‘‘சமூக உறவுகளைக் காப்பதில் சிரிப்புக்கு முக்கிய பங்குண்டு!’’



நேர்காணல்:  சோபி ஸ்காட், நரம்பியல் வல்லுநர் மற்றும் பேராசிரியர்.

நாம் பேசும் சொற்களுக்கும் தகவல் தொடர்புக்கும் என்ன தொடர்பிருக்கிறது? 

பேச்சுக்கு தகவல் தொடர்பில் இன்றியமையாத இடமுண்டு. நீங்கள் என்னைப்  பார்க்காத போதும், குரலைக்கேட்டே எனது ஊர், வயது, எனது மனநிலை ஆகியவற்றை எளிதாக யூகிக்கலாம்  என்பதுதான்  இதன் பலம். வயது  வந்த  ஆண்களுக்கும், பெண்களுக்கும் குரல் உடைந்து பேசும் தொனியும் மாறும் தன்மைக்கு சமூக, கலாசார தொடர்புண்டு.

பேச்சு கடந்து உடல்ரீதியான தகவல் தொடர்பைப் பற்றிக் கூறுங்கள்? 

முகத்தில் காட்டும் உணர்ச்சிகள், உடலின் அசைவுகள் ஆகியவை செய்தியை வார்த்தை களால் கூறுவதற்கு முன்பே எதிரிலிருப்பவருக்கு கூறிவிடுகின்றன. ஒருவரின் உடல்மொழியை வைத்தே கூற வரும் விஷயத்தை யூகிப்பது பயிற்சியால் சாத்தியம். பாடகர்கள் பாடலைப் பாடும்போது, பாடலின் தன்மைக்கேற்ப மாறும் அவர்களின் உடல் அசைவு களைப்  பாருங்கள்.  இதனை சரியானபடி  உணர்ந்தால்,  உடல்மொழி  குறிப்புகளின்  வழி  ஒருவரின்  மனதைப் படித்து விடலாம்.
 
 இமோஜி என்பது நவீனகால தகவல்தொடர்புக்கான கருவியா? 

நாம்  எழுத்துக்களில்  உணர்ச்சிகளை வெளிக்காட்டும் குறி யீடுகளைப் பயன்படுத்தி வந்தவர்கள். அதன் நீட்சியாகவே இன்று நாம் இமோஜி மற்றும் எமோட்டிகான் ஆகியவற்றை பயன்படுத்துகிறோம். ஆனால் இமோஜியை அனைவருக்குமான மொழி என்பது சரியானதல்ல. பல பாராக்களில் எழுதும் விஷயங்களை சின்னச்சின்ன  குறியீடுகளில் குறிப்பிடுவது தகவல் தொடர்பில் ஈஸியான ஒன்றாக இருக்கிறது.
 
தகவல்தொடர்பில் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன? 

தகவல்தொடர்பு என்பது நேரடியானதாக எப்போதும் இருந்ததில்லை. எனது தாத்தா தலைமுறையினர், அஞ்சல்  அட்டைகள்  வழியாக உரையாடினர். இன்று  நாம் ஸ்மார்ட்போன் வழியாக செய்திகளை இன்ஸ்டன்டாக பரிமாறிக்கொள்கிறோம்.  முதலில்  எழுத்துக்களின் வழியாகப்  பரிமாறிக்கொண்ட செய்தி இன்று, வீடியோ கால், இமோஜி அளவில் மாறியுள்ளது.
 
தகவல் தொடர்பில் சிரிப்புக்கு முக்கியத்துவம் உண்டா?  

விலங்குகளில் நாம் மட்டும் சிரிக்க முடியும் என பெருமைப்பட்டுக்கொள்ள முடியாது. எலிகள், மனிதக்குரங்கு ஆகியவற்றாலும் சிரிக்க முடியும். சிரிப்பு என்பதை குழந்தை  தன் பெற்றோர்களிடமிருந்து பெறுகிறது. பின்னாளில் அது சமூக  இணைப்புக்கான காரணமாக மாறுகிறது. சிரிப்பு என்பது ஒருவர் அடிக்கும் ஜோக்குக்காக வருவதல்ல. நம்முடன்  இருக்கும் மனிதர்களை நாம் ஏற்கிறோம்  என்ற அர்த்தமும் அதில் உண்டு. கட்டுப்படுத்தக்கூடிய புன்னகை, சிரிப்பு  இரண்டும் சமூக  உறவுகளில்  முக்கியத்துவம்  வாய்ந்தவை.
 
அண்மையில் நீங்கள் படித்த, உங்களின் சிந்தனைகளை புதுப்பித்த புத்தகங்களை கூறுங்கள்?
 
Galileo’s Middle Finger by Alice Dreger; The Heretics by Will storr ஆகிய இரு நூல்களை குறிப்பிடுவேன். முதல் நூல் அறிவியல் செய்திகளையும் அதன் செயல்பாட்டையும் பற்றிய ஆய்வு நோக்கிலான நூல். இரண்டாவது, அறிவியல் ரீதியில் இல்லாத புதுமையான அறிவியல் விஷயங்கள், ஆராய்ச்சியாளர்கள் பற்றிய தகவல்களைக் கொண்டது.
 
உங்களது பெயரை எந்த வட்டார மொழி உச்சரிப்பில் கேட்க விரும்புகிறீர்கள்? 

பிளாக்பர்ன் வட்டார உச்சரிப்பில். அந்த வட்டாரத்தில் எனது பெயரை சோர்பீ என உச்சரிப்பார்கள். செல்லமாக தாம் வளர்க்கும் பூனையை அழைப்பது போன்ற உச்சரிப்பு, எனது வீட்டை எனக்கு நினைவு படுத்துகிறது.

நன்றி: James Lloyed, sciencefocus.com; Andrew Anthonytheguardian.com

தமிழில்: ச.அன்பரசு