அழகியின் இறுதித் தீர்ப்பு!



மர்மங்களின் மறுபக்கம் 58

தன்னைப் பற்றிய அவதூறுகளைப் பற்றிக் கவலைப்படாமல் 41 வயதான ஹாரி, சாவை நோக்கிச் செல்லும்போதும், தனது ஆடைகளில் ஸ்பெஷல் கவனம் செலுத்தினாள். சிவப்பு நிறத்தில் அழகான ஆடையை அணிந்தாள். தலையில் நவீன தொப்பி, சூப்பர் காலணிகள், உடைக்கு மேலே பெரிய ஓவர் கோட்,  கையுறைகள்.  ரெடியானதும் வெளியே அவளைக் கூட்டிச்செல்ல  கார்  வந்திருந்தது.  வின்சென்னஸ் இடத்திற்கு கார் அவளைக் கொண்டு சேர்த்தது.  

அங்கே அவள் போய்ச் சேரும்போது துப்பாக்கிகளுடன் 12 ராணுவ வீரர்கள் அவளுக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். எதிரிலிருந்த பெரிய மரம் ஒன்று தனது பெரிய கிளைகள் வெட்டப்பட்டு மொட்டையாகக்  காட்சியளித்து. அந்த மரத்தின் அடியில் மாட்டா ஹாரியை மரத்தினருகே  ஒட்டினாற்போல  நிறுத்தி, அவளுக்கு  குடிக்க  சிறு தம்ளரில்  ‘ரம்’ கொடுத்தார்கள்.

மரண தண்டனைக் கைதிகளுக்கு ரம் கொடுப்பது வாடிக்கை. மரத்தோடு சேர்த்துக் கட்டவும்,  கண்களைத் துணியால் மூடவும் அவள் ஒப்புக்கொள்ளவே இல்லை. தன்னை நோக்கிச் சுடுபவர்களை அவள் நேருக்குநேராகப்  பார்க்க  விரும்பினாள். பொழுது  நன்றாக  விடிந்து சூரியன் உதித்தபோது,  அவளுடன்  இருந்த  பாதிரியாரும், கன்னிகாஸ்திரிகள் இருவரும் அங்கிருந்து மெதுவாக நகர்ந்தனர். 

அங்கேயிருந்த வீரர்களுக்கு தலைமை அதிகாரி  சமிக்ஞை தர, ஒரே நொடிதான், மாட்டா ஹாரியின் உடல் குண்டுகளால் சல்லடையானது.  ஹாரியின் காதலனான ஒரு பிரபு, வீரர்களுக்கு லஞ்சம் கொடுத்து துப்பாக்கியில் போலித் தோட்டாக்களைப் போட ஏற்பாடு செய்திருந்ததாகவும், ஆனால் அத்திட்டம் தோல்வி அடைந்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது. உலக நாடுகளின் ராணுவத்தை தன் அழகினால் ஆட்டம் காணவைத்த சொப்பன சுந்தரி இனி இல்லை என்பதே நிஜம்.

(நிறைவு)

ரா.வேங்கடசாமி