளை வழங்கி ஆச்சரியமளித்திருக்கிறார். படபடவென பட்டாசாய் பேசும்  மானுபாகர்  துப்பாக்கியை தூக்கி குறிவைத்தால் முகத்தில் கவனம்  ஒருமுகமாகி  தீர்க்கமாக மாறிவிடுகிறது. எப்படி?  யோகா, தியானம்தான் காரணம் பாஸ்! என சிரிக்கிறார் மானுபாகர்.